name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: ஐம்பெருங்காப்பியம்
ஐம்பெருங்காப்பியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐம்பெருங்காப்பியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, நவம்பர் 17, 2019

ஐம்பெருங்காப்பியம் (05) மணிமேகலை !

ஆடலரசி மாதவி - கோவலன் இணையரின் மகளான மணிமேகலையின் வரலாறு !


ஆடலரசி மாதவியுடன் கோவலன் சேர்ந்து வாழ்ந்ததன் விளைவாக, மாதவிக்குப் பெண்குழந்தை பிறக்கிறது. தான் வணங்கும் தெய்வமான மணிமேகலா தெய்வத்தின் நினைவாக, அக்குழந்தைக்குமணிமேகலைஎன்று பெயர் சூட்டுகிறான் கோவலன் !

மாதவியைக் கோவலன் பிரிந்து சென்று, மதுரையில் மடிந்து போன பின்பு துறவு வாழ்க்கையை மேற்கொள்ளும் மாதவி, மணிமேகலையையும் தன்னுடனேயே வைத்து வளர்த்து வருகிறாள் !

ஒருநாள் மணிமேகலை தன் தோழி சுதமதியுடன் மலர் கொய்வதற்காகப் பூங்காவனம் செல்கிறாள். அங்கு வரும் சோழ  இளவரசன் உதயகுமாரன் மணிமேகலையைப் பார்த்து, மனம் மயங்குகிறான். அவள் மீது காதல் கொண்டு அவளை அடைய முயல்கிறான் !

மணிமேகலா தெய்வம் அங்கு தோன்றி, அவனை எச்சரித்தது மட்டுமன்றி, மணிமேகலையைத் தூக்கிக் கொண்டு போய்  மணிபல்லவத்  தீவில்  சேர்க்கிறது !

மணிபல்லவத்தில் இருந்த புத்த பீடிகை ஒன்றின் முன் மணிமேகலை சென்று வணங்கி நின்றாள். அந்த புத்த பீடிகை மூலம் தன் முற்பிறப்பு பற்றிய செய்திகளை அறிந்து கொண்டாள். அப்போது அங்கு வந்த மணிமேகலா தெவ்வம், மனக்கவலை கொள்ளாதே மகளே என்று கூறி மாற்றுரு எய்துதல், அந்தரத்தில் திரிதல், பசியை ஒழித்தல் ஆகியன செய்யவல்ல  மந்திரங்களைச் சொல்லித் தந்தது !

அத்துடன், அங்கு வந்த தீபதிலகை என்னும் இன்னொரு தெய்வம், மாதவியிடம், அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி என்னும் அட்சய பாத்திரத்தை அளித்து மறைந்தது. அமுத சுரபியுடனும் தன் தாயாருடனும் காவிரிப் பூம்பட்டினம் திரும்பினாள் மணிமேகலை !

அமுதசுரபியானது, சிந்தாதேவி என்னும் கலைமகளால் ஆபுத்திரனுக்குத் தரப்பட்ட வரலாற்றை அறிந்த மணிமேகலை, அதைத் தன் கையிலே ஏந்தியவாறு பிச்சை ஏற்றற் பொருட்டு அவ்வூரின் பெருந்தெருவினை அடைந்தாள். அங்கு, அமுத சுரபியின் மேன்மையால், காயசண்டிகை என்னும் பெண்ணின் பெரும் பசி நோயைப் போக்கினாள் !

பின்னர் மணிமேகலை ஊரம்பலத்தை அடைந்தாள். அவள் அங்கு வந்துள்ளதை அறிந்த அரசகுமாரன், அவளைத் தேடி அங்கு வந்தான். மணிமேகலை அப்பொழுது விஞ்சையனின்மனைவியான காயசண்டிகை வடிவெடுத்து அரசகுமாரன் முன் வந்தாள். பின் அவனுடன் சோழ மன்னனின் மாளிகையை அடைந்தாள். அங்கு சோழனது சிறைக் கோட்டங்களை எல்லாம் அறக் கோட்டங்களாக மாற்றினாள் !

காயசண்டிகை வடிவில் இருந்த மணிமேகலையை, தன் மனைவி என்று கருதிய வஞ்ச விஞ்சையன், அவளை விட்டு அகலாது பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தான். அரசகுமாரன் தன் மனைவியை விட்டு அகலாது இருப்பதை அறிந்த விஞ்சையனான காஞ்சனன், அரசகுமாரனைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தினான் !

