name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: 02/15/20

சனி, பிப்ரவரி 15, 2020

வரலாறு பேசுகிறது (28) வ.சுப.மாணிக்கம் !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர் !

.சுப.மாணிக்கம்.



தோற்றம்:

புதுக்கோட்டை மாவட்டம் மேலைச் சிவபுரி என்னும் ஊரில் 1917 –ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 17 –ஆம் நாள் பிறந்தவர் மாணிக்கம். தந்தையார் பெயர் வ.சுப்பிரமணியன் செட்டியார். தாயார் பெயர் தெய்வானை ஆச்சி. பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் அண்ணாமலை; ஆனால் மாணிக்கம் என்றே அனைவரும் அழைத்ததால், இப்பெயரே இவருக்கு நிலைத்துவிட்டது !

வளர்ப்பு:

மாணிக்கம் தனது ஆறாம் அகவையில் தாயை இழந்தார். தொடர்ந்து 10 மாதங்கள் கழித்து தனது தந்தையையும் இழந்தார். எனவே இவரது தாய்வழிப் பாட்டனார் அண்ணாமலைச் செட்டியார்- பாட்டி மீனாட்சி ஆச்சி ஆகியோரின் அரவணைப்பில் மாணிக்கம் வளர்ந்து வரலானார் !


பின்னர் வ.சுப.மாணிக்கம் தான் சார்ந்த நகரத்தார் (செட்டியார்கள்) வழக்கப்படி அளகைத் தொழில் (BANKING) கற்றுக் கொள்வதற்காக பர்மா நாட்டிற்குச் சென்றார். அங்கு இரங்கூன் நகரில் உள்ள அளகைக் கடை (BANKING SHOP) ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். கடை உரிமையாளர் சொல்லிக் கொடுத்தபடிப் பொய் சொல்ல மறுத்ததால், அவர் வேலையை இழந்தார். எனினும்பொய் சொல்லா மாணிக்கம்என்னும் பட்டப் பெயர் அவருடன் ஒட்டிக் கொண்டது !

கல்வி:

தனது தொடக்கக் கல்வியைப் புதுக்கோட்டையில் உள்ள பள்ளியொன்றில் பெற்றிருந்த மாணிக்கம், பர்மாவிலிருந்து நாடு திரும்பிய பிறகு தனிப்பட்ட முறையில் பயின்று பள்ளி இறுதி வகுப்புத் தேர்வெழுதி அதில் வெற்றி பெற்றார். பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியார் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு தமிழ் நூல்களை ஊன்றிக் கற்றார். தமிழின் மீது அளப்பரிய நாட்டமும் ஏற்பட்டது. பண்டிதமணியின் வழிகாட்டுதலின் படி மாணிக்கம் சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்வித்துவான்” (இளம்புலவர்) வகுப்பில் சேர்ந்து பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் !

திருமணம்:

சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள நெற்குப்பைஎன்னும் ஊரைச் சேர்ந்த ஏகம்மை என்பவரை 1945 ஆம் ஆண்டு வ.சுப.மாணிக்கம் மணந்து கொண்டார். இவ்விணையருக்கு தொல்காப்பியன், பூங்குன்றன், பாரி என்னும் ஆண் மகவினரும், பொற்கொடி, தென்றல் என்னும் இரு பெண் மகவினரும் பிறந்தனர்.

பட்டப்படிப்பு:

தொடர்ந்து விடாமுயற்சியுடன் பயின்று 1945 –ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் கீழைமொழிகள் வாலைப் (B.O.L) பட்டம் பெற்றார். கலையியல் மேதை (M.A) பட்டத்தினை 1951 –ஆம் ஆண்டுப் பெற்றார். ”தமிழில் வினைச் சொற்கள்என்ற பொருளில் இவர் மேற்கொண்ட ஆய்வுக்காக கீழை மொழிகள் மேதை (M.O.L) பட்டத்தையும், ”தமிழில் அகத்திணைக் கொள்கைஎன்னும் பொருளில் மேற்கொண்ட ஆய்வுக்காக முனைவர் பட்டமும் (Ph.D) பெற்றார் !

