name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 11/02/19

சனி, நவம்பர் 02, 2019

கவிதை (60) (2019) பொங்கல் திருநாளும் புத்தாண்டு ! (பொங்கல் வாழ்த்துக்கவிதை.)


         கொத்து (01)                                                    மலர் (059)

-----------------------------------------------------------------------------

           புத்தாண்டு வாழ்த்து

பொங்கல் திருநாள் வாழ்த்து !

                                           (ஆண்டு.2019)
-------------------------------------------------------------------------------


பொங்கல்  திருநாளும் புத்தாண்டுப் பெருநாளும்

.........பூத்ததின்று !  வாழ்க !  வாழ்க ! – மனதில்

கங்குலெனத் துஞ்சுதுயர் கறைவிலகப் பார்முழுதும்

........கார்பொழிவில்  செழித்து  வாழ்க  ! – தமிழர்

எங்கிருந்த   போதுமவர்   இல்லமதில்  இன்பமினி

.........எய்திடுக ! வாழ்க ! வாழ்க ! – இனிக்கும்

தெங்குவிளைக் கன்னலெனப் பொங்கிடுக மங்கலமே

.........தென்னவரே  செந்தமிழே ! வாழ்க ! வாழ்க !



இற்றை  நாளில் உற்றவை எண்ணி

.........இனிதே  பாதையை  வகுத்திடுக !

அற்றை  நாளில்  நம்மவர்  இயல்பை

.........அகிலம் போற்றிய  தெண்ணிடுக !

கொற்றத்  தமிழின்  இற்றை  நிலையை

.........குரிசில்  நீவிரும்  கூர்ந்திடுக !

வற்றல்  மரமென  நித்தம்  அழிதர

.........வயமா  நாமினி  உறங்குவதோ ?



ஓரா  யிரத்து  எண்ணூ  றாண்டுகள்

..........ஓங்கிய  தீங்கே  வடமொழியே !

தீரா நோயாய் தமிழைத் தழுவித்

..........தீய்த்தது நமது பண்பாட்டை;

ஆரா யாமல் பண்டைய மன்னர்கள்

..........ஆதரித்  திட்டார்  பார்ப்பனரை;

நீராய் நிலனாய் இலங்கிய தமிழும்

..........நெரித்துப்  போனது  அவர்செயலால் !.



இன்றைய நிலையில் மனிதன் பெயரில்

..........இனிய தமிழுக் கிடமில்லை !

ஒன்றிய  கோயில் உறைமொழி  தமிழை

..........ஒழித்தனர்  முற்றாய்ப்  பார்ப்பனரே !

மன்றுள இறைவன் திருமுன் செல்ல

............மண்ணின் மைந்தர்க் கிடமில்லை !

தென்றமிழ் நாட்டில் வடமொழி நாளும்

............திணிக்கப் படுவது நிற்கவிலை !



அச்சம்  எழுகையில்  மானிடர் மனதில்

............ஆன்மிக உணர்வும் வளர்கிறது !

கச்சித மாகவே வடமொழி ஆங்கே

.............கால்களை ஊன்றி எழுகிறது !

நச்சிய  சோதிடம்  ஈங்குப்  புகுந்து,

..........நந்தமிழ் தன்னை வீழ்த்திடுதே !

மெச்சிடு  ஓகம்  மனையடி  எல்லாம்

..........மீமிசை  ஊட்டுது  வடமொழியே  !



தேரார் மக்கள் தீட்டிய மார்கழி

..........தீர்ந்தது சுறவம் பிறக்கிறது !

சீரார் நம்மொழி செந்தமிழ் மண்ணில்

..........செவ்விய வள்ளுவம் மலர்கிறது !

ஈரா  யிரத்தீர்  இருபத்  தைந்து

..........இற்றை நாளில் எதிர்கிறது !

வாரா வந்துறு மாமணி போல

..........வாரிக் கொள்வோம் தமிழர்களே !



வள்ளுவர்  ஆண்டை  இற்றை  முதலே

..........வன்மையு  டன்கைக் கொள்ளுவமே!

தெள்ளிய   தமிழைப்  பேச்சில்  எழுத்தில்

..........திண்ணமு  டன்மனம்  அள்ளுவமே !

துள்ளல்  உணர்வினி நெஞ்சினில் ஊறிட

...........தூவழி  சென்று  மொழி  காப்போம் !

கள்ளத்  தனமாய் தமிழகம் புகுந்துள

............கள்ளிகள்  வேரைக்  களைந்திடுவோம் !



வாழிய !   வாழி!   வாழி ! - நீவிர்

..........வளம்   பெற  நீடுவாழி !

ஆழியைப் போல  வாழி ! - என்றும்

..........அன்புளம்  நிறைந்து  வாழி !

மேழியைப்  போல  வாழி ! - இந்த

..........மேதினி  போற்ற   வாழி !

ஊழியே   எதிர்வந்  தாலும்தமிழ்

.........உளமுடன் நெடிது  வாழி !




அன்னத்தின்   தூவி    போல ,

          அனிச்சப்பூ   இதழைப் போல ,

வண்ணங்கள்   காட்டும்   நீல

           வான்பனி   நீரைப்    போல ,

நெருஞ்சியின்   மலரைப்    போல ,

           நீள்கடல்   நுரையைப்   போல ,

அருந்தமிழ்   நெஞ்சம்   கொண்ட

            அன்பர்காள் !  வாழ்க !  வாழ்க !

