name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: ஔவையார்
ஔவையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

ஔவையார் பாடல் (01) வான் குருவியின் கூடு ! வல்லரக்கு !

யார் பெரியவர் ?

-----------------------------------------------------------------------------------------------------------
[ஔவையார் அருளிய தனிப்பாடல்]
------------------------------------------------------------------------------------------------------------
வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாம்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.
 
------------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்
------------------------------------------------------------------------------------------------------------
வான் குருவியின் கூடு வல் அரக்கு தொல் கரையான்
தேன் சிலம்பி யாவர்க்கும் செய் அரிதால்  - யாம் பெரிதும்
வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம் காண் !
எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது !
-----------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
வான் குருவி எனப்படும் தூக்கணாங் குருவிக்கூடு, அரக்கு எனப் படும் வலிமையான இயற்கைப் பசை,   தேன்அடை,  சிந்தனைச் சிக்கலை நம்முள் உருவாக்கிவிடும் சிலந்தி வலை இவற்றை மேலோட்டமாகப் பார்த்தால் புல்லிய  புலனங்களே  ஆனால்  இந்த  அறிவியல் உலகில் எந்த மேதையாலும் இவற்றை உருவாக்க இயலுமா? 

ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்பு இருக்கிறது; சாதாரண பறவையான வான் குருவி கட்டுகின்ற (தூக்கணாங் குருவிக்) கூட்டை இந்தக் கணினி யுகத்தில் வேறு எவராலும் கட்டித் தொங்கவிட்டு அதில் அக் குருவிகளைக் குடி வைக்க முடியுமா? முடியவே முடியாது !

அதாவது இந்த உலகத்தில் ஆற்றிவு படைத்த மனிதர்களாலும் செய்ய முடியாத செயல்களும்  இருக்கவே  செய்கின்றன  என்பதை இடித்துக் காட்டி,  வாழ்வில் பிற மனிதர்களிடத்தும், பிற  உயிர்களிடத்தும் நாம் சமத்துவ   உணர்வு கொண்டிருக்க  வேண்டும்  என்பதை  எடுத்துக் காட்டுவதே இப்பாடலின் நோக்கம் !

யாம் பெரிய வல்லாளன்என்பதாய் எண்ணம் கொண்டு பிறரைத் தாழ்மையாக நினைத்து விடக் கூடாதுஎன்ற எச்சரிக்கையை இப்பாடல் மூலம் நமக்கு அளிக்கிறார் ஔவையார் !
------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:

வான் குருவி = தூக்கணாங் குருவி ; வல் அரக்கு = ஒரு வகைக் குளவி யால் சேகரித்து  உருவாக்கப்படும் அரக்கு ;  தொல் கரையான் = பழங் காலம் முதல் இருந்து வரும் கரையான் உருவாக்குகின்ற மண் புற்று ; தேன் =  தேனீக்கள் பூக்களிலிருந்து துளித் துளியாகத் தேனைச்  சேகரித்து சேர்த்து வைக்கும் அறுகோண வடிவ சிற்றறைகள் கொண்ட தேனடைகள் ; சிலம்பி = சிலந்தி வலை ; (ஆகியவை) யாவர்க்கும் = எந்த மனிதருக்கும் ; செய்யரிதால் = செய்ய முடியாதவை ; யாம் பெரிதும் வல்லோம் = நான் எதையும் செய்ய வல்லவன் ; என்று வலிமை சொல வேண்டாம் = என்று ஆணவம் கொள்ள வேண்டாம் ; காண் = அசைச்சொல் (இதற்கு இவ்விடத்தில் பொருள் ஏதும் இல்லை) ;

------------------------------------------------------------------------------------------------------------
          ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை.

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மீனம்,10]
{24-03-2019}

-------------------------------------------------------------------------------------------------------------

வான்குருவியின் கூடு

ஔவையார் பாடல் (02) ஒரு காலடி நாலிலைப் பந்தலடி !

'ஒரு காலடிநாலிலைப் பந்தலடி' !