கல்விப் பணி:

.சுப.மாணிக்கம் தன் கல்விப் பணியை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தொடங்கினார். 1941 –ஆம் ஆண்டு அங்கு தமிழ்த் துறையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்நது 7 ஆண்டுகள் பணி புரிந்தார்.  பின்னர் 1948 –ஆம் ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியேற்று 1964 வரை பதினாறு ஆண்டுகள் அங்குப் பணி புரிந்தார். அடுத்து காரைக்குடியில் உள்ள  அழகப்பா கல்லூரியில் முதல்வர் பொறுப்பை ஏற்று 1970 வரை ஆறாண்டுகள் பணி புரிந்தார். இதனை அடுத்து 1970 முதல் 1977 வரை ஏழாண்டுகள் மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்து தமிழ்த் துறைத் தலைவராகவும், இந்திய மொழிப்புல முதன்மையராகவும் பணி புரிந்தார் !

துணைவேந்தர்:

இவரது தமிழ்ப் புலமையையும், ஆளுமையையும் கண்ட தமிழக அரசு இவரை மதுரை, காமராசர் பலகலைக்கழகத் துணை வேந்தராக 1979 –ஆம் ஆண்டு அமர்வு செய்தது. மூன்றாண்டுகள் மிகச் சிறப்பாகத் துணைவேந்தர் பதவியில் பணியாற்றிய வ.சு.மாணிக்கனார் 1982 –ஆம் ஆண்டு அப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

படைப்புகள்:

மனைவியின் உரிமை”, “கொடை விளக்கு”, “இரட்டைக் காப்பியங்கள்”, “நகரத்தார் அறப் பட்டயங்கள்”, ”தமிழ்க் காதல்”, “நெல்லிக் கனி”, “தலைவர்களுக்கு”, “உப்பங்கழி”, “ஒரு நொடியில்”, “மாமலர்கள்”, “வள்ளுவம்”, “ஒப்பியல் நோக்கு”, “தொல்காப்பியக் கடல்”, “சங்க நெறி”, “திருக்குறட்சுடர்”, ”காப்பியப் பார்வை”, “இலக்கியச் சான்று”, “கம்பர்”, உள்பட இவர் 28 நூல்களை எழுதி இருக்கிறார் ! தமிழக அரசு இவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் 2006 –ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கியது !

தமிழ்த்தொண்டு:

.சுப.மாணிக்கம் அவர்கள் ஒரு சிந்தனையாளர். பழைமையையும், புதுமையையும் ஒருமித்த மனதோடு ஏற்றுப் போற்றினார். தமிழ்ச் சொல்லாக்கங்களை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் முனைப்புக் காட்டியவர். “தமிழ் வழிக் கல்வி இயக்கம்என்ற அமைப்பை நிறுவி தமிழ் வழிக் கல்வியின் மேன்மை பற்றித் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டார் !

ஏற்றிருந்த பிற பொறுப்புகள்:

தமிழகப் புலவர் குழுத் தலைவர், பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவர், தமிழ் வழில் கல்வி இயக்கத் தலைவர், தமிழ்ப் பல்கலைக் கழக வடிவமைப்புக் குழுத் தலைவர், தமிழ்ப் பல்கலைக் கழகத் தொல்காப்பியத் தகைஞர் ஆகிய பொறுப்புகளையும் பல்வேறு நேரங்களில் ஏற்றுச் சிறப்புடன் பணிபுரிந்தார் !

விருப்பமுறி (WILL):

(01) தன் மறைவுக்குப்பின் தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கினை அறநிலையத்திற்கு வழங்க வேண்டும்.
(02) தன் பிறந்த ஊரான மேலைச் சிவபுரியில் தன் சேமிப்பிலிருந்து செலவு செய்து மருத்துவம், குழந்தைகள் நலம், நலவாழ்வு. கல்வி போன்ற பணிகளுக்குச் செலவிட வேண்டும்.
(03) தான் தொகுத்து வைத்திருந்த 4500 நூல்களையும் காரைக்குடி அழகப்பா, பல்கலைக் கழக நூலகத்திற்குத் தந்துவிட வேண்டும்.

தன் விருப்ப முறியில் மேற்கண்ட மூன்று விருப்பங்களையும் தெரிவித்திருந்த வ.சுப.மாணிக்கனார், உண்மையிலேயே மனிதருள் மாணிக்கம் தான் என்பதில் ஐயமில்லை !

