name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கீழ்க்கணக்கு
கீழ்க்கணக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கீழ்க்கணக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 02, 2019

கீழ்க்கணக்கு (18) கைந்நிலை !

குறிஞ்சிமுல்லைமருதம்நெய்தல்பாலை என்னும் ஐந்திணைகளின் ஒழுகலாறு பற்றியதே இந்நூல் !



கைஎன்பது இங்கே ஒழுக்கம் என்று பொருள்படும். எனவே கைந்நிலைஎன்பதற்கு ஒழுகலாறு பற்றியது என்று பொருள் சொல்லலாம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைகளின் ஒழுகலாறு பற்றியதே இந்நூல். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன !

இந்நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் வரிசை முறையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. திணைமொழி ஐம்பது என்னும் நூலும் இவ் வரிசை முறையிலே அமைந்திருத்தல் கருத்திற் கொள்ளத் தக்கது. இந் நூற் செய்யுள்களில் பாலைத் திணை மற்றும் முல்லைத் திணைப் பாடல்களில் சிதைவுகள்  மிகுதியாகக் காணப்படுகின்றன !

குறிஞ்சித் திணையில் இரண்டு பாடல்களிலும் மருதம் திணையில் ஒரு பாடலிலும் சிறு சிதைவு காணப்படுகிறது. மொத்தத்தில் 18 பாடல்கள் முழுமையாக இல்லாமல் சிதைவு பட்டுள்ளன. எவ்வகையான சிதைவுமில்லாமல் முழுமையாகக் கிடைத்திருப்பவை இறுதியில் உள்ள நெய்தல் திணைப் பாடல்களே !

இந்நூலைப் படைத்தவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்பவர். மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். இவரது தந்தையார் காவிதியார் எனப்படுதலின், அரசனால்காவிதிஎன்னும் சிறப்புப்பெயர் அளிக்கப் பெற்றவர் எனத் தெரிகிறது. இவர் கொற்கையை அடுத்த முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்தவர் என்பது இவரது பெயர் உணர்த்தும் கருத்தாகும் !

தமிழகத்தில் வடமொழியின் மேலாண்மை முனைப்பாக இருந்த காலமான கி.பி.ஏழாம் நூற்றாண்டில் இந்நூல் தோன்றியிருத்தல்கூடும் என்பது ஆய்வாளர்கள் கருத்து ! இந்நூலில் பாசம், ஆசை, இரசம், கேசம், இடபம் முதலிய வடசொற்கள் இடம்பெற்றுள்ளமை இதை உறுதிப்படுத்துகிறது !

காதல் வாழ்வில் ஐந்து நிலைகள் உள்ளன. அவை (01) தலைவனும் தலைவியும் கூடல்; இது குறிஞ்சித் திணைக்குரிய ஒழுக்கம் (02) பொருள் ஈட்டிவரும் பொருட்டுத் தலைவன் பிரிதல்; இது பாலைத் திணைக்குரிய ஒழுக்கம் (02) பொருள் ஈட்டிய பின் தலைவன் இல்லம் திரும்பித் தலைவியுடன் இருத்தல்; இது முல்லைத் திணைக்குரிய ஒழுக்கம். (04) தலைவனும் தலைவியும் சேர்ந்து வாழ்கையில், தலைவி ஊடல் கொள்ளுதல்; இது மருதத் திணைக்குரிய ஒழுக்கம் (05) ஊடல் கொண்ட தலைவி தலைவனை நினைத்து இரங்குதல்; இது நெய்தல் திணைக்குரிய ஒழுக்கம் !

இந்த ஐந்து நிலைகளை எடுத்துரைக்கும் பாடலே இந்நூலான கைந்நிலையில் இடம் பெற்றுள்ளவை !

இந்நூலில் குறிஞ்சித் திணையில் வரும் ஒரு பாடல் காட்சி ! தலைவி தோழியுடன் உரையாடுகிறாள் !

அடி என் அருமைத் தோழி ! அதோ பார் ! தினைக் கதிரைக் கொய்து செல்வதற்காகக் கிளிகள் தினைப் பயிரின் தாள்களைத் தன் கால்விரல்களால் பற்றிக் கொண்டு ஏறுகின்றன ! இந்தக் கிளிகளைத் தினைப் புனத்தை விட்டு விரட்டுவதற்கு வசதியாக  வயலின் நடுவில் பரண்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன ! அங்கே புல் மேய்வதற்காக அழகிய மான் குட்டிகள் நிரம்ப வருகின்றன

இத்தகைய எழிலார்ந்த தினைப் புனங்களையும் மலைச் சாரலையும், குறுங் காடுகளையும் உள்ளடக்கிய நாட்டுக்கு உரியவனான என் தலைவன் என் உள்ளத்தில் கலந்துவிட்டான் ! தன் இல்லம் சென்று வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்ற அவன் ஏன் இன்னும் திரும்பி வரவில்லை ? தலைவன் என்னைக் காண இன்னும் வராமையால், என் உள்ளம் பதறுகிறது

என் உடல் தளர்ச்சியுற்று, பசலை நிறமாகக் காட்சியளிக்கிறது ! என் வனப்பு சீர்குலைந்து விட்டது !  பாரடி ! என் தோழி ! அவர் எப்போது வருவார் ?

பாடல் இதோ !

----------------------------------------------------------------------------------

நுகர்தல்  இவரும்  கிளிகடி  ஏனல்
நிகரில்  மடமான்  எரியும் அமர்சாரல்
கானக நாடன்  கலந்தான்  இவனென்று
மேனி  சிதையும்  பசந்து !

---------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-------------------------------------

ஏனல் = தினைக்கதிர்கள்; நுகர்தல் = கொய்து உண்பதற்காக; இவரும் = பயிரின் தாள்களைத்  தன் கால்களால் பற்றிக் கொண்டு ஏறும்;  கிளி = கிளிக் கூட்டத்தை; கடி = ஒலி எழுப்பி விரட்டுதல்; நிகரில் = நிகரற்ற அழகுடைய; மடமான் = இளம் மான்கள்; எரியும் = திரிகின்ற; அமர் சாரல் = உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் எழிலார்ந்த மலைச்சாரல்; கானகம் = குறுங்காடு; நாடன் = நாட்டுக்கு உரிய தலைவன்; கலந்தான் = என் உள்ளத்தில் கலந்து நிற்கிறான்; இவனென்று = இவன் எப்பொழுது திரும்பி வருவான்; மேனி = என் உடல்; பசலை = பசலை நிறம் படர்ந்து; சிதையும் = அழகு குன்றும்.

---------------------------------------------------------------------------------------------------------

பொருள், புரிந்து கொள்வதற்குக் கடினமான நடைதான் ! எனினும்  அகரமுதலியின் உதவியுடன் பாடலின் பொருள் புரிந்து, உணர்ந்து படித்தால், மனதிற்கு நிறைந்த இன்பம் பயக்கும் என்பது திண்ணம் !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,கன்னி(புரட்டாசி),02]
19-09-2019}
------------------------------------------------------------------------------------------------------------
               ”தமிழ்ப்பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------

கீழ்க்கணக்கு (17) ஏலாதி !

ஒவ்வொரு பாடலும் ஆறு பொருள்களை உள்ளடக்கி உள்ளன; இவை  உயிருக்கு உறுதுணையான அறநெறிகளை எடுத்துரைக்கின்றன !


ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒருவகைச் சூரணம்ஏலாதி என மருத்துவ நூல்களில் கூறப்படுகிறது. ஏலக்காய் ஒரு பங்கு, இலவங்கப் பட்டை இரு பங்கு, சிறு நாவற் பூ மூன்று பங்கு, மிளகு நான்கு பங்கு, திப்பிலி ஐந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு என்ற அளவுப்படி சேர்த்து இம் மருந்தை ஆக்குவர்.  ஏலாதி நூலும் ஒவ்வொரு பாடலிலும் ஆறு பொருள்களைப் பெற்று, உயிருக்கு உறுதுணையான அறநெறியை விளக்கி உரைக்கும் ஒப்புமைத் தன்மையால் இப் பெயரைப் பெற்றுள்ளது !

மருத்துவப் பெயர் பெற்ற கீழ்க் கணக்கு நூல்கள் மூன்று. அவை (01) திரிகடுகம் (02) சிறுபஞ்சமூலம் (03) ஏலாதி, என்பன ! இவற்றுள் ஏலாதி சிறுபஞ்சமூலத்தோடு  பெரிதும் ஒற்றுமை உடையது. சிறுபஞ்ச மூலம் ஐந்து பொருள்களை உரைக்க, இது ஆறு பொருள்களைச் சுட்டுகிறது. மேலும் சிறுபஞ்சமூலத்தின் கருத்துச் சொற் பொருள்களை இந் நூல் பல இடங்களில் அடியொற்றி உள்ளது !

இரு நூல்களின் ஆசிரியர்களும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். இருவரும் மாக்காயனார் என்பவரிடம் தமிழ் கற்றவர்களே ! இன்னூல் கி.பி. 4 – ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்பது ஆய்வாளர்களின் கருத்து ! வடமொழிச் சொற்கள் சிறுபஞ்சமூலத்தைப் போன்றே இந் நூலிலும் சற்று மிகுதியே !

இந் நூலின் ஆசிரியர் கணிமேதாவியார். நூலின் முதற்கண் அருகக் கடவுளுக்கு இவர் வாழ்த்துக் கூறியுள்ளமையாலும், நூலுள் சமண சமயத்தின் சிறப்பு அறங்கள் சுட்டப் பெறுதலினாலும், இவரைச் சைன சமயத்தவர் என்று அறிஞர்கள் கூறுவர். இந்நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக எண்பது பாடல்கள் உள்ளன !

மகளிருக்கு அழகு தருவது சிற்றிடை எனப் பலரும் கூறுவர். ஆனால் கணிமேதாவியார் கருத்து  வேறு வகையாக உள்ளது. துடியிடை என்பது ஒரு அழகே அன்று ! மூங்கில் போன்ற தோள்களும் அழகைத் தந்துவிடாது ! அன்னம் போன்ற நடையும் அழகை அளிக்காது ! சங்கு போன்ற வெண் கழுத்தும் வனப்பைத் தருவதில்லை !

காற்றில் அசையும் கொடி போன்ற தோற்றமும் பிற ஈடிணையற்ற உடலமைப்பும் அழகைத் தராது ! பெண்களுக்கே உரிய நாணம் முகத்தில் படர்கையில் வனப்பு தோன்றுவதாகச் சொல்லப்படுவதுண்டு; அதுவும்கூட அழகைத் தராது ! பிறகு எதுதான் வனப்பு ! எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று சொல்லப்படும் கல்வி தான் பெண்களுக்கு உண்மையான அழகைத் தருகிறது !

உயர்ந்த கருத்துகளை எடுத்துரைக்கும் கணிமேதாவியாரின் ஏலாதிப் பாடலைப் பாருங்கள் !

------------------------------------------------------------------------------------------

இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில்  வனப்பும்,
நடைவனப்பும்,  நாணின்  வனப்பும்புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல; எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு !

-------------------------------------------------------------------------------------------

இன்னொரு பாடலின் கருத்தைப் பாருங்கள் ! நடப்பதற்குக் கால்கள் இல்லாத முடவர்கள், இந்த அழகான உலகத்தைக் கண்டு களிக்கும் பேறு பெறமுடியாத கண்ணிழந்த  குருடர்கள், தனது உணர்வுகளை எடுத்து உரைக்க முடியாத ஊமையர்கள், தமக்குத் துணையாக யாருமே இல்லாத ஏதிலிகள், கல்வியறிவு பெறமுடியாத ஏழை எளியவர்கள் முதலிய இன்னலுக்கு ஆட்பட்டிருக்கும் எவ்வமுடையோருக்கு வயிறார உணவளித்து மகிழும் வள்ளன்மை உடையோரை வானுறையும் தெய்வங்கள் எல்லாம் வாழ்த்தி மகிழ்வர் ! இதோ பாடலைப் பாருங்கள் !

-------------------------------------------------------------------------------------------------

காலில்லார்  கண்ணில்லார்  நாவில்லார்  யாரையும்
பாலில்லார்  பற்றிய  நூலில்லார்  -  சாலவும்
ஆழப்  படுமூண்  அமைத்தார்  இமையவரால்
வீழப்  படுவார் விரைந்து !

------------------------------------------------------------------------------------------------

எண்பது பாடல்களும் கற்கண்டுத் துண்டங்கள் ! வாய்ப்பைத் தேடிப் பெற்று இந்நூலைப் படித்து மகிழுங்கள் !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050:கன்னி (புரட்டாசி),01]
{18-09-2019}

-----------------------------------------------------------------------------------------------------------
      ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------

கீழ்க்கணக்கு (16) முதுமொழிக் காஞ்சி !

