name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: அக்டோபர் 2021

வெள்ளி, அக்டோபர் 15, 2021

நான்மணிக்கடிகை (35) அந்தணரின் நல்ல பிறப்பில்லை !

நான்மணிக்கடிகை கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் தோன்றிய  நூல்  என்று கருதப்படுகிறது.   இதில் கடவுள் வாழ்த்தாக  இரண்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவை தவிர மேலும் 104 பாடல்கள் உள்ளன.  இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும்  நந்நான்கு கருத்துகள் வலியுறுத்தப்படுகின்றன. விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர் இயற்றிய இந்நூலிலிருந்து ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (35)

-------------------------

அந்தணரின்  நல்ல   பிறப்பில்லை;  என்செயினும்

தாயிற்  சிறந்த  தமரில்லை;  யாதும்

வளமையோ  டொக்கும்  வனப்பில்லை;  எண்ணின்

இளமையோ  டொப்பதூஉ  மில்.

-------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------

செந்தண்மை பூண்டொழுகும்  அந்தணர் எனப்படும்  பெருமக்களைப் போல் உயர் பிறவி இவ்வுலகில் வேறு ஏதுமில்லை !

தன்னை எத்துணைக் கண்டித்து  ஒறுத்தாலும்  கூடகுழந்தைக்குத் தாயை விட மேலான உறவினர்  யாருமேயில்லை !

வறுமையே தெரியாமல் செல்வச் செழுமையோடு வாழும்  வாழ்க்கைக்கு நிகரான  நற்பேறு   வேறு எதுவும்  இல்லை !

ஆராய்ந்து பார்த்தால்,  இளமைப் பருவ  வாழ்க்கைக்கு  இணையானதும் இவ்வுலகில்  இல்லவே இல்லை !

--------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

அந்தணரின் = அந்தண்மை உடையார் பிறவியைப் போல ; நல்ல பிறப்பு இல்லை = உயர்ந்த பிறவி வேறில்லை; என் செயினும் = தனக்கு என்ன தீமையைச் செய்தாலும் ; தாயின் = தாயைப் போல ;  சிறந்த தமர் இல்லை = மேலான உறவினர் எவருமில்லை ; வளமையோடு = செல்வ வாழ்க்கையோடு ; ஒக்கும் வனப்பு = ஒப்பான அழகு ; யாதும் இல்லை = மற்றெதுவும் இல்லை ; எண்ணின் = ஆராய்ந்து பார்த்தால் ; இளமையோடு ஒப்பதும் = இளமைப் பருவத்தோடு ஒப்பாவதும் ; இல் = பிறிதொன்று இல்லை.

-------------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

----------------------------

செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர் பிறப்பே உயர்  பிறப்பு; தாயே சிறந்த தமர்; செல்வமே அழகு; இளமையே இன்பம் !

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2051,சிலை (மார்கழி),28]

{12-01-2021}

-------------------------------------------------------------------------------------------------------

நான்மணிக்கடிகை (34) பிணியன்னர் பின் நோக்காப் பெண்டிர் !

சங்க கால இலக்கியமான நாண்மணிக் கடிகையில் கடவுள் வாழ்த்து உள்பட 106 வெண்பாக்கள் உள்ளன.  கடவுள் வாழ்த்து நீங்கிய பிறபாடல்கள் ஒவ்வொன்றிலும் நந்நான்கு கருத்துகள் எடுத்துரைக்கபடுகின்றன. இதிலிருந்து ஒரு பாடல் இதோ !

---------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (34)

--------------------------

பிணியன்னர் பின் நோக்காப் பெண்டிர் உலகிற்கு

அணியன்னர் அன்புடை  மாக்கள்பிணிபயிரின்

புல்லன்னர்  புல்லறிவின் ஆடவர்கல்லன்னர்

வல்லென்ற நெஞ்சத்  தவர்.

---------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------

வரவுக்கு மேல் செலவு செய்து தன் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றிக் கருதிப் பார்க்காத மனைவி, கணவனுக்கு  நோய்க்கு ஒப்பானவள் !

எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி  அவற்றை  நேசிக்கும் நன்மக்கள் இந்த உலகத்திற்கு மதிப்பு மிக்க அணிகலனுக்கு ஒப்பாவர் !

அறியாமை நிறைந்த  ஆண்மக்கள், வளரும் பயிரினைச் சூழ்ந்து கொண்டு அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும்  களைகளுக்கு ஒப்பாவர் !