மறைவு:

எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ் என்ற கொள்கைகளைப் பின்பற்றி வந்த தமிழ்க் கடல் 1989 –ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள், 25 ஆம் நாள், தமது 72 –ஆம் அகவையில் மறைந்தது. அவர் மறைவைக் கேட்டுத் தமிழ் கூறும் நல்லுலகமே துன்பத்தால் துவண்டு போயிற்று !

முடிவுரை:

.சுப.மாணிக்கம் போன்ற தமிழறிஞர்களின் மறைவு தமிழகத்தில் நிறைவு செய்ய இயலாத வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது ! தொல்காப்பியன், பூங்குன்றன், பாரி, பொற்கொடி, தென்றல் என்னும் அவரது மக்கட் செல்வங்களின் பெயர்களைப் பாருங்கள். இத்தகைய தமிழுணர்வு, இக்காலத் தமிழ் மக்களிடம் ஏற்பட்டால், தமிழ் வளர்ச்சி ஏறுமுகமாகும் என்பதில் ஐயமில்லை ! வாழ்க  .சுப.மாணிக்கனார் புகழ் ! வளர்க அவர் ஏற்றி வைத்த தமிழ் உணர்வு !

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2051, கும்பம் (மாசி),03]
{15-02-2020}

-------------------------------------------------------------------------------------------------------------

             தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------------



முனைவர்.வ.சுப.மாணிக்கம்



வரலாறு பேசுகிறது (27) க.ப.அறவாணன் !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர் !


..அறவாணன்


தோற்றம்:

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கடலங்குடி என்னும் ஊரில் 1941 –ஆம் ஆண்டு, ஆகத்து, 09 –ஆம் நாள் பிறந்தவர் அறவாணன். தந்தையார் பெயர் பழநியப்பன். தாயார் தங்கபாப்பு அம்மையார். இளமையில் பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் கிருட்டிணமூர்த்தி. சிலர் இவரை அருணாச்சலம் என்றும் அழைத்தனர். பின்னாளில், இவர் தன் இயற்பெயரை அறவாணன் என்று மாற்றி அமைத்துக் கொண்டார் !

கல்வி:

கடலங்குடியில் 5 ஆம் வகுப்பு வரைப் பயின்ற அறவாணன், பின்பு விட்டுணுபுரம் என்னும் ஊரில் பள்ளி இறுதி வகுப்பு வரைப் படித்துத் தேர்ச்சி பெற்றார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டப் படிப்பில் சேர்ந்த அறவாணன் 1959 –ஆம் ஆண்டு புலவர் பட்டப் படிப்பை நிறைவு செய்து பட்டம் பெற்றார். அங்கேயே மேற்படிப்பை மேற்கொண்டு 1963 –ஆம் ஆண்டு கீழைமொழியியல் வாலை (B.O.L) பட்டமும் பெற்றார் ! கலையியல் மேதை (M.A) பட்டத்தினைக் கேரளப் பல்கலைகத்தின் வாயிலாகப் பெற்றார் ! பின்பு சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார் !

திருமணம்:

அறவாணன் 21-04-1969 அன்று தாயம்மாள் அவர்களை மணந்து கொண்டார். தாயம்மாள் பின்னாளில் பேராசிரியராகப் பணி புரிந்து ஓய்வுபெற்ற தமிழறிஞராகத் திகழ்ந்தார்.  இவ்விணையருக்கு அறிவாளன், அருட்செங்கோர் என இரு ஆண் மகவினர் பிறந்தனர் 1

ஆசிரியப் பணி:

பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரியில், அறவாணன் தமிழ் விரிவுரையாளாராகப் பணியில் சேர்ந்தார். சிலகாலம் இங்கு பணிபுரிந்த பின், நெல்லை மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் முதல்வராகப் பணியேற்றார். இதையடுத்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1970 –ஆம் ஆண்டு பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார் !

அயல்நாட்டுப் பணி :

பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக 7 ஆண்டுகள் பணி புரிந்த அறவாணன், பின்னர் ஆப்பிரிக்கப் பெருநிலத்தில்செனகல்நாட்டில் உள்ளதக்கார்பல்கலைக் கழகத்தில் மானிடவியல் ஆய்வாளராக 1977 முதல் 1982 வரை ஐந்தாண்டுகள் பணிபுரிந்து தாய்நாடு திரும்பினார் !