அரசகுமாரனின் துயர முடிவைக்கண்ட மணிமேகலை அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் துவண்டாள். எனினும் கந்திற்பாவை என்னும் தெய்வத்தின் நல்லுரைகளைக் கேட்டு மனம் அமைதி கொண்டாள். அரசகுமாரனின் மரிப்பைக் கேட்டு வெகுண்ட சோழ மன்னன் மணிமேகலையைச் சிறை செய்ய உத்தரவிட்டான். பின் மணிமேகலையின் தவ வலிமையை அறிந்த மன்னன், அவளை விடுவித்தான் !

மணிமேகலை அரசமாதேவிக்கு நல்ல அறநெறிகளை எடுத்து உரைத்து விட்டு, அங்கிருந்து நீங்கி ஆபுத்திரனின் நாட்டை அடைந்தாள். அங்கிருந்து ஆபுத்திரனோடு மீண்டும் மணிபல்லவம் சென்றடைந்தாள். அங்கு ஒரு தவமுனிவர்  வேடம் பூண்டு, தன் தாய்மாரோடு காஞ்சி மாநகரை அடைந்தாள் !

காஞ்சி மாநகரில் தன் பொய்யுருவினை நீக்கிவிட்டு அறவண அடிகள் என்னும் புத்த துறவியைச் சந்தித்து வணங்கினாள். பின்பு தன் வினைத் திறம் அற்றுப் போகும் பொருட்டு, தவ வாழ்வை மேற்கொண்டாள் !

இத்தகைய மங்கை நல்லாள் மணிமேகலையின் வரலாற்றை உரைக்கும் காப்பியம் சுட்டிக் காட்டும் ஒரு உண்மையைப் பாரீர் !

---------------------------------------------------------------------------------------

உற்றதை  உணரும்  உடலுயிர்  வாழ்வுழி;
மற்றைய உடம்பே மன்னுயிர் நீங்கிடின்
தடிந்தெரி  ஊட்டினும் தானுணரா  தெனின்
உடம்பிடைப் போனதொண்  றுண்டென  உணர்நீ.

---------------------------------------------------------------------------------------

{ இப்பாடலின் பொருள்:- உடலிடத்தே உயிர் வாழ்கின்ற காலத்து அந்த உடல் தனக்கு உறுகின்ற இன்பதுன்பங்களை உணருகின்றது ! உயிரானது அதனைவிட்டுப் போய்விட்டால், அந்த உடலை வெட்டி நெருப்பிலே இட்டாலும், அந்த உடல்  எதனையும் உணரமுடிவது இல்லை ! எனவே, இந்த உடம்பிலிருந்து வெளியேறிப் போனஉயிர்என்பது ஒன்று உண்டு என்பதை உணர்வாயாக !}

கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் எழுந்ததாகக் கருதப்படும் இவ்வரிய காப்பியத்தை கூலவாணிகன் சாத்தன் என்பவர், 30 காதைகளகப் பிரித்து, அவற்றை 30 பாடல்களாக வடித்துள்ளார். 30 பாடல்களுள் 27 பாடல்கள் நிலைமண்டில ஆசிரியப்பா வகையையும், 3 பாடல்கள் இணைக்குறள் ஆசிரியப்பா வகையையும் சார்ந்தவை ! மொத்தம் 30 பாடல்களால் 3826 பாடல் வரிகளில், மணிமேகலையின் வரலாற்றைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு அளித்துள்ள  கூலவாணிகன் சாத்தனாரின் புகழ் என்றென்றும் நிலைபெறுவதாக !

---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2050, துலை(ஐப்பசி),30]
{16-11-2019}
--------------------------------------------------------------------------------------------------------
        தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------











ஐம்பெருங்காப்பியம் (04) சிலப்பதிகாரம் !

சிலப்பதிகாரம் - சொல்லித் தரும் பாடம் ! அரசியலில்  நெறி  தவறினால்  அறமே கூற்றாகும் !



ஐம்பெருங் காப்பியங்கள் எனத் தமிழில் வழங்கப் பெறும் ஐந்து நூல்களுள் சிலப்பதிகாரம் தலையாயது ! சோழவள நாட்டில் தொடங்கி பாண்டிய நாட்டில் நடைபயின்று சேர நாட்டில் முற்றுப்பெறும் சிலப்பதிகார நிகழ்வுகள் மக்கள் மனதில் நிலையான இடத்தைப்  பிடித்துள்ளன என்றால் அது மிகையாகாது !

