name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: சொல் விளக்கம்
சொல் விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொல் விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, டிசம்பர் 22, 2019

சொல் விளக்கம் (01) உங்களுக்குக் காக்கை பிடிக்கத் தெரியுமா ?

பலருக்கும் இதுபற்றித் தவறான புரிதலே உள்ளது !



மருதவனம் ! பெயருக்கு ஏற்றாற்போல் ஒருகாலத்தில் மருதமரங்கள் நிறைந்து வனமாகக் காட்சியளித்த ஊர். இப்போது எங்காவது ஒரு சில மரங்கள் மட்டுமே காணப்படுகின்றன. மரத்தின் பெயரும் கூட உருமாறிவிட்டது. கருமருது, பிள்ளை மருது  என்று சொன்னால் தான் மக்களுக்குப் புரிகிறது !

மீனவன் நல்லூர்மாங்குடி சாலையிலிருந்து கீழ்புறமாக சற்று உள்ளடங்கி இருக்கும் ஊர்  மருதவனம். திருவாரூர் மாவட்டத்தில் பசுமை போர்த்திய வயல்கள் நிறைந்த சிற்றூர்களில் இதுவும் ஒன்று. மருதவனத்தில் உப்பரிகையுடன் (BALCONY) அமைந்த தெற்குப் பார்த்த மச்சு வீடு.  வீட்டு வாசலில் நான்கு வேப்ப மரங்கள். மேழத் திங்களின் (சித்திரை) வெப்ப வீச்சினைத் தணித்து, இவை குளிர்ந்த நிழலைத் தந்துகொண்டிருந்தன !

பிரம்பு பின்னிய இருக்கையுடன் மடக்குக் கை வைத்த அந்தக் காலத்துச் சாய்வு நாற்காலியில் (EASY CHAIR) ஓய்வாகப் படுத்திருந்தார் பண்ணையார் நல்லதம்பி. பெயர்தான் நல்லதம்பியே தவிர உண்மையில் அவர் செல்வச் செருக்கு (ஆணவம்) மிக்க கெட்டதம்பி. எளியவர்களை  ஏளனமாகப் பார்க்கும்   இரக்கமில்லாத்தம்பி. அகன்ற குறுங்காலி (STOOL) மீது இரண்டு கால்களையும் வைத்து நீட்டியபடி, வேப்பமரக் காற்றில் மிதந்து வந்த மெல்லிய நறுமணத்தை உள்வாங்கி இயற்கையின் இனிமையை மனதிற்குள் சுவைத்த படி நல்லதம்பி  கண்களை மூடி இளைப்பாறிக் கொண்டிருந்தார் !

வீட்டின் மேற்புறமாக, சற்றுத் தள்ளி,  நீண்டு உயர்ந்த வைக்கோல் போர் மருதவனத்தின் செழுமையைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது. வைக்கோல் போர் முன் கட்டப்பெற்றிருந்த ஈரிணை (TWO PAIR) வண்டி மாடுகளின் கழுத்திலிருந்த சதங்கைகள் மெல்லிய இசையை எழுப்பிக் கொண்டிருந்தன. தோட்டத்து மாமரத்திலிருந்து சில குயில்கள் தம் இணையைக் கூவிக் கூவிக் குழைந்து  அழைத்துக் கொண்டிருந்தன !

முற்றத்து முன்வாயிலைத் திறந்துகொண்டு  தெற்குத் தெரு முருகவேல் அடக்க ஒடுக்கமாக உள்ளே வந்தார். நல்லதம்பி மெல்லக் கண் விழித்து அவரைப் பார்த்தார். “ஐயா ! கும்பிடுகிறேனுங்க !“  யாரப்பா அது ?” “நான்தாங்க தெற்குத் தெரு முருகவேல்” ”வா ! வா ! முருகவேல் ! என்னப்பா இந்தப் பக்கம் ?” ”சும்மாதாங்க ! ஐயா உடம்புக்கு முடியாம இருந்தீங்கண்ணு கண்ணுச்சாமி சொன்னானுங்க ! அதுதான் பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தேன் !”

சும்மா, காய்ச்சல் தான். வேறொன்றுமில்லை ! சரியாகிவிட்டது. சற்றுக் களைப்பாக இருக்கிறது. உடம்பெல்லாம் ஒரே வலி. அதுதான் வேப்பங்காற்று வாங்கி கொண்டு படுத்திருக்கிறேன்.”