பல மணிகள் கோத்த காஞ்சி அணி போல முது மொழிகள் பலகோத்த நூல் முதுமொழிக் காஞ்சி !



முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற் பொருளோடு தொடர்புடையது ! மூதுரை, முதுசொல் என்பனவும் இப்பொருள் தருவன. பொதுவாக, “காஞ்சிஎன்பது பல்வேறு நிலையாமைகளைக் குறிக்கும் ஒரு துறை !. அஃதன்றி மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும் குறிக்கும். உலகியல் உண்மைகளைத் தெள்ளத் தெளிந்த புலவர் பெருமகனார் மதுரைக் கூடலூர் கிழார் எடுத்து இயம்புவதே இம் முதுமொழிக் காஞ்சி !

பல மணிகள் கோத்த காஞ்சி அணி போல முதுமொழிகள் பலகோத்த நூல் முதுமொழிக் காஞ்சி எனப் பெயர் பெற்றது என்றும் சொல்கின்றனர் ! எனவே இந்நூலை ஒரு அறிவுரைக் கோவை என்றே சொல்லலாம் ! இந்நூல் கி.பி. 4 – ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது அறிஞர்கள் கருத்து !

பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் இதுவும் ஒன்று. இந் நூலை ஆக்கியவர் மதுரைக் கூடலூர் கிழார் ! கூடலூர் இவர் பிறந்த ஊராயும், மதுரை பின்பு புகுந்து வாழ்ந்த  ஊராயும் இருத்தல் கூடும். கிழார் என்னும் குறிப்பு, இவர் வேளாண் மரபினர் என்பதை உணர்த்துகிறது !

இந் நூலுள் பத்துப் பத்துக்களும், ஒவ்வொரு பத்திலும் பத்து முதுமொழிகளும் உள்ளன.  ஒவ்வொரு செய்யுளும்ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்....” என்றே தொடங்குவதால் இந்நூல் குறள் வெண் செந்துறை என்னும் வகையைச் சார்ந்தது ஆகும் !

எல்லா அடிகளிலும் பயின்று வரும் சொற் குறிப்பைக் கொண்டு ஒவ்வொன்றும் சிறந்த பத்து”, ”அறிவு பத்து”, ”பழியாப் பத்து”, ”துவ்வாப் பத்து”, ”அல்ல பத்து”, ”இல்லைப் பத்து”, ”பொய்ப் பத்து”, ”எளிய பத்து”, ”நல்கூர்ந்த பத்து”, ”தண்டாப் பத்துஎன்று பெயர் பெற்றுள்ளது !

எது சிறந்தது என்பதைச் சிறந்த பத்துபகுதியில் புலவர் எவ்வாறு எடுத்துரைக்கின்றார் பாருங்கள் !

ஓயாது  ஆரவாரித்து ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும் கடல்கள் சூழ்ந்த இந்த உலகத்தில்,

(01)   ஒரு மனிதன் நிறைந்த கல்வி பெறுவதை விடச்  சிறந்தது  உயர்ந்த ஒழுக்கம் உடைமை !

(02)   கற்றறிந்த அறிஞர்கள் நம்மீது அன்பு செலுத்துவதை விடச் சிறந்தது அவர்கள்  நம் அறிவுடைமையைப் பார்த்து அச்சப்படுதல் !

(03)   கல்வியிற் துறைபோகிய மேதை என்று பிறரால் புகழப்படுவதை விடச் சிறந்தது, கற்றதை மறவாது ஒழுகல் !

(04)   வாரிக் கொடுக்கும் வள்ளல் என்று பெயர் எடுப்பதை விடச் சிறந்தது உண்மை பேசும் உயர்ந்த மனிதனாகத் திகழ்தல் !

(05)   என்றும் இளமைத் தோற்றத்துடன் இருக்க விரும்புவதை விடச் சிறந்தது நோயற்ற உடலுடன் வாழ்தல் !

(06)   அழகாக இருப்பதை விடச் சிறந்தது பழிக்கு இடம் தரலாகாது என்று   அஞ்சும் நாணம் உடைமை !

(07)   நல்ல குலத்திற் பிறந்தவளாக இருப்பதைவிடச் சிறந்தது கற்பிற் சிறந்த காரிகையாக விளங்குதல் !

(08)   கல்வி கற்பதை விடச் சிறந்தது கற்றறிந்த சான்றோரைப் பணிகின்ற    பண்பு  உடையவனாகத் திகழ்தல் !

(09)   பகைவரை வலிமை இழக்கச் செய்து வெல்ல நினைப்பதை விடச் சிறந்தது தன்னை வலிமைப் படுத்திக் கொள்ளல் !

(10)   இளமைக் காலத்தில் செல்வத்தை மேலும் மேலும் ஈட்டிப் பெருகச்  செய்தலை விடச் சிறந்தது இருக்கின்ற செல்வத்தை முதுமைக் காலத்தில் வற்றிப் போகாமல் பாதுகாத்தல் !


---------------------------------------------------------------------------------------------------------

இதோ அந்தப் பாடல் வரிகள் !

--------------------------------------------------------------------------------------------

ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்,
ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை !
காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல் !
மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை !
வண்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை !
இளமையிற் சிறந்தன்று மெய்பிணி இன்மை !
நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று !
குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று !
கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று !
செற்றாரைச் செறுத்தலின் தற்செய்கை சிறந்தன்று !
முற்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று !

----------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
---------------------------------------------------------------------------------------------- 

ஆர்கலி = ஆரவாரித்து ஒலிக்கின்ற கடல்; சிறந்தன்று = சிறந்தது; கண்ணஞ்சல் = அஞ்சுதல்; வண்மை = கொடைத் தன்மை; நலன் = அழகு; நாணு = நாணம்; செற்றாரை = பகைவரை; செறுத்தலின் = வெல்லுதல்; தற்செய்கை = தன்னை வலிமைப் படுத்திக் கொள்ளல்

---------------------------------------------------------------------------------------------------------

பத்து முதுமொழிகள்  கொண்ட ஒரு பாடல் தான்  இங்கு விளக்கப் பட்டுள்ளது. இன்னும் தொண்ணூறு முது மொழிகள் கொண்ட ஒன்பது பாடல்கள் உள்ளன. கருத்தாழம் மிக்க முதுமொழிக் காஞ்சியை, எப்படியாகிலும் தேடிப் பிடித்துப் படித்துப் பயனடையுங்கள் !

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2050,கன்னி(புரட்டாசி),05]
{22-09-2019}
---------------------------------------------------------------------------------------------------------
      ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------

கீழ்க்கணக்கு (15) சிறுபஞ்சமூலம் !

நான்கு வரிகளில் ஐந்து பொருள்களை வைத்துப் பாடப்பெற்ற நூல் !

                                   

பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றான சிறுபஞ்சமூலம், நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. ”சிறுபஞ்சமூலம்என்னும் தொடர், ஐந்து சிறிய மூலிகை வேர்கள் என்று பொருள்படும். அவை (01) சிறு வழுதுணை வேர் (02) சிறு நெருஞ்சி வேர் (03) சிறு மல்லி வேர் (04) பெருமல்லி வேர் (05) கண்டங்கத்தரி வேர் என்பனவாம் !

சிறுபஞ்சமூலமாகிய மூலிகை மருந்து வேர்கள், நமது உடல் நலத்தைப் பேணுவதைப் போல, இந்நூலில் வரும் பாடல்கள் ஒவ்வொன்றிலும் குறிப்பிட்டுள்ள அவ்வைந்து கருத்துகளும் நமது உயிர் நலம் பேணுவன ஆகும் ! இவ்வொப்புமை கருதியே, இந்நூல்சிறுபஞ்சமூலம்என வழங்கப்பெறுகிறது !

இந்நூலை இயற்றியவர் காரியாசான் என்பவர். இவர் அருகக் கடவுளை வழிபடும் சைன சமயத்தவர் என்பது, இந்நூலின்கண் அமைந்துள்ள சில பாடல்களின் கருத்துகள் மூலம் புலனாகிறது !

நான்கு வரிகளில் ஐந்து பொருள்களை அமைத்து பாடும் இவரது திறம் வியத்தற்குரியது ! திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை முதலிய முந்து நூல்களில் பொதிந்துள்ள கருத்துகளில் பலவற்றை இந்நூலின்கண் காணலாம் !

