name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: ஜூலை 2021

வெள்ளி, ஜூலை 23, 2021

நான்மணிக் கடிகை (27) அஞ்சாமை அஞ்சுதி !

விளம்பி நாகனார் என்னும் சங்க காலப் புலவர் படைத்த நூல் நான்மணிக்கடிகை !  முழுவதும் வெண்பாக்களால் ஆன இந்நூலில் கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்கள் இடம்பெற்றுள்ளன ! இதிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------

பாடல் எண்: (27)

--------------------------

அஞ்சாமை   அஞ்சுதி   ஒன்றின்   தனக்கொத்த

எஞ்சாமை   எஞ்சல்   அளவெல்லாம்    நெஞ்சறியக்

கோடாமை   கோடி   பொருள்பெறினும்   நாடாதி

நட்டார்கண்   விட்ட   வினை.

------------------------------------------------------------------------------------

பொருள்:

-------------

அஞ்சுதற்குரிய  செயல்களைக்  கண்டு  அஞ்சவேண்டும்; அதற்கு மாறாக  அஞ்சாமலிருப்பது தவறு; எனவே அதைக்   கைவிடுவாயாக !

 

பிறருக்கு  உதவி  செய்யும்  நற்பண்பினை  எந்நாளும்   கைக்கொள்வாயாக;  அப்பண்பு உன்னைவிட்டு    நீங்க  விடாதே !

 

மனசாட்சிக்கு  எதிராக  நடுநிலை  தவறி ஒருசார்பாக  நடந்துகொள்ளும்  தவறைச் செய்யாதே;  நடு நிலையைப் போற்றுவாயாக !

 

அதுபோல்,  பெருஞ் செல்வம் உன்னை வந்து அடைவதாயினும்  கூட, நண்பர்கள் மீது ஐயம் கொண்டு  அவர்களிடம்  ஒப்படைத்த  செயலைப் பற்றி ஆராய்ச்சி செய்யாதே !

-----------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------

அஞ்சாமை = அஞ்சுதற்குரிய செயல்களில் அஞ்சாமலிருக்கும்   பண்புக்கு ; அஞ்சுதி =  நீ அஞ்சுவாயாக ; ஒன்றில் = ஒரு செயலில் ; தனக்கு ஒத்த = தனக்குக் கூடுமான ; அளவு எல்லாம் = அளவுக்கு ; எஞ்சாமை = பிறருக்கு உதவி செய்யும் பண்பினை ; எஞ்சல் = குறைய விடாதே ; நெஞ்சு அறிய = உள்ளமறிய ; கோடாமை = ஒருசார்பாக ஒழுகாச் செயலை ; கோடி = கொள்வாயாக ; பொருள் பெறினும் = எத்துணைப் பெருஞ்  செல்வம் கிடைப்பதாயினும் ;  நட்டார்கண் = நண்பர்களின் பொறுப்பில் ;  விட்ட வினை = ஒப்படைத்த செயல் பற்றி ; நாடாதி =  ஐயம் கொண்டு ஆராய்ச்சி செய்யாதே.

------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------

அஞ்சவேண்டிய  செயல்களுக்கு அஞ்சுக !  உன்னால் இயன்ற அளவுக்குப் பிறருக்கு உதவி செய்வதில்  பின்வாங்காதே ! எதிலும் நடுநிலை தவறி ஒருசார்பாக நடந்து கொள்ளாதே !  நண்பர்களிடம் ஒப்படைத்த பணியைப்  பற்றி  வீண் ஆராய்ச்சி செய்யாதே !

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,கடகம்(டி),06]

{22-07-2021}

-------------------------------------------------------------------------------------



 

சனி, ஜூலை 10, 2021

நான்மணிக் கடிகை (26) நகைநலம் நட்டார் கண் நந்தும் !

 

பதினெண் கீழ்க் கணக்கு என்னும் இலக்கிய வகைப்பாட்டின் கீழ்  வரும் நூல் நான்மணிக்கடிகைஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகளை எடுத்துரைக்கும் அறநெறி இலக்கியம். இதைப் படைத்தவர் விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர். இதிலிருந்து ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்:(26)

-------------------------

நகைநலம்   நட்டார்கண்   நந்தும்சிறந்த

அவைநலம்  அன்பின்  விளங்கும்;  விசைமாண்ட

தேர்நலம் பாகனாற்  பாடெய்தும்;  ஊர்நலம்

உள்ளானால்  உள்ளப் படும்.

-------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

--------------

முகமலர்ச்சியும், குளிர்ந்த பார்வையும் தான் நண்பர்களிடையே நட்புணர்வைச் செழித்து வளரச் செய்யும் !

 

பலதரப்பட்ட  மக்கள் குழுமியுள்ள அவையில் நாம் வெளிப்படுத்தும் அன்பு ஒன்றே நமக்கு நன்மதிப்பை ஈட்டித் தரும் !

 

தேர்ப்படையால் ஒரு மன்னன் பெறுகின்ற நன்மை,  அதை இயக்கும் தேரோட்டியின்  மதிநலத்தைப்  பொறுத்து உயர்ந்து  விளங்கும் !

 

அதுபோல், ஊர் மக்கள் பெறும் நன்மை அந்த ஊரை  ஆள்கின்ற அரசனின் திட்டங்களால் தான் செழித்துச் சிறக்கும் !

-------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------------

நகை நலம் = முகமலர்ச்சியின் நன்மை ; நட்டார்கண் = நண்பர்களிடத்தில் ; நந்தும் = சிறக்கும் ; சிறந்த = மேலான ; அவை நலம் = அவையினால் பெறும் நன்மை ; அன்பின் விளங்கும் = நமது அன்பினால் சிறக்கும் ; விசை மாண்ட = விரைவு மிகுந்த ; தேர் நலம் = தேர்ப் படையால் கிடைக்கும் நன்மை ; பாகனால் = தேரோட்டியின் மதி நலத்தால் ; பாடு எய்தும் = சிறப்படையும் ; ஊர் நலம் = குடி மக்கள் பெறும் நன்மைகள் ; உள்ளானால் = அவ்வூரை ஆளும் அரசனால் ; உள்ளப்படும் = மதிக்கப்படும்.

------------------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-------------------------------

முகமலர்ச்சியும் குளிர்ந்த பார்வையும்  நட்பை வளர்க்கும்அவையில்  நாம் பெறும் மதிப்பு  நமது அன்பினால்  உயர்வடையும்  !  தேர்ப்படையின் நன்மை பாகனின் மதி நலத்தால்  சிறக்கும்  ! குடிமக்கள் பெரும் நன்மை  மன்னனின்  திட்டங்களால் மேம்பாடு அடையும் !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,ஆடவை(னி),26]

{10-07-2021}

------------------------------------------------------------------------------------------------------------