முருகவேல், பண்ணையாரின் பக்கத்தில் வந்து நின்று, சாய்வு நாற்காலியின் மடக்குக் கைகளின் மீது கிடத்தியிருந்த அவரது கைகளை மெல்லப் பிடித்து  விட்டார். காய்ச்சலால் ஏற்பட்டிருந்த  உடம்பு வலிக்கு முருகவேலின் உடம்புப் பிடிப்பு’ (MASSAGE) மிகவும் இனிதாகத் தோன்றியது. முருகவேல் பண்ணையாரின் இரண்டு கைகளையும் மாறி மாறி மெல்லப் பிடித்துவிட்டார். ”உன் பையன் என்னப்பா செய்கிறான் ?” பண்ணையார் கேட்டார்.

இரு கைகளையும் மென்மையாக அமுக்கி, அழுத்தி,  பிடித்துவிட்ட முருகவேல், அடுத்து குறுங்காலி மேல் நீட்டி இருந்த பண்ணையாரின் வலப் பக்கக்  காலைப் பிடித்துவிடத் தொடங்கினார். பிடித்துவிட்டுக் கொண்டே, “ஐயா, அவன் துவாக்குடி அரசினர் பல்தொழில் பயிலகத்தில் (POLYTECHNIC COLLEGE) மின்னியல் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறான்.” என்று சொன்னார் !

பண்ணையாரின் வலக் காலை மென்மையாக அமுக்கிப்  பிடித்து விட்ட  முருகவேல், அடுத்து அவரது இடக் காலையும் பிடித்துவிடத் தொடங்கினார். “முருகவேல் ! வீட்டுக்குப் போகும் போது வண்டி மாடுகளுக்கு பருத்திக் கொட்டையும் கடலைப் பிண்ணாக்கும் தவிட்டுடன் கலந்து தீனி வைத்துவிட்டுச் செல். பண்னையாள் கருப்பையன் இன்று வெளியூரில் இருப்பதால் வரவில்லை; அவன்தான் வழக்கமாகத் தீனி வைப்பான்

சரி ஐயா! அப்படியே செய்கிறேன் !” என்றபடி, குறுங்காலி மீது நீட்டியிருந்த பண்ணையாரின் கால்களை மெல்ல மெல்ல நீவிப்  பிடித்து விடுவதைத் தொடர்ந்தார்.. அறுபது அகவையைக் கடந்துவிட்ட பண்ணையாருக்கு, முருகவேலின் மென்மையான உடம்புப் பிடிப்பு (MASSAGE) மிகுந்த இன்னலமாய்த் (சுகமாக) தோன்றியது !

கை,கால்களை மாறி மாறி பிடித்துவிடுவதைத் தொடர்ந்த முருகவேலுக்கு தான் வந்த நோக்கத்தைச் சொல்ல அச்சமாக இருந்தது. பண்ணையார், சினமேற்பட்டுத் தன்னைத் திட்டினால் என்ன செய்வது என்று பயந்தார்.  முருகவேல் ! என்னப்பா ! உன் பெண் என்ன செய்கிறாள் ?” இந்தக் கேள்வி முருகவேலுக்குத் தான் வந்த நோக்கத்தை மெல்ல எடுத்துரைக்க வாய்ப்பாக இருந்தது.  வீட்டில்தாங்க இருக்கிறாள். அவளுக்குத் திருமணம் கூடி வந்திருக்கிறது.  மாப்பிள்ளை கோவையில் வேலையில் இருக்கிறார் !”

சரி ! பணம் ஏதாவது வேண்டுமா முருகவேல் ?” “ஆமாங்க ஐயா !” “சரி ! ஒரு ஐந்தாயிரம் போதுமா ?” “உங்க விருப்பமுங்க ! எல்லாவற்றுக்கும் பணம் திரட்டிவிட்டேன். மாப்பிள்ளைக்கு பத்து கிராமில் மோதிரம் போட வேண்டும். அதற்குத் தாங்க என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் நிற்கிறேன்

அப்படியா ?” சரி உள்ளே அம்மாவிடம் போய் நான் சொன்னேன் என்று சொல்லி ஒரு முப்பதாயிரம் உருபா வங்கிக் கொள். இதில் பத்தாயிரம் உன் பெண்ணுக்கு என் சீராக வைத்துக் கொள். மீதம் இருபதாயிரமும் உன்னால் முடிந்த போது திருப்பித்தா !”

வண்டி மாடுகளுக்குத் தீனி வைத்துவிட்டு, முப்பதாயிரம் உருபா பணத்துடன்  முருகவேல் மனம்கொள்ளா மகிழ்ச்சியுடன் வீட்டுக்குச் சென்றார்.  எப்படி நடந்தது இந்த மாயம் ?  செல்வச் செருக்கில் ஏழைகளை இளக்காரமாகப் பார்க்கும் பண்ணையார் நல்லதம்பியின் மனம் இளகியது எப்படி ?

காய்ச்சலால் உடம்பில் ஏற்பட்ட வலி, முருகவேலில் கால், கை பிடிப்பில் (MASSAGE) பண்ணையாருக்கு மறைந்து போயிற்று. அவர் மனம் உடல்வலியின் பீடிப்பிலிருந்து மீண்டு, இனிமையான துய்ப்பை (சுகமான அனுபவத்தை) உணர்ந்தது. மனதின் இனிய துய்ப்பு, அவரது கடினமான மனதை இளக்கி, முருகவேலின் பால் அன்பு பாராட்டச் செய்தது. முருகவேலின் எதிர்பார்ப்புத் தடங்கலின்றி நிறைவேறியது !

முருகவேலின் கால், கைபிடிப்புதான் (MASSAGE) இதை நிறைவேற்றித் தந்திருக்கிறது. ஆம் ! “கால், கைபிடிப்புக்குத் தான் எத்துணை ஆற்றல் ! இந்தக் கால், கை பிடிப்புத் தான் கால்கை பிடிப்பாகி. கால்க்கை பிடிப்பாக உருவெடுத்து, பின்பு காக்கை பிடிப்பாக மாறி, இறுதியில் காக்கா பிடித்தலாக மக்களிடையே உலா வருகிறது ! “காக்காபிடித்தல் என்னும் சொலவடை தோன்றிய வரலாறு இப்போது உங்களுக்குப் புரிகிறதா ?

ஏதாவது செயலை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு நீங்கள் யாரையாவதுகாக்காபிடித்திருக்கிறீர்களா ? ”ஆம்என்றால் அந்தக் கதையை எங்களுக்கும் சொல்லுங்களேன் ! “இல்லையா ?” அப்படியென்றால் இந்த உலக வாழ்க்கை உங்களுக்குக் கடினமாக இருக்குமே ! எப்படிக் காலந் தள்ளுகிறீர்கள் ?

என் கட்டுரைகளுக்குவிழைவு” (LIKE) அல்லது  கருத்துரை” (COMMENTS) அல்லது பகிர்வு (SHARE) பெறும் பொருட்டு நானும் உங்களைக்காக்காபிடிக்க வேண்டும் போலும் ! என்னே உலகமிது !


---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050: சிலை (மார்கழி) 06]
{22-12-2019}

---------------------------------------------------------------------------------------------------------
             
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

---------------------------------------------------------------------------------------------------------



வெள்ளி, ஆகஸ்ட் 30, 2019

சொல் விளக்கம் (02) ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் !

     ”ஐந்தும்” என்பது “ஐந்து” என மருவியதன் விளைவு !



ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பது மக்களிடையே வழங்கும் சொலவடை ! இதன் மூல வடிவம்ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்என்பது ! ஐந்து என்பது எவற்றைக் குறிக்கிறது ? காண்போமா !

(01) ஆடம்பரமான தாய் :-

ஒரு ஆடவனின் தாய்க்கு, ஆடம்பர வாழ்க்கை மீது அளவு கடந்த ஈர்ப்பு இருக்குமேயானால், அவன் எத்துணை வருவாய் ஈட்டினாலும், போதாது ! அவனது செல்வ வளம் காலப்போக்கில் நலிவடைந்து வறியவன் ஆகிப் போவான் !

(02) பொறுப்பற்ற தந்தை :-

தந்தை குடும்பப் பொறுப்பு சற்றும் இல்லாதவராக இருந்தால், எந்தக் குடும்பமாக இருந்தாலும், அது நாளடைவில் நிலகுலைந்து தான் போகும் ! இத்தகைய குடும்பத்து ஆடவன் எத்துணைப் பாடுபட்டாலும், அக்குடும்பம், உயர்நிலைக்கு வருவது அரிதினும் அரிது !

(03) சோம்பேறிச் சகோதரர்கள் :-

சகோதரர்கள் சோம்பேறிகளாக இருந்தால், அவர்களால் வருவாய் வாய்ப்புகள் துப்புரவாக இராது ! ‘குந்தித் தின்றால் குன்றும் குலைந்து போம்என்னும் முதுமொழியின்படி இவர்கள் குடும்பத்துச் சொத்துகளைத் தின்றே அழித்து விடுவார்கள் !

