பக்கங்கள்

வியாழன், மார்ச் 04, 2021

நான்மணிக்கடிகை (12) கந்திற் பிணிப்பர் களிற்றை !

இன்சொற்கு  இளகும் சான்றோர் !

-----------------------------------------------------------------------------------------------------------

பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று நான்மணிக் கடிகை ! ஒவ்வொரு செய்யுளிலும் நந்நான்கு கருத்துகளைச் சொல்வதால் நான்கு மணிகளைக் கோத்த ஆரம் என்னும் பொருளில் நான்மணிக் கடிகை என்று வழங்கப்படுகிறதுஇதிலிருந்து ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------------------

பாடல்: எண் (12).

------------------------------------------------------------------------------------------------------------

கந்திற் பிணிப்பர் களிற்றைக் கதந்தவிர

மந்திரத்  தாற்பிணிப்பர் மாநாகம்கொந்தி

இரும்பிற் பிணிப்பர்  கயத்தைச்சான்  றோரை

நயத்திற் பிணித்து விடல்.

----------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்.

---------------------------------------------------------------------------------

கந்திற் பிணிப்பர்  களிற்றை;  கதந்தவிர

மந்திரத்தாற் பிணிப்பர்  மாநாகம்கொந்தி

இரும்பிற் பிணிப்பர் கயத்தை; சான்றோரை

நயத்திற் பிணித்து விடல்.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

----------------

தூண் போன்ற பெரிய தறியில் தொடரி (சங்கிலி) கொண்டு பிணித்து யானையைத் தன்வயப் படுத்திவிடுவார் பாகன் !

சீறுகின்ற நல்ல பாம்பினை அதன் சினம்  அடங்கும் வகையில் மந்திரத்தால் கட்டுப்படுத்தித் தன்வயப் படுத்திவிடுவார் மந்திரவாதி !

கயமைக் குணம் படைத்த கீழ்மக்களைக்  கோலினால் ஒறுத்து, இரும்புத் தளையிட்டு அடக்கித்   தன்வயப்படுத்திடுவார்  நாடாளும் மன்னர்  !

அதுபோல், சான்றோரை இன்சொல் முதலியவற்றால் தன்வயப் படுத்திவிடுவர் அறிவார்ந்த மேன்மக்கள் !

------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------

கந்து = தூண் (யானை கட்டும் தறி) ; பிணிப்பர் = கட்டி வைப்பர்; களிறு = யானை; மாநாகம் = நல்லபாம்பு; கொந்தி = உடம்பை ஒறுத்து; இரும்பில் பிணிப்பர் = இரும்பு விலங்கு கொண்டு தளைப்படுத்துவர்; கயத்தை = கீழ்மகனை; நயத்தில் = நயமான இன்சொல், பணிவு முதலிவற்றால்.

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com}

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2052,கும்பம்(மாசி),20]

{04-03-2021}

----------------------------------------------------------------------------------------------------------

கந்திற் பிணிப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .