name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: ஆகஸ்ட் 2021

திங்கள், ஆகஸ்ட் 30, 2021

சிந்தனை செய் மனமே (85) - நம்பிக்கை - மூடநம்பிக்கை !

இரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல்  மக்கள் துன்பப்பட்டு வருகிறர்கள் !


அறிவின் துணைகொண்டு எடுக்கப்படும்  முடிவு நம்பிக்கைஅறிவைப் பயன்படுத்தாமல், உணர்வுகளின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு மூடநம்பிக்கைஇரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல் தமிழக மக்கள் துன்பப்பட்டு வருகிறர்கள் !

 

மனிதன் ஒவ்வொரு கேள்விக்கும் விடையளிக்க முடிகிறது; ஆனால் ஒரு எல்லைக்கு அப்பால் செல்கையில் அவனால் விடையளிக்க முடிவதில்லை ! உலகம் எப்படித் தோன்றியது ? அவனால் விடையளிக்க முடிகிறது ! உலகத்தில் உயிரினங்கள் எப்படித் தோன்றின ? ஊன்மத்திலிருந்து (PROTOPLASAM) முதல் உயிர் தோன்றி, அதிலிருந்து படிவளர்ச்சி முறையில்  பிற உயிர்கள்  தோன்றின  என்று அவனால் விடையளிக்க முடிகிறது !

 

அந்த ஊன்மம் (PROTOPLASAM) எப்படித் தோன்றியது ? அவனால் விடையளிக்க முடிவதில்லை ! விடையளிக்க முடியாத ஒரு நிலை வரும்போது, அவன் சிந்திக்கிறான் ! ஊன்மம் தோன்றுவதற்கு  நம் அறிவுக்குப் புலப்படாத இன்னொரு ஆற்றல் காரணமாக இருந்திருக்க வேண்டும் ! இப்படிப்பட்ட ஆற்றலுக்கு அவன் கடவுள் என்று பெயர் இட்டான் !

 

விடை தெரியாத ஒவ்வொரு வினாவுக்கும் காரணமாக இருக்கும் அந்த இன்னொரு ஆற்றலே கடவுள் ! இந்த இடத்தில்கடவுள்என்பது ஒரு நம்பிக்கையின் அடையாளம் ! அறிவுக்குப் புலப்படாத அந்தகடவுள்என்னும் நம்பிக்கைமனிதனின் வினாவுக்கான விடை ! அவ்வளவு தான் !

 

அந்தக் கடவுளுக்கு மனிதன் வடிவங்கள் கொடுக்கத் தொடங்கினான். ஒவ்வொரு மதமும் வெவ்வேறு வடிவங்களைக் கொடுக்கத் தொடங்கின ! பிற மதங்களில், இறைவனுக்குக் கொடுத்த வடிவங்கள் மிகக் குறைவு; ஆனால் இந்து மதத்தில் இறைவனுக்குக் கொடுத்திருக்கும் வடிவங்களுக்கு அளவே இல்லை !

 

இறை நம்பிக்கையை நிலைநிறுத்தப் பண்டை மனிதனுக்கு ஒரு உருவம் தேவைப்பட்டது.  உலகத்தையே உய்விக்கும் வல்லமையுள்ளது  என்பதால் சூரிய வடிவில் இறைவனைக் கண்டான் அன்றைய மனிதன். அடுத்தடுத்துத் தோன்றிய மனித குலம், இயற்கை ஆற்றல்களானதீ”, ”மழைபோன்றவற்றையும் இறைவனின் கூறுகளாக நம்பியது !

 

காலப்போக்கில் மனித குலத்திற்கு அச்சமூட்டும் ஆற்றல்களாக விளங்கும் இடி, மின்னல், போன்றவையும், இறைவனின் கூறுகளாக மனித குலத்திற்குத் தோன்றின.  அழிவை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல்களாகத் திகழ்ந்த  தீ, இடி, மின்னல், வெள்ளம், பாம்பு  போன்றவற்றைக் கண்டு அஞ்சிய ஆதி மனிதன்  அவற்றை அமைதிப் படுத்தினால், தமக்குத் தீங்கு நேராது என்னும் நம்பிக்கையில், அவற்றை வணங்கவும், காய் கனி, உணவு வகைகளை அவற்றுக்குப் படையல் செய்யவும் தொடங்கினான் !

