பக்கங்கள்

ஞாயிறு, நவம்பர் 17, 2019

பல்வகை (19) ஆங்கில மொழியின்பால் அகத்தியமற்ற ஈர்ப்பு !

இஃது அக்கரைப் பச்சை போன்றதொரு  ஈர்ப்பு !


ஆங்கில மொழியின்பால் சிலருக்கு அளவு கடந்த ஈர்ப்பு இருப்பதைக் காண்கிறோம் ! ஆங்கிலத்தை முழுமையாக அறிந்து உள்வாங்கிக் கொண்டதால் ஏற்பட்ட ஈர்ப்பு என்று இதைச்  சொல்ல முடியுமா ? முடியாது !

ஒருவன்காச்சு மூச்சுஎன்று தப்பும் தவறுமாக ஆங்கிலத்தில் உளறிக் கொட்டினாலும், அதைச் செவி மடுக்கும் அரைகுறை ஆங்கில அறிவு பெற்ற இன்னொருவன், “ஆகா ! எத்துணை அழகாகத் தங்கு தடையின்றிப் பேசுகிறான்  என்று இனம் புரியாத ஒரு மயக்கத்தில் ஆழ்ந்து போகிறான் ! அதனால், ஆங்கிலத்தின் மீது  அவனுக்கு இயல்பாக ஓர் ஈர்ப்பு ஏற்படுகிறது ! காரணம் அயலிடம் சார்ந்த எதுவாயினும் அதற்கு ஈர்ப்பு அதிகம் என்பது உளவியல் சார்ந்த உண்மை !

அயல்நாட்டுக் கருவிகள் மீது ஈர்ப்பு ! அயல் நாட்டுத் துணிகள் மீது ஈர்ப்பு ! அயல்நாட்டு எழினிகள் (MOBILES) மீது ஈர்ப்பு ! அயல்நாட்டுச் செருப்பின் மீது ஈர்ப்பு ! ஏன் - அயல்நாட்டுத் துடைப்பத்தின் மீதும்  ஈர்ப்பு ! அதுபோல் அயல் நாட்டு மொழிகளின் மீதும் ஒரு ஈர்ப்பு ! இஃது அக்கரைப் பச்சை போன்றதொரு  ஈர்ப்பு !

ஆங்கிலத்தின் மீது ஈர்ப்புக் கொள்வோர், பெரும்பாலும் ஆங்கிலம் கற்காத ஆளிநரே (நபர்களே) ! ஆங்கிலம் முழுமையாகக் கற்ற  ஆளிநர் (நபர்கள்) என்று எவரும் நம்நாட்டில் இருக்க முடியாது ! ஏனெனில், ஆங்கிலம் எளிய மொழி போலத் தோன்றினாலும், கற்பதற்கு மிகவும் கடினமான மொழி ஆகும் !

ஆங்கிலத்திற்கு என்று ஒரு கட்டமைப்பு இல்லை ! ஆங்கில மொழிக்கென்று ஒரு அடித்தளம் இல்லை ! ஆங்கிலச் சொற்களில் பெருபாலானவற்றுக்கு வேர்களே (ROOT) இல்லை ! உலகத்தில் உள்ள எல்லா மொழிகளில் இருந்தும் கடன் வாங்கிய சொற்களின் கலவையே ஆங்கிலம் ! இதனால் ஆங்கிலத்தின் அடியையும் முடியையும் கண்டவர் இந்த உலகத்தில் எவருமே இலர் !

தமிழில்அம்மாஎன்று எழுதினால், அதைத் தமிழறிந்த அத்துணை பேரும்அம்மாஎன்று தான் ஒலிப்பார்கள் ! ஆங்கிலத்தில் அப்படி அன்று ! EDUCATION என்னும் ஆங்கிலச் சொல்லை ஒருவர்எஜுகேஷன்என்கிறார். இன்னொருவர்எடுகேஷன்என்கிறார். புதிதாக ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் ஒருவர்எடுகேடியான்என்கிறார். இவற்றுள் யார் சொல்வது சரி ? எந்த இலக்கணத்தை அடிப்படையாக வைத்து இதற்குத் தீர்ப்புச் சொல்வது ?

நாம்அயர்ன்” (IRON) என்பதை என் நாகர்கோயில் நண்பர் ஒருவர் ஐரன்என்றுதான் பலுக்குகிறார். மேனாள் ஆளுநர் மறைந்த கே.கே.சா அவர்கள் OPPORTUNITY என்பதைஅப்பார்ச்சூனிட்டிஎன்று தான் குறிப்பிட்டு வந்தார். ஆங்கிலத்தைப் பலுக்குவதில் (உச்சரிப்பதில்) வரைமுறை ஏதுமில்லை ! அவரவர் விருப்பம் போல் பலுக்கலாம் ! இத்தகைய கட்டுப்பாடு இன்மை தான் அம்மொழியைக் கற்றுக் கொள்வதில் பெரும் இடையூறாக உருவெடுத்து நிற்கிறது !

எந்த விதிகளின் அடைப்படையிலும்  அமையாமல், நூறாயிரக் கணக்கில் ஆங்கிலச் சொற்கள் இருக்கின்றன. பல சொற்களின் எழுத்துக் கட்டமைப்பு  ஒருவிதமாகவும், அவற்றின் ஒலிப்பு வேறு விதமாகவும் இருக்கிறது !

சைக்காலஜி (PSYCHOLOGY) என்னும் சொல்லை, அதன் எழுத்துக்களின் அடிப்படையில் பலுக்கினால்பிசிக்கோலோஜிஎன்று தான் ஒலிக்க முடியும் !   CACHE (காஷ்) , ENTREPRENEUR (ஆந்த்ரபிரனர்), PHARMACEUTICAL (பார்மாசூட்டிகல்), PNEUMONIA (நிமோனியா), PSEUDONYM (சுடோநிம்), METEOROLOGY (மெட்ரியாலஜி), போன்ற சொற்களில் எழுத்துகளுக்கும் ஒலிப்புக்கும் தான்  எத்துணை வேறுபாடு !

