name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: இலக்கிய அறிமுகம்
இலக்கிய அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கிய அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 05, 2019

இலக்கிய அறிமுகம் (01)பத்துப் பாட்டு !

தொகை நூல்களுள் முதன்மையாக வைத்து எண்ணப்படுவது பத்துப்பாட்டு ! !



பழந்தமிழ் நூல்களைப் பொதுவாக, ‘பத்துப் பாட்டு’, ‘எட்டுத் தொகை’, ‘பதினெண் கீழக்கணக்குஎன்று பாகுபடுத்தி உரைப்பது உரையாசிரியர்கள் காலந்தொட்டுப் பயின்று வரும் ஒரு மரபாகும். இம்முறை வைப்பில்பத்துப் பாட்டுசங்க காலத் தொகை நூல்களுள் முதன்மையாக வைத்து எண்ணப்படுகிறது !

    
து, பத்துப் பெரிய அகவற் பாடல்களைக் கொண்ட தொகுதி. பத்துப் பாட்டுத் தொகுதியில் அடங்கியுள்ள நூல்களை நினைவில் வைத்துக் கொள்ள வாய்ப்பாகப் பழைய பாடல் ஒன்று உள்ளது. அப்பாடல் வருமாறு :-

-------------------------------------------------------------------------------------------
முருகு, பொருநாறு, பாணிரண்டு, முல்லை,
பெருகு வளமதுரைக் காஞ்சி, மருவினிய
கோல நெடுநல்வாடை, கோல்குறிஞ்சி, பட்டினப்
பாலை, கடாத்தொடும் பத்து.
-------------------------------------------------------------------------------------------

திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய இப்பத்து நூல்களுமேபத்துப் பாட்டுஎன்று வழங்கப் பெறுபவை !

    
பத்துப் பாட்டு நூல்களைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர்கள் தெரியவில்லை. திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, மலைபடுகடாம் ஆகிய ஐந்தும் ஆற்றுப்படை நூல்கள் !

    
திருமுருகாற்றுப் படைக்குபுலவர் ஆற்றுப்படை’, என்ற பெயரும் உண்டு. மலைபடுகடாம்கூத்தர் ஆற்றுப்படைஎனவும் வழங்கும். ‘முல்லைப்பாட்டு’, ‘குறிஞ்சிப்பாட்டு’, ’பட்டினப்பாலைமூன்றும் அகத்திணை ஒழுக்கம் பற்றியவை !

    
நெடுநல்வாடைஅகப் பொருள் செய்தி வாய்ந்ததாயினும், பாண்டியனது அடையாளப் பூவைக் கூறினமையால், இது புறத் திணை நூலாகக் கருதப்படுகிறது. ’மதுரைக் காஞ்சிவீடுபேறு நிமித்தமான செய்திகளைக் கூறுவதால், இதையும் புறத்திணை நூலாக வகைப்படுத்திக் கூறுவர் உரையாசிரியர்கள் !

    
பத்துப் பாட்டு நூல்களுள் மிகச் சிறியது முல்லைப்பாட்டு;  இதில் 103 அடிகள் உள்ளன. மிகப் பெரிய பாடல் மதுரைக் காஞ்சி; இதில் 782 அடிகள் உள்ளன !

    
பண்டைத் தமிழின் அழகையும் பெருமையையும், தொகை நூல்களை ஊன்றிப் படித்து மகிழ்வோமாக ! பழந்தமிழ்க் கருவூலங்களான இவற்றைத் தமிழ் பணி மன்ற நண்பர்கள் விருப்புடன் ஏற்று, போற்றிப் படித்துப் பயன் அடைவார்களாக !

    
சில ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ப் பொருள் அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் அழகிய தமிழ்ச் சொற்கள் பத்துப் பாட்டு நூல்களில் பரந்து காணப்படுகின்றன. அவற்றுள் சிவற்றை மட்டும் இங்குக் காண்போம் !