மீண்டும் தமிழ்ப் பணி:

ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்த பின் சென்னையில் உள்ள இலயோலா (LAYOLA) கல்லூரியில் 1982 –இல் பணியில் சேர்ந்த அறவாணன், அங்கு 1987 வரைப் பேராசிரியராகப் பணி புரிந்தார். அடுத்து 1987 முதல் புதுவைப் பல்கலைக் கழகத்தில் தனது பணியைத் தொடர்ந்தார்.

துணைவேந்தர்:

அறவாணன் அவர்களின் தமிழ்ப் புலமையையும், ஆளுமைத் திறனையும் கண்ட திரு.மு..அரசு, அவரை நெல்லை மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணை வேந்தராக 1998 –ஆம் ஆண்டு  பணியில் அமர்த்தியது. மூன்றாண்டுகள் இப்பதவியில் திறம்படப் பணியாற்றிய அறவாணன், 2001 –ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார் !

பிற பணிகள்:

இவர் துணைவேந்தராகப் பணியாற்றிய காலத்தில், சமுதாயவியல் கல்லூரிகளை நிறுவி, அடித்தட்டு நிலையில் உள்ள மாணவர்கள் வாழ்வில் ஒளிபெறச் செய்தார். இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம் என்ற அமைப்பு தளர்ச்சியுற்றிருந்த நிலையில் அதனை மிகப் பெரிய நிலைக்கு உயர்த்தி தமிழாய்வுகள் சிறக்க வழி செய்தார் ! அறிவியல் தமிழியம், தேடல், முடியும், கொங்கு உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார் !

தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழு உறுப்பினராக இருந்த  இவர்  சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு, படைப்பு இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளுக்குத் தன்னுடைய  வளமான பங்களிப்பினை நல்கியும் வந்திருக்கிறார் !

படைப்புகள்:

தமிழர்மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள்”, “சைனர்களின் (JAINS) தமிழிலக்கண நன்கொடை”, “தொல்காப்பியக் களஞ்சியம்”, “கவிதை - கிழக்கும் மேற்கும்”, “அற்றைய நாள் காதலும் வீரமும்”, “தமிழரின் தாயகம்”, “தமிழ்ச் சமுதாய வரலாறு”, “தமிழ் மக்கள் வரலாறு” “அற இலக்கியக் களஞ்சியம் என்பன இவரின் படைப்புகளில் குறிப்பிடத்தக்க நூல்களாகும். இவரின் படைப்புகளில் "அவள் அவன் அது", "தென்னைமரத் தீவுகளும் தீவோர மனிதர்களும்", "செதுக்காத சிற்பங்கள்", "சொல்ல முடிந்த சோகங்கள்", ”நல்லவர்கள் இன்னும் இருக்கிறார்கள்”, ”கண்ணீரில் மிதக்கும் கதைகள்”, ஆகியவை அனைவரது கருத்தையும் கவர்ந்த பிற நூல்களாகும் ! இவ்வாறு அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் படைத்து நமக்கு அளித்துள்ளார் !

விருது:

தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, சிறந்த பேராசிரியருக்கான விருது (1986), ஆகியவற்றைப் பெற்றுள்ள இவர் சி.பா.ஆதித்தனாரின் இலக்கியப்  பரிசையும் வென்றுள்ளார் !

மறைவு:

சிறந்த தமிழறிஞராகவும், ஆளுமை மிக்கத் துணைவேந்தராகவும் இலங்கி, தமிழ் கூறும் நல்லுலகிற்கு மதிப்பு மிக்க நூல்களையும் காணிக்கையாக அளித்துள்ள கடலங்குடி பழநியப்பன் அறவாணன் அவர்கள் 2018 –ஆம் ஆண்டு, திசம்பர்த் திங்கள் 23 –ஆம் நாள் தமிழன்னையின் மலரடிகளில் அடைக்கலமானார். அவரது பூதவுடல் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், புகழுடல் தமிழர் நெஞ்சங்களை விட்டு என்றும் மறையாது !