சிலப்பதிகாரம் கடைச் சங்க காலத்து (கி.பி.2 –ஆம் நூற்றாண்டு) நூல் என்பது ஆன்றோர் துணிபு. இக்காப்பியத்தை இயற்றியவர் சேரன் செங்குட்டுவனின் இளவலான இளங்கோவடிகள் !  இந்நூல் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டு திகழ்கிறது !

இந்நூலின் காப்பியத் தலைவனான கோவலன் காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த வணிகர் குல ஏந்தலான மாசாத்துவான் என்பாரின் மகன். காப்பியத் தலைவி கண்ணகி, மாநாய்கன் என்னும் பெருங்குடி வாணிகன் மகள்.

பதினாறு அகவையுடைய கோவலனுக்கும், பன்னிரண்டு அகவை எய்திய கண்ணகிக்கும் திருமணம் நிகழ்கின்றது ! மணமக்கள் தனி வீட்டில் குடும்பம் நடத்துகின்றனர் !

கோவலன் கலைகளில் நாட்டமுடையவன். ஆடல், பாடல்களில் விருப்பம் கொண்டவன். யாழ் இசைப்பதில் வல்லவன்.  பூம்புகாரில் ஆடல் அரசியாகத் திகழும் மாதவியின் நாட்டியத்தைக் கண்டு மயங்குகிறான் !

ஒரு நாள் மாதவியின் வீட்டுப் பணிப்பெண், அங்காடித் தெருவுக்கு வந்து, மாதவியின் முத்து மாலையைக் காண்பித்து விலை கூறுகிறாள். மாலையை விலை கொடுத்து வாங்குபவர் மாதவியை அடையலாம் என்று தெரிவிக்கிறாள். அந்த முத்து மாலையை விலை கொடுத்து வாங்கிக் கொண்டு, மாதவியின் வீட்டிற்குச் சென்று அவளுடன் வாழ்கின்றான் கோவலன் !

செல்வம் கரைகின்றது ! மாதவியோடு மனம் வேறுபட்டு, அவளைப் பிரிந்து கண்ணகியை வந்தடைகின்றான். மாதவியிடம் இழந்த பொருள்களை மறுபடியும் வணிகம் செய்து ஈட்ட நினைக்கின்றான். கண்ணகி தன் காற் சிலம்புகளைக் கழற்றித் தந்து, அதை விற்றுப்பணமாக்கி வணிகம் செய்யத் தூண்டுகிறாள் !

கண்ணகி தந்த சிலம்புகளை விற்பதற்காக, அவளையும் அழைத்துக் கொண்டு  கோவலன் மதுரைக்குச் செல்கிறான். கவுந்தி அடிகள் துணையோடு, மாதரி என்னும் ஆயர்குலப் பெண்ணிடம் கண்ணகியைப் பாதுகாப்பாக  இருக்கச் செய்து விட்டு, ஒற்றைச் சிலம்பை விற்க மதுரை நகருக்குள் செல்கிறான். அங்கு அரண்மனைப் பொற்கொல்லரிடம் சிலம்பைக் காட்டுகிறான் !

பழுது பார்ப்பதற்காகத் தரப்பட்ட  அரசி கோப்பெருந்தேவியின் சிலம்புகள் களவு போய்விட்டதாகப் பொய் சொல்லித் தானே  திருடிக் கொண்டவன்  அப் பொற்கொல்லன். அக்குற்றத்தை மறைக்க இதுதான் சமயம் என அவன் நினைக்கிறான். பொற்கொல்லன் அரண்மனைக்குச் செல்கிறான் !

அரசனைக் கண்டு, சிலம்பைத் திருடிய குற்றத்தைச் செய்த கோவலனைப் பிடித்து வைத்திருப்பதாகச் சொல்கிறான்.  வெகுண்ட அரசன், கோவலனைக் கொல்வதற்கு ஆணையிடுகிறான். கோவலன் கொலைக் களத்தில் வெட்டுண்டு மாண்டு போகிறான் !