எழுத்துகளுக்கு ஏற்ப ஒலிக்கமுடியாத இன்னல் ஆங்கிலத்தில் இருப்பதை எவரும் மறுக்கமுடியாது ! இத்தகைய இடையூறுகளால் தான் ஆங்கிலம் கற்பது என்பது பிற மொழியினருக்கு அத்துணை எளிய செயலாக இல்லை !

ஆங்கிலத்தில் தங்கு தடையின்றிப் பேசும் ஒரு ஆளிநரை (நபரை), அவர் பேசியதை எழுத்தில் வடிக்கச் சொல்லுங்கள் ! எழுத்துப் பிழைகள் (SPELLING MISTAKES) ஏராளமாகக் இருப்பதைக் காண்பீர்கள்  ! எப்பொழுதும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டே இருப்பவர்களுக்கு, எழுதுகின்ற வாய்ப்பு அரிதாகத்தான் ஏற்படுகிறது. ஆகையால் ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு எந்தெந்த ஆங்கில எழுத்துகளை இட்டு எழுத வேண்டும் என்பது அவருக்கு மறந்து போய்விடுகிறது ! இதுதான் ஆங்கிலத்தின் இயல்பு !

மருந்துச் சீட்டு எழுதித் தரும் மருத்துவரின் கையெழுத்தை நாம் படிக்க முடிகிறதா ? தெளிவாக எழுதினால். எழுத்துப் பிழை நம் கண்களுக்குத் தெரிந்துவிடுமே !

இப்போது ஆங்கிலப் பயிற்று மொழி வாயிலாகக் கல்வி பயிலும் மாணவர்கள், பிறருடன் ஆங்கிலத்தில் உரையாடும் திறனை ஓரளவு பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மையே ! ஆனால் அவர்களது உரையாடல், ஆங்கில இலக்கணத்தின் வழி அமைவதில்லை ! அவர்களது உரையாடலில் எழுவாய் (SUBJECT), பயனிலை (PREDICATE) செயப்படுபொருள் (OBJECT), எதுவும் முறைப்படி அமைந்திருக்காது !

BROTHER என்பதை BRO ஆக்கிவிட்டார்கள் ! DADY என்பவர் DAD, ஆகிவிட்டார். MUMMY சுருங்கி MOM ஆகிவிட்டார். ஆங்கில அகரமுதலியிலேயே இல்லாத  Wanna, Gonna, Yah Yah, நாவின் நுனியில் விளையாடுகின்றன.  கொச்சை ஆங்கிலத்தில் (SLANG)  பேசும் திறனைத் தான் அவர்களிடம் காணமுடிகிறது. இதற்குத்தான்  பெற்றோர்கள் நூறாயிரக் கணக்கில் கொட்டிக் கொடுத்து, பதின்மப் பள்ளிகளுக்கும் (MATRICULATION SCHOOLS), நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத் திட்டப் பள்ளிகளுக்கும் (C.B.S.C. SCHOOLS) தம் பிள்ளைகளை அனுப்புகிறார்கள் !

ஆங்கிலமொழி தங்கள் பிள்ளைகளை உயர்ந்த நிலையில் உட்கார வைத்து விடும் என்று பெற்றோர்கள் குருட்டுக் கனவு காண்கிறார்கள் ! ஆனால், எதைப் பற்றியும் சிந்திக்கக்கூடிய ஆழ்ந்த ஆற்றலைத் தாய்மொழி போல, அயல்மொழியான ஆங்கிலம்  தரமுடியாது  என்பதை அவர்கள் உணர்வதே இல்லை !

அறிவியல் அறிஞர்கள் அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, அரியலூர் வளர்மதி, சிவன் பிள்ளை  போன்ற ஒப்பற்ற ஒளிவிளக்குகள் எல்லாம் தமிழ்வழியில் கல்வி பயின்றவர்கள் என்னும் உண்மையை உரக்கச் சொன்னாலும் பெற்றோர்கள் புரிந்துகொள்வதில்லை; தம் பிள்ளைகளை ஆங்கிலப் பயிற்றுமொழிப் பள்ளிகளுக்கே அனுப்புகிறார்கள் !

ஏமாறுவது எங்கள் பிறப்புரிமை என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் இருக்கும் வரை ஏமாற்றுவதற்கென்றே பதின்மப் பள்ளிகள் தோன்றிக் கொண்டேதான் இருக்கும் ! தடுக்கவேண்டிய அரசு தன் இரு கண்களையும் இறுக மூடிக் கொண்டிருக்கையில் நாம் விழிப்புணர்வூட்டி எழுதுவதன்றி வேறு என்னதான் செய்ய முடியும் ?


----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,துலை (ஐப்பசி),01]
{18-10-2019}

----------------------------------------------------------------------------------------------------------
     
 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------





பல்வகை (18) இல்லத்தில் எழில் பேணல் !

    அழகுணர்ச்சி இல்லாத மனிதன் விலங்குக்குச் சமமானவன் !


ஒவ்வொரு மனிதனும் அழகாகத் தோற்றமளிக்கவே விரும்புகிறான். தன்னைக் காண்பவர்களின் கருத்தைத் தன்பால் ஈர்க்க வேண்டும் என்னும் ஆவலே இதற்குக் காரணம். மனிதன் என்ற சொல் இங்கு ஆடவர், மகளிர் என இருபாலரையுமே குறிக்கும் !

உச்சி முதல் பாதம் வரை தன் அழகு, சுடர் விட்டு  மிளிர, மனிதன் எடுத்துக் கொள்ளும் அக்கறைக்கு அளவே இல்லை ! முடியலங்காரம், உடையலங்காரம், அணியலங்காரம், என ஒவ்வொன்றுக்கும் செலவிடும் நேரம் மிகுதி ஆகிக்கொண்டே போகிறது !

இத்தகைய அழகுணர்ச்சி தவறன்று ! கட்டாயம் தேவை தான் ! ஏனெனில், அழகுணர்ச்சி இல்லாத மனிதன் விலங்குக்குச் சமமானவன் ! அவனது வாழ்க்கை சுவையற்றுப் போகும். உப்புச் சுவை சேராத உணவுப் பண்டமாக தாழ்வுற்றுப் போகும் !

அழகுணர்ச்சி, அனைத்து மனிதர்களிடமும் இருக்கிறதா, என்றால், “ஆம்என்று தான் சொல்லமுடியும் ! ஆனால், அதன் அளவு தான் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது !

ஒரு நாள் நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். ஈராண்டுகளுக்கு முன்பு கட்டப் பெற்ற கற்காரைக் கூரை (CONCRETE MOLDING ROOF) வீடு. முன்றிலைக் (PORTICO) கடந்ததும் எதிர்ப்படும் வேலைப்பாடு அமைந்த நிலைவாயில் ! உள்ளே அகலறை (DRAWING HALL). வலப்புறம் சாளரம் (WINDOW)  அருகில் 4’ X 4’ மிசைப் பலகை (TABLE). அதன் எதிரில் அன்னக் கழுத்து அமரிருக்கை (CHAIR)  ! அறையின் இடப்புறம் நீண்ட இணையணை (SOFA) !

இணையணையை அடுத்து நான்கு ஞெகிழி (PLASTIC) நாற்காலிகள் ! தலைவாயிலுக்கு நேர் எதிரில் காட்சி மாடம் (SHOW CASE) ! அதையடுத்து மரத் தளியில் (WOODEN STAND) தொலைக்காட்சிப் பேழை !  மற்றும் இன்னொரன்ன பொருள்கள் !

நான் சென்ற நேரத்தில் நண்பர் வீட்டிலில்லை ! அவர் மனைவி தான் என்னை வரவேற்றார் ! ஆனால் நான் அமர்வதற்கு இருக்கை எதுவும் வெட்புலமாக (VACANT) இல்லை !  அன்னக் கழுத்து அமர் இருக்கையில் (SWAN NECK TYPE CHAIR) குழந்தைகளின் புத்தகப் பைகள் இடம் பிடித்திருந்தன ! இணையணையில்  பழைய செய்தித் தாள் கட்டுகள் சிலவும், அழுக்குத் துணிகள் பொதியும், பழைய கோரைப் பாய் ஒன்றும் காணப்பட்டன !

ஞெகிழி நாற்காலிகளில், அட்டைப் பெட்டிகள் சில இடம் பிடித்திருந்தன ! அவற்றுள் ஒன்றை வெட்புலமாக்கி என்னை அமரச் செய்தார் நண்பரின் மனைவி ! சில நிமிடங்களில் நண்பர், கையில் காய்கறிக் கூடையுடன் வந்தார். ”வாருங்கள் அன்பரசு !   நலமாக இருக்கிறீர்களா ?” என்று உசாவியவர்இதோ வந்து விடுகிறேன்எனச் சொல்லிக் காய்கறிக் கூடையுடன் உள்ளே சென்றார் !

கிடைத்த ஓரிரு நிமிடங்களில் அகலறையை நோட்டமிட்டேன் ! மிசைப் பலகையில் மூடியின்றித் திறந்த நிலையில் ஒரு மைத் தூவல் (INK PEN) ! அருகில்அயோடக்சு’ (IODEX BOTTLE)  குப்பி ஒன்று  கவிழ்ந்த நிலையில்  ! ஐந்தாறு தலைவலி மாத்திரைகள் பொதிக்கப் பெற்ற அட்டை (STRIP) !. நாள்காட்டியில் (DAILY SHEET) கிழித்த அன்றைய நாளுக்கான தாள் ! சுருட்டிய நிலையில் ஒரு கைக்குட்டை ! குளம்பி (COFFEE)  அருந்திய கழுவாத கோப்பை !

நான்கைந்து சில்லறைக் காசுகள் ! மின்கட்டண அட்டை  ! கொட்டிக் கிடக்கும் ஒரு கைப்பிடி  பயின் வளையங்கள் ((RUBBER BANDS) ! எழினிக்கு (MOBILE) மின்னேற்றம் செய்யும் சூலி (CHARGER)  !  சிறிய பீங்கான் தட்டு ஒன்றில் கொஞ்சம்  கதம்ப நொறுவை (MIXTURE) ! ஊர்தி ஓட்டுகையில் அணியும் தலைச் சீரா (HELMET) ! இன்னும் சிற்சில பொருள்கள் !

சுவரெங்கும் கரிக்கோடுகள் (PENCIL LINES), ஊதாக்கோடுகள் (MARKER LINES)  ! குழந்தைகளின் கைவண்ணம் போலும் ! அரத்தம் (BLOOD) குடித்த கொசுக்கள் நசுக்கப் பெற்ற  சிவப்புத் தடங்களும்  சுவரில் இடம் பிடித்திருந்தன ! அழுக்குப் படிந்த பந்துகள் சுவரில் மோதிப் பதித்த, கலங்கலான வரிகள் இக்கால ஓவியங்களாய்க் (MODERN ART) காட்சியளித்தன ! குழந்தைகளின்  காலணிகள் திசைக்கு ஒன்றாகத் திரும்பிக் கிடந்தன !

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நகரம் போல் அந்த வீட்டின் அகலறை (DRAWING HALL) காட்சியளித்தது ! அகலறையே (DRAWING HALL) இப்படி இருந்தால், அடுக்களை (KITCHEN), துயிலறை (BED ROOM), குளியலறை (BATH ROOM) பூசை அறை (POOJA ROOM) போன்றவை எத்துணை அழகாகக் காட்சியளிக்கும் என்று மனதிற்குள் கற்பனை செய்து பார்த்துக் கொண்டிருக்கையில், நண்பர் உள்ளிருந்து வந்தார் ! ஒரு நாற்காலி சுமந்து கொண்டிருந்த அட்டைப் பெட்டிகளைக் கீழே இறக்கி வைத்து விட்டு, அதில் அமர்ந்தார் !

சில நிமிட உரையாடல்களுக்குப் பின், அவர் தந்த குளம்பியை (COFFEE) மனக் குமட்டலுடன் சிறிது ஒப்புக்கு அருந்திவிட்டு, என் இல்லம் வந்து சேர்ந்தேன் ! துப்புரவும் ஒழுங்கும் இல்லாத வீட்டில், குளம்பியின் ஒவ்வொரு துளியும் கற்றாழைச் சாறாக மனதிற்குள்  கசந்தது !