சிலந்திப் பூச்சியின் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிப்பட்டவுடன், அந்தக் குஞ்சுகள் எல்லாம் சேர்ந்து தாய்ப் பூச்சியைக் கடித்துத் தின்றுவிடுமாம். இங்கு சிலந்தியின் உயிருக்கு அதன் முட்டையே கூற்றமாக அமைகிறது !

கலைமான், கடமான், காட்டெருமை போன்ற விலங்குகளின் நீண்டு வளர்ந்த கொம்புகள் கானகத்தில் புதர்களிடையே சிக்கிக் கொள்வதால், அல்லது மரக் கொம்புகளிடையே மாட்டிக் கொள்வதால், அதிலிருந்து விடுபட முடியாமல், அந்த விலங்குகள் பட்டினி கிடந்தோ அல்லது புலி, சிறுத்தை போன்ற கொன்றுண்ணிகளால் தாக்கப்பட்டோ உயிரைவிட நேர்கிறது; இங்கு அந்த விலங்குகளின் நீண்ட கொம்புகளே அவற்றுக்குக் கூற்றம் ஆகிறது !

கவரி மான் தன் வாலில் உள்ள முடிகளை இழந்து விட்டால், அது உயிர் வாழாது; இங்கு, அதன் வால் முடியே அதற்குக் கூற்றம் ஆகிறது ! நீரில் வாழும் நண்டு, குஞ்சுகளை ஈன்றவுடன், அந்தக் குஞ்சுகளுக்கே இரையாகிப் போகுமாம்; இங்கு நண்டுக்கு அதன் குஞ்சுகளே கூற்றமாகிப் போகிறது !

ஒரு மனிதன், மற்றவர்களைப் பற்றி வறைமுறையின்றி வசை மொழிகளைக் கூறினால், அந்த வசைமொழிகள் அவன்மீது கடும் பகையையும் வெறுப்பையும் ஏற்படுத்தி, இறுதியில் அவன் உயிருக்கே தீங்காக முடிந்து விடுகிறது; இங்கு அவனது நாவே அவனுக்குக் கூற்றமாக அமைந்து விடுகிறது !

மேற்கண்ட ஐந்து கருத்துகளையும் வெளிப்படுத்தி, காரியாசான் வடித்துள்ள பாடலைப் பாருங்கள் !

-------------------------------------------------------------------------------------

சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்; நீள்கோடு
விலங்கிற்குக் கூற்றம்; மயிர்தான் வலம்படா
மாவிற்குக் கூற்றம்; ஞெண்டிற்குத் தன்பார்ப்பு;
நாவிற்கு நன்றல் வசை !

-------------------------------------------------------------------------------------

உலகியல் உண்மைகளை எத்துணை அழுத்தமாக, அழகிய எடுத்துக் காட்டுகளுடன் பாடலாக வடித்துத் தந்துள்ளார் காரியாசான் !

இன்னொரு பாடலில், இந்த மனித குலம் புறத் தோற்றத்திற்கு, புற அழகிற்கு அதிக முன்னுரிமை தந்து செயல்படுவதை இடித்துரைக்கின்றார். ” ! மாந்தர்களே ! சுருள் சுருளாகத் தலைமுடி அமைவது அழகு என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்; அகன்று பரந்த மார்புதான் மிகுந்த அழகு என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள்; கூர்மையாகச்  சீவி விடப்பட்டுச் சாயம் பூசிய நகங்கள், மிகுந்த அழகை தருகிறது என்று வீணாக ஆணவம் கொள்ளாதீர்கள்” !

அணிகலன்கள் பூணப்பட்ட காதுகள்தான் எத்துணை அழகு என்று கண்ணாடி முன் நின்று மதிமயக்கம் கொள்ளாதீர்கள்; முத்துக்களைப் போல வெண்மையாகத் திகழும் பச்சரிசிப் பற்கள் அழகோ அழகு என்று ஆரவாரம் செய்யாதீர்கள்; இவையெல்லாம் அழகே அல்ல ! உண்மையான அழகு எது தெரியுமா ? நீங்கள் உதிர்க்கின்ற சொற்களில் உண்மையும் நேர்மையும் இருக்கும் போது, அச்சொற்களால் ஏற்படுகின்ற அழகு இருக்கிறதே, அது தான் உண்மையான அழகு ! அதற்கு ஈடும் இணையும் இந்த உலகத்தில் ஏதுமே இல்லை” !!.

