இஃது அக்கரைப் பச்சை போன்றதொரு ஈர்ப்பு !
ஆங்கில
மொழியின்பால் சிலருக்கு அளவு கடந்த ஈர்ப்பு இருப்பதைக் காண்கிறோம் ! ஆங்கிலத்தை
முழுமையாக அறிந்து உள்வாங்கிக் கொண்டதால் ஏற்பட்ட
ஈர்ப்பு என்று இதைச் சொல்ல முடியுமா ? முடியாது !
ஒருவன் ‘காச்சு
மூச்சு’ என்று தப்பும் தவறுமாக ஆங்கிலத்தில் உளறிக் கொட்டினாலும்,
அதைச் செவி மடுக்கும் அரைகுறை ஆங்கில அறிவு பெற்ற இன்னொருவன்,
“ஆகா ! எத்துணை அழகாகத் தங்கு தடையின்றிப் பேசுகிறான்” என்று இனம் புரியாத ஒரு மயக்கத்தில்
ஆழ்ந்து போகிறான் ! அதனால், ஆங்கிலத்தின்
மீது அவனுக்கு இயல்பாக ஓர் ஈர்ப்பு ஏற்படுகிறது
! காரணம் அயலிடம் சார்ந்த எதுவாயினும் அதற்கு ஈர்ப்பு அதிகம் என்பது
உளவியல் சார்ந்த உண்மை !
அயல்நாட்டுக்
கருவிகள் மீது ஈர்ப்பு
! அயல் நாட்டுத் துணிகள் மீது ஈர்ப்பு ! அயல்நாட்டு
எழினிகள் (MOBILES) மீது ஈர்ப்பு ! அயல்நாட்டுச்
செருப்பின் மீது ஈர்ப்பு ! ஏன் - அயல்நாட்டுத்
துடைப்பத்தின் மீதும் ஈர்ப்பு ! அதுபோல் அயல் நாட்டு மொழிகளின் மீதும் ஒரு
ஈர்ப்பு ! இஃது அக்கரைப் பச்சை போன்றதொரு ஈர்ப்பு !
ஆங்கிலத்தின்
மீது ஈர்ப்புக் கொள்வோர்,
பெரும்பாலும் ஆங்கிலம் கற்காத ஆளிநரே (நபர்களே) !
ஆங்கிலம் முழுமையாகக் கற்ற ஆளிநர்
(நபர்கள்) என்று எவரும் நம்நாட்டில் இருக்க முடியாது
! ஏனெனில், ஆங்கிலம் எளிய மொழி போலத் தோன்றினாலும்,
கற்பதற்கு மிகவும் கடினமான மொழி ஆகும் !
ஆங்கிலத்திற்கு
என்று ஒரு கட்டமைப்பு இல்லை ! ஆங்கில மொழிக்கென்று ஒரு அடித்தளம் இல்லை
! ஆங்கிலச் சொற்களில் பெருபாலானவற்றுக்கு வேர்களே (ROOT) இல்லை ! உலகத்தில் உள்ள எல்லா மொழிகளில் இருந்தும் கடன்
வாங்கிய சொற்களின் கலவையே ஆங்கிலம் ! இதனால் ஆங்கிலத்தின் அடியையும்
முடியையும் கண்டவர் இந்த உலகத்தில் எவருமே இலர் !
தமிழில் “அம்மா”
என்று எழுதினால், அதைத் தமிழறிந்த அத்துணை பேரும்
“அம்மா” என்று தான் ஒலிப்பார்கள் ! ஆங்கிலத்தில் அப்படி அன்று ! EDUCATION என்னும் ஆங்கிலச்
சொல்லை ஒருவர் “எஜுகேஷன்” என்கிறார்.
இன்னொருவர் “எடுகேஷன்” என்கிறார்.
புதிதாக ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் ஒருவர் “எடுகேடியான்”
என்கிறார். இவற்றுள் யார் சொல்வது சரி
? எந்த இலக்கணத்தை அடிப்படையாக வைத்து இதற்குத் தீர்ப்புச் சொல்வது
?
நாம் “அயர்ன்”
(IRON) என்பதை என் நாகர்கோயில் நண்பர் ஒருவர் ”ஐரன்” என்றுதான் பலுக்குகிறார். மேனாள் ஆளுநர் மறைந்த கே.கே.சா
அவர்கள் OPPORTUNITY என்பதை “அப்பார்ச்சூனிட்டி”
என்று தான் குறிப்பிட்டு வந்தார். ஆங்கிலத்தைப்
பலுக்குவதில் (உச்சரிப்பதில்) வரைமுறை ஏதுமில்லை
! அவரவர் விருப்பம் போல் பலுக்கலாம் ! இத்தகைய
கட்டுப்பாடு இன்மை தான் அம்மொழியைக் கற்றுக் கொள்வதில் பெரும் இடையூறாக உருவெடுத்து
நிற்கிறது !
எந்த
விதிகளின் அடைப்படையிலும் அமையாமல், நூறாயிரக்
கணக்கில் ஆங்கிலச் சொற்கள் இருக்கின்றன. பல சொற்களின் எழுத்துக்
கட்டமைப்பு ஒருவிதமாகவும்,
அவற்றின் ஒலிப்பு வேறு விதமாகவும் இருக்கிறது !