அதுபோல், பரிவுணர்வு இல்லாத  வன்மையான நெஞ்சத்தை உடையவர், இளக்கமற்ற கொடிய கல்லுக்கு ஒப்பாவர் !

---------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருளுரை:

---------------------------------

பின் = பின் வருவது  பற்றி ; நோக்காப் பெண்டிர் = கருதிப் பார்க்காத மனைவி ; பிணி அன்னர் = அவள் கணவனுக்கு நோய்க்கு ஒப்பாவாள் ;  அன்பு உடை மாக்கள் = எல்லா உயிர்களிடத்திலும் அன்புடைய நன்மக்கள் ; உலகிற்கு = உலகத்திற்கு ; அணி அன்னர் = அணிகலனுக்கு ஒப்பானவர் ;  புல் அறிவின் = சிற்றறிவுடைய ; ஆடவர் = ஆண்மக்கள் ; பயிரின் = வளரும் பயிரினைச் சூழ்ந்த ; பிணி புல் அன்னர் = வளர்ச்சியைத் தடுக்கும் களைப் புல்லுக்கு ஒப்பானவர் ; வல் என்ற = வன்மையான ; நெஞ்சத்தவர் = நெஞ்சத்தை உடையவர் ; கல் அன்னர் = கல்லுக்கு ஒப்பாவார்.

----------------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

---------------------------

வருவதறியா பெண்டிர், நோய்க்கு ஒப்பாவர்; அன்புடை மக்கள் அணிகலனுக்கு நிகராவர்; புல்லறிவை உடைய ஆடவர்கள் புல்லுக்கு நேராவர்; வன்னெஞ்சமுடையவர் கல்லுக்கு இணையாவர்.

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2050,மடங்கல்(ஆவணி),31]

{17-09-2019}

----------------------------------------------------------------------------------------------------------

நான்மணிக்கடிகை (33) புகைவித்தாப் பொங்கழல் தோன்றும் !

பதினெண் கீழ்க்கணக்கு என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்த  நான்மணிக் கடிகை விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவரால் படைக்கப் பெற்ற நூல். கி.பி. 2-ஆம் நூற்றாண்டில்  தோன்றியதாக்க் கருதப்படும்  இந்நூலில் 106 வெண்பாக்கள் உள்ளன.  ஒவ்வொரு வெண்பாவும் அரிய கருத்துகளை நமக்கு எடுத்துரைக்கின்றன. அதிலிருந்து ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------------

 பாடல் எண் :(33)

-------------------------

புகைவித்தாப்  பொங்கழல்  தோன்றுஞ்   சிறந்த

நகைவித்தாத்  தோன்றும்  உவகைபகையொருவன்

முன்னம்வித்  தாக முளைக்கும்  முளைத்தபின்

இன்னாவித்  தாகி  விடும்.

--------------------------------------------------------------------------------------------------------

 சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------

புகைவித்தாப்  பொங்கு  அழல்  தோன்றும்  சிறந்த

நகைவித்தாத்   தோன்றும் உவகைபகையொருவன்

முன்னம் வித்தாக முளைக்கும்  முளைத்த பின்

இன்னா  வித்து  ஆகிவிடும்.

-------------------------------------------------------------------------------------------------------

 பொருளுரை:

-----------------------

ஓர் இடத்தில் புகை  எழுகிறது என்றால், அதற்கு அங்கு எரியும் நெருப்பு  தான் வித்தாக (காரணமாக ) இருக்கும் !

ஒருவன்  முகமலர்ச்சியுடன் காணப்படுகிறான் என்றால், அதற்கு  அவனது மன மகிழ்ச்சியே  வித்தாக (காரணமாக)  இருக்கும்   !

ஒருவன் உள்ளத்தில்  உள்ள பகையுணர்வு, வெளியே தெரிய அவனது குறிப்பான செயல்களே வித்தாக (காரணமாக)  இருக்கும் !

அதுபோல், அவனது பகைமை உணர்வுகளே   அவனுக்கு வரக்கூடிய  எல்லாத் துன்பங்களுக்கும் வித்தாக (காரணமாக) இருக்கும்  !