இதோ அந்தப் பாடல் ! பாடலைப் பாருங்கள் !

---------------------------------------------------------------------------------------

மயிர்வனப்பும், கண்கவரு மார்பின் வனப்பும்,
உகிர்வனப்பும், காதின் வனப்பும், செயிர்தீர்ந்த
பல்லின் வனப்பும், வனப்பல்ல; நூற்கியைந்த
சொல்லின் வனப்பே, வனப்பு !

---------------------------------------------------------------------------------------

அரும்பெரும் கருத்துகளை அழகிய பாடல்கள் மூலம் எடுத்துக் கூறும் சிறுபஞ்சமூலம் பாடல்கள் படிக்குந் தோறும் இன்பம் பயப்பன ! தேடிப் பிடித்தாவது படியுங்கள் ! படித்துச் சுவையுங்கள் !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை,வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மடங்கல்(ஆவணி),29]
{15-09-2019}

-----------------------------------------------------------------------------------------------------------
      ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------

கீழ்க்கணக்கு (14) பழமொழி நானூறு !

ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழியை வைத்துப் பாடியுள்ளார் முன்றுறை அரையனார் !



பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும். சங்கம் மருவிய காலமான கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு வாக்கிலான  தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று !

இது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள பழ மொழிகள் இலக்கியம் சார்ந்தவையாகும். சங்க காலத்தினைப் பற்றி இந்நூல் அதிக தகவல்களைத் தருகின்றது !

முன்றுரை அரையனார் சமண சமயத்தைச் சார்ந்த அரசராக இருக்கக் கூடும் என்பது அவர் பெயரில் உள்ள அரையர் என்னும் சொல் காட்டுகிறது என்பது சிலரது கருத்து ! அரையர் என்று பட்டப் பெயர் பெற்ற ஒரு குடியைச் சார்ந்தவராகவும் இருக்கலாம் என்பது சில ஆய்வாளர்களின் கருத்து !

ஆசிரியர், தாம் அவ்வப்போது ஆய்ந்து உணர்ந்த பொருள்களைப் பழமொழியோடு பொருத்திப் பாடி வந்திருக்க வேண்டும். இதனாலேயே, இந்நூற் பாடல்கள் எல்லாம் தனித் தனியே பொருள் முடிந்து நிற்கும் முத்தகச் செய்யுள்களாக அமைந்து தனித் தனிக்  கருத்தை வெளியிடுகின்றன !

இந்நூலில் பயின்று வரும் பழமொழிகளில் பல, எதுகை, மோனைகளுக்கு ஏற்ப மாறுதல்கள் பெற்றிருக்கின்றன. சிற்சில பழமொழிகள் இக்கால வழக்கிலில்லை. ஒருசில பழமொழிகளில் அமைந்துள்ள பழமொழிகளின் வடிவம் விளங்கவில்லை. எனினும் ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு பழமொழியைப் பாடலின் இறுதியில் வைத்துப் பாடியுள்ள வெண்பாக்கள் அத்துணையும் மெத்த ஒளிரும் முத்துகள் !

பாம்பின் கால் பாம்பு அறியும்என்று ஒரு பழமொழி தமிழ் மக்களிடையே புழக்கத்தில் உள்ளது. பாம்புக்குக் கால்கள் உண்டா, என்று ஐயம் எழுவது இயல்பே ! கால்கள் இல்லையேல் அவை எப்படி நடமாடுகின்றன, என்று வேறு சிலருக்கும் ஐயம் எழுவதும் இயற்கையே ! இதுபற்றி வேறொரு சமயத்தில் பார்க்கலாம் !

இந்நூலில் உள்ள ஒரு பாடலில் பாம்பறியும், பாம்பின கால்என்று ஒரு வரி வருகிறது. இதன் பொருள் என்ன ? பாம்பு காடுகளிலும் புதர்களிலும் ஊர்ந்து சென்று தனக்கான உணவைத் தேடுகிறது. உணவுக்காக நெடுந்தொலைவு அலைந்து திரியும் பாம்பு, பின்னர் தன் இருப்பிடத்தை எவ்வாறு அடைய முடிகிறது. அதற்குத் தன் இருப்பிடத்திற்குச் செல்ல எவ்வாறு வழி தெரிகிறது ?