 

அறிவு வளர்ச்சியில், தொடக்க நிலையில் இருந்த அன்றைய மனிதனின் இறை நம்பிக்கைச் செயல்கள், தவறு என்று சொல்ல முடியாது !  காலங்கள் கடந்தன ! அறிவு வளர்ச்சியில் மனிதன் முதிர்ச்சி அடையத் தொடங்கினான். அறிவு வளர வளரக் கற்பனையும் அவனுள் சிறகடித்துப் பறந்தது !

 

தன் கற்பனைக்கு ஏற்பவெல்லாம் இறைவனுக்கு உருவம் கொடுக்கத் தொடங்கியது மனித குலம்.  இறைவனுக்கு முதலில் மனித உருவைக் கொடுத்து வழிபடத் தொடங்கிய மனித குலம், பிறகு நான்கு கைகள், பன்னிரண்டு கைகள், நான்கு முகங்கள், ஆறு முகங்கள், எனப் பல உருவங்களை இறைவனுக்குக் கொடுத்துப்  படைக்கத் தொடங்கியது ! ஒவ்வொரு வேறுபட்ட உருவத்திற்கும்  ஏற்பப் பல்வேறு கதைகளையும் புனைந்து மக்களிடையே ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தினர் !

 

கற்பனை வளம் கொண்ட மாந்தர்கள் இறைவனுக்குப் பல உருவங்களைக் கொடுத்ததுடன் பல ஊர்திகளையும் (வாகனங்கள்) படைத்தனர். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு மனைவி அல்லது பல மனைவிகளையும், பிள்ளைகளையும் படைத்தனர்.  இதன் தொடர்பாகப் பல கதைகளையும் இலக்கியங்கள், தொன்மங்கள் (புராணங்கள்), இதிகாசங்கள் (மறவனப்புகள்) என்ற பெயரில் எழுதிவைத்தனர்.  பல தோற்றரவுகளை (அவதாரங்கள்)  படைத்து மக்களிடையே ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தினர் !

 

கோள்களுக்கு இடையே இருக்கும் ஈர்ப்பு ஆற்றல் போல ஒரு உயர்வான ஆற்றல் உடையவனாகக் கருதப் பட்ட இறைவனை, சராசரி இல்லறவாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஒரு மனிதனின் நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தினர் கற்பனை வளம் கொண்ட கதாசிரியர்களும், நூலாசிரியர்களும் !

 

இதைப் பயன்படுத்தி, மக்களில் ஒரு சாரார், கடவுளை வணங்கினால் அவர் மக்களுக்கு வேண்டியதைக் கொடுப்பார் என்றும், அவரை வழிபடக் கோயில்களைக் கட்ட வேண்டும் என்றும் பரப்புரை செய்து மக்களிடையே ஒரு தவறான நம்பிக்கையை ஏற்படுத்தினர் ! மக்களிடம் இறைவன் பற்றி இருந்தநம்பிக்கைஇங்கு தான்மூடநம்பிக்கையாக உருமாற்றம் அடையத் தொடங்கியது !

 

கோயில்கள் நிரம்பவும் எழுந்தன ! அங்கு நிலைநிறுத்தப் பெற்றப் படிமத்தை மக்கள் வழிபடுவதற்குத் தங்கள் உதவி தேவை என்று அவர்கள் அறிவித்தனர்.  தாங்களே பூசாரியாக இருந்து கடவுளிடம் மக்களின் குறைகளை எடுத்துச்  சொல்லி அவற்றைத் தீர்த்து வைக்கும்படி வேண்டிக் கொள்வோம் என்றும் அறிவித்தனர். கடவுளின் மொழி சமற்கிருதம் என்றும், சமற்கிருதத்தில் தான் கடவுளிடம் மக்கள் குறைகளை எடுத்துச் சொல்ல முடியும் என்றும் மக்களை நம்ப வைத்ததுடன்,  ஒவ்வொரு கோயிலிலும் ஒரு குறிப்பிட்ட வகுப்பாரே பூசாரியாக அமர்ந்து தங்கள் பிழைப்புக்கு வழி ஏற்படுத்திக் கொண்டனர் !