கம்பர் ஒருமுறை ஔவையாரிடம் ஒரு விடுகதை சொல்கிறேன். புதிரை விடுவியுங்கள் பார்க்கலாம் என்று கூறி 'ஆரை' என்னும் கீரையைக் குறிப்பதாகப் பொருளை உள்ளடக்கி கீழ்க் கண்டவாறு சொன்னார்:-

------------------------------------------------------------------------------------------------------------
பாடல்

'ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி'
ஒரு கால் அடி நாலிலைப் பந்தல் அடி

------------------------------------------------------------------------------------------------------------

இதை இவ்வாறு பிரித்து அமைத்துப் பொருள் காண்க !
அடி ஒரு கால்; அடி நாலிலைப் பந்தல்.
(பந்தல்) அடி(யில்)  ஒரு கால்; அடி(போன்ற) நாலிலைகள் உடைய பந்தல்

------------------------------------------------------------------------------------------------------------

தாங்கி நிற்கும் வகையில் அடியில் (கீழே)  ஒரு கால் (தூண்) இருக்கும் ! மேலே கால் அடியைப் போல வடிவம் கொண்ட நான்கு இலைகள் உடைய பந்தல் இருக்கும் (அது என்ன ?)

-------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்;-

ஒரு காலடி = ஒரு கால் இருக்குமடி; நாலிலை = நான்கு இலைகள் உடைய ; பந்தலடி = பந்தல் போன்று இருக்குமடி! (அது என்ன?)
தில் வரும் 'அடி' என்னும் சொல் ஔவையாரை மதிப்புக் குறைவாக விளிக்கும் வகையில் இடக்கராக வைத்துப் புதிரைக் கூறினார்.
ஔவையாரிடமா கம்பரின் இடக்கு செல்லுபடியாகும்? ஔவையார் உடனே பாடினார்:-

------------------------------------------------------------------------------------------------------------
பாடல்

------------------------------------------------------------------------------------------------------------

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, - முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா!

-----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:- (01)

அடேய் ! அவலட்சணம் பிடித்தவனே ! எருமைக் கடாவே ! கழுதையே !; குட்டி சுவரே !; குரங்கே !; நீ சொன்னது ஆரைக் கீரையைத் தானடா !

-----------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

எட்டு = '' : கால் = '' ; எட்டேகால் லட்சணம் – அவலட்சணம்; எமன் ஏறும் பரி = எருமைக்கடா; மட்டில் பெரியம்மை - மூத்ததேவி என்னும் மூதேவி;  வாகனம் – கழுதை;  மேல் கூரையில்லா வீடு – குட்டிச்சுவர்; குலராமன் தூதுவன் – குரங்கு

------------------------------------------------------------------------------------------------------------

பொருள் :-(02)

விரைந்து நடக்கும் காலழகா ! எம் குலத்தவனே ! வளரும் செல்வமே ! தேவலோகம் போன்றவனே ! உயர்குல வேந்தன் இராமபிரானின் கதையை காவியமாக்கிய கவிஞனே ! ஆரைக் கீரையை உட் பொருளாக வைத்து நீ விடுகதையைச் சொன்னாய் ! ஆனால் என்னை நீ வெல்ல முடியாது !

-------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

எட்டு + கால் = எட்டுக்கால் - எட்டேகால் ; எட்டு = கால்களை எட்டிப் போட்டு நடக்கும், லட்சணமே = அழகனே ! (விரைவாக நடக்கும் வலிமை பொருந்திய கால்களை உடைய அழகனே !) எமன் = எம்முடைவன் (எம் குலத்தவனே !); ஏறும் பரியே = வளரும் செல்வமே !, முட்ட மேல் கூரை இல்லா வீடே = தலையில் முட்டும் அளவுக்குத் தாழ்வான மேற்கூரை இல்லாத ; வீடே (அதாவது தேவலோகம் போன்றவனே !)  குலராமன் = உயர்குலத்தில் பிறந்த வேந்தனான இராமபிரானின்; தூதுவனே = இராமாயணம் என்னும் இராம காதையை இயற்றி, இராமனின் புகழ் பரப்பும் தூதனே ! ஆரை = ஆரைக் கீரையை; அடா = உள்ளடக்கி, சொன்னாய் = என்னிடம் விடுகதையைச் சொன்னாய் ; அடா = அடாது.

------------------------------------------------------------------------------------------------------------
       
 ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை.

------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[ தி.: 2050, சுறவம்,4.]
(18-01-2019}
------------------------------------------------------------------------------------------------------------

ஒரு காலிலை நாலிலை