name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: குறவஞ்சி
குறவஞ்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறவஞ்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

குற்றாலக் குறவஞ்சி (01) வானரங்கள் கனி கொடுத்து !

திரிகூடராசப்பக் கவிராயரின் கற்பனை வளம் !

(குற்றால மலை வளம் பற்றி மலை வாழ் மக்களான குறவர் குலப்  பெண்கள் பாடுவது போன்று அமைக்கப் பெற்ற இப்பாடலை இயற்றியவர் திரிகூட இராசப்பக் கவிராயர் என்பார். இசை கூட்டிப் பாடுகையில் பாடலில் பொதிந்துள்ள தமிழ்ச் சுவை நன்கு விளங்கும்)
------------------------------------------------------------------------------------------

வானரங்கள்  கனிகொடுத்து  மந்தியொடு  கொஞ்சும் !
..........மந்திசிந்து  கனிகளுக்கு  வான்கவிகள்  கெஞ்சும் !
கானவர்கள் விழிஎறிந்து  வானவரை  அழைப்பர் !
..........கமனசித்தர்  வந்துவந்து  காயசித்தி  விளைப்பர் !

தேன்அருவித்  திரைஎழும்பி  வானின்வழி  ஒழுகும் !
..........செங்கதிரோன்  பரிக்காலும்  தேர்க்காலும்  வழுகும் !
கூனல்இளம்  பிறைமுடித்த  வேணி  அலங்காரர் !
..........குற்றாலத்  திரிகூடமலை  எங்கள்  மலையே !!
------------------------------------------------------------------------------------------
பொருள்:

ஆண்குரங்குகள் பழங்களைப் பறித்துப் பெண் குரங்குகளுக்குக் கொடுத்துக் கொஞ்சுகின்றன. அவற்றுள் சில பழங்களைப் பெண் குரங்குகள் கீழே சிந்துகின்றன. ஆனால், பழங்களைச் சிந்தாமல் அவற்றை எங்களுக்குத் தரக் கூடாதா என வானுலக மாந்தர்கள் கேட்கின்றனர். அவர்களைப் பார்த்து கானக மக்கள், நீங்கள் விரும்பும் பழங்கள் கனிந்து குலுங்கும் எமது குற்றால மலைக்கு வாருங்கள் என அழைக்கின்றனர். வானத்தில் செல்ல வல்ல சித்தர்கள்  குற்றால மலையின் வளங்களைக் கண்டு, அங்கு வந்து தங்கள் சித்து வேலைகளைச் செய்து காண்பித்து கானக மக்களை மகிழ்விக்கின்றனர் !

மலையிலிருந்து  கொட்டுகின்ற அருவியின் திவலைகள் எழுந்து வானத்தில் வழிந்து ஓடுகின்றன. இதனால் சூரிய தேவனின் தேரினை இழுத்துச் செல்லும்  குதிரைகளுடைய கால்களும் தேர்ச் சக்கரங்களும் வழுக்கிச் சறுக்குகின்றன. .இளம்பிறையைத் தன் திருமுடியில் தரித்திருக்கும் சிவபெருமான் கோயில் கொண்டுள்ள இத் திருக்குற்றால மலை இத்தகைய சிறப்புகளை உடையது !
-----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற் பொருள்:
-----------------------------------------------------------------------------------------

வானரம் = ஆண்குரங்கு;  மந்தி = பெண்குரங்கு;  வான் கவிகள் = வான் உலகில் வாழும் தேவர்கள்; கானவர் = வேடர்; விழி எறிந்து = கண்களால் ஏறெடுத்துப் பார்த்து; கமனசித்தர் = வானின் வழியாகச் செல்லும் சித்தர்கள்;  காயசித்தி = சித்து வேலைகள்;  விளைப்பர் = செய்து மக்களை மகிழ்விப்பார்கள்.;  திரை = நீர்த்திவலை;  பரி = குதிரை; கால் = சக்கரம்; கூனல் = வளைந்த; இளம்பிறை = பிறை நிலவை ; வேணி = சிவ பெருமானின் திருமுடி )

------------------------------------------------------------------------------------------
     
 ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை.

------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணிமன்றம்
[தி.: 2050, சுறவம், 2.]
(16-01-2019)
------------------------------------------------------------------------------------------