செய்தி கேட்ட கண்ணகி, குமுறி எழுந்து, பாண்டியனின் அரசவைக்குச் சென்று முறையிடுகிறாள். தன்னிடமிருந்த இன்னொரு சிலம்பை தரையில் வீசி உடைக்கிறாள். அதிலிருந்த மாணிக்கப் பரல்கள் சிதறி ஓடுகின்றன.

அரசியின் சிலம்பில் உள்ளவை முத்துப் பரல்கள் அன்றோ ? இவள் சிலம்பில் மாணிக்கப் பரல்கள் அல்லவா இருக்கின்றன ?” என்று உண்மையை உணர்ந்துதவறு செய்து விட்டேனேஎன்று அரற்றிக் கொண்டு உயிரை விடுகிறான். மன்னன் உயிர் துறந்ததை அறிந்த அரசி கோப்பெருந்தேவி தானும் மயங்கி விழுந்து உயிர் துறக்கிறாள் !

முறை தவறிய பாண்டிய நாடு தீயின் நாவுக்கு இரையாகட்டும் என்று கூறி மதுரை மாநகரத்தையே அழித்து விடுகிறாள் கண்ணகி. பின்பு சினம் தணிந்து சேர நாடு செல்கிறாள். அங்கு ஒரு குன்றின் மேல் வேங்கை மர நிழலில் நிற்கிறாள். அங்கிருந்த குறிஞ்சி நில மக்களிடம் தான் உற்ற துன்பம் பற்றி எடுத்துக் கூறுகிறாள் !

வானுலகோர், அவள் கணவனுடன் வானவூர்தியில் அங்கு வந்து அவளை அழைத்துச் செல்கின்றனர் !

கண்ணகியின் இந்த வரலாறு சேர மன்னன் செங்குட்டுவனிடம் குறிஞ்சி நில மக்களால் கூறப்படுகிறது. இமயம் சென்று கல் எடுத்து வந்து, கங்கையில் நீராட்டி, வஞ்சி நகரில் கண்ணகிக்குக் கோயில் எடுப்பிக்கிறான் செங்குட்டுவன். இதுதான் சிலப்பதிகாரத்தின் கதைக் கரு !

சிலப்பதிகாரம் ஒரு வரலாற்றுக் காப்பியமாக இருந்தாலும், அது அடிப்படையில் மூன்று கருத்துகளை நமக்கு உணர்த்துகிறது ! (01) அரசியலில் பிழை செய்பவர்களுக்கு அறமே கூற்றுவனாக அமையும் ! (02) கற்பு நெறி தவறாக் காரிகைகளை ஆன்றவிந்தடங்கிய சான்றோர் கூடத் தொழுவார்கள் ! (03) ஊழ்வினையானது, தீயவர்களை விடாது தொடர்ந்து வந்து பற்றியே தீரும் !

இதைத்தான்,
-------------------------------------------------------------------------------------------

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்,
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்பதூஉம்,
சூழ்வினைச் சிலம்பு  காரணமாகச்
சிலப்பதி  காரம் என்னும் பெயரால்
நாட்டுதும்  யாமோர் பாட்டுடைச் செய்யுளென
..........................................................................................
உரைசால் அடிகள் அருள மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்

------------------------------------------------------------------------------------------
என்கிறது சிலப்பதிகாரம் !
-------------------------------------------------------------------------------------------

-----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, நளி (கார்த்திகை)04]
{20-11-2019}

--------------------------------------------------------------------------------------------------
         தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற
                                                        கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------

ஐம்பெருங்காப்பியம் (03) சீவகசிந்தாமணி !

சீவகன் என்பவனது அகவாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது சீவக சிந்தாமணி !



சீவக சிந்தாமணி என்பது சங்க காலத்திற்குப் பின் தோன்றிய காப்பியமாகும். ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான இந்நூல் சோழமன்னன் காலத்தில் இயற்றப்பட்டதாகும் !

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருத்தக்க தேவர் என்னும் சமண முனிவரால் உருவாக்கப்பட்ட இக்காப்பியம் சீவகன் என்பவனின் அக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. முழுவதும் விருத்தப் பாக்களால் ஆன முதல் தமிழ்க் காப்பியமாகவும் இந்நூல் திகழ்கிறது !

’“ஏமாங்கதநாட்டின் மன்னன்சச்சந்தன்”. அரசிவிசையைமீது அளவற்ற காதல் கொண்டவன். அந்தப்புரமே கதியென்று பொழுதைக் கழிக்கலானான். “கட்டியங்காரன்என்னும் அமைச்சன் ஆட்சியைக் கவனித்து வந்தான் !

