இனிமை தராத யாழிசையை விடப் பறையொலியே மேல் !
-----------------------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகளை உள்ளடக்கியது நான்மணிக் கடிகை ! கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இந்நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர் !. இதிலிருந்து ஒரு பாடல் !
-----------------------------------------------------------------------------------------------------------
பாடல் எண்.(15)
-----------------------------------------------------------------------------------------------------------
பறைநன்று பண்ணமையா யாழின்
– நிறைநின்ற
பெண்ணன்று பீடிலா மாந்தரின் – பண்ணழிந்து
ஆர்தலின் நன்று பசித்தல்
– பசைந்தாரின்
தீர்தலின் தீப்புகுதல் நன்று.
-----------------------------------------------------------------------------------------------------------
பொருள்:
-------------
செவிகளுக்கு இனிமை உணர்வைத் தரும் பண்ணிசை அமையாத யாழைவிடப் பேரோசை எழுப்பும்
பறை நல்லது !
பெருந்தன்மை என்னும் பேராண்மை இல்லாத ஆண் மக்களைவிட, அடக்கம்
மிகுந்த கற்பரசிகளான பெண் மக்கள் நல்லவராவார் !
ஆக்கிய உணவு ஆறிப் பதனழிந்த பிறகு அதை உண்பதைவிடப் பசியால் வருந்தித் துன்பப்படுதல் நல்லது !
அதுபோல், நம்மை விரும்பி அன்பு செலுத்துபவர்களை விட்டு நீங்கி வாழ்வதைவிட எரியில்
வீழ்ந்து உயிர்விடுதல் மிகவும் நல்லது !
------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-------------------------------
பறை = ”தப்பு”
என்று வழங்கப்படும் பறையானது ; (பண் + அமையா =) பண்ணமையா = இனிய
இசை தரவியலாத ; நிறை நின்ற = அடக்கம் மிகுந்த கற்பரசிகள் ; (பீடு + இலா = ) பீடிலா = பெருந்தன்மை
என்னும் பேராண்மை இல்லாத
; மாந்தரின் = ஆடவரை
விட ; (பண்
+ அழிந்து =) பண்ணழிந்து = உண்பதற்கேற்ற பொருத்தமான பதன் அழிந்து ; ஆர்தலின் = உண்பதை
விட ; பசைந்தாரின் = நம்மை விரும்பி அன்பு
செலுத்துபவரை ; தீர்தலின் = விட்டு
விலகி வாழ்வதை விட ; தீப்புகுதல் = எரியும் தீயில் விழுந்து
உயிர் விடுதல்.
-----------------------------------------------------------------------------------------------------------
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2052, கும்பம் (மாசி),20]
{04-03-2021}
---------------------------------------------------------------------------------------------