name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: திருப்பாவை
திருப்பாவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருப்பாவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், செப்டம்பர் 04, 2019

திருப்பாவை - (30) வங்கக் கடல் கடைந்த !

திங்கள்  திருமுகத்துச் சேயிழையார்  சென்றிறைஞ்சி !


வங்கக்   கடல்கடைந்த   மாதவனைக்  கேசவனைத்
.........திங்கள்  திருமுகத்துச் சேயிழையார்  சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட  ஆற்றை,  அணிபுதுவைப்
.........பைங்கமலத் தண்தெரியல்  பட்டர்பிரான்  கோதைசொன்ன,
சங்கத்  தமிழ்மாலை முப்பதும்  தப்பாமே
.........இங்கிப்  பரிசுரைப்பார்  ஈரிரண்டு மால்வரைத்தோள்,
செங்கண்  திருமுகத்துச்  செல்வத்  திருமாலால்,
.........எங்கும்  திருவருள்பெற்  றின்புறுவர்  எம்பாவாய் !

-------------------------------------------------------------------------------------------------------------
பொருள்:-
---------------

வங்கக் கடலைக் கடைந்து அமுதம் எடுத்த அந்த மாயவனை, கேசவனை, திங்கள் போல் மலர்ந்த முகம் படைத்த மகளிர் சென்று பாட வேண்டும். இந்த முப்பது பாடல்களையும் கண்ணன் திருமேனி முன் நெக்குருகப் பாடி அவனை வணங்க வேண்டும். திருவில்லிபுத்தூர் பட்டாபிராமன் மகளாகிய கோதை நாச்சியார் படைத்த இந்தப் பாடல்களைப் பாடுவோர், திருமாலழகனின் திருவடிகளைச் சென்று அடைவார்கள் ! பாவையரே வாருங்கள் ! நாமும் அவன் புகழைப் பாடி வணங்குவோம் !

-------------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-
--------------------------

வங்கக் கடல் கடைந்த = கோவர்த்தன கிரியை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பினைக் கயிறாகவும் கொண்டு வங்கக் கடலைக் கடைந்தவனை ; சேயிழையார் = அணிகலன்களை அணிந்து அழகாகத் திகழும் பெண்கள்; சென்று இறைஞ்சி = சென்று கண்ணனின் திருவடிகளைப் பணிந்து ; அங்கு அப் பறை கொண்ட ஆற்றை = கண்ணனின் அருள்பெற்ற நன்னெறியை; அணி = அடைந்த ; புதுவை = திருவில்லிப்புத்தூர்; பைங்கமலத் தண் தெரியல் = அழகிய தாமரைப் பூ இதழ்களைக் கொண்டு தொடுக்கப்பெற்ற மாலை போன்ற ; பட்டர் பிரான் கோதை = பட்டாபிராமன் மகளாகிய கோதை நாச்சியார் என்னும் ஆண்டாள் அருளிச் செய்த ; சங்கத் தமிழ் மாலை முப்பதும் = திருப்பாவைப் பாடல்கள் முப்பதையும் ; தப்பாதே = தவறாமல்; இங்கிப் பரிசுரைப்பார் = கண்ணனின் திருமேனி முன்பாக  பாடி வணங்குவோர்; ஈரிரண்டு = நான்கு ; மால் வரைத் தோள் = தோள்களையும்; செங்கண் = சிவந்த விழிகளையும்; திருமுகத்து = அழகிய முகத்தையும் ; செல்வத் திருமாலால் =  அனைத்துச் செல்வங்களை அருளும் திருமால்’; எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் =  திருவருள் பெற்று இவ்வுலகில் மகிழ்ச்சியான வாழ்வை அடைவார்கள் !

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை, 29]
(13-01-2019)

------------------------------------------------------------------------------------------------------------
      
  “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற்  குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------------



திருப்பாவை - (29) சிற்றஞ் சிறுகாலே !

பொற்றா  மரையடியே  போற்றும்  பொருள் கேளாய் !


சிற்றஞ்  சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
..........பொற்றா  மரையடியே  போற்றும்  பொருள்கேளாய் !
பெற்றம் மேய்த்துண்ணும்  குலத்திற்  பிறந்துநீ,
..........குற்றேவல்  எங்களைக் கொள்ளாமற் போகாது,
இற்றைப்  பறைகொள்வான்  அன்றுகாண்  கோவிந்தா !
..........எற்றைக்கும்  ஏழேழ்  பிறவிக்கும்  உன்றன்னோடு,
உற்றோமே யாவோம்  உமக்கேநா  மாட்செய்வோம்,
.........மற்றைநம்  கரமங்கள்  மாற்றேலோ  ரெம்பாவாய் !

---------------------------------------------------------------------------------------------------------
பொருள்:-
---------------

சோறு கண்ட இடமெல்லாம் சொர்க்கம் என்று வீண் பொழுது கழித்திருந்தோம். எங்கள் குலத்தில் நீ வந்து பிறந்தாய்.  உன் பொற்றாமரை அடிகளை நாங்கள் போற்றி மகிழ்கிறோம். கன்றும் கறவையும் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ, எங்களுக்கு எளியவனாகவே காட்சி தந்தாய். இப்படி உனக்குச் சேவை செய்யும் பேற்றினை நீ எங்களுக்கு என்றென்றும்  தந்தருள வேண்டும்.  இந்தப் பிறவியில் மட்டுமல்ல, ஏழேழு பிறவியிலும் உனக்கே உறவாக நாங்கள் இருக்க வேண்டும். உனக்கே நாங்கள் பணி செய்து கிடக்க வேண்டும். வேறொன்றும் எங்களை அணுகாமல் எங்களைக் காத்தருள வேண்டும்.