-------------------------------------------------------------------------------------------------------------

ORCHESTRA...............= பல்லியம் (பா.வரி.119. திருமுரு)
HEAVY DUTY...............= மதவலி (பா.வரி.232. திருமுரு)
HIGHWAY ROBBERS..= ஆறலைக் கள்வர் (பா.வரி.21.பொருநர்
FUND...........................= நிதியம் (பா.வரி.249.சிறுபாண்)
HEIR (வாரிசு)............= பிறங்கடை (பா.வரி.30,பெரும்பாண்)
BACK YARD.................= படப்பை (பா.வரி.401.பெரும்பாண்)
SENIOR CITIZEN........= மூதாளர் (பா.வரி.54.முல்லைப்பாட்டு)
V.I.P..............................= விழுமியர் (பா.வரி.200.மதுரைக்காஞ்சி)
MECHANIC..................= கம்மியர் (பா.வரி.57.நெடுநல்வாடை)
BUNGALOW................= வளமனை (பா.வரி.223.குறிஞ்சிப்பாட்டு)
KITCHEN......................= அட்டில் (பா.வரி.43.பட்டினப்பாலை)
SONS...........................= மகார் (பா.வரி.236.மலைபடுகடாம்)

--------------------------------------------------------------------------------------------------------------

குறுக்க விளக்கம்:
திருமுரு = திருமுருகாற்றுப்படை;
பொருநர் = பொருநராற்றுப்படை
சிறுபாண் = சிறுபாணாற்றுப்படை
பெரும்பாண் = பெரும்பாணாற்றுப்படை

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,09]
{24-06-2019)
------------------------------------------------------------------------------------------------------------
         
தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------

இலக்கிய அறிமுகம் (02) எட்டுத்தொகை !

எட்டு இலக்கியங்களைத் தன்னகத்தே  கொண்ட  தொகை நூல்களின் பொதுப் பெயர் எட்டுத் தொகை  !


நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித் தொகை, அகநானூறு, புறநானூறு  என்பன எட்டுத் தொகை நூல்களாம். இவற்றை நினைவில் வைத்துக் கொள்ள வாய்ப்பாக ஒரு பாடல் உளது. உங்களில் பலர் படித்த பாடல் தான் !

------------------------------------------------------------------------------------------------

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு;
.......ஒத்த பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல்,
கற்றறிந்தோர் ஏத்தும் கலியொடு அகம்புறமென்று,
.......இத்திறத்தது  எட்டுத் தொகை” !

-------------------------------------------------------------------------------------------------
    
இவற்றுள் புறநானூறு, பதிற்றுப் பத்து ஆகிய இரண்டும் புறப்பொருள் பற்றிய செய்திகளை நன்கு புலப்படுத்துவன. அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை என்னும் ஐந்தும் அகப்பொருளாகிய இன்பத்துறை பற்றிய ஒழுக்க உணர்ச்சிகளை அழகுற எடுத்துக் கூறுவன. பரிபாடல் அகம், புறம் என்னும் இரண்டையும் இனிது எடுத்து உரைப்பது !

புறப்பொருள் பற்றிய தொகை நூல்களில், போரைப்பற்றிய பாடல்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. எனவே, சங்க கால தமிழ்ப் புலவர் காதல், வீரம் என்னும் இரண்டைப் பற்றி மிகுதியாகப் பாடினர் என்பது தெளிவாகும் ! 
    
ஏறத்தாழப் புலவர் பெருமக்கள் ஐந்நூற்றுவர் பாடிய பாக்களின் தொகுதியே எட்டுத் தொகையாகும். அப்புலவர்கள் தமிழகத்துப் பல ஊர்களைச் சேர்ந்தவர்; பரந்துபட்ட காலத்தவர்;  பல்வேறு  தொழிலினர்; இவருள் சேர, சோழ, பாண்டியர் என்ற முடியுடைப் பெருவேந்தரும், அரசமாதேவியரும், சிற்றரசரும் அவர்தம் மகளிரும் இடம் பெற்றுள்ளனர் !

எட்டுத்தொகைச் செய்யுள்களில், பெருநில வேந்தரின் பெருமிதமான போர்த் திறன்களையும், வெற்றிச் சிறப்புகளையும் விரித்துக் கூறும் பாக்கள் பல; வரையாது வழங்கும் வள்ளன்மையை வகுத்துரைக்கும் செய்யுள்கள் பல; நல்லொழுக்கத்தை நவில்வன சில; கல்வி மேம்பாட்டினைக் கருத்தில் பதிய வைப்பன சில !

ஆட்சி முறையை அழகுற எடுத்து இயம்புவன சில; மறக்குடி மகளிரின் மாண்பைப் புலப்படுத்துவன சில; கற்பரசிகளின் காதல் வாழ்வைக் கவினுறக் காட்டுவன பற்பல; வெஞ்சின வேந்தர் வஞ்சினம் கூறும் செய்யுள்கள் சில; போரைத் தடுத்துப் புலவர் அறிவு புகட்டுவன சில; கடவுள் நன்னெறி காட்டுவன சில; குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணை அன்பொழுக்கங்களை இன்பம் ததும்ப இனிது விளக்குவன எத்துணையோ பல; இயற்கைக் காட்சிகளை எழிலுறச் சித்திரித்துக் காட்டுவன பல !