நண்பர் மிடுக்கானவர் ! அழகாகத் தலைவாரி, உடையுடுத்தி, சில கூடுதல் ஒப்பனைகளையும் செய்து கொண்டு காண்போரைக் கவரும் வனப்புக் கொண்டவர் ! தன் தோற்றத்தைப் பொறுத்தவரை அழகுணர்ச்சியை முழுமையாக வெளிப்படுத்தும் இயல்பு வாய்ந்தவர் ! அவரது இல்லமா இப்படி ?

நேர்த்தியாக உடை உடுத்தி உலா வரும் ஒருவர், குப்பைக் கிடங்கிற்குள் குடி இருப்பதைப் போல் அன்றோ நண்பரின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன ! தனது தோற்றத்தை எழிலாக வெளிப்படுத்த விரும்பும் அவர், தனது இல்லத்தைத் எழில் மிகுந்த மாளிகையாகப் பேணுவதில் ஏன் அக்கறை செலுத்துவதில்லை ?

குப்பைக் கிடங்குகள் நாய்கள்  உறங்கும் இடமன்றோ ? நண்பர் தன்னை நாயின் நிலைக்குத் தாழ்த்திக் கொள்வது, அவரது அறியாமையாலா ? அக்கறை இன்மையாலா ? அல்லது அவரது பொறுப்பற்ற தன்மையின் வெளிப்பாடா ?

------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி.2050, கன்னி(புரட்டாசி),30]
{17-10-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
      
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------

பல்வகை (17) புதுச் சொல் புனைவு - அரசு முனைப்புக் காட்ட வேண்டும் ! !

சொல்லாக்கத்திற்கு   தமிழக அரசில் புதிய துறையை உருவாக்க வேண்டும் !



தமிழ் இலக்கியங்கள் பல, 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. கி.பி முதலாம் நூற்றாண்டுக்குப் பிறகு இயற்றப் பெற்ற இலக்கியங்களும் அளவிறந்தவை ! கடைச் சங்க காலமான கி.மு. 600 – கி.பி. 200 இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பிறமொழிக் கலப்பில்லாதவை. இவற்றில் தமிழர் வரலாறும், தமிழர் நாகரிகமும், தமிழ்ப் பண்பாடும் இலைமறை காயாகப் பதிவு செய்து வைக்கப் பெற்றிருக்கின்றன !

கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு, தமிழகத்தில் வடமொழி ஊடுறுவல் தொடங்கியது. எனவே இதற்குப் பிறகு தோன்றிய இலக்கியங்களில் வடமொழிச் சொற்கள் கலப்பு மிகுதியாகக் காணப்படுகின்றன !

கடந்த 1800 ஆண்டுகளாக, வடமொழியின் மேலாண்மையிலிருந்து தமிழால் விடுபட முடியவில்லை. இன்றைய நிலையில் நாம் பயன்படுத்தும் சொற்களில், எவை வடமொழிச் சொற்கள், எவை தமிழ்ச் சொற்கள் என்று பகுத்துப்பார்க்க முடியாத அளவுக்குக் கலப்படம் மிகுதியாகிவிட்டது !

வடமொழிச் சொற்களின் கலவையால், மலையாளம், கன்னடம், துளுவம், தெலுங்கு போன்ற புதிய மொழிகள் தோன்றி, தமிழின் ஆட்சி எல்லை சுருங்கிப் போயிற்று ! வடமொழிக் கலப்பை மட்டுப் படுத்த, பல்லாண்டுகளாகப் பல தமிழறிஞர்கள்  முயன்று வந்துள்ளனர். எனினும் அவர்களது உழைப்பிற்குப் போதிய பலன் கிடைக்காமலேயே போயிற்று !

இன்றைய தமிழகத்தில், மக்கள் பெயர்களில் 95 % வடமொழிப் பெயராகவே உள்ளன. கோயில் பெயர்களும், கோயிலில் உறைகின்ற கடவுளர் பெயர்களும் 99 % வடமொழிப் பெயராகவே இருக்கின்றன. ஆண்டுகளின் பெயர்களும், மாதங்களின் பெயர்களும் வடமொழிப் பெயர்களாகவே திகழ்கின்றன !

வடமொழியின் மேலாண்மையிலிருந்து தமிழும் தமிழக மக்களும் விடுபடுதல் என்பது அத்துணை எளிய செயலன்று ! தமிழை ஒரு படி உயர்த்தி வைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டால், இரண்டு படிகள் கீழே இறக்கி வைக்கும் செயலில் சில அமைப்புகள் இடையறாது ஈடுபட்டு வருகின்றன !

இத்தகைய இடையூறுகளைத் தமிழ் எதிர்கொண்டிருக்கையில், தமிழகத்தில் ஆங்கில மொழியின் ஊடுறுவல் அதிவிரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ! படிப்பறிவில்லாத பாமரன் வாயிலிருந்து உதிரும் சொற்களில் ஆங்கிலச் சொற்களின் அணிவகுப்பு காணப்படுவது கவலை அளிப்பதாக உள்ளது . பஸ், டிக்கட், கண்டக்டர், டிரைவர், காப்பி, டீ, சோடா, சிகரெட், சினிமா, டிரெய்ன், ஏரோப்ளேன், எம்.எல்., எம்.பி, கலெக்டர், தாசில்தார், போலீஸ் மற்றும் இன்னோரன்ன ஆங்கிலச் சொற்கள் பாமர மக்கள் வாயிலும் வரைமுறையின்றிப் புழங்குகின்றன !

மொழிவாரி மாநிலம் அமைந்து, தமிழ்நாடும் அதற்கென ஒரு அரசும் இயங்கி வருகிறது. தமிழ்நாடு என்று பெயரைத் தாங்கி இருப்பதால், தமிழையும் உயர்த்திப் பிடிக்க வேண்டிய கடமை தமிழ்நாட்டு அரசுக்கு இருக்கிறது. தமிழை வளப்படுத்தும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டால் தான் தமிழ் வளரும்; வாழும் ! அரசின் அரவணைப்பு இல்லையேல் தமிழ் தளர்ந்துபோகும்; வீழ்ந்தும் போகும் !