 

குறிப்பிட்ட வகுப்பைப் சேர்ந்த மக்கள் தான், கோயிலில் பூசாரியாக இருக்க முடியும் என்றும், சமற்கிருதம் வாயிலாகத்தான் கடவுளை வழிபட முடியும் என்றும் பிற வகுப்பைச் சேர்ந்த மக்கள் எப்போது நம்பத் தொடங்கினார்களோ, அப்போது, இரண்டாவது முறையாக கடவுள் மீது வைத்திருந்தநம்பிக்கை”, “மூட நம்பிக்கையாக மாறிப்போனது !

 

கடவுளைப்பற்றி முழுமையாக அறிந்த அறிஞர்கள் கூட, கோயில் பூசாரிகளின் முன்பு அடக்க ஒடுக்கமாக நின்று அவர்களிடம் திருவமுது (பிரசாதம்) பெறுகையில்மூடநம்பிக்கைகொண்டவர்களாகவே காட்சி அளிக்கின்றனர் !

 

கடவுள்நம்பிக்கைஎன்பது அலைபாயும் மனதைக் கட்டுப் படுத்தும் ஒரு கருவி ! கடவுளை வணங்குவது என்பது சில நிமிடங்களாவது  அமைதி என்னும் புள்ளியில் மனதை நிலைநிறுத்தும் ஒருநம்பிக்கைசார்ந்த  பயிற்சி !

 

கடவுள் நமக்கு வேண்டியதைத் தருவார் என்று நம்புவது தவறானநம்பிக்கை. கடவுளை வழிபடும் இரண்டு மாணவர்களில் ஒருவர் தேர்வில் வெற்றி பெறுகிறார்; இன்னொருவர் தோல்வி அடைகிறார். ஏன் ஒருவர் தோல்வி அடைந்தார் என்று பூசாரியிடம் கேட்டால், அவர் சொல்கிறார்அது அவன் முற்பிறவியில் செய்த பாவத்தின் பலன்  !

 

முற்பிறவி”, ”பாவத்தின் பலன்” ”தலைவிதிஎன்பதெல்லாம், மக்களிடையே நிலவும் கடவுள் நம்பிக்கையை உடைத்துவிடக் கூடாது என்பதற்காகப் பூசாரிகள் கண்டு பிடித்திருக்கும் தந்திரம் ! இதை உணர்ந்தும் உணராதவர்களாக, தாம் பேசும் தமிழைப் பலி கொடுத்து விட்டு, கோயில் கருவறைக்குள் புகமுடியாத பெரும்பான்மைத் தமிழ் மக்கள் கூட்டம், இன்னமும் கோயிலை நோக்கி  அணிவகுத்துச் செல்வதில் நாட்டம் கொண்டிருக்கிறது என்றால் அது அவர்களை ஆட்சி செய்யும்மூடநம்பிக்கையின் விளைவன்றி வேறன்று !

 

கடவுள் நம்பிக்கை கொண்டிருங்கள்; வேண்டாம் என்று சொல்லவில்லை ! ஆனால், கடவுளை வணங்கினால் அவர் உங்களுக்கு வாரி வாரி வழங்குவார் என்று தவறாக நம்பாதீர்கள் ! ”முற்பிறவி”, “பாவம்”, “தலைவிதிஎன்பதைச் சொல்லி உங்களை யார் ஏமாற்ற முயன்றாலும் அவரை நம்பாதீர்கள். அவர் சொல்வது சரி என்று அவர் மீதுமூடநம்பிக்கைகொள்ளாதீர்கள் !

 

அரசு அலுவலகங்களில் கழிவறையைத் துப்புரவு செய்யும்தூய்மைப் பணியாளர்பணியிடம் தொடங்கி, இந்திய ஆட்சிப் பணி அதிகாரி பணியிடம் வரை அரசியல் சட்டப்படி இட ஒதுக்கீடு இருக்கும் போது, கோயில் பூசாரி பணியிடங்களை மட்டும் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரே கைப்பற்றி வைத்துக் கொண்டிருப்பது மக்களிடம் இருக்கும்மூட நம்பிக்கையால்  விளைந்த பயன் என்பதை இப்போதாவது உணருவோம் !