--------------------------------------------------------------------------------------------------------

 அருஞ்சொற்பொருள்:

-------------------------------------

புகை வித்து ஆ = புகை எழுவதற்கு வித்தாக ; பொங்கு அழல் = எரியும் நெருப்பு ; தோன்றும் = காண்பவர்களுக்குத் தோன்றும் ; சிறந்த நகை வித்து ஆ = மேலான முக மலர்ச்சிக்கு வித்தாக ;  உவகை தோன்றும் =   மனதில் மகிழ்ச்சி தோன்றும் ; பகை = உள்ளத்தின் பகைமை ; ஒருவன் = ஒருவனது ; முன்னம் வித்தாக = குறிப்புச் செயல்கள் காணமாக ; முளைக்கும் = வெளியே தெரியும் ; முளைத்த பின் = தெரிந்தபின் ; இன்னா = வரும் துன்பங்களுக்கு ; வித்து ஆகிவிடும் = அதுவே காரணமாகிவிடும்.

----------------------------------------------------------------------------------------------------------

 சுருக்கக் கருத்து:

----------------------------

புகை எழுகையில் அதற்குக்  காரணமாக அங்கு நெருப்பு இருப்பது விளங்கும்;  முகமலர்ச்சிக்குக் காரணம்  மனமகிழ்ச்சியே என்பது  விளங்கும்; குறிப்பு, சொல், செயல்களின் வாயிலாக  ஒருவர் நம்மீது கொண்டுள்ள  பகைமை விளங்கும் ; தெரிந்த பின் அப் பகைமையே  அவரது துன்பங்களுக்குக் காரணம் என்பதும் விளங்கும் !

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2050,மடங்கல்(ஆவணி),31]

{17-09-2019}

--------------------------------------------------------------------------------------------------------

நான்மணிக்கடிகை (32) திருவின் திறலுடையது இல்லை !

விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர் படைத்த இலக்கியம் நான்மணிக்கடிகை !  ஒவ்வொரு பாடலிலும் நான்கு நான்கு கருத்துகளை எடுத்துச் சொல்கிறார். அவை ஒவ்வொன்றும் முத்து முத்தான கருத்துகள். உயர்நிலைப் பள்ளி அளவிலேயே இந்தக் கருத்துகளை மாணவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் ! இதிலிருந்து ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (32)

----------------------

திருவின்  திறலுடைய  தில்லை  -  ஒருவற்குக்

கற்றலின்  வாய்த்த  பிறவில்லை  -  எற்றுள்ளும்

இன்மையின்  இன்னாத  தில்லையில்   லென்னாத

வன்மையின்  வன்பாட்ட தில்.

-------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-- --------------------------------------

திருவின்   திறலுடையது   இல்லை   -  ஒருவற்குக்

கற்றலின்   வாய்த்த   பிறஇல்லை  -  எற்றுள்ளும்

இன்மையின்   இன்னாதது   இல்லைஇல்   என்னாத

வன்மையின்   வன்பாட்டது  இல்.

-------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

------------

இந்த உலகத்தில் ஒரு மனிதனுக்குச் செல்வத்தைப் போல்  வலிமை உடையது  வேறொன்றும் இல்லை !

துளக்கமறக் கற்ற கல்வி அறிவைப் போல உற்ற நேரத்தில் அவனுக்குப் பயன் தருவதும் வேறில்லை !

வறுமையைப் போல்  மனிதனுக்குத்  துன்பம்   தருவதும்  இவ்வுலகில்  வேறு எதுவும்  இல்லை !

அதைப்போல, எந்தச் சூழ்நிலையிலும்  இரவலர்களுக்கு  இல்லைஎன்று சொல்லாத  மனவுறுதியைப்  போல்  திட்பமானதும்  வேறு  இல்லை !

----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற் பொருள்:

------------------------------

ஒருவற்கு = ஒருவனுக்கு ; திருவின் = செல்வத்தைப் போல ; திறல் உடையது = வலிமை உடையது ; இல்லை = பிறிதில்லை; கற்றலின் = கல்வியறிவைப்போல் ; வாய்த்த = உற்ற நேரத்தில் பயன் தருவது ; பிற இல்லை = வேறு இல்லை; எற்றுள்ளும் = எதனுள்ளும் ; இன்மையின் = வறுமையைப் போல் ; இன்னாதது = துன்பமுடையது ;  இல்லை = வேறு யாதுமில்லை ; இல் என்னாத = இரப்பார்க்கு இல்லை என்னாத ; வன்மையின் = மனவுறுதியைப் போல் ; வன்பாட்டது = திட்பமானது ; இல் = வேறு இல்லை.