முடிவுரை:

19 –ஆம் நூற்றாண்டும், 20 –ஆம் நூற்றாண்டும் ஆற்றல் மிக்கத் தமிழறிஞர்கள் நூற்றுக் கணக்கானோரை உருவாக்கித் தமிழகத்திற்கு அளித்திருந்தது. அவர்கள் அனைவருமே கோபுர விளக்குகளாகத் திகழ்ந்து வந்தார்கள். இந்த விளக்குகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அணைந்து  விட்டன. அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப இக்காலத் தமிழறிஞர்களுக்குச் சற்றும்  மனமில்லை. பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் தங்கள் கடமை முடிந்து விட்டது என்று சாய்வு நாற்காலியில் ஓய்வெடுத்து வருகிறர்கள். தமிழன்னையின் துன்பக் கண்ணீரைத் துடைக்க முன்வருவார் யாருமில்லை !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2051, சுறவம் (தை),29]
{12-02-2020}

-----------------------------------------------------------------------------------------------------------
            
 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------











வரலாறு பேசுகிறது (26) கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர் !


கரந்தை உமாமகேசுவரன் பிள்ளை


தோற்றம்:

தஞ்சை நகரின் ஒரு பகுதியாகத் திகழும் கருந்திட்டைக்குடி என்னும் கரந்தையில் 1883 –ஆம் ஆண்டு மே மாதம் 7 –ஆம் நாள்  உமாமகேசுவரன் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் வேம்புப் பிள்ளை. தாயார் காமாட்சி அம்மையார் ! இவர் தனது 12 –ஆம் அகவையில் தாய், தந்தை இருவரையுமே இழந்து சிற்றன்னை பெரிய நாயகத்தம்மையார் அரவணைப்பில் வளர்ந்து வந்தார் !

கல்வி:

தனது தொடக்கக் கல்வியைக் கரந்தையிலும், உயர்கல்வியைத் தஞ்சையிலும் பெற்ற உமாமகேசுவரன், தஞ்சை தூய பேதுரு கல்லூரியில் கலையியல் வாலைப் படிப்பை (B.A) நிறைவு செய்து பட்டம் பெற்றார். பின்னர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் (CLERK) பணியில் சேர்ந்தார்.  சில காலம் சென்றபின் சென்னை, சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்று சட்டவியல் வாலைப் பட்டம் (B.L) பெற்றார் !

வழக்குரைஞர்:

சட்டவியல் பட்டம் பெற்ற பின் தஞ்சை, கே.சீனிவாசம் பிள்ளை என்னும் புகழ் பெற்ற வழக்குரைஞரிடம் இளநிலை வழக்குரைஞராகச் சேர்ந்து (JUNIOR ADVOCATE)  பயிற்சி பெறலானார். சில ஆண்டுகளில் தனித்து, தொழில் செய்யத் தொடங்கினார். தஞ்சை மாவட்டம் முழுவதும் இவர் பெயர் பரவும் அளவுக்குப் புகழ் பெற்ற வழக்குரைஞராகத் திகழலானார் ! ஏழைகளிடம் பணம் பெறாமல் வழக்கு நடத்தி வெற்றி தேடித் தந்தார். இவரது திறமையைப் பார்த்து, அன்றைய அரசு இவரைக் கூடுதல் அரசு வழக்குரைஞராகஅமர்வு செய்து பெருமைப்படுத்தியது !

திருமணம்:

1903 ஆம் ஆண்டு, இவர் தனது 25 –ஆம் அகவையில் உலகநாயகி என்னும் அம்மையாரை மணந்து கொண்டார். இவ்விணையருக்கு பஞ்சாபாகேசன், மாணிக்கவாசகம், சிங்காரவேலு என்னும் ஆண்மக்கள் மூவர் பிறந்தனர் ! மூன்றாவது பிள்ளை பிறந்த பின்பு உலகநாயகி அம்மையார் காலமானார் !

குமுகாயப் பணி:

தஞ்சை வட்டக் கழகத்தின் தலைவராக (TALUK BOARD PRESIDENT) இவர் 1920 –ஆம் ஆண்டு பொறுப்பேற்று, பல ஊர்களுக்குச் சாலை வசதிகளை ஏற்படுத்தினார்., ஆற்றைக் கடந்து செல்லப் பாலங்கள் கட்டித் தந்தார். பல  ஊர்களில் பள்ளிக் கூட வசதிகளை ஏற்படுத்தினார். கூட்டுறவு நிலவள வங்கி ஒன்றையும், கூட்டுறவு அச்சகம் ஒன்றையும் 1926-27 ஆம் ஆண்டுகளில் ஏற்படுத்தினார் !