 

அருமைத் தமிழ் மக்களே ! வாழ்வில்நம்பிக்கைவையுங்கள்; ஆனால் யாரிடமும்மூடநம்பிக்கைவைக்காதீர்கள் !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2051, மடங்கல் (ஆவணி),14]

{30-08-2021}

-----------------------------------------------------------------------------------------------------------


 

 

 

 

  

 

 

வியாழன், ஆகஸ்ட் 12, 2021

நான்மணிக் கடிகை (28) அலைப்பான் பிறவுயிரை ஆக்கலும் குற்றம் !

 

நான்மணிக்கடிகை !

------------------------------------------------------------------------------------------------------------

சங்க காலத்திய நூலான நான்மணிக்கடிகை 106 வெண்பாக்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகள் வலியுறுத்தப்படுகின்றன ! மொத்தம் 106 பாடல்களைக் கொண்ட இந்நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர். இதிலிருந்து ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (28)

---------------------------

அலைப்பான் பிறவுயிரை ஆக்கலும் குற்றம்

விலைப்பாலில் கொண்டூன் மிசைதலும் குற்றம்

சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்

கொலைப்பாலும் குற்றமே யாம்.

-------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

--------------

விலங்குகள்பால் உண்மையான பரிவு கொள்ளாமல், அவற்றைக் கொன்று உண்பதற்காகவே ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற உயிரினங்களுக்கு இரைபோட்டு வளர்த்தல் ஞாயப்படுத்த முடியாத குற்றமாகும் !

 

இரக்கமில்லாமல் வேறொரு மனிதன் கொன்று விற்றாலும் கூட விலைகொடுத்து வாங்கி வந்து  பிற உயிரினங்களின் இறைச்சியை, சமைத்துப் பக்குவபடுத்தி உண்பதும் ஞாயப்படுத்த முடியாத குற்றமாகும் !

 

எத்துணைச் சினவுணர்வை உன்மனதில் ஒருவன் ஏற்படுத்தினாலும் கூட, சொல்லக் கூடாத, பண்பாடில்லாத, அருவருப்பான சொற்களை அவனை நோக்கிக் சொல்லுதலும் ஞாயப்படுத்த முடியாத குற்றமாகும் !

 

அதுபோல், தாய்க்கு நிகரான நம் மொழியைச் சிதைத்துக் கொலை செய்தலும், நண்பர்கள் நம் மீது வைத்திருக்கும் நட்புணர்வைச் சிதைத்து நட்புக் கொலை செய்தலும், நற்பண்புகளைச் சிதைத்துப் பண்புக் கொலை செய்தலும், நம்பிக்கைக் கொலை போன்ற பிற கொலை வகைகளும் எவ்வகையிலும் ஞாயப்படுத்த முடியாத குற்றங்களேயாகும் !

-----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------

அலைப்பான் = கொன்று உண்பதற்காக ; பிற உயிரை = ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற பிற உயிர்களை ; ஆக்கலும் குற்றம் = வீட்டில் வளர்ப்பதும் குற்றம் ; விலைப்பாலின் = விலை கொடுத்து ; ஊன் கொண்டு = இறைச்சியைப் பெற்று வந்து ; மிசைதலும் குற்றம் = சமைத்து உண்பதும் குற்றமாகும் ; சொலற்பால அல்லாத = சொல்லும் வகையின அல்லாத சொற்களை ; சொல்லுதலும் குற்றம் = உரைத்தலும் குற்றம் ; கொலைப்பாலும் = மொழிக்கொலை, நட்புக் கொலை, பண்புக் கொலை, நம்பிக்கைக் கொலை போன்றவையும் ; குற்றமே ஆம் = குற்றமே ஆகும்.

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.ஆ:2052, கடகம் (ஆடி),12]

{28-07-2021}

------------------------------------------------------------------------------------------------------------

 

புதன், ஆகஸ்ட் 11, 2021

சிந்தனை செய் மனமே (84) மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு !

 

ஊரகப் பகுதியில் வாழும் உலகப்பன் வீட்டுப் பிள்ளை மருத்துவர் ஆகக் கூடாதா?

