கொத்து (01) மலர் (046)
---------------------------------------------------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டையிலிருந்து சென்னை, இயக்ககத்திற்கு
இடமாற்றலாகிச் சென்ற
அலுவலக மேலாளர் திரு. சு. அரங்கராசன் அவர்களுக்கு
அளிக்கப்பெற்ற தேனீர் விருந்தின் போது நான் ஆற்றிய உரை !
(நாள் : 30-04-1970)
--------------------------------------------------------------------------------------------
வணக்கத்திற் குரியவரே அவையின் ஏறே !
வருத்தமுடன் பிரிவோலை ஏற்கும் கோவே !
கணக்கற்ற பெருந்துயரில் வாடும் நண்ப !
கசிந்துருகித் தடுமாறி மன்றம் ஏறி ,
வணங்குகிறேன் கரங்கூப்பி கண்ணீர் சிந்தி ,
வதைபடுமென் நெஞ்சத்தைப் படம்பி டித்து ,
பணங்கோடி தந்தாலும் ஈடா காத ,
பாசத்தால் காட்டுதற்கு உவந்தேன் ; வந்தேன் !
-------------------------------------------------------------------------------------------------------------
கூடுகட்டி வாழ்ந்தகுயில் வீடுவிட்டுப் போகுது ! –
அதன்
குஞ்சுகளின் பிஞ்சுமனம் வெந்துமணல் ஆகுது !
பாடிநின்ற பேடுஇன்று வாடிநெஞ்சு வேகுது ! –
அதன்
பாதுகாப்பில் வாழ்ந்தகுஞ்சு பிரிவுகண்டு நோகுது !
ஓடிவந்த காடைகளைச் சாடிவந்த பேடையும் – பிரிவு
ஓலையெனும் வலையினின்று மீட்சியின்றி உழலுது !
கூடிநின்று இன்பமுடன் ஆடிவந்த பறவைகள் – இன்று
கூறுபட்டு அன்னையின்றி குமுறுகின்றது ஐயகோ !
------------------------------------------------------------------------------------------------------------
நாடிவந்து சாடுகின்ற பேடிகளாம் தீயோர் ,
நாவறுத்து சிரமொடித்த படைத்தலைவன் அங்கே !
வாடிநின்று ஆடிவழி தேடுகின்ற வேங்கை ,
வலிபடைத்தும் சோர்வுகொண்ட வீர்ர்களோ இங்கே !
கூடிவந்து பாடிநின்று கோடுவெட்டும் தீயோர்
குலையறுத்து அடிமிதித்த படைத்தலைவன் அங்கே !
மிடியகற்றித் துடிதுடிக்க படைநடக்கும் மறவர் ,
மனமொடிந்து வலிவிழந்து மயங்குவதோ இங்கே !
குடியிருந்த கோயிலிடை இடியும்வந்து வீழ்ந்தால் ,
குடல்கலங்கும் குழவியரின் புகலிடந்தான் எங்கே ?
விடிந்தவுடன் ஒளிபெருக்கும் விரிகதிரோன் அன்றி ,
விட்டிலொளி பயன்தருமா ? வளம்பெறுமா வாழ்வே ?
------------------------------------------------------------------------------------------------------------
அணிமிகுத்து பணிமுடிக்க வழியனுப்பும் தந்தை ,
அடியெடுத்து நடைமுடித்து கடலடுத்துப் போந்தார் !
துணிவுதந்து பிணிவிலக்கி அரணமைத்த தோன்றல் ,
தொலையிடத்து அலைமுகத்து களையிழந்து சென்றார் !
மடியிருத்தி அடிசிலூட்டி கொடியிலிட்ட அன்னை ,
மனம்வளர்த்த நினைவுதிர்த்து நெடும்பயணம் சென்றாள் !
செடிகளைந்து சுடுமணலில் படியவைத்தல் போல ,
சேய்களிங்கு நோய்களுற்றோம் தாய்மறைந்து சென்றாள் !