தமிழ்ச் சங்கம்:

1911 –ஆம் ஆண்டு மே மாதம் 14 –ஆம் நாள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவி அதன் தலைவராகப் பொறுப்பேற்றார். இன்று ஆயிரக் கணக்கான நூல்களைப் பெற்று விளங்கும் கரந்தைத் தமிழ்ச் சங்க நூல் நிலையம் அவர் முயற்சியால் உருவான அறிவுக் கருவூலம் ஆகும். அன்றே தொழிற்கல்வியின் தேவையை உணர்ந்த உமாமகேசுவரனார், தமிழ்ச் சங்கம் சார்பில், 6-10-1916 அன்று செந்தமிழ்க் கைத் தொழிற் கல்லூரியைத் தொடங்கினார்.  சங்கத்தின் சார்பில் 1928-29 ஆம் ஆண்டுகளில் கட்டணமில்லா மருத்துவமனை தொடங்கப்பட்டது. கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற நான்காவது ஆண்டிலேயேதமிழ்ப் பொழில்என்னும் திங்களிதழ் தொடங்கி நடத்தப்பட்டு வந்தது. தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பல அரிய தமிழ் நூல்கள் பதிப்பித்து வெளியிடப்பட்டன !

தமிழ்ப் பொழில் திங்களிதழ்:

மதுரைத் தமிழ்ச் சாங்கம் சார்பில்செந்தமிழ் என்னும் திங்களிதழும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சார்பில் செந்தமிழ்ச் செல்வி என்னும் திங்களிதழும் நடத்தப் பெற்று வந்த  நிலையில், கரந்தைத் தமிழ்ச் சங்கம் சார்பில்தமிழ்ப் பொழில் திங்களிதழும் தொடங்கப் பெற்றிருந்தது. இவ்விதழைச் செம்மையாக நடத்திட, உமாமகேசுவரனார் சிறப்பு முயற்சிகளை  எடுத்துக் கொண்டார் !
தமிழ்ப்பொழில் இதழின் அட்டைப்படம், உள்ளடக்கம் இவ்விரண்டும் மிகச் சிறப்பாக உமா மகேசுவரனார் அவர்களால் உருவாக்கப்பட்டது. தூய தமிழ்ச் சொற்களை அவ்விதழில் பயன்படுத்தினார். இதழாசிரியர் என்பதை  "பொழிற்றொண்டர்" என்றும், தனியிதழ் "மலர்" என்றும், பன்னிரு மலர்கள் கொண்ட ஓராண்டுத் தொகுப்பை "துணர்"  (பூங்கொத்து) என்றும், உறுப்பினர் கட்டணம் என்பதை கையொப்பத் தொகை என்றும், விலாசம் என்பதை உறையுள் என்றும் ஆங்கிலத்தில் வி.பி.பி. என்பதை விலை கொளும் அஞ்சல்என்றும் அச்சிட்டு வெளியிட்டார் !
அந்த இதழில் தமிழறிஞர் சதாசிவ பண்டாரத் தாருக்கு ஊக்கமளிக்கும் வகையில் அவர் எழுதிய  தமிழ் மன்னர்கள் வரலாறு மற்றும் தமிழ் கல்வெட்டுச் சான்று குறித்து கட்டுரைகள் பலவற்றையும் வெளியிட்டார் !
தமிழ்த் தொண்டுகள்:

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக உமாமகேசுவரனார் பொறுப்பேற்ற பின் அவர் பல பணிகளை நிறைவேற்றியிருக்கிறார். அவற்றுள் ஒரு சில வருமாறு:-