இச்செய்யுள்களுள் இடையிடையே தொன்ம (புராண) மறவனப்பு (இதிகாச)ச்  செய்திகளும், தமிழ்நாட்டுத் தலைநகரங்களைப் பற்றிய சிறப்புக்களும், வட இந்திய நாட்டினைப் பற்றிய பல செய்திகளும், பிற வரலாற்றுக் குறிப்புகள் சிலவும் இடம் பெற்றுள்ளன !

எட்டுத் தொகையில் இடம்பெற்றுள்ள நூல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும்  அடுத்து வரும் நாள்களில் காண்போம் !

பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்களாகிய நாம், நமது இலக்கியங்களைப் பற்றி ஓரளவுக்காவது தெரிந்து வைத்திருப்பது தானே சிறப்பு ! படித்த இலக்கியங்களைப் பற்றிய செய்திகளைக் காலப்போக்கில் மறந்து விட்டோர் பலர்; படிப்பதற்கான வாய்ப்புகளைத் தவறவிட்டோர் பலர்; ஆழமாக அன்றி அகலமாகத் தெரிந்து வைத்திருப்போர் பலர்; தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்காதா என்று எண்ணத்தில் காத்திருப்போர் பலர் !

செம்மொழி என்னும் தகுதி பெற்று உயர்ந்து விளங்கும் நம்மொழியின் இலக்கியங்களைப் பற்றிய செய்திகளை மீண்டும் நம் சிந்தனைக்கு விருந்தாக்கும் செயலில் ஈடுபடுவது தவறல்லவே ! தொடங்குவோம் வாரீர் !!

இன்றைய கட்டுரையை நிறைவு செய்யும் முன் ஒரு செய்தி. ஆங்கிலச் சொற்களுக்கு நேர் பொருள் தரும் தமிழ்ச் சொற்களைத் தேடி எங்கெங்கோ அலைகிறோம். இலக்கியங்களில் தேடினோமா ? இனியாவது தேடுவோம். ஓரிரு புதிய சொற்கள் உங்கள் பார்வைக்கு !
----------------------------------------------------------------------------------------------------------

MESS...............................= அயிலகம் (புறநானூறு- பாடல்.399)
BALCONY......................= அரமியம் (மதுரைக் காஞ்சி.வரி.451)
OUT-PUT........................= ஈகை வளம் (கலித்தொகை.95:9)

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,விடை,32]
{15-06-2019}
---------------------------------------------------------------------------------------------------------
     “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------

வியாழன், அக்டோபர் 03, 2019

இலக்கிய அறிமுகம் (03)பதினெண் கீழ்க்கணக்கு !

பதினெட்டு இலக்கியங்கள் “பதினெண் கீழ்க் கணக்கு” என்னும் பெயரில் வகைப்படுத்தித் தொகுக்கப்பட்டுள்ளன !



தமிழ் இலக்கியங்கள் மூன்று தலைப்புகளில் வகைப் படுத்தப்பட்டு உள்ளன ! அவை (01) பத்துப் பாட்டு (02) எட்டுத் தொகை (03) பதினெண் கீழ்க்கணக்கு ! பதினெண் கீழ்க் கணக்கில் 18 நூல்கள் இடம்பெற்றுள்ளன !

பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் வருமாறு :- (01) நாலடியார் (02) நான்மணிக் கடிகை (03) இன்னா நாற்பது (04) இனியவை நாற்பது (05)  கார் நாற்பது (06) களவழி நாற்பது (07) ஐந்திணை ஐம்பது (08( ஐந்திணை எழுபது (09) திணைமொழி ஐம்பது (10) திணைமாலை நூற்றைம்பது (11) திருக்குறள் (12) திரிகடுகம் (13) ஆசாரக் கோவை (14) பழமொழி நானூறு (15) சிறுபஞ்சமூலம் (16) முதுமொழிக் காஞ்சி (17) ஏலாதி (18) கைந்நிலை !

இந்நூல்களை நினைவில் வைத்துக் கொள்ளும்வகையில் ஒரு வெண்பா உள்ளது.அது வருமாறு :-
--------------------------------------------------------------------------------------------

நாலடி, நான்மணி, நானாற்பது, ஐந்திணை, முப்-
பால்,கடுகம், கோவை, பழமொழி, மாமூலம்,
இன்னிலைய காஞ்சியுடன், ஏலாதி, என்பவும்,
கைந்நிலையும், ஆம்கீழ்க் கணக்கு !