தமிழ் வளர்ச்சிக்குத் தமிழக அரசு இன்னும் நிரம்பச் செய்யலாம். பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வியைக் கட்டாயமாக்கக் கூடுதலாக சில சட்டங்களை இயற்ற வேண்டும். பதின்மப் பள்ளிகள் தமிழை மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்டு இயங்க, புதிய  சட்டங்களை இயற்ற வேண்டும்.  தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு மட்டுமே  அரசு வேலை என்பதைக் கட்டாயமாக்க  வேண்டும் !

தமிழ்ச் சொல்லாக்கத்திற்கு  என்று தமிழக அரசில் புதிய துறையை உருவாக்க வேண்டும். முனைவர் ப.அருளி போன்ற தமிழறிஞர்களை, அகவை மேல்வரம்பு விதிக்காமல், சொல்லாக்கத் துறையின் இயக்குநராக அமர்த்தம் செய்ய வேண்டும்.  இத்துறையில், தமிழ் வல்லுநர்கள் அடங்கிய பெருங்குழு ஒன்றை உருவாக்கி, இந்நாள்வரைத் தமிழாக்கம் செய்யப் பெறாமல் இருக்கும் ஆங்கிலச் சொற்களைத் திரட்டி, அவற்றுக்கு உரிய தமிழ்ச் சொற்களை உருவாக்க வேண்டும் !

இப்பணியில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களையும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திட்டங்கள் வரையப்பட வேண்டும். சொல்லாக்கத் துறையின் ஆய்வுக்குப் பின், மாதம் இருமுறை, அனைத்துச் செய்தித் தாள்களிலும், புதிய சொற்களை, கட்டணமின்றி (அரசுக்குச் செலவின்றி) வெளியிடும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் !

புதிய கலைச் சொற்கள் பாடப் புத்தகங்களுக்குள் தனிப் பட்டியலாக முடங்கிக் கிடக்கின்றன. பல்கலைக் கழகங்கள் தொகுக்கும் கலைச் சொற்கள் அவர்களது நூலகத்தை விட்டு வெளியில் வருவதில்லை. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதிக்கெனத் தனித் துறையே உள்ளது. இத்துறையினர் தொகுத்த கலைச் சொற்கள், நூல் வடிவில் அப்பல்கலைக்கழக நூலகத்தில் முடங்கிக் கிடக்கிறது. புதிய சொற்கள் மக்களிடம் சென்று சேர அரசு செய்தித் தாள்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் !

மாதம் இருமுறை சொல்லாக்கத் துறையால் வெளியிடப் பெறும் புதிய தமிழ்ச் சொற்களை செய்தித்தாள்கள் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் வகையில் சட்டம் இயற்றிச் செயல்படுத்த வேண்டும் !

தமிழ் வளர்ச்சித் துறை, தனது பணிகளை அரசு அலுவலகங்களை ஆய்வு செய்வதுடன் முடித்துக் கொள்கிறது. அரசு அலுவலகங்களுக்கு அப்பாலும் தனது பார்வையை இத்துறை செலுத்த வேண்டும் !

தமிழின் பெயரை உள்ளடக்கியதமிழ்நாடு அரசுதமிழ் வளர்ச்சிக்கு முனைப்பாக உதவ வேண்டும் ! தமிழ் உணர்வாளர்களின் ஒற்றை வேண்டுகோள் இதுவே !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, துலை(ஐப்பசி) 02]
{19-10-2019}

-----------------------------------------------------------------------------------------------------------
       
தமிழ்ப் பணிமன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------


பல்வகை (16) ”ஐக்கூ” எனச் சொல்லாதீர் !

 மூன்று அடிகளால் ஆன “ஐக்கூ” பாடலை “சிந்தியல்     தேன்பா” என்போம் !


சப்பான் நாட்டு நன்கொடையாக இரண்டு சொற்களை நாம் பயன்படுத்தி வருகிறோம் ! ஒன்றுசுனாமி”, இரண்டாவதுஹைக்கூ” !

2005 ஆம் ஆண்டு ஆழிப் பேரலை தமிழ் நாட்டில் பேரழிவை உண்டாக்கிய போது இறக்குமதியான சொல்சுனாமி”. வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு.இரமணன் அவர்கள் எத்துணையோ முறைஆழிப் பேரலைஎன்று சொல்லிச் சொல்லிப் பார்த்தார். ஆனால், செய்தித் தாள்களும் தொலைக் காட்சி ஊடகங்களும் விடாப்பிடியாகசுனாமிஎன்ற சொல்லைப் பயன்படுத்தியதால், தமிழ்நாட்டில்சுனாமிநிலைத்துவிட்டது !

அடுத்ததாக ஹைக்கூஎன்னும் சொல், தமிழர்களின் நாவில் தாண்டவமாடுகிறது ! மூன்று வரியிலான இவ்வகைப் பாடலுக்கு சில ஆன்றோர் “துளிப்பாஎன்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் ! ஆனாலும்ஹைக்கூதமிழ்நாட்டில், சில ஊடகங்களில், குறிப்பாக, முகநூலில் செழித்து வளர்ந்து வருகிறது !

தமிழில் போதிய அறிவும் ஆற்றலும் இருப்பவர்கள் தான் கவிதை எழுத முடியும் ! இந்த வகையில்ஹைக்கூகவிஞர்கள் எல்லாம் தமிழில் ஆர்வமும் ஆற்றலும்  மிக்கவர்களே என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை ! 

ஒரு சமுதாயத்தை விழிப்படையச் செய்வதில் கவிஞர்களின் பங்கு அளவிட முடியாதது ! கவிஞர்களின் சொல்லாற்றலுக்கு இருக்கும் வலிமை வேந்தர்களின் வாளுக்குக் கூடக் கிடையாது !