-------------------------------------------------------------
        
          ஆக்கம்  +  இடுகை:
        வை.வேதரெத்தினம்,
                  ஆட்சியர்,
       தமிழ்ப் பணிமன்றம்]
      [ தி.: 2049, சிலை, 30]
                     (14-01-2019)
--------------------------------------------


----------------------------------------------------------------------------------------
              
                            அருஞ்சொற்பொருள்:

பூத்ததின்று = இன்று பூத்திருக்கிறது ; கங்குல் எனத் துஞ்சு துயர் கறைவிலக = அடர்ந்த கரிய இரவு போலப் பற்றிக் கொண்டிருக்கும் துயரங்கள் விலகி ; பார் முழுதும் = உலகு எங்கும் ; கார்பொழிவில் = மழை பொழிந்து; இன்பம் இனி = இனி இன்பம்; எய்திடுக = அடைந்திடுக; இனிக்கும் தெங்கு = மிகுந்த தித்திப்பு உடைய ; விளை கன்னல் என = முற்றிய கரும்பு போல இனிப்பு மேலோங்க ; பொங்கிடுக மங்கலமே = இனிமையும் நன்மைகளும்  பெருகிடுக; தென்னவரே = தமிழ் மகவே ! செந்தமிழே = செழுமை மிகு  தமிழ் போன்றவரே !

இற்றை நாளில் = இன்று வரை; உற்றவை = நிகழ்ந்தனவற்றை ; அற்றை நாளில் = அன்று ( அதாவது பண்டைக் காலத்தில்) போற்றிய தெண்ணிடுக = போற்றியது எண்ணிடுக; கொற்றத் தமிழ் = அரசாட்சி செய்த தமிழ்; கூர்ந்திடுக = கூர்ந்து நோக்குக ; வற்றல் மரம் என = பட்டுப் போன மரம் போல; நித்தம் அழிதர = அன்றாடம் நலிவடைய ; வயமா நாமினி = புலி போன்ற நாம் இனி; உறங்குவதோ = உறங்கிக் கொண்டு இருக்கலாமா?

ஓராயிரத் தெண்ணூறு ஆண்டுகள் = 1800 ஆண்டுகளாக ; ஓங்கிய தீங்கே = ஓங்கியது ஈங்கே (இங்கே); நெரித்துப் போனது = நசுங்கிப் போனது.

ஒன்றிய கோயில் = பல்லாண்டுகளாக நிலைபெற்றிருந்த கோயில்களில்; உறைமொழி = இறைவன் முன் தேவாரம் போன்ற பாடல்களாக ஒலித்த தமிழ் மொழி ; முற்றாய் = முழுவதுமாக ; மன்று உ(ள்) = கோயிலில் அகநாழிகை எனும் கர்பக்கிரகத்தின் உள்ள ; திருமுன் செல்ல = இறைவன் முன் செல்வதற்கு; மண்ணின் மைந்தர்க்கு = இந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு.

நச்சிய சோதிடம் = விரும்பிப் பார்க்கும் சோதிடக் கலையில்; ஈங்கு புகுந்து = வடமொழி வந்து புகுந்து கொண்டு; ஓகம் = யோகாசனம் எனப்படும் ஓகக் கலை; மனையடி = வாஸ்து சாஸ்திரம் எனப்படும் மனையடிக் கலை ஆகியவற்றில்; மீமிசை ஊட்டுது வடமொழியே = மேலும் மேலும் வடமொழிச் சொற்கள்  வலிந்து புகுத்தப்படுகின்றன.

தேரார் = இழிந்த மக்கள் புகுத்திய; மார்கழி தீர்ந்தது = மார்கழி முடிந்து விட்டது; சுறவம் = தை மாதம் எனப்படும் சுறவ மாதம்; வள்ளுவம் மலர்கிறது = திருவள்ளுவர் ஆண்டு பிறக்கிறது;  ஈரா யிரத்தீர் இருபத் தைந்து = 2050 ; இற்றை நாளில் எதிர்கிறது = இன்று தொடங்குகிறது; வாரா வந்துறு = வாராது வந்த .

வன்மையுடன் கைக் கொள்ளுவமே = உறுதியாகச் செயல்படுத்துவோம்;  திண்ணமுடன் மனம் அள்ளுவமே = தமிழிலேயே பேசவும், எழுதவும் உறுதி கொள்வோம்; கள்ளிகள் வேரைக் களைந்திடுவோம் = கள்ளிச் செடிகளாகப் பரவி தமிழை வீழ்த்த நினைக்கும் வடமொழியையும் ஆங்கிலக் கவர்ச்சியையும் வேரோடு சாய்ப்போம்.

ஆழி = கடல்; மேழி = ஏர் ; மேதினி = உலகம்; ஊழி = அழிவு தரும் இன்னல்கள்; தமிழ் உ(ள்)ளமுடன் = தமிழ் தவழும் உள்ளமுடன்; நெடிது = நீண்ட காலம்.

தூவி = இறகு; அனிச்சப் பூ = மிக மென்மையான இதழ்களை உடைய அனிச்ச மலர்; வான் பனி நீர் = பனித் துளி; நெருஞ்சியின் மலர் = மஞ்சள் நிறத்தில் ஒளிரும் மென்மையான நெருஞ்சி மலர் ; நீள்கடல் நுரை = கடல் அலைகளின் வீச்சால் எழுந்து படரும் நுரை போல; அருந்தமிழ் = செவ்வியல் இயல்பு கொண்ட தமிழ் மொழி;  நெஞ்சம் கொண்ட = நெஞ்சமெலாம் தமிழே நிறைந்திருக்கும் ; அன்பர்காள் வாழ்க வாழ்க ! = அன்பர்களே நீவிர் வளம் பெற்று வாழ்க ! நும் இல்லமதில் செல்வம் செழிப்புற்று ஓங்கி, நீவிர் நெடிது  வாழ்க !

---------------------------------------------------------------------------------------
      “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற வாழ்த்து !
---------------------------------------------------------------------------------------