தமிழ்நாட்டில் இப்போது இயங்கி வரும் அரசு மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கை 23. தனியார் மருத்துவக் கல்லூரிகள் =20. ஆக மொத்தம் = 43.


இன்றைய நிலையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒப்பளிக்கப் பட்டுள்ள மாணவர் பயிற்சி இடங்கள் = 3300. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒப்பளிக்கப்பட்ட பயிற்சி இடங்கள் = 2100. இதில் 1050 இடங்கள் அரசால் நிரப்பப்படும். எஞ்சிய 1050 இடங்கள் கல்லூரி ஆட்சியாளர்களால் (Management) நிரப்பப்படும் !

 

அரசுக் கல்லூரி + தனியார் கல்லூரிகளில் அரசால் நிரப்படவிருக்கும் இடங்கள் = 3300 + 1050 = 4350. இதில் 15% இடங்களான 653 இடங்கள் ஒன்றிய அரசு நிரப்ப வேண்டியவை (All India Quota). எனவே மாநில அரசு நிரப்ப வேண்டிய நிகர இடங்கள் = 4350 – 653 = 3697  !

 

இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள்= 3697 X 7.5% = 277 .நேற்று ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் பேசும் போது, கடந்த ஆண்டு 7.5% இட ஒதுக்கீட்டின்படி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 430 என்று கயிறு திரித்தார். 277 எப்படி 430 ஆயிற்று ? மேடை ஏறிவிட்டால் விருப்பம் போல் ஏதாவது அள்ளிவிட வேண்டியதா ?

 

நீட்தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 430 என்றே ஒரு வாதத்திற்காக வைத்துக் கொள்வோம். இவர்களுள் எத்தனை பேர் ஊரகங்களை (கிராமங்களை) சேர்ந்தவர்கள் என்று சொல்லாமல் ஏன் மறைக்கிறார்கள் ?

 

ஏனென்றால் ஊரகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட்பயிற்சிக்குச் செல்ல முடிவதில்லை. நீட்என்னும் தடையை அவர்கள் முன் ஏற்படுத்தி, அவர்கள் ஆசைகளை முளையிலேயே கருக்கிவிடுகிறார்கள்.


அரசுப்பள்ளி மாணவர்கள் 430 பேருக்கு உண்மையிலேயே இடம் கிடைத்திருந்தால் அதில் திரு. எடப்பாடி பழனிச்சாமியோ அவரது கூட்டணிக் கட்சியினரோ , பெருமைப் பட்டுக் கொள்வதற்கு ஏதுமில்லை. ஏனென்றால் அரசுப் பள்ளிஎன்பதற்கான விளக்கத்தில் தான் சூட்சுமம் இருக்கிறது ! எப்படியா ? தொடர்ந்து படியுங்கள் !

 

அரசுப்பள்ளிகள் என்னும் வகைப்பாட்டின் கீழ் எந்தெந்தப் பள்ளிகள் வருகின்றன தெரியுமா ?

 

(01)  சென்னை, வேலூர், கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு போன்ற மாநகராட்சிப் பகுதிகளில் இயங்கி வரும் மாநகராட்சி மற்றும் அரசு மேனிலைப் பள்ளிகள் (இவை எல்லாம் நகரப் பகுதிகள் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்)

 

(02)  செங்கற்பட்டு, விழுப்புரம், கடலூர், இராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், நாகர்கோயில் போன்ற நகராட்சிப் பகுதிகளில் இயங்கி வரும் நகராட்சி மற்றும் அரசு மேனிலைப் பள்ளிகள்.( இவையும் நகரப் பகுதிகளே)

 

(03)  பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் இயங்கி வரும் அரசு மேனிலைப் பள்ளிகள்.

 

(04)  சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் ஒன்றிய அரசின் கட்டாயக் கல்விச் சட்டத்தின் படி சேர்க்கப்பட்டுப் பயின்ற மாணவர்கள். (இவர்களும் அரசுப் பள்ளி மாணவர்கள் என்ற வகைப்பாட்டின் கீழ் வருகின்றனர்)

 

வகை 1-ன் கீழ் வரும் மாநகராட்சிப் பகுதிகளில் நீட்பயிற்சி மையம் இருக்குமாதலால் அங்கு படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட்பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் வாய்ப்பு உள்ளவர்கள்.

