பக்கங்கள்

வியாழன், மார்ச் 04, 2021

நான்மணிக்கடிகை (15) பறை நன்று பண்ணமையா யாழின் !

இனிமை தராத யாழிசையை விடப் பறையொலியே மேல் !

-----------------------------------------------------------------------------------------------------------

ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகளை உள்ளடக்கியது நான்மணிக் கடிகை ! கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இந்நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர் !. இதிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்.(15)

-----------------------------------------------------------------------------------------------------------

பறைநன்று  பண்ணமையா  யாழின்நிறைநின்ற

பெண்ணன்று  பீடிலா  மாந்தரின்பண்ணழிந்து

ஆர்தலின் நன்று பசித்தல்பசைந்தாரின்

தீர்தலின்  தீப்புகுதல்  நன்று.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

-------------

செவிகளுக்கு இனிமை உணர்வைத் தரும் பண்ணிசை அமையாத யாழைவிடப் பேரோசை எழுப்பும் பறை நல்லது !

பெருந்தன்மை என்னும் பேராண்மை இல்லாத ஆண் மக்களைவிட, அடக்கம் மிகுந்த கற்பரசிகளான பெண் மக்கள் நல்லவராவார் !

ஆக்கிய உணவு ஆறிப் பதனழிந்த பிறகு அதை  உண்பதைவிடப் பசியால் வருந்தித் துன்பப்படுதல் நல்லது   !

அதுபோல், நம்மை விரும்பி  அன்பு செலுத்துபவர்களை விட்டு நீங்கி வாழ்வதைவிட எரியில் வீழ்ந்து உயிர்விடுதல் மிகவும் நல்லது !

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------

பறை = ”தப்புஎன்று வழங்கப்படும் பறையானது ; (பண் + அமையா =) பண்ணமையா = இனிய இசை தரவியலாத ; நிறை நின்ற = அடக்கம் மிகுந்த கற்பரசிகள் ; (பீடு + இலா = ) பீடிலா = பெருந்தன்மை என்னும் பேராண்மை இல்லாத ; மாந்தரின் = ஆடவரை விட ; (பண் + அழிந்து =) பண்ணழிந்து = உண்பதற்கேற்ற  பொருத்தமான பதன் அழிந்து ; ஆர்தலின் = உண்பதை விட ; பசைந்தாரின் = நம்மை விரும்பி அன்பு செலுத்துபவரை ;  தீர்தலின் = விட்டு விலகி வாழ்வதை விட ; தீப்புகுதல் = எரியும் தீயில் விழுந்து உயிர் விடுதல்.

-----------------------------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052, கும்பம் (மாசி),20]

{04-03-2021}

---------------------------------------------------------------------------------------------

பறையொலியே மேல் !

பதனழிந்த உணவு  பாழ் !

நான்மணிக்கடிகை (14) பல்லினால் நோய் செய்யும் பாம்பெலாம் !

ஊடலால்  நோகடிக்கும் நூலிழையர் !

------------------------------------------------------------------------------------------------------------

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக் கடிகை, கடைச்சங்க காலத்திய நூல். இதில் கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள் வலியுறுத்தப்படுகின்றன ! இந்நூலிலிருந்து ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------------------

பாடல்:எண்.(14).

------------------------------------------------------------------------------------------------------------

பல்லினான் நோய் செய்யும்  பாம்பெலாங்கொல்லேறு

கோட்டால் நோய்செய்யுங்  குறித்தாரை ஊடி

முகத்தான் நோய்செய்வர்  மகளிர்  முனிவர்

தவத்தால்  தருகுவர் நோய்.

------------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------------------------

பல்லினால்  நோய்செய்யும்  பாம்புஎலாம்; – கொல் ஏறு

கோட்டால்  நோய்செய்யும்  குறித்தாரை;   ஊடி

முகத்தால் நோய்செய்வர்  மகளிர்;  முனிவர்

தவத்தால் தருகுவர் நோய்.

------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

--------------

பாம்புகள்  தம் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் , பிற உயிர்களுக்குத் தம் நச்சுப்  பற்களால்  துன்பம் தரும் !

சீண்டப் பெறும் காளை, தான் குறி வைத்துவிட்டால், குறிப்பிட்ட மனிதருக்குத் தன் கூரிய கொம்புகளால் துன்பம் தரும் !

பெண்மக்கள், ஊடல் கொண்டு பிணங்கி, தம் முகக் குறிப்பினால் ஆடவர்க்குத் துன்பம் தருவர் !

அதுபோல், முனிவர்கள் சினம் கொண்டால், தம்மை இகழ்ந்தவர்களுக்குத்  தமது தவ வலிமையால், துன்பம் தருவர்  !

-------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------

நோய் செய்யும் = துன்பம் தரும்;  கொல் + ஏறு = கொல்லேறு = குத்திக் கொல்லும் குணம் படைத்த காளை ;  கோட்டால் = தன் கொம்புகளால் ; குறித்தாரை = தான் குறிவைப்பவரை ; ஊடி = பிணக்குக் கொண்டு ; முகத்தால் = முகக் குறிப்பால் ; தவத்தால் = தவ வலிமையால்.

----------------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,கும்பம் (மாசி),20]

{04-03-2021}

---------------------------------------------------------------------------------------------------------------------

பல்லினால் நோய் செய்யும் !

கொல் ஏறு கோட்டால் நோய் செய்யும் !