------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------------------

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை இயற்றிய புலவர்கள், அந்நூல்களில் அடங்கியுள்ள பாடல்கள் எண்ணிக்கை, அவை தோன்றிய காலம் (நூற்றாண்டு), அந்நூல்களின் வகை (அறம்/ அகம்/ புறம்) ஆகிய விவரங்கள் அடியில் தரப்பட்டுள்ளன !

---------------------------------------------------------------------------------------------------------

நாலடியார் – 400 பாடல் - சைன முனிவர்கள் - கி.பி.7- (அறநூல்)1/11
நான்மணிக்கடிகை – 400 பாடல்விளம்பி நாகனார்கி.பி.6- (அறநூல்)2/11
இன்னா நாற்பது – 40 பாடல்கபிலர்கி.பி.5- (அறநூல்)3/11
இனியவை நாற்பது – 40 பாடல்பூதஞ்சேந்தனார் - கி.பி.5- (அறநூல்)4/11
கார் நாற்பது – 40 பாடல் மதுரை கண்ணங் கூத்தனார்- கி.பி.6- (அகம்)1/6
களவழி நாற்பது – 40 பாடல்பொய்கையார் - கி.பி.5- (புறம்)1/1
ஐந்திணை ஐம்பது – 50 பாடல்மாறன் பொறையனார் - கி.பி.6- (அகம்)2/6
ஐந்திணை எழுபது – 70 பாடல்மூவாதியார் - கி.பி.6- (அகம்)3/6
திணைமொழி ஐம்பது – 50 பாடல்கண்ணம்பூதனார் - கி.பி.6- (அகம்)4/6
திணைமாலை நூற்றைம்பது – 150 பாடல்கணிமேதாவியார் - கி.பி.6-. (அகம்)5/6
முப்பால் – 1330 பாடல்திருவள்ளுவர் - கி.மு.1- (அறநூல்)5/11
திரிகடுகம் – 100 பாடல்நல்லாதனார் - கி.பி.4- (அறநூல்)6/11
ஆசாரக் கோவை – 100 பாடல்பெருவாயின் முள்ளியார் - கி.பி.7- (அறநூல்)7/11
பழமொழி – 400 பாடல்முன்றுரை அரையனார் - கி.பி.6- (அறநூல்)8/11
சிறுபஞ்சமூலம் – 100 பாடல்காரியாசான் - கி.பி.6- (அறநூல்)9/11
முதுமொழிக் காஞ்சி – 100 பாடல்மதுரைக் கூடலூர் கிழார் - கி.பி.4- (அறநூல்)10/11
ஏலாதி – 80 பாடல்கணிமேதாவியார் - கி.பி.6- (அறநூல்)11/11
கைந்நிலை – 60 பாடல் புல்லங்காடனார் - கி.பி.7- (அகம்)6/6

----------------------------------------------------------------------------------------------------------

திருக்குறள் தவிர ஏனைய நூல்கள அனைத்தும் கி.பி 4 –ஆம் நூற்றாண்டு அல்லது அதற்குப் பின் தோன்றியவை. இக்காலத்தில் தான் வடமொழி மேலாண்மை தமிழகத்தில் துளிர்விடத் தொடங்கியது. ஆகவே, இந்நுல்களில் வடமொழிச் சொற்கள் கலப்பு காணப்படுகின்றன. !

ஆசாரக் கோவை, வடமொழி நூல்களைத் தழுவி எழுதப் பெற்ற ஒன்று என்பது அறிஞர்களின் கருத்து. இந்நூலிற் கூறப்பட்டுள்ள ஒழுக்கங்கள் சில இக்காலத்திற்கு ஏற்றதாக இல்லை என்று பல அறிஞர்கள் கருதுகின்றனர் !

படித்துப் பயனடைய வேண்டிய பல கருத்துகள் கீழ்க்கணக்கு நூல்களில் நிரம்பவும் இடம்பெற்றுள்ளன ! தமிழ் கூரும் நல்லுலகம் இவற்றைப் படித்துப் பயன் பெறுமாக !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,19]
{4-7-2019}
----------------------------------------------------------------------------------------------------------
       ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------



இலக்கிய அறிமுகம் (04) தொல்காப்பியம்.

ஆயிரத்து அறுநூறு நூற்பாக்கள் உள்ள தமிழ்  இலக்கணக் கருவூலம் ! 


தொல்காப்பியம் என்னும் பழந்தமிழ் இலக்கணம் ஏறத்தாழ 5,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது. இதன்கண் 1600 நூற்பாக்கள் உள்ளன. இவற்றை இயற்றியவர் தொல்காப்பியர் என்னும் பெரும் புலவர் !