அமைச்சனுக்கு ஆட்சி அதிகாரங்கள் மீது ஆசை வரவே, படைகளின் உதவியுடன் அரசனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றச் சூழ்ச்சி செய்கிறான். படைகளால் சூழப்பட்ட மன்னன், கருவுற்றிருந்த தன் மனைவியை ஒரு மயிற்பொறியில் ஏற்றிப் பாதுகாப்பாக அரண்மனையை விட்டு வெளியில் அனுப்பிவிட்டுப் போரிட்டு மடிகிறான் !

அரசிவிசையைஒரு இடுகாட்டில் தங்கி இருக்கையில்  ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். பின்னர் தவ வாழ்வை மேற்கொண்டாள். ”கந்துக்கடன்என்ற வணிகன், அந்த ஆண் குழந்தையை எடுத்து வளர்த்து வந்தான். ”சீவகன்என்னும் பெயருடன் வளர்ந்த அந்தக் குழந்தை வளர்ந்து வாலிவ அகவை அடைந்ததும்  அச்சணந்திஎன்னும் குருவிடம் கல்வி கற்று, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினான் !

சீவகன் தன் நண்பனுக்கு  கோவிந்தைஎன்பவளை மணம் முடித்து வைத்தான். தானும் பல்வேறு திறப்பாடுகள் காரணமாக பல்வேறு சூழ்நிலைகளில் எட்டுப் பெண்களை மணந்தான். இவ்வாறு பல பெண்களை மணந்ததன் மூலம் பண பலத்தையும், படை பலத்தையும் பெருக்கிக் கொண்டு, மாபெரும் வீரனாக உருவாகியசீவகன்ஆட்சி அதிகாரத்தில் இருந்தகட்டியங்காரன்சூழ்ச்சிகளை எல்லாம் முறியடித்து நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றினான். முப்பது ஆண்டுகள் அறம் தவறாது ஆட்சி செய்த சீவகன், பின்னர் ஆட்சிப் பொறுப்பைத் தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு துறவியானான் !

மனிதன் மன்னாக இருக்கலாம்; மகளிரை மணக்கலாம்; அறநெறி தவறாமல் ஆட்சி செய்யலாம்;  போரிடலாம்; ஆனால், தன் கடமைகளை எல்லாம் நிறைவேற்றிய பின் அனைத்தையும் துறந்து, தவ வாழ்வை மேற்கொள்ளல் வேண்டும் என்னும் சமண சமயக் கோட்பாட்டினை இக்காப்பியத்தின் கதை வெளிப்படுத்துகிறது !

சீவக சிந்தாமணி  என்னும் இப்பேரிலக்கியம் நாமகள் இலம்பகம் முதலாக முத்தி இலம்பகம் ஈறாக 13 இலம்பகங்களைக் கொண்டு திகழ்கின்றது. இலம்பகம் யாவும் மகளிர் பெயரிலேயே அமைந்துள்ளன . ஒவ்வொரு இலம்பகத்திலும் ஒரு மண நிகழ்ச்சி பற்றிச் சொல்லப்படுகிறது. இலக்கியச் சிறப்பு மிக்க இந்நூலில் 3145 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.  அனைத்துப் பாடல்களும் விருத்தங்களால் ஆனவை !

-----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, நளி (கார்த்திகை )02)]
{18-11-2019}
-----------------------------------------------------------------------------------------------------
      தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------

ஐம்பெருங்காப்பியம் (02) குண்டலகேசி !

மந்திரிகுமாரி திரைப்படத்தின் வாயிலாக, நம்மிடையே, “குண்டலகேசி”  இன்னும் வாழ்கிறாள் !

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐந்து காப்பியங்களும் தமிழில்  ஐம்பெருங் காப்பியங்கள் என  அழைக்கபடுகின்றன !  இவற்றுள் ஒன்றான குண்டலகேசி, நாதகுத்தனார் என்பவர் இயற்றிய தமிழ்க் காப்பியம்  ! இது  பெளத்த சமயம் சார்ந்த காப்பியம்  ஆகும் !