அதுதான் பாம்பு இனத்திற்கே உரித்தான தனித் திறமை ! ( பாம்பின கால் = பாம்பினம் தன் உறைவிடம் திரும்பும் வழி ) எத்துணை தொலைவு சென்றாலும், தன் இருப்பிடத்திற்குத் திரும்பி வரும் வழியை  அறியும் திறன் பாம்புக்கு உண்டு ! அதற்கு எவ்வாறு வழி தெரிகிறது என்பதை நாம் உணர முடியாது ? பாம்பு சென்று வரும் வழியைப் பாம்பு மட்டுமே அறிய முடியும் !

அதுபோலவே, அறிவிற் சிறந்த பெருமக்களைக் காண்கையில் அவர்களைத் தன் கூர்த்த மதியினால் அடையாளம் கண்டுகொள்ளும் திறமை அறிவாளிகளுக்கு மட்டுமே  உண்டு; கூர்த்த மதியில்லாப் பொதுமக்களுக்கு இஃது இயலாது ! இதை விவரிக்கிறார் முன்றுரை அரையனார் ஒரு பாடலில் ! இதோ அந்தப் பாடல் !

-----------------------------------------------------------------------------

புலம்  மிக்கவரைப்  புலமை  தெளிதல்
புலம்  மிக்கவர்க்கே புலனாம்நலம்மிக்க
பூம்புனல் ஊர!பொது மக்கட்கு ஆகாதே !
பாம்பறியும் பாம்பின கால் !

----------------------------------------------------------------------------

அருஞ்சொற் பொருள்:
------------------------------------

பூம்புனல் ஊர = நீர் வளம் மிக்க ஊரில் வாழும் ஏ ! மனிதனே ! ; புலம் மிக்கவரை = அறிவிற் சிறந்த பெரியோரை;  புலமை தெளிதல் = காணும் நோக்கிலேயே இவர் அறிவாளி என்று கண்டு கொள்ளும் திறமை;  புலம் மிக்கவர்க்கே = இன்னொரு அறிவாளிக்கே; புலனாம் = இயலும் செயலாகும்; (எப்படியெனில்) பாம்பின கால் =  காடுகளில் சென்று பாம்புகள் வரும் வழியை; பாம்பறியும் = அப்பாம்புகளே அறியும், (வேறு யாருக்கும் அவ்வழி புலப்படாது.)

------------------------------------------------------------------------------------------------------------

இன்னொரு பாடலில்  இன்னொரு அரிய கருத்தை எடுத்துரைக்கிறார் முன்றுரை அரையனார். நுண்மாண் நுழைபுலம் மிக்க வியத்தகு திறமைகள் படைத்த ஒருவர் உங்கள் ஊரில் இருக்கிறார். அவர் மீது உங்கள் நண்பருக்குச்  சற்றுப் பொறாமை ! அவரது புகழ் ஊர் மக்களிடையே பரவாமல் மறைக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார் ! அதற்காக அவர் என்ன செய்தார் தெரியுமா ?

அவர் மீது நீர்ப்பாசி போன்ற பொல்லாத சொற்களைப் புனைந்துரைக்கிறார்.  பொல்லாத சொற்கள் அவரது புகழை மறைத்துவிடுமா என்ன ? ஒளி வெள்ளத்தைச் சீறிப் பாயச் செய்து வானில் உலா வரும் ஆதவனை ஒற்றை கையினால் மறைத்துவிட முயுமோ ? என்ன அரிய உவமை ! இதோ அந்தப் பாடல்:-

------------------------------------------------------------------------------------------------------------

பரந்த  திறலாரைப்   பாசிமேல்  இட்டுக்
கரந்து  மறைத்தலும்  ஆகுமோ ?   நிரந்தெழுந்து
வேயின்  திரண்டதோள்  வேற்கண்ணாய் ! விண்ணியங்கும்,
ஞாயிற்றைக்  கைம்மறைப்பார்  இல் !

-----------------------------------------------------------------------------------------------------------

இது போன்ற அருமையான பழமொழிகளை உள்ளடக்கி 400 வெண்பாக்களை நமக்கு அளித்திருக்கிறார் முன்றுரை அரையனார் ! அனைத்தும் கருத்துக் கருவூலங்கள் ! படித்து மகிழ்வோம் ! பயன் பெறுவோம் !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மடங்கல்(ஆவணி),29]
{15-09-2019}
----------------------------------------------------------------------------------------------------------
      ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவிவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------