கவிஞர்களுக்கு இரண்டு கடமைகள் இருப்பதாகச் சான்றோர்கள் சொல்கிறார்கள் ! (01) மொழியைக் கட்டிக் காப்பது (02) சமுதாயத்தைத் தட்டி எழுப்புவது ! இந்த இரண்டு கடமைகளும் கவிஞர்களுக்கு இரண்டு கண்கள் போன்றவை !

முதல் கடமையான மொழியைக் கட்டிக் காப்பது என்பதில்ஹைக்கூகவிஞர்களின் பங்களிப்பு கண்டிப்பாக வேண்டும் ! தமிழ் நம் தாய்மொழி ! தமிழில் படித்தோம்; தமிழில் எழுதினோம்; தமிழில் சிந்தித்தோம்; இன்று தமிழால் உயர்ந்திருக்கிறோம், கவிஞர்களாக !

தமிழுக்குப் பெருமை பிறமொழிக் கலப்பு இன்றித் தனித்து இயங்கும் வல்லமை உடைமை ! இந்தப் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் வல்லமை கவிஞர்களுக்கும் உள்ளது ! அழகான உங்கள் கவிதைகளைப் படிக்கும் போது மனம் களிநடம் புரிகிறது ! சர்க்கரைப் பொங்கல் சாப்பிடும் போது ஒரு கல் கடிபடுவதைப் போல உங்கள் அருமையான கவிதைகளைச் சுவைக்கும் நேரத்தில்ஹைக்கூஎன்னும் சொல் பற்களுக்கு இடையே புகுந்து  தொல்லை தருகிறது !

இடைக்காலத் தமிழர்கள், தமிழில் பிறமொழிச் சொல் கலப்பைத் தடுக்கத் தவறியதால் , மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளுவம் போன்ற மொழிகள் உருவாகித் தமிழ் நிலம் சுருங்கிப் போயிற்று !

நடப்புக் காலத்தில், வடமொழிச் சொற்களும், ஆங்கிலச் சொற்களும், இந்திச் சொற்களும் வரைமுறையின்றித் தமிழில் கலந்து தமிழுக்குப் பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்கின்றன ! இதை எதிர்கொண்டு, தமிழின் நலத்திற்குக் கேடுவிளையாமல் காக்கும் பெரும் பொறுப்பு தமிழார்வம் மிக்க ஒவ்வொருவருக்கும் உள்ளது !

தலைப்பில் குறிப்பிட்டுள்ளதைப் போல நான் உங்களுக்கு வைக்கும்  வேண்டுகோள் மிக எளியது ! இந்த வேண்டுகோள்ஹைக்கூகவிஞர்களுக்கு மட்டுமல்ல, முகநூற் கணக்கை ஆட்சிபுரிந்து நெறிப்படுத்தும் ஆட்சியர்களுக்கும் தான் ! ஏனெனில் அவர்களும் கவிஞர்களே !

யாப்பிலக்கணத்தில் மூன்று சீர்களால் ஆன அடிக்குசிந்தடிஎன்று பெயர். மூன்று அடிகளால் ஆன பாடலுக்குசிந்தியல் பாஎன்று பெயர். “அடி மூன்றில் வந்தால் சிந்தியலாகும்என்பது யாப்பருங்கலக் காரிகை நூற்பா 28. எனவே மூன்று அடிகளால் ஆனஹைக்கூபாடலைசிந்தியல் தேன்பாஎன்று அழைக்கலாம். பொருத்தமாக  இருக்கும் !

எனவே, அருள் கூர்ந்துஹைக்கூஎன்னும் சொல்லைக் கைவிட்டுசிந்தியல் தேன்பாஎன்னும் சொல்லை வழக்கிற்குக் கொண்டு வாருங்கள் ! அல்லது சிலர் வழக்கிற் கொள்வது போல துளிப்பா எனும் பழைய பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள் ! நீங்கள் ஆற்றும் தமிழ்ப் பணிக்குஹைக்கூஎன்னும் பிறமொழிச் சொல் சர்க்கரைப் பொங்கலிடையே உருளும் சிறு கல்லாக தமிழ் ஆர்வலர்களின்  மனதை உறுத்துகிறது !

உறுத்தும் கல்லை விலக்கி, இனிக்கும் பொங்கலைத் தொடர்ந்து பரிமாறுங்கள் ! சுவைத்து மகிழ்கிறோம் ! அன்னைத் தமிழுக்கு நமது நன்றிக் கடனாகஹைக்கூசொல் துறப்பு அமையட்டும் ! “சிந்தியல் தேன்பாவழக்கிற்கு வரட்டும் !

நமது பணி தமிழுக்குஅணிசேர்ப்பதாக அமையட்டும் ! “பிணிசேர்ப்பதாக அமையலாகாது !

-------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050:துலை (ஐப்பசி)27]
{13-11-12019}
-------------------------------------------------------------------------------------------------------
     தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------

தமிழ் (24) ரா.தமிழ்ச் செல்வன் என்று எழுதாதீர் !

சில எழுத்துகள் மொழி முதல் வாரா என்பதை உணருங்கள் !



ஒரு சொல்லின் முதல் எழுத்தாக எந்தெந்த எழுத்துகள் வரும் என்பது பற்றி நன்னூலில் நூற்பா 102  கீழ்க் கண்டவாறு உரைக்கிறது !

------------------------------------------------------------------------------------
பன்னீர்  உயிரும்  ,,,,  ,,,,
,,இவ் ஈரைந்து உயிர்மெய்யும் மொழிமுதல்
-------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:
------------------------------
பன்னீர் உயிரும் = “முதல்வரையிலான 12 உயிர் எழுத்துகளும்; , , , , , , , , , , ஆகிய = , , , , , , , ய என்னும் எழுத்துகள், இவ்வீரைந்தும் = இந்த  10 உயிர் மெய் எழுத்துகளும்; மொழி முதல் = சொல்லின் முதல் எழுத்தாக வரும் !