------------------------------------------------------------------------------------------------------------
தடமமைத்து வழிநடத்த பணிசுமந்த தலைவா
!
- இன்று
தடம்பிறழ்ந்து எமைப்பிரிந்து செல்வதுவும் முறையா ?
குடமெடுத்து அறிவுமொண்டு அருந்தவைத்த தந்தாய் ! –
இன்று
குடம்விடுத்து எமைத்துறந்து ஏகுவதும் சரியா ?
நடைபழக்கி உடைதிருத்தி அருள்கொடுத்த தாயே ! –
இன்று
நடந்துசெலப் பணித்துவிட்டு விரைந்தனையே தகுமா ?
விடைகொடுக்கக் குழுமியுள்ள வீர்ர்களின் இறைவா ! –எங்கள்
விழியிரண்டும் விதும்பலுற்று நீருகுதே ! நிறைவா ?
------------------------------------------------------------------------------------------------------------
உயர்பணிக்கு அழைத்திடுவார் வாழ்த்திடுவோம் என்றே
உள்ளமதில் எண்ணமுற உவந்திருந்தோம்; ஆனால் ,
பயிர்வளர்க்கும் காவலனே வந்திடுக என்றார் ,
பரிசுமக்குப் பிற்றைநாளில் தந்திடுவோம் என்றார் !
உயிர்கலந்து உறைந்தொழுகும் ஒளிக்கதிரே இன்று ,
உளம்வருந்த விடைகொடுத்து அனுப்புகிறோம் செல்க !
செயிர்தீர்ந்த அரும்பணிகள் ஆற்றியயெம் தலைவா !
சிந்தையெலாம் சூழ்ந்துவர செல்லுகின்றாய் வாழி !
-------------------------------------------------------------------------------------------------------------
திரியெடுத்து சுடர்கொளுத்தி ஒளிபெருக்கும் அன்பே ! – நின்
திருவருளால் அறிவுயர்ந்தோம் உளங்கனிந்த நன்றி !
கரிபடிந்த உளக்கலசம் துலக்கிவைத்த அன்பே ! – நின்
கரமளித்த அரவணைப்பில் உவகையுற்றோம் நன்றி !
உரிமைகொண்ட தாய்மையன்ன அருள்பொழிந்த நிலவே ! – நின்
உறவுகொண்டு நன்மையுற்று அகமகிழ்ந்தோம் நன்றி !
தூரிகையாம் நின்னழகுத் திருப்பணியால் நாங்கள் - நின்
துடிப்புமிகு ஓவியமாய்த் துலங்குகிறோம் நன்றி !
-------------------------------------------------------------------------------------------------------------
அரவணைத்துச் செல்லுகின்ற தன்மையினால் அன்னை !
அருள்சுரந்து நடத்துகின்ற அரும்பணியால் தந்தை !
கரம்பிடித்து நடத்துகின்ற காவலன்நீ அண்ணா !
கைகொடுத்து உதவுகின்ற கருணையினால் நண்பன் !
வழிவகுத்து நடத்துகின்ற வகையதனால் ஆசான் !
வரும்பொருள் உரைத்துநெறி நிறுத்துவதால் தலைவன் !
அழிவினின்று காத்துஎமை ஆள்வதனால் மன்னன் !
அறவழியில் செலுத்துகின்ற அறிவொளிநீ இறைவன் !
-------------------------------------------------------------------------------------------------------------
வாழிய ! வாழி ! வாழி !
வளம்பெற நீடு வாழி !
ஆழியைப் போல வாழி !
அருந்தமிழ் அமுதாய் வாழி !
ஊழையும் வெல்லும் தங்கள்
உயர்தனித் திறமை வாழி !
மேழியின் அருளைப் போல
மேவிய உயிரே வாழி !
புன்னகை மன்னன் தங்கள்
பொறுமையின் வலிமை வாழி !
இன்னருள் உள்ளம் வாழி !
எம்மனோர் நினைவும் வாழி !
வணக்கம் !
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.
-------------------------------------------------------------------------------------------------------------
,