(04) ஒழுக்கமில்லாத மனைவி :-

நன்முறையில் குழந்தை வளர்ப்பு, தேவையற்ற செலவுத் தவிர்ப்பு, சிக்கனமான வாழ்க்கை, பேராசை இன்மை, இனிய பேச்சு, ஆகிய நல் ஒழுக்கங்கள் இல்லாத மனைவி ஒருவனுக்கு அமைந்துவிட்டால், அவனால் செல்வ வளத்தில் நிமிர்ந்து நிற்கவே முடியாது ! குடும்பம் மென்மேலும் உயர்வடைய  ஒழுக்கசீலரான மனைவி இன்றியமையாத் தேவை ஆகும் !

(05) சொற்பேச்சு கேளாப் பிள்ளைகள் :-

தாய் தந்தையரின் உயரிய வழிகாட்டுதலின்படி நடந்து, அவர்களின் அறிவுரைப்படி தம்மை நல்வழிப் படுத்திக் கொள்ளும் பிள்ளைகள் அமைவது ஒரு குடும்பத்திற்குக் கிடைக்கும் பெரும் பேறாகும் ! மாறாக, பெற்றோரின் சொற் பேச்சினைக் கேட்டு நடவாத பிள்ளைகள்  இருக்கும் குடும்பம், எக்காலத்திலும் முன்னேறவே முடியாது !

எதிர்மறை விளைவுகளைத் தரும் மேற்கண்ட ஐந்து தீய குணங்களையும் உடைய எந்தக் குடும்பமும், எந்தக் காலத்திலும், முன்னேற முடியாது ! குடும்பத் தலைவன் எத்துணை உழைத்தாலும், அவனது வருவாய் நலிவடைந்து, குடும்பமே வறிய நிலைக்கு ஆட்பட்டுப் போகும் ! குடும்பத் தலைவன் அரசனே ஆனாலும்கூட நாளடைவில் ஆண்டியாகிப்போவான் !

மேற்கண்ட கருத்தை எடுத்துச் சொல்ல உருவான சொலவடை, காலப் போக்கில் கருத்துச் சிதைவு ஏற்பட்டு, “ஐந்து பெண் பெற்ற அரசனும் ஆண்டியாவான்”, “ஐந்தாறு பெண் பிறந்தால், அரசனும் ஆண்டியாவான்என்று வடிவம் மாறி நிலைபெற்றுவிட்டது !

ஐந்தும் பெற்றால், அரசனும் ஆண்டியாவான்என்று நாம் இனிமேல் திருத்தமாகப் பேசுவோம் ! எழுதுவோம் ! சரிதானே !

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
 [தி.:2049, துலை,23.]
(09-12-2018)
         -----------------------------------------------------------------------------------------------------
      
         ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

          --------------------------------------------------------------------------------------------------





சொல் விளக்கம் (03) "ங”ப்போல் வளை !

பொருள் பொதிந்த உவமை !  பொருள் புரியாதோர்  பேராளம் !

ஔவையார் அருளிய ஆத்திச் சூடியில் 15 –ஆவதாக இடம் பெறுவது “ங”ப் போல் வளை என்பது. இதற்கு என்ன பொருள் ! தமிழ் நெடுங் கணக்கில் “ங” என்ற உயிர்மெய் எழுத்தும் ஒன்று. ங, ஙா, ஙி, ,ஙீ, ஙு, ஙூ, ஙெ,,ஙே, ஙை, ஙொ, ஙோ,, ஙௌ,, ங் என்னும் 13 எழுத்துகளிருந்தாலும் தமிழ்ச் சொற்களில் பயன்படுபவை  ங, ங் ஆகிய இரண்டு எழுத்துகள் மட்டுமே !


"ங" என்பது குறுணியை (பண்டைய முகத்தால் அளவையில் ஒரு மரக்கால்)  குறிக்கும் குறி; ஙகரம் = குறுணியளவு; ஙனம் = இடம், தன்மை, விதம், வகை; இம்மூன்று சொற்களே ஙகரத்தை முதலாகக் கொண்டு அமைந்துள்ளவை. இங்ஙனம், அங்ஙனம், உங்ஙனம் போன்ற சொற்களில் ங்”, ”இரண்டு எழுத்துகளும் சொல்லின் இடையில் வருகின்றன !