-----------------------------------------------------------------------------------

நன்னூல் என்பது தமிழ் இலக்கண நூல். இதில் 462 நூற்பாக்கள் (சூத்திரங்கள்) உள்ளன ! இந்நூல் என்ன சொல்கிறது ? எந்தவொரு சொல்லிலும் முதல் எழுத்தாக மேற்குறிப்பிட்ட அ, , , , , , , , , , , ஔ ஆகிய 12  உயிர் எழுத்துகளில் ஏதாவது ஒன்று வரும்; இவையன்றி, , கா, கி, கீ என்று தொடங்கி கௌ என முடியும் 12 உயிர்மெய் எழுத்துகளில் ஏதாவது ஒன்று வரும். ”க்மெயெழுத்து என்பதால், அது சொல்லின் முதலில் வராது !


இவ்வாறே எஞ்சிய  , , , , , , , , ங ஆகிய ஒன்பது உயிர்மெய் எழுத்துகளும் அவற்றின்  தொடர் எழுத்துகளும் மொழிக்கு (சொல்லுக்கு) முதலில் வரும். இது தான் நன்னூல் வகுத்து அளித்திருக்கும்  விதி !


நன்னூல் இலக்கண விதியின்படி, மொழிக்கு முதலாக (சொல்லின் முதல் எழுத்தாக)  வரக் கூடாத எழுத்துகள் எவை ?  , , , , , , , ன ஆகிய எட்டு எழுத்துகளும் அவற்றின் தொடர் எழுத்துகளும் , ஆய்த எழுத்தும் எந்த வொரு சொல்லிலும் முதல் எழுத்தாக வராது; வந்தால் அது தமிழ் இலக்கணத்திற்குப் புறம்பானது !

நாம் தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து வாழ்ந்து வருகிறோம் ! தமிழில் படித்து அல்லது தமிழைப் படித்து ஏதாவதொரு பணியில் ஈடுபட்டு வருகிறோம். தமிழில் பேசுகிறோம்; தமிழில் எழுதுகிறோம்; தமிழிலேயே சிந்திக்கவும் செய்கிறோம் !


இத்தகு நிலைமையில், தமிழை நாம் சரியாக எழுதுகிறோமா ? சற்று ஆழ்ந்து நோக்கினால், தமிழை நாம் முறைப்படி எழுதுவது இல்லை என்பது புரியும் ! எப்படி என்று கேட்கிறீர்களா ? நம்மில் பலர் கீழ்க் கண்டவாறு தானே எழுதுகிறோம் ?


(01) ரகுராமன்  (02) ராசேந்திரன்  (03) ரீட்டா  (04)  ரூபாய்  (05) ரெங்கசாமி 
(06)  ரேகா  (07) ரொக்கம்  (08) ரோசுமேரி  (09) லவகுசா  (10) லாவண்யா 
(11) லீலா (12) லெட்சுமி (13) லைலா (14) லோகமாதா


பெற்றோர்கள் சூட்டிய பெயர்களை மாற்ற வேண்டும் என்று சொல்ல வில்லை ! ஆனால், அப் பெயர்களை தமிழ் மரபின்படியாவது (தமிழ் இலக்கணப்படியாவது) எழுதலாமே !  இரகுராமன், இராசேந்திரன், இரீட்டா, உருபா, அரங்கசாமி / இரெங்கசாமி, இரேகா, உரொக்கம், உரோசுமேரி, இலவகுசா, இலாவண்யா, இலீலா, இலட்சுமி / இலெட்சுமி, இலைலா, உலோகமாதா என்று எழுதுவதில் இடையூறு ஒன்றுமில்லையே !


என் பெயர் ரகுராமன். அதை ஆங்கிலத்தில் ”RAGURAMAN” என்று தான் எழுதுகிறேன். எனவே என் பெயரைஇரகுராமன்என்று எழுத மாட்டேன், “ரகுராமன்என்று எழுதுவதே சரி என்று வாதம் புரிபவர்களும் இருக்கிறார்கள் ! இத்தகைய  மாந்தர்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்த ஆசிரியரைத் தான் நாம் குறை சொல்ல வேண்டும்; ஏனெனில் அந்த ஆசிரியர் தமிழ் சொல்லிக் கொடுத்திருக்கிறாரே தவிர தமிழ் உணர்வை அந்த மாந்தனுக்கு ஊட்டத் தவறி விட்டாரே !


இராமசாமியின் மகன் தமிழ்ச் செல்வன் என்று ஒருவர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவர் தன் பெயரை எழுதுகையில் இரா.தமிழ்ச் செல்வன் என்று தான் எழுத வேண்டும்; ஆனால் அப்படி எழுதாமல் ரா.தமிழ்ச் செல்வன் என்று எழுதினால், அவர் பெயருக்கும் செயலுக்கும் பொருத்தம் இல்லாமல் போய்விடுகிறதே ! ”ராஎன்று தலைப்பு எழுத்துப் போட்டுக் கொள்ளும் தமிழ்க் கவிஞர்களும், தமிழ் எழுத்தாளர்களும், தமிழ் ஆசிரியர்களும், தமிழ்ப் பேராசிரியர்களும் இருக்கவே செய்கிறார்கள் ! இவர்கள் எல்லாம் தமிழ் படித்த தமிழர்கள் என்பதை நாம் நம்புவோமாக !


தமிழ்ப்பணி மன்றத்தில், ஒரு நண்பர் என் தமிழ் உணர்வைப் பற்றி முன்பு முனைப்பாகக் குறை கூறி வந்தார். அவர் ஒரு தமிழ் இயக்கம் சார்ந்தவர். தமிழுக்காக உயிரையும் கொடுப்பேன் என்று மார் தட்டிக் கொள்பவர். அவர் பெயருக்கு முன்னால் அவர் போட்டுக் கொள்ளும் தலைப்பு எழுத்துகள் எவை தெரியுமோ ? ”ரா.வெ.” இத்தகைய போலித் தமிழர்களும் இம் மண்ணில் உலா வரத்தான் செய்கின்றனர் !