இக்காப்பியம் முழுமையான அளவில் நமக்குக் கிடைக்கவில்லை ! பகுதியான அளவிலேயே கிடைத்துள்ளது ! எஞ்சிய பகுதி  இறந்து பட்டது ! இந்நூலின் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு ஆகும் ! இந்நூலுக்குக் குண்டலகேசி விருத்தம் என்கிற பெயரும் உண்டு !
------------------------------
கதைச் சுருக்கம்
------------------------------

கள்வனை விரும்பி மணக்கும் வணிகர் குலப் பெண்ணான குண்டலகேசி, ஒருநாள், விளையாட்டாக, அவனைக் கள்வன்எனக் கூறிவிட, அன்றிலிருந்து அவர்கள் உறவு ஒட்டா உறவாகிறது !
இதனால் தன்னைக் கொல்ல முயன்ற கணவனை  அவள் கொன்று விட்டு, பௌத்தத் துறவியாகி, பௌத்த சமயத்தின் அருமை பெருமைகளைப் பரப்புவதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதுடன், அதிலேயே தன் வாழ்நாளைக் கழிக்கலானாள் !
----------------------------
கதை விரிவு
----------------------------
இந் நூலின் கதைத் தலைவி  குண்டலகேசி, செல்வச் செழிப்புமிக்க வணிகர் குலத்தில் பிறந்தவள் ! அவளுக்குப் பெற்றோர் இட்ட பெயர் பத்தா தீசா ! அவள் பருவமடைந்து, கன்னிப் பருவத்தின் தலைவாயிலில் துள்ளித் திரிந்த மானாகத் திகழ்ந்தாள் ! அச்சமயத்தில் அந்த ஊரில் சத்துவான் என்பவன் வழிப்பறிக் கொள்ளை அடித்து, பிடிபட்டு, அரசனால் கொலைக் களத்துக்கு அனுப்பப்பட்டான் ! அப்போது அவனைச் சாளரத்தின் வழியே அவள் கண்டு, அவன் மீது காதல் கொண்டாள் ! இதை  அறிந்த அவளது தந்தை, அரசனுக்குப் பெரும்  பொருளை ஈடாகத்  தந்து அக்கள்வனை மீட்டு அவளுக்கு மணமுடித்து வைத்தார் ! இருவரும் சிலகாலம் இனிது வாழ்ந்த பின்னர், அவனுக்குத் தன் மனைவியின் நகைகளையே கொள்ளை அடிக்கும் எண்ணம் வந்தது ! அவளைத் தனியே அழைத்து, மலைச் சாரல் பக்கம் உலாவி வரலாம் என்று சொல்லி அருகில் இருந்த சேரர் மலையின் உச்சிக்கு அழைத்துச் சென்றான். அவன் நடத்தையில் ஐயம் கொண்ட பத்தா அது பற்றி கேட்க, அவன் நகைகளைப் பறித்துக் கொண்டு அவளை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட இருப்பதைக் கூறினான் ! அது கேட்ட அவள் சாவதற்கு முன் கடைசியாக  ஒருமுறை அவனைச் சுற்றி வந்து வணங்க விரும்புவதாகக் கூறி, அவ்வாறு சுற்றி வருகையில் அவனை அம் மலை உச்சியிலிருந்து தள்ளி விட்டாள் ! பின்னர் அவள் பௌத்த மதத்தை தழுவினாள். அவள் கூந்தல் மழிக்கப்பட்டது. பின்னர் வளர்ந்த அவள் முடி வளைந்து குண்டலம் போலக் காட்சி அளித்ததால் குண்டலகேசி என வழங்கப்பட்டாள். அவள் பல ஊர்களுக்குச் சென்று சமயப் பெரியோர்களுடன்  வாதம் புரிந்து, அவர்களை வென்று, கடைசியில் புத்தரிடம் ஞானத் தெளிவு பெற்று, இறுதியில் பௌத்தத் துறவி ஆனாள் !
-----------------------------------------------------------------