 

மேற்கண்ட இரு எழுத்துகளன்றி “ங”கர வரிசையில் உள்ள எஞ்சிய 11 எழுத்துகளும் வேறு தமிழ்ச் சொல் எதிலும் வருவதில்லை. வேறு எந்தச் சொல்லிலும் ஙா, ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙௌ ஆகிய 11 எழுத்துகளும் வருவதில்லை. என்றாலும் தமிழ் நெடுங்கணக்கில் (அரிச்சுவடி) ”ங” வரிசையில் 13 எழுத்துகளும் இடம் பெறுகின்றன. எந்தச் சொல்லிலும் பயன்படுத்த இயலாத 11 எழுத்துகளையும்  என்னும் எழுத்து அரவணைத்து அரிச்சுவடியில் இடம் பெறச் செய்கிறது !

 

பயனற்ற தன் இன எழுத்துகளை கரம் விட்டுக் கொடுக்காது, தமிழ் நெடுங்கணக்கில் இடம்பெறச் செய்துவிடுகிறது. ஒரேயொரு கரத்துக்கு இருக்கும் இன உணர்வு நமக்கு இருக்கிறதா ? இல்லை ! யார் எப்படிப் போனால் என்ன ? நாமும் நம் பிள்ளைகளும் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்ற தன்னல உணர்வு தமிழனிடத்தில் தலைதூக்கி நிற்கிறது !

 

இவ்வாறு எதிர்காலத்தில் நிகழும் என்று அன்றே ஔவையாருக்குத் தெரிந்திருந்தது போலும் ! அதனால் தான் அன்றே அறிவுரை சொன்னார் ”ங”ப் போல் வளை என்று ! உன் இனத்தாரினால் உனக்குப் பயன் ஏதும் இல்லையென்றாலும் அவர்களை விட்டுக்கொடுக்காதே; அவர்களையும் அரவணைத்துச் செல். அவர்கள் அழிந்தால் நீயும் அழிந்து போவாய்”. இதுதான் ஔவையார் நமக்குச் சொல்லாமற் சொன்ன அறிவுரை !

 

பிறந்த குழந்தை கண் விழித்ததும் இன்றைய தமிழன் அதன் வாயில் புகட்டுவது A for Apple அல்லவா  ? ”ப் போல் வளை என்பதைப் படிக்காத தமிழன்,  படித்திருந்தாலும், ஆங்கிலத்துக்கு அடிமையாகி மயங்கிக் கிடக்கும் தமிழன், தமிழுணர்வு அற்றுப்போன தமிழன், தன் இனத்தாரை அரவணைத்துச் செல்வது நடக்கக்கூடியா செயலா என்ன ?

----------------------------------------------------------------------------------

பண்டைத் தமிழகத்தில் கர வரிசையில் இடம்பெற்றுள்ள 13 எழுத்துகளும் சொற்களில் பய்ன்படுத்தப் பட்டிருக்க வேண்டும். அதனால் தான் தமிழ் நெடுங்கணக்கில் ”கரம் இடம் பெற்றிருக்கிறது. காலப் போக்கில், ஔவையார் காலத்திற்கு முன்பே தமிழனின் கருத்தின்மை காரணமாக “ங”கர வரிசை எழுத்துகள் இடம் பெற்ற சொற்கள், வேறு பல சொற்களைப் போல் அழிந்துபட்டிருக்க வேண்டும். !

 

அன்றாடம் நாம் நமது உரையாடலில் ஆங்கிலத்தை அகற்றினாலே, தமிழ்ச் சொற்கள் வழக்கற்றுப் போகும் நிலை வராது ! இற்றைத் தமிழன் இதை உணரவேண்டும் !

----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

"தமிழ் மாலை”வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 18]

{03-08-2022}


---------------------------------------------------------------------------------





சொல் விளக்கம் (04) நாட்டுப் பெண்- மாட்டுப் பெண் !

திருத்தமில்லாப் பேச்சு !   பொருளும் மாறிப் போச்சு  !



நாட்டுப் பெண், மாட்டுப் பெண் என்ற சொற்களைப் பலரும் கேட்டிருப்பீர்கள். குறிப்பாக பிராமணப் பெண்களிடம்  இச்சொற்கள் அடிக்கடி புழங்கும் !

நாட்டுப்பெண், மாட்டுப்பெண் என்றால் என்ன ? உங்களுக்குத் தெரியுமா ?

நீர்ப்பாசன வசதி உள்ள இடங்களில்  நடவு செய்வதற்காக, வயலில் ஒரு சிறு பகுதியில் நாற்று விடுவார்கள். குறிப்பிட்ட நாள்கள் சென்ற பிறகு அந்த நாற்றுகளைப் பறித்துபக்குவப் படுத்தப்பட்ட  வேறு வயல்களில் நடுவார்கள் !

நாற்றைப் பறித்து எடுத்துச் சென்ற பின்பு அந்த இடம் வெட்புலமாக (VACANT) இருக்கும் அல்லவா ? அந்த இடத்தைப்  பக்குவப் படுத்திவிட்டு வேறு இடத்தில் விடப்பட்டிருக்கும் நாற்றைக் கொண்டு வந்து இங்கு நடுவார்கள். இது தான் வேளாண் பெருமக்கள் பின்பற்றும் நடைமுறை ! 
    
இங்கு என்ன நிகழ்கிறது ? ஒரு வயலில் வளர்ந்திருக்கும் நாற்றைக் கொண்டுபோய் இன்னொரு இடத்தில் நடுகிறார்கள். அங்கு அது செழித்து வளர்ந்து பலன் தருகிறது. வளர்வது ஓரிடம்; நெல்மணியாம் வித்துக்களை விளைவிப்பது இன்னோரிடம் !

நம் வீட்டில் பிறந்து வளரும் நமது பெண்ணும் நாற்றுப் போன்றவள். வளர்வது நம்வீட்டில்; வாழ்வதும் பிள்ளைகளைப் பெற்றுக் குலம் தழைக்கச் செய்வதும்  இன்னொரு வீட்டில். அவள் வளர்வது ஓரிடம்; வாழ்வது  இன்னோரிடம்.  நம் வீட்டு நாற்றினைப் பறித்து இன்னொரு வீட்டில் நடுகிறோம். நாற்று அங்கு தன் வாழ்க்கையைத் தொடர்கிறது !

நாற்றுப் பெண் என்ற சொல்லின் பெயர்க் காரணம் புரிகிறதா ? “நாற்றுப் பெண்என்ற சொல்நாட்டுப் பெண்ஆகி பலரது நாவிலும் பொருள் புரியாமலேயே இன்னும் புழங்கி வருவது விந்தையிலும் விந்தை !

நாற்றுபோன்ற பெண்நாற்றிஎனப்பட்டாள். ”நாற்றிஎன்பது திரிந்துநாத்திஆகிவிட்டது. “நாற்று அன்னார்என்றால் நாற்று போன்றவள் என்று பொருள். நாற்று + அன்னார் = நாற்றன்னார் = நாற்றனார் = நாத்தனார் நாத்தனார் பெயர்க்காரணம் இப்பொழுது விளங்குகிறதா ?

நம் வீட்டில் விளக்கேற்றிய  நமது  பெண் திருமணமாகி இன்னொரு வீட்டுக்கு வாழச் சென்றுவிட்டாள். நம் வீட்டில் விளக்கேற்ற ஒரு மாற்றுப் பெண் வேண்டாவா ? நாற்றாகிச் சென்றுவிட்ட நமது வீட்டுப் பெண்ணுக்கு மாற்றாக வேறொரு ஊரில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணை நம் வீட்டுக்கு மருமகளாகக் கொண்டுவருவது தானே முறை !

நாற்றுப் பெண் விளக்கேற்றிய வீட்டில், அவளுக்குமாற்றுப் பெண்”ணாக மருமகள் வருகிறாள். இந்த மாற்றுப் பெண்ணைத் தான் பலரும்மாட்டுப் பெண்ஆக்கி விட்டார்கள் !

சிலர் பேச்சுத் தமிழை எழுத்திலும் கொண்டு வருகிறார்கள்அதை நியாயப்படுத்தவும் செய்கிறார்கள். இத்தகைய மொழிச் சிதைவை அனுமதித்தால், “நாட்டுப் பெண்”, “மாட்டுப்பெண்போன்ற பொருளற்ற சொற்கள் தமிழில் பல்கிப் பெருகிவிடும். தமிழ் ஆர்வலர்கள் புரிந்து கொள்வார்களாக !


-------------------------------------------------------------------------------------------------------------
       
 ”தமிழ்ப் பணி  மன்றம் முகநூற்குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை

----------------------------------------------------------------------------------------------------------------------------------


ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்
.[தி.:2049, துலை,22.]
(08-11-2019)
-------------------------------------------------------------------------------------------------------------