 

வகை 2-ன் கீழ் வரும் நகராட்சிப் பகுதிகளில் நீட்பயிற்சி மையம் இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எனவே இங்கு படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட்பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் வாய்ப்புகள் இருக்கக் கூடும்; அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

 

வகை 3-ன் கீழ் வரும் பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் நீட்பயிற்சி மையங்கள் இருக்காது. எனவே இங்கு இயங்கிவரும் அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் நீட்பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் வாய்ப்பை முற்றிலும் இழந்துவிடுகிறார்கள்.

 

வகை 4- என்பதை இப்போது கணக்கில் கொள்ள வேண்டாம்.

 

இப்போது ஒரு கருத்தைச் சிந்தித்துப் பாருங்கள். அரசுப் பள்ளியில் படித்த மானவர்களில் ஒரு பகுதியினர் நீட்பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் வாய்ப்பு உள்ளவர்கள். இன்னொரு பகுதியினர் அந்த வாய்ப்புக் கிடைக்காதவர்கள் !

 

இவ்வாறு பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறும் வாய்ப்புக் கிடைக்காதவர்கள் யார் தெரியுமா ?

 

(01) ஊரகங்களில் (கிராமப் புறங்களில்) உள்ள வேளாண் தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகள்.

 

(02) ஊரகங்களில் உள்ள சிறு, குறு வேளாண் நில உடைமையாளர்கள் வீட்டுப் பிள்ளைகள்.

 

(03) ஊரகங்களில் உள்ள சலவைத் தொழிலாளி, முடி திருத்தும் தொழிலாளி, தச்சுத் தொழிலாளி, மட்பாண்டத் தொழிலாளி வீட்டுப் பிள்ளைகள்

 

(04) ஊரகங்களில் உள்ள பட்டியலின மக்கள் வீட்டுப் பிள்ளைகள்.

 

(05) ஊரகங்களில் வாழும் நெசவாளர் குடும்பத்துப் பிள்ளைகள்.

 

(06).மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் வீட்டுப் பிள்ளைகள்.

 

மேற்கண்ட ஆறு வகைகளில் வரும் பிள்ளைகள் 12 –ஆம் வகுப்புத் தேர்வில் 95% மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றாலும், “நீட்பயிற்சி இல்லாத காரணத்தால், அந்தத் தேர்வில் போதுமான மதிப்பெண்கள் பெறமுடியாமையால், மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பை இழந்து விடுகின்றனர்.

 

 நீட்தேர்வு ஆதரவாளர்கள் ஏன் இவர்களைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை ?

 

ஊரகப் பகுதியில் வாழும் உலகப்பன் வீட்டுப் பிள்ளை மருத்துவர் ஆகக் கூடாதா?   வேளாண் கூலித் தொழிலாளி வெள்ளைச்சாமி வீட்டுப் பிள்ளை மருத்துவர் ஆகக் கூடாதா?  ஊரகத்தில் வாழும் சலவைத் தொழிலாளி சக்கரபாணியின் பிள்ளை, சலவைத் தொழிலைத் தான் செய்து வர வேண்டுமா?  மண்ணெண்னெய் விளக்கில் படித்து 97% மதிப்பெண் வாங்கியுள்ள முடிதிருத்தும் தொழிலாளி முத்துவின் பிள்ளை மருத்துவக் கல்லூரியில் சேர ஆசைப்படக் கூடாதா?

 

திரைகடலையே நம்பி வாழும் தேவனாம்பட்டினம், பூம்புகார், வேளாங்கன்னி, வேதாரணியம், கோடிக்கரை, முத்துப்பேட்டை , மீமிசல், கடலாடி, கன்னியாகுமரி போன்ற கடலோரப் பகுதி மீனவர்களின் பிள்ளைகள் நீட்தேர்வுக்குப் பயிற்சி பெற எங்கு செல்வர்?

