யானையை எலி இழுத்துப் போகின்றதே !
பெருச்சாளி
வாகனத்தில் பிள்ளையார் அமர்ந்திருக்க, அந்தச்
சிலையைப் பல்லக்கில் வைத்து தெருவில் ஊர்வலமாகக் கொண்டு செல்றார்கள். இதைப் பார்த்த காளமேகம் உடனடியாக ஒரு பாடல் புனைகிறார். இதோ அந்தப் பாடல்:-
-----------------------------------------------------------------------------------------------------
மூப்பான்
மழுவும் முராரிதிருச் சக்கரமும்
பார்ப்பான்
கதையும் பறிபோச்சோ - மாப்பார்
வலிமிகுந்த
மும்மதத்து வாரணத்தை ஐயோ
எலியிழுத்துப்
போகின்றது ஏன்?
-----------------------------------------------------------------------------------------------------
பொருள்:-
பரமசிவன்
கையில் ஏந்தும் மழுவும், திருமால் கையில் இருக்கும்
சுதர்சனச் சக்கரமும், யமன் கையில் ஏந்தும் கதையும் எங்காவது
காணாமல் போய் விட்டனவா என்ன? இவ்வளவு பேர் இருந்தும், மிகுந்த வலிமை கொண்ட இந்த
மதயானையை (பிள்ளையார்) ஒரு பெருச்சாளி தூக்கிக்கொண்டு
போகிறது பாருங்களேன் !
{இகழ்வது போல் புகழும் வகையைச் சார்ந்தது இந்தப் பாடல்}
------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
மூப்பான் = சிவன் ; மழு = சிவனின் கையில் உள்ள
ஆயுதம் ; முராரி = திருமால்
; சக்கரமும் = சக்கராயுதமும் ; பார்ப்பான் = எமன்
; கதை = கதாயுதமும்; பறி போச்சோ = யாராவது
பறித்துக் கொண்டு போய்விட்டார்களோ ?; மாப்பார் = இந்த பெரிய உலகத்தில் ; வலிமிகுந்த = வலிமை மிகுந்த ; மும்மதத்து = கன்ன
மதம், கைம்மதம், கோச மதம் எனச் சொல்லப்படும்
மூன்று வகை மதங்களுக்கு ஆட்படும் ; வாரணத்தை = யானையை ;; எலி இழுத்துப் போகின்றது ஏன்? = பெருச்சாளி தூக்கிக் கொண்டு போகிறதே ! ; ஐயோ
= ஐயகோ ! என்ன கொடுமை இது !
------------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப்
பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.ஆ: 2050, சுறவம்,6]
{20-01-2019}
------------------------------------------------------------------------------------------------------