---------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-
---------------------------

சிற்றஞ் சிறு காலே = காலைப் பொழுதிலேயே; வந்துன்னைச் சேவித்து = வந்து உன்னை வணங்கி; பொற்றாமரை  அடியே போற்றும் = உன் பொற்றாமரை அடிகளில் பணிந்து வணங்குகிறோம் ;  பொருள் கேளாய் = எங்கள் வேண்டுதலைக் கேட்பாயாக ; பெற்றம் = பசு; குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது = உனக்குப் பணிவிடை செய்யும் பேறினைத் தந்தருள்வாய் ; இற்றை = இன்றே; பறை கொள்வான் = எங்களுக்கு உன் அருள் வேண்டும்; எற்றைக்கும் = என்றென்றும்; ஏழேழ் பிறவிக்கும் = ஏழேழு பிறவிகளுக்கும் ; உன்றன்னோடு உற்றோமே = உனக்கு உறவுப் பெண்களாக இருக்கும் பேறினைத் தரவேண்டும்; உமக்கே நாம் = உன்னுடையவர்கள் நாங்கள்; ஆட்செய்வோம் = உனக்கே ஆட்பட்டுள்ளோம்; மற்றை நம் காமங்கள் மாற்றேல் = வேறு எந்த ஆசையும் எங்களிடம்  அணுகா வண்ணம் எங்களைக் காத்தருள்வாய்; ஏல் ஓர் எம்பாவாய் = கண்ணனைப் போற்றிப் பாடி வணங்குவோம் வாருங்கள் பாவையரே !

---------------------------------------------------------------------------------------------------------
                             
                                              ஆக்கம் + இடுகை:
                                           வை.வேதரெத்தினம்,
                                                     ஆட்சியர்,
                                          தமிழ்ப் பணி மன்றம்.
                                          [தி.: 2049, சிலை, 28]
                                                    (12-01-2019)

--------------------------------------------------------------------------------------------------------
       
 "தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------



செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (28) கறவைகள் பின் சென்று !

கட்டுச் சோறு  கொண்டு போய்க் காட்டிலே அமர்ந்து   உண்பவர்கள் !


கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்
.........அறிவொன்று  மில்லாத ஆய்க் குலத்து  உன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்,
.........குறைவொன்று மில்லாத கோவிந்தா உன்றன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
.........அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னை
சிறுபே ரழைத்தனவும் சீறி அருளாதே
.........இறைவா நீதாராய் பறையலோ ரெம்பாவாய் !

-----------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
---------------

! கண்ணா ! நாங்கள் ஆடு, மாடு மேய்ப்பவர்கள்.  கட்டுச் சோறு கட்டிக் கொண்டு போய் காட்டிலே சாப்பிடுபவர்கள். அறிவில்லாத அப்பாவிகள். நாங்கள் ஆயர் குலத்தவர்கள். நீ எங்கள் குலத்தில் பிறப்பு எடுத்ததற்கு  நாங்கள் எவ்வளவோ புண்ணியம் செய்திருக்கிறோம். நீ குறை இல்லாதவன்; நற்குணங்கள் படைத்த கோவிந்தன்; இனி நம்முடைய உறவை யாரும் விலக்க முடியாது ! நாங்கள் அறியாதவர்கள் ! அன்பினாலே உன்னைப் பேர் சொல்லி அழைத்திருந்தாலும், ஒருமையில் பேசி   இருந்தாலும்   கோபப்படாதே  !  இறைவா  !   எங்களுக்கு  அருள் புரிவாய் !!

------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
---------------------------

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் = கறவை மாடுகளை மேய்ச்சலுக்குக் காட்டுக்கு  அழைத்துச் சென்று, அங்கேயே பகலெல்லாம் தங்கி கட்டுச் சோற்றினை உண்போம். அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து = ஆயர் குலத்தவர்களான நாங்கள் அறிவில்லாத அப்பாவிகள் ; உன்றன்னை = உன்னை; பிறவிப் பெறுந்தனை = எங்கள் குலத்தில் வந்து நீ பிறந்தமைக்கு ; புண்ணியம் யாமுடையோம் = நாங்கள் மிகுந்த புண்ணியம் செய்திருக்கிறோம்;  குறைவொன்றுமில்லாத கோவிந்தா = நீ குறை இல்லாதவன்; உன்றன்னோடு உறவேல் = எங்கள் குலத்தில் வந்து பிறந்துவிட்டமையால் நீ எங்களுக்கு உறவினன் ஆவாய்; நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது = நம்முடைய உறவை யாராலும் பிரிக்க முடியாது ; அறியாத பிள்ளைகளோம் = நாங்கள் அறியாத பிள்ளைகள் ; அன்பினால் உன்றன்னை = உன் பேரில் உள்ள அன்பின் மிகுதியால் ; சிறு பேர் அழைத்தனவும் = உன்னைப் பெயர் சொல்லி அழைத்திருந்தாலும் ; சீறி அருளாதே = எங்கள் மீது கோபம் கொள்ளாதே; இறைவா நீ தாராய் பறையே = கண்ணா நீ எங்களுக்கு அருள் புரிய வேண்டும்; ஏல் ஓர் எம்பாவாய் = கண்ணனைப் பாடி வணங்குவோம் பாவையரே வாருங்கள் !

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:-
     வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[ தி.: 2049, சிலை, 27]
(11-01-2019)

------------------------------------------------------------------------------------------------------
      
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------