 

அங்கு பயிற்சி மையங்களா இருக்கின்றன? அப்படியே இருந்தாலும் பயிற்சி மையத்தில் சேர அவர்களிடம் இலட்சம் இலட்சமாக பணம் கொட்டியா கிடக்கிறது?

 

நகர்ப் புறங்களையே எடுத்துக் கொள்வோம். நகர்ப்பகுதியில் வாழும் பொறிச் சிவிகை வலவர்கள் (Auto Rikshaw Drivers) , போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், சுமை தூக்கிப் பிழைப்போர், நடைபாதையோரத்தில் பூ விற்போர், ஆப்பக் கடை வைத்திருப்போர், குடிசை வாசிகள், மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவமனைத் தூய்மைப் பணியாளர்கள், சிறு, குறு தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், கடற்கரையில் மாலை நேரங்களில் சுண்டல் விற்போர் போன்றோர் வீட்டுப் பிள்ளைகளால் நீட்பயிற்சிக்குப் பணம் செலவழிக்க முடியுமா?

 

ஊரகங்களிலேயே முடங்கிப் போய்விட்ட பல்வகைப்பட்ட மக்கள், பயிற்சி மையம் அருகில் இல்லமையால் நீட்பயிற்சி பெறும் வாய்ப்பு இல்லாதோர், வாய்ப்பு இருந்தும் பணவசதி இல்லாதோர், அன்றாடங் காய்ச்சிகள் தமிழகத்தில் கோடிக் கணக்கில் இருக்கிறார்கள், அவர்கள் வீட்டிலும் நன்கு படிக்கும் பிள்ளைகள் இருக்கின்றனர், அவர்களுக்கும் மருத்துவராகும் கனவு இருக்கத்தானே செய்யும் !

 

அவர்களுக்கும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தித் தரவேண்டமா?  இந்த அடித்தட்டு மக்களைப் பற்றிய பகுத்தறிவு துளிக் கூட இல்லாமல் ஆட்சியாளர்கள் இருக்கிறார்களே என்பதை நினைக்கும் போது நெஞ்சு பொறுக்குதில்லையே !

 

ஊரக மக்களின் நிலை பற்றி, அவர்களின் இயலாமை பற்றி குளிரூட்டிய அறையில் வாழும் இந்தியத் தலைமை அமைச்சர் திரு.நரேந்திர மோடிக்கும் தெரியாது, ஒன்றிய அரசின் கல்வி அமைச்சருக்கும் தெரியாது, ஒன்றிய அரசின் நலத்துறை அமைச்சருக்கும் தெரியாது. மேட்டுக் குடி மக்களான பாரதிய சனதாக் கட்சியினருக்கும் தெரியாது, பதவிக்காக அவர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் பிற ஆளிநருக்கும் தெரியாது ! ஏன் உச்சநீதிமன்றத்தில் உயரமான இடத்தில் அமர்ந்து கொண்டு நீட்தேவை தான் என்றும் தீர்ப்புச் சொல்லும் நீதிபதிகளுக்கும் தெரியாது !

 

ஊரக மக்களின் ஏழைப் பிள்ளைகளின் மருத்துவக் கனவை நீட்கொண்டு வந்து சிதைக்கிறோமே என்ற உணர்வு இல்லாமல் வாழும் மேட்டுக் குடியினருக்கு நாட்டை ஆள்வதற்கு என்ன தகுதி இருக்கிறது ?

 

நீட்தேவை என்று ஓலமிட்டுக் கொண்டிருக்கும் மேட்டுக்குடி மக்களே, இருட்டறையில் வாழும் குருட்டுப் பூனைகளே ! உங்கள் கண்களை அகலத் திறந்து ஏழைகளின் கண்ணீர்த் துளிகளைப் பாருங்கள் !


மருத்துவக் கனவு சிதைந்து போனதால் உயிரையே துறந்து விட்ட அனிதாக்களைப் பாருங்கள் !

 

அனைத்து மக்களுக்கும் சம நீதி கிடைக்கச் செய்ய உங்களால் முடியாவிட்டால், உங்களுக்கு ஆட்சி எதற்கு ? அதிகாரம் எதற்கு ?

 ----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.ஆ: 2052 (கடகம் (ஆடி) 02)

18-07-2021.

----------------------------------------------------------------------------------------------