(01) நீராருங் கடலுடுத்த என்னும் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் பாடலைத் தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிமுகப் படுத்தினார்.
(02) வடமொழி மட்டுமே கற்பிக்கப் பட்டு வந்த திருவையாற்றுக் கல்லூரியில் தமிழையும் கற்பிக்கச் செய்து, கல்லூரியின் பெயரையும் அரசர் கல்லூரி என மாற்றச் செய்தார்.
(03) தமிழ் மொழியினைச் செம்மொழியாக (CLASSICAL LANGUAGE) அறிவிக்க வேண்டும் என்று 1919 –ஆம் ஆண்டிலேயே கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.
(04) தமிழுக்குத் தனியாக ஒரு பல்கலைக் கழகம் வேண்டும் என்று 1922 –ஆம் ஆண்டில் தமிழ்ச் சங்கத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
(05) சென்னை அரசு, பள்ளிகளில் இந்தியைச் சொல்லித் தரவேண்டும் என்று 1937 –ஆம் ஆண்டில் உத்தரவிட்டபோது அதை ஏற்க மறுத்து, தமிழ்ச் சங்கத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதோடு, களத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினார்.
(06) ஸ்ரீமான், ஸ்ரீமதி என்னும் வடசொற்களுக்கு மாற்றாகத் திருமகன், திருவாட்டி என்னும் சொற்களை அறிமுகப்படுத்திப் பரப்புரை செய்தார்.
(07) யாழ்நூல், நக்கீரர், கபிலர், தொல்காப்பியம் போன்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.

அரசியல் பணி:

நீதிக் கட்சியில் (JUSTICE PARTY) இணைந்து, தஞ்சை மாட்டம் முழுதும், கட்சிப் பணி ஆற்றினார். ஏழை எளிய மக்களுக்காக பள்ளிகளைத் தொடங்கச் செய்தார். ஊர்ப்புற மேம்பாட்டுக்காக, அரசின் மூலம் பல திட்டங்களை நிறைவேற்றச் செய்தார் ! காந்தியடிகள் தஞ்சை வந்தபோதுஉக்கடை மாளிகைஎன்னும் வளமனையில் தங்கியிருந்தார். அவரை உமாமகேசுவரனார் சந்தித்து பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாதோருக்கு இழைத்து வரும் தீங்குகள் குறித்து விரிவாகச் சொல்லி முறையிட்டார் !

தமிழவேள்:

கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் வெள்ளி விழா 15-4-1938 அன்று நடைபெற்றது. இந்த விழாவின் போது தான் உமா மகேசுவரனாருக்கு 'தமிழ வேள்' என்னும் பட்டத்தை நாவலர் சோமசுந்தர பாரதியார் வழங்கினார். அது முதல் 'தமிழவேள்' உமா மகேசு வரனார் என்றே அனைவரும் அன்போடு அழைக்கத் தொடங்கினர் !
மறைவு:
கல்கத்தாவில் இரவீந்திரநாத் தாகூர் நடத்திவரும் சாந்தி நிகேதனைப் போல் கரந்தை தமிழ்ச்சங்கம் மாற வேண்டுமென்று உமா மகேசுவரனார் விரும்பினார். அதனைப் பார்வையிட்டுக் கல்கத்தாவை விட்டு திரும்புகையில் உடல்நலம் குன்றியே காணப்பட்டார். பிறகு அயோத்தி நகர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் 9.5.1941 அன்று உமாமகேசுவரனார் தமது 58 –ஆம் அகவையில் இவ்வுலக வாழ்வை நீத்துப் புகழுடம்பு எய்தினார் !
முடிவுரை:
மதுரை நகரில் நான்காம் தமிழ்ச் சங்கத்தினை 1901 –ஆம் ஆண்டு  உருவாக்கினார், பாண்டித்துரைத் தேவர். கரந்தை  நகரில் 5 –ஆம் தமிழ்ச் சங்கத்தை 1911 -ஆம் ஆண்டு உருவாக்கினார் உமா மகேசுவரன் பிள்ளை, தன் தமையனார் இராதாகிருட்டிண பிள்ளையுடன் சேர்ந்து ! இந்தத் தமிழ்ச் சங்கக் கல்லூரி பின்னாளில் ஔவை துரைசாமியார், வெள்ளை வாரணனார் போன்ற பல தமிழறிஞர்களை உருவாக்கிய கல்விக் கோயிலாகத் திகழ்ந்தது என்பது வரலாற்று உண்மை !

------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2051, சுறவம் (தை),28]
{11-02-2020}

------------------------------------------------------------------------------------------------------------
             தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------