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று பெரும் பகுதிகளைக் கொண்டது.  எழுத்ததிகாரத்தில், தமிழ் எழுத்துகளைப் பற்றிய விளக்கங்கள், ஒன்பது இயல்களில் கூறப்பட்டுள்ளன. சொல்லதிகாரத்தில் எழுத்தாலாகிய சொற்களைப் பற்றிய இயல்புகளும், சொற்களின் சேர்க்கையால் உண்டாகும் தொடர்புகளைப் பற்றிய செய்திகளும் ஒன்பது இயல்களில் நன்கு விளக்கப்பட்டுள்ளன !

மூன்றாம் பகுதியாகிய பொருளதிகாரத்தில், எழுத்தையும் சொல்லையும் பயன்படுத்திய அக்காலத் தமிழ் மக்களின் அகவாழ்வும், புறவாழ்வும், பிறவும் ஒன்பது இயல்களால் தெரிவிக்கப்பட்டுள்ளன !

பண்டைத் தமிழகத்தில், ஒருவனும் ஒருத்தியும் தனியே எதிர்ப்பட்டுக் காதல் கொண்டு சிறிது காலம் களவு  வாழ்க்கை நடத்துவர்; பின்னர்ப் பலர் அறிய மணம் செய்து கொண்டு, கற்பு வாழ்வை மேற்கொள்வர்; இவ்வாறு களவொழுக்கம் இன்றி, மணம் முடித்துக் கொண்டு கற்பு அறம் பிறழாமல் இல்வாழ்க்கை நடத்துவதும் உண்டு !

இவ்விரு திறத்தினர் வாழ்வையும் நன்கு விளக்கிக் கூறும் பகுதியே அகவாழ்வு எனப்படும். அக்காலத் தமிழருடைய அறம் பற்றிய செய்திகளும், பொருள் பற்றிய விளக்கங்களும், வீடு பற்றிய குறிப்புகளும் புறவாழ்வு என்னும் பகுதியில் அடங்கும். இப்பகுதிகள் தொல்காப்பியர் காலத் தமிழர் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுவன ஆகும் !

இவையேயன்றி உள்ளக் குறிப்பைத் தெள்ளிதிற் புலப்படுத்தும் மெய்ப்பாடுகளும் (manifesting physical expression of the emotions), பிற அணிகளுக்கெல்லாம்  அடிப்படையாய் அமைந்த உவமையின் இயல்பும், செய்யுள் இலக்கணம் முதலியனவும் பொருளதிகாரத்தில் விரித்துக் கூறப்பட்டுள்ளன !

இக்காலத்தில் புழக்கத்தில் உள்ள ஆங்கிலச் சொற்களான TECHNICIAN, DOZEN ஆகிவற்றுக்கு நேர் பொருளைத் தரும்வினைவலர்”, ‘பன்னீர்போன்ற பல சொற்களை நாம் எடுத்தாள்வதற்குத் தொல்காப்பியம் பெரிதும் துணை செய்கிறது !
--------------------------------------------------------------------

புல்லும் மரனும் ஓர் அறிவினவே;
நந்தும் முரலும் ஈர் அறிவினவே;
சிதலும் எறும்பும் மூவறிவினவே;
நண்டும் தும்பியும் நான்கறிவினவே;
மாவும் மாக்களும் ஐயறிவினவே;
மக்கள் தாமேஆறு அறிவு உயிரே !
---------------------------------------------------------------------
         
புற்களும் மரங்களும் ஓரறிவு உடையவை; நத்தையும் மீனும் ஈரறிவு உடையவை; கறையானும் எறும்பும் மூன்று அறிவு உடையவை; நண்டும் மலர் வண்டும் நான்கு அறிவு உடையவை; விலங்குகளும் பகுத்தறிவு இல்லாத மிலேச்சர்களும் சிறு குழந்தைகளும் ஐந்து அறிவு உடையோர்; வளர்ந்த மனிதன் ஆறு அறிவு உடையவன் என்று நுணுக்கமாக ஆய்ந்து அறிந்து சொன்ன அறிவியல் அறிஞன் அன்றோ நம் தொல்காப்பியன் !

இலக்கியங்களைப் படித்து தமிழின் பெருமையை உணர்வோம் ! தமிழின் அருமையை உணர்வோம் ! தமிழனின் பெருமைகளை உணர்வோம் !


--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை.
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,விடை,31]
{14-06-2019}

----------------------------------------------------------------------------------------------------------
      ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------