துறவி ஆவதற்கு முன்பு, பத்தா என்னும் குண்டலகேசி, புத்தர் பெருமானை நேரில் கண்டு அவர்முன் மண்டியிட்டுத் தொழுது நின்றாள் ! மூடிய விழிகளை மெல்லத் திறந்து அன்புடன்  அவளை நோக்கிய புத்தர், ”பத்தா ! நீ துன்பப் பட்டது போதும் ! எம்மிடம் வந்து சேர்ந்து துறவற வாழ்வை மேற்கொள்வாயாக ! “ என்று கூறி அருள்புரிந்தார் ! குண்டலகேசியின் வாய் மொழியாகவே இச்செய்தியைக் கூறும் பாடலைப் பாருங்கள் !
------------------------------------------------------------------
அண்ணலை  நேரே  கண்டேன்,
.........அவன்முனே முழந்தாள் இட்டு,
மண்ணதில்  வீழ்ந்து  நைந்து,
.........வணங்கினேன்; வணங்கி நிற்க,
தண்ணவன்  என்னை  நோக்கி,
.........தகவொரு  பத்தா  இங்கே,
நண்ணுதி  என்றே  சாற்றி,
.........நாடரும்  துறவை ஈந்தான் !
----------------------------------------------------------------------
அரும்பெரும் காப்பியமாகிய குண்டகேசி முழுவதுமாக நமக்குக் கிடைக்கா விடினும், மற்ற நூல்களில் காட்டப்பெற்ற மேற்கோள் செய்யுள்கள் வாயிலாக இக்காப்பியத்தின் கதைப் போக்கை அறிய முடிகிறது !
குண்டகேசிக் காப்பியத்தைத் தழுவி, கலைஞர் கருணாநிதியால் கதை, உரையாடல் எழுதப்பெற்று, சேலம் மாடர்ன் தியேட்டர்சினால் எடுக்கப்பெற்று 1950 –ஆம் ஆண்டு வெளியான மந்திரி குமாரிதிரைப் படத்தினை இவ்வேளையில் நினைவுகூர்ந்து பாருங்கள்  !
தன் காதலியான அமைச்சரின் மகளை (மந்திரி குமாரி) அவளது  (வஞ்சகக்) காதலன் ஏற்காடு மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான் ! செல்லும் வழியில், அவள் காதலன் வாராய், நீ, வாராய் ! போகுமிடம் வெகு தூரமில்லை, நீ வாராய் !” என்று பாடுகிறான் !
திருச்சி உலோகநாதனின் கவர்ச்சிக் குரலில் ஒலிக்கும் இப்பாடல்  69 ஆண்டுகளுக்குப் பின்பும் கூட தன் ஈர்ப்புக் குறையாமல் இலங்கி வருவது  இசைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியன்றோ ?
மலை உச்சிக்குச் சென்ற பின், காதலன் அவளை மலையிலிருந்து தள்ளி விட்டுக் கொன்றுவிடப் போவதாகச் சொல்கிறான் ! அதைக் கேட்டுத் துணுக்குற்ற காதலி, ” சாவதற்கு முன்பு, நான் தெய்வமாகக் கருதும் உன்னைச் சுற்றி வந்து வணங்கிய பின் சாக விரும்புகிறேன் என்று சொல்லி, அவனைச் சுற்றி வருகிறாள் !
மூன்றாவது சுற்றின் போது அவனையே மலை உச்சியிலிருந்து தள்ளி விடுகிறாள் ! வஞ்சகக் காதலன் மடிந்து போகிறான் !.
இந்தக் காட்சி படமாக்கப் பெற்ற சேலம் மாவட்டம் ஏற்காடு மலையின் உச்சிப் பகுதி, “மந்திரிகுமாரிவெளியான பின்பு, மக்களிடையே மிகவும் புகழ்பெற்ற இடமாயிற்று ! இன்றும்கூட  மகளிர் இருக்கை” (LADIES SEAT)  என்னும் பெயரில் இவ்விடம் சுற்றுலா இடமாக மக்களைப் பெருமளவில் ஈர்த்து வருகிறது !
ஒரு எளிய திரைப்படத்தின், மூலம் குண்டலகேசி  தமிழ்க் காப்பியத்தின் கதைக்  கருவை  மக்கள் மனதில் நிலைபெறச் செய்துவிட்ட கலைஞர் கருணாநிதியின் திறமைக்கு ஈடு இணைதான் ஏது ?