சைக்காலஜி
(PSYCHOLOGY)
என்னும் சொல்லை, அதன் எழுத்துக்களின் அடிப்படையில்
பலுக்கினால் “பிசிக்கோலோஜி” என்று தான்
ஒலிக்க முடியும் ! CACHE (காஷ்) ,
ENTREPRENEUR (ஆந்த்ரபிரனர்), PHARMACEUTICAL (பார்மாசூட்டிகல்), PNEUMONIA (நிமோனியா),
PSEUDONYM (சுடோநிம்), METEOROLOGY (மெட்ரியாலஜி),
போன்ற சொற்களில் எழுத்துகளுக்கும் ஒலிப்புக்கும் தான் எத்துணை வேறுபாடு !
எழுத்துகளுக்கு
ஏற்ப ஒலிக்கமுடியாத இன்னல் ஆங்கிலத்தில் இருப்பதை எவரும் மறுக்கமுடியாது ! இத்தகைய
இடையூறுகளால் தான் ஆங்கிலம் கற்பது என்பது பிற மொழியினருக்கு அத்துணை எளிய செயலாக இல்லை
!
ஆங்கிலத்தில்
தங்கு தடையின்றிப் பேசும் ஒரு ஆளிநரை (நபரை), அவர்
பேசியதை எழுத்தில் வடிக்கச் சொல்லுங்கள் ! எழுத்துப் பிழைகள்
(SPELLING MISTAKES) ஏராளமாகக் இருப்பதைக் காண்பீர்கள் ! எப்பொழுதும் ஆங்கிலத்தில் பேசிக்
கொண்டே இருப்பவர்களுக்கு, எழுதுகின்ற வாய்ப்பு அரிதாகத்தான் ஏற்படுகிறது.
ஆகையால் ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு எந்தெந்த ஆங்கில எழுத்துகளை இட்டு எழுத
வேண்டும் என்பது அவருக்கு மறந்து போய்விடுகிறது ! இதுதான் ஆங்கிலத்தின்
இயல்பு !
மருந்துச்
சீட்டு எழுதித் தரும் மருத்துவரின் கையெழுத்தை நாம் படிக்க முடிகிறதா ? தெளிவாக
எழுதினால். எழுத்துப் பிழை நம் கண்களுக்குத் தெரிந்துவிடுமே
!
இப்போது
ஆங்கிலப் பயிற்று மொழி வாயிலாகக் கல்வி பயிலும் மாணவர்கள், பிறருடன்
ஆங்கிலத்தில் உரையாடும் திறனை ஓரளவு பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மையே ! ஆனால் அவர்களது உரையாடல், ஆங்கில இலக்கணத்தின் வழி அமைவதில்லை
! அவர்களது உரையாடலில் எழுவாய் (SUBJECT), பயனிலை
(PREDICATE) செயப்படுபொருள் (OBJECT), எதுவும்
முறைப்படி அமைந்திருக்காது !
BROTHER
என்பதை BRO ஆக்கிவிட்டார்கள் ! DADY என்பவர் DAD, ஆகிவிட்டார். MUMMY சுருங்கி MOM ஆகிவிட்டார். ஆங்கில
அகரமுதலியிலேயே இல்லாத Wanna,
Gonna, Yah Yah, நாவின் நுனியில் விளையாடுகின்றன. கொச்சை ஆங்கிலத்தில்
(SLANG) பேசும் திறனைத் தான்
அவர்களிடம் காணமுடிகிறது. இதற்குத்தான் பெற்றோர்கள் நூறாயிரக் கணக்கில் கொட்டிக் கொடுத்து,
பதின்மப் பள்ளிகளுக்கும் (MATRICULATION SCHOOLS), நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத் திட்டப் பள்ளிகளுக்கும்
(C.B.S.C. SCHOOLS) தம் பிள்ளைகளை அனுப்புகிறார்கள் !
ஆங்கிலமொழி
தங்கள் பிள்ளைகளை உயர்ந்த நிலையில் உட்கார வைத்து விடும் என்று பெற்றோர்கள் குருட்டுக்
கனவு காண்கிறார்கள்
! ஆனால், எதைப் பற்றியும் சிந்திக்கக்கூடிய ஆழ்ந்த
ஆற்றலைத் தாய்மொழி போல, அயல்மொழியான ஆங்கிலம் தரமுடியாது என்பதை அவர்கள் உணர்வதே இல்லை
!
அறிவியல்
அறிஞர்கள் அப்துல்கலாம்,
மயில்சாமி அண்ணாதுரை, அரியலூர் வளர்மதி,
சிவன் பிள்ளை போன்ற ஒப்பற்ற
ஒளிவிளக்குகள் எல்லாம் தமிழ்வழியில் கல்வி பயின்றவர்கள் என்னும் உண்மையை உரக்கச் சொன்னாலும்
பெற்றோர்கள் புரிந்துகொள்வதில்லை; தம் பிள்ளைகளை ஆங்கிலப் பயிற்றுமொழிப்
பள்ளிகளுக்கே அனுப்புகிறார்கள் !
ஏமாறுவது
எங்கள் பிறப்புரிமை என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் இருக்கும்
வரை ஏமாற்றுவதற்கென்றே பதின்மப் பள்ளிகள் தோன்றிக் கொண்டேதான் இருக்கும் ! தடுக்கவேண்டிய
அரசு தன் இரு கண்களையும் இறுக மூடிக் கொண்டிருக்கையில் நாம் விழிப்புணர்வூட்டி எழுதுவதன்றி
வேறு என்னதான் செய்ய முடியும் ?
----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.ஆ:2050,துலை (ஐப்பசி),01]
{18-10-2019}
----------------------------------------------------------------------------------------------------------