நான்மணிக்கடிகை (13) கன்றாமை வேண்டும் கடிய !

மன வயிரம் கொள்ளல் மாண்பு தராது !

-------------------------------------------------------------------------------

முற்றிலும் வெண்பாக்களால் யாக்கப் பெற்ற நூல் நான்மணிக்கடிகை. கடவுள் வாழ்த்து உள்பட இந்நூலில் மொத்தம் 106  செய்யுள்கள்  உள்ளன . கடைச்சங்க காலத்ததான இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு வகையைச் சார்ந்தது ! இதிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல்: எண் (13).

-----------------------------------------------------------------------------------------------------------

கன்றாமை வேண்டுங்  கடிய  பிறர்செய்த

நன்றியை நன்றாக்  கொளல்வேண்டும்என்றும்

விடல்வேண்டுந்  தங்கண்  வெகுளி  அடல்வேண்டும்

ஆக்கஞ்  சிதைக்கும் வினை.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

----------------

பிறர் செய்கின்ற அஞ்சத்தக்கக, கடுஞ் செயல்களை நினைந்து நினைந்து மனதில் கறுவாமை  (மன வயிரம் கொள்ளாதிருத்தல்) வேண்டும் !

பிறர் செய்யும் நன்மைகளை மறவாமல் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும் !

தம்மிடம் உண்டாகும்  பெரும் சினத்தை  வளரவிடாமல் மனதைவிட்டு நீக்குதல் வேண்டும் !

அதுபோல், முற்போக்கான பயன் தரும் செயல்களைக் கெடுத்து  அழித்துவிடும் தவறான  முனைவுகளை முற்றாக ஒழித்துவிட வேண்டும் !

------------------------------------------------------------------------------------------------------------அருஞ்சொற்பொருள்:

------------------------------------

கன்றாமை = நினைத்து நினைத்துப் புழுங்கி மன வயிரம் கொள்ளாதிருத்தல்; கடிய = பிறர் செய்யும் அஞ்சத்தக்க கடுஞ் செயல்களை ; நன்றாக் கொளல் = மறவாமல் நினைவில் இருத்துதல்; விடல் வேண்டும் = விட்டுவிட வேண்டும்; வெகுளி = பெருஞ்சினம்;  அடல் வேண்டும் = ஒழித்தல் வேண்டும்; ஆக்கம் = முற்போக்கான பயன் தரும் செயல்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,கும்பம் (மாசி),20]

{04-03-2021}

-----------------------------------------------------------------------------------------------------------

கன்றாமை வேண்டும்.

நான்மணிக்கடிகை (12) கந்திற் பிணிப்பர் களிற்றை !

இன்சொற்கு  இளகும் சான்றோர் !

-----------------------------------------------------------------------------------------------------------

பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று நான்மணிக் கடிகை ! ஒவ்வொரு செய்யுளிலும் நந்நான்கு கருத்துகளைச் சொல்வதால் நான்கு மணிகளைக் கோத்த ஆரம் என்னும் பொருளில் நான்மணிக் கடிகை என்று வழங்கப்படுகிறதுஇதிலிருந்து ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------------------

பாடல்: எண் (12).

------------------------------------------------------------------------------------------------------------

கந்திற் பிணிப்பர் களிற்றைக் கதந்தவிர

மந்திரத்  தாற்பிணிப்பர் மாநாகம்கொந்தி

இரும்பிற் பிணிப்பர்  கயத்தைச்சான்  றோரை

நயத்திற் பிணித்து விடல்.

----------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்.

---------------------------------------------------------------------------------

கந்திற் பிணிப்பர்  களிற்றை;  கதந்தவிர

மந்திரத்தாற் பிணிப்பர்  மாநாகம்கொந்தி

இரும்பிற் பிணிப்பர் கயத்தை; சான்றோரை

நயத்திற் பிணித்து விடல்.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

----------------

தூண் போன்ற பெரிய தறியில் தொடரி (சங்கிலி) கொண்டு பிணித்து யானையைத் தன்வயப் படுத்திவிடுவார் பாகன் !

சீறுகின்ற நல்ல பாம்பினை அதன் சினம்  அடங்கும் வகையில் மந்திரத்தால் கட்டுப்படுத்தித் தன்வயப் படுத்திவிடுவார் மந்திரவாதி !

கயமைக் குணம் படைத்த கீழ்மக்களைக்  கோலினால் ஒறுத்து, இரும்புத் தளையிட்டு அடக்கித்   தன்வயப்படுத்திடுவார்  நாடாளும் மன்னர்  !

அதுபோல், சான்றோரை இன்சொல் முதலியவற்றால் தன்வயப் படுத்திவிடுவர் அறிவார்ந்த மேன்மக்கள் !

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------

கந்து = தூண் (யானை கட்டும் தறி) ; பிணிப்பர் = கட்டி வைப்பர்; களிறு = யானை; மாநாகம் = நல்லபாம்பு; கொந்தி = உடம்பை ஒறுத்து; இரும்பில் பிணிப்பர் = இரும்பு விலங்கு கொண்டு தளைப்படுத்துவர்; கயத்தை = கீழ்மகனை; நயத்தில் = நயமான இன்சொல், பணிவு முதலிவற்றால்.

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com}

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,கும்பம்(மாசி),20]

{04-03-2021}

----------------------------------------------------------------------------------------------------------

கந்திற் பிணிப்பர்.