----------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, துலை,(ஐப்பசி)28]
{14-11-2019}
---------------------------------------------------------------------------------------------------
       தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------


ஐம்பெருங்காப்பியம் (01) வளையாபதி !

வளையாபதி - தமிழன் இழந்துவிட்ட காப்பியங்களுள் ஒன்று !



வளையாபதி என்பது ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகக் கருதப்படுவது. இக்காப்பியம் 19 –ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் இருந்திருக்கிறது.  பின்னர் எப்படியோ மறைந்து விட்டது ! இதனுடைய படி ஒன்றை திருவாவடுதுறை மடத்தில் கண்ணுற்றதாக தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்கள் ஒரு குறிப்பில் தெரிவித்திருக்கிறார். ஓலைச் சுவடியில் இருந்த இக்காப்பியத்தைப் பதிப்பிப்பதற்காக  மீண்டும் தேடிய போது, அஃது எங்கும் கிடைக்கவில்லை என்று வருத்தத்தோடு தெரிவித்திருக்கிறார் !

வளையாபதி காப்பிய ஆசிரியர் யார், எப்பொழுது இந்நூல் இயற்றப்பட்டது, காப்பியத் தலைவன் யார், இந்நூலின் கதை தான் என்ன என்பது உள்பட எதுவும் அறியமுடியவில்லை. இக்கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை !  எனினும் இக்காப்பியத்தின் சில செய்யுள்கள் மட்டும் பிற நூல்களின் மேற்கோள்களிலிருந்து கிடைத்திருக்கின்றன !

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர், நச்சினார்க்கினியர், இளம்பூரணர் முதலானோர் இந்நூலின் பாடல்களை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர். இக்காப்பியத்தின் பாடல்களில் கிடைத்தவை எண்ணிக்கை எழுபத்து இரண்டு. இவை அறுபத்தாறு புறத்திரட்டுநூலில் தொகுக்கப் பெற்றுள்ளன ! இப்பாடல்களை நோக்குகையில், வளையாபதி ஒரு சமண சமய நூல் என்பது உறுதியாகிறது !

வளியாபதி கதை இன்னது தான் என்பது யாராலும் அறியப்படாத ஒன்று.  கிடைத்துள்ள 72 பாடல்களில் இருந்தும் இக்காப்பியத்தின் கதைப் போக்கை உணரமுடியவில்லை. எனினும்வளையாபதி கதைஎன்று ஒரு கதை சில மக்களிடையே வழக்கில் உள்ளது. இதற்கும், வளையாபதி பாடல் கருத்துகளுக்கும் தொடர்பு இல்லை என்பது பல அறிஞர்களின் கருத்து !

வளையாபதி கதை என்று சொல்லி வழக்கில் உள்ள கதை இது தான் ! நவகோடி நாராயணன் என்பவர் ஒரு வைர வாணிகன். அவர் தன் வணிக குலத்தில் ஒரு பெண்ணையும், வேறு ஒரு குலத்திலிருந்து இன்னொரு  பெண்ணையும் திருமணம் செய்தமையால், அவரை வணிகர்கள் தம்  குலத்தை விட்டுத் தள்ளி வைத்து விடுகின்றனர். இதனால் மனத் துன்பமுற்ற நாராயணன், வேறு வழியின்றித்  தான் திருமணம் செய்து கொண்ட  வேற்றுக் குலத்துப் பெண்ணைத் வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார் !

அவள், காளிதேவியிடம் சென்று முறையிடுகிறாள். தனக்கு மறுவாழ்வு கிடைக்கக் காளியை வேண்டுகிறாள். காளியின் அருளால் அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகிப் புகார் நகர் வணிகர் அவையில் தன் தந்தை நாராயணனேஎன்று நிறுவுகிறான். காளிதேவியும் சான்று கூறி அதனை மெய்ப்பிக்கிறது. இதனால் குடும்பம் ஒன்றுசேர, அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் !

தனது கருத்தின்மைக் காரணமாகத் தமிழ்க் குமுகாயம் இழந்த நூல்கள் எண்ணற்றவை; அவற்றுள் வளையாபதியும் ஒன்று !  கிட்டத் தட்ட 1800 ஆண்டு காலமாக உறங்கிக் கொண்டிருக்கும் தமிழ்க் குமுகாயம் வடமொழி, ஆங்கில மொழிக் கலப்பால் நெருக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் தமிழ் மொழியையாவது காப்பாற்றி வைத்துக் கொள்ளுமா அல்லது அதையும் இழக்கப் போகிறதா என்பதற்குக் காலம் தான் விடை சொல்ல வேண்டும் !

------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, நளி (கார்த்திகை) 06
{22-11-2019}
-------------------------------------------------------------------------------------------------------
      தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------