நண்பர்களே ! தமிழன் என்று நம்மை நாம் சொல்லிக் கொள்ள வேண்டுமென்றால், இயன்ற அளவுக்கு அவ்வுணர்வைப் பெயரிலும் எழுத்திலுமாவது காண்பிப்போமே ! சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக வாழ்தல் நகைப்புக்கு உரியதாக அன்றோ  ஆகிவிடும் !


-----------------------------------------------------------------------------------------------------------

பின் குறிப்பு:
-------------------- 

டப்பா, டாம்பீகம் என்றுவரிசையில் எழுதப்படும் எந்தச் சொற்களும் தமிழ்ச் சொற்களே அல்ல ! அது போன்றேவரிசை எழுத்துகளில் தொடங்கும்ரம்பம்”, ராணி”, போன்ற சொற்களும், ”வரிசை எழுத்துகளில் தொடங்கும்லட்சுமி”, “லஞ்சம்போன்ற சொற்களும் தமிழ்ச் சொற்களே அல்ல ! எல்லாவற்றையும் படித்து விட்டு, நான்ராஎன்று தான் என் தலைப்பெழுத்தை (INITIAL) போட்டுக் கொள்வேன் என்று விடாப்பிடியாக யாராவது சொன்னால், அவர்களை மன்னித்து விடுவோம் ! வேறென்ன செய்வது ?


-----------------------------------------------------------------------------------------------------------


ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,கன்னி (புரட்டாசி),10]
{27-09-2019}


----------------------------------------------------------------------------------------------------------
       
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------

சிந்தனை செய் மனமே (53) சீரெழினியும் சிறு குழந்தைகளும் !

ஆறாவது விரல் !


சீரெழினி (SMART PHONE)  இல்லாமல் எந்தவொரு  மனிதனும் இயங்க முடியாது என்று சொல்லுமளவுக்குத் தமிழ்நாட்டில் புதிய பண்பாடு முளைத்து, முனைப்பாக முன்னேறி வருகிறது. ஒவ்வொரு மனிதனின் காதோடும் ஒட்டி உறவாடும் இக்கருவி அளப்பரிய திறன்களைத் தன் இதயத்திற்குள் ஒளித்து வைத்துக் கொண்டு ஒய்யாரமாக உலா வந்துகொண்டிருக்கிறது !

இன்றைய தமிழன், உணவில்லாமல் ஒரு நாளைக் கூடக் கடந்துவிடுவான்; ஆனால் சீரெழினி (SMART PHONE)  இல்லாமல் ஒரு வேளையைக் கூடக் கடக்க அவனால் முடியாது !

வளர்ந்த மனிதனை இவ்வாறு தன் வயப்படுத்தி வைத்திருக்கும் சீரெழினி (SMART PHONE), வளரும் குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை ! நடைபழகும் பருவத்திலேயே இயங்கும் பொம்மைப் படங்களைப் (CARTOON PICTURES) பார்த்து மகிழும் சிறிய குழந்தைகள், போகப் போகக் காணொலிக் காட்சிகளிலும் (VIDEOS)   தீர விளையாட்டுகளிலும் (GAMES)  மனதைப் பறிகொடுத்து அதிலேயே மூழ்கியும் போய்விடுகின்றனர் !

தம் குழந்தைகளுடன்  நேரத்தைப் பகிர்ந்து கொள்ளத் தவறும் தாய் தந்தையர்  அவர்களின் அன்புத் தொல்லையிலிருந்து தப்பிக்க, அவர்கள் கையில் சீரெழினியைத் ((SMART PHONE) திணித்து, அவர்களின் கருத்தைத் திசை திருப்பிவிட்டுத் தம் பணிகளில் மூழ்கிவிடுகின்றனர் !

தீர விளையாட்டுகளையும் (GAMES), இயங்கும் பொம்மைப் படங்களையும் (CARTOON PICTURES),  காணொலிகளையும் (VIDEOS) சீரெழினியில் (SMART PHONE)   ஆர்வத்துடன் கண்டு களிக்கும் சின்னஞ்சிறு குழந்தைகள், அவற்றில் வரம்பு மீறிய  ஈடுபட்டை வளர்த்துக் கொள்கின்றனர் !

மூன்று அகவைக் குழந்தையைச்சாப்பிட வாஎன்று தாயார் அழைத்தால், அக்குழந்தை, “எனக்குப் பசிக்க வில்லைஎன்று பொய் சொல்லிவிட்டு சீரெழினியில் (SMART PHONE) காணொலியைக் காண்பதில் ஈடுபாடு காண்பிப்பதைக் காண முடிகிறது !

சீரெழினியில் (SMART PHONE)  திளைத்துக் கிடக்கும் ஐந்து அகவைக் குழந்தையை அழைத்து, “வாயிலில் யாரோ அழைக்கிறார்கள் , யாரென்று பார்த்து வாஎன்று தாயார் சொன்னால், “போம்மா ! உனக்கு வேறு வேலையே இல்லை ! என்னைத் தொந்தரவு செய்யாதே ! நீயே போய்ப் பார்த்துக் கொள்  !” என்று மறுப்புரையை எதிர்ப்புடன் பதிவு செய்யும் குழந்தைகளை இன்று  பெரும்பாலான வீடுகளில் பார்க்க முடிகிறது !


தாயோ தந்தையோ அழைக்கும் போது, சீரெழினியில் (SMART PHONE)   மூழ்கிக்கிடக்கும் குழந்தைகள் அவர்கள் அழைப்பை ஏற்பதில்லை; அத்துடன் தங்கள் எதிர்ப்பையும் காண்பிக்கத் தவறுவதில்லை ! தாயிற் சிறந்த கோயிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று குழந்தைகளுக்கு சொல்லித் தந்து  தாய் தந்தையரிடம் பாசத்தை வளர்க்க வேண்டிய  பெற்றோர், சீரெழினியை அவர்களின் கைகளில் தந்து, அந்தக் கருவியின்பால் அளவு கடந்த ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ளத் தம்மையும் அறியாமல் கற்றுத் தந்துவிடுகிறார்கள் !

தீர விளையாட்டில் (GAMES) மூழ்கிக் கிடக்கும் குழந்தைகளின் கரங்களிலிருந்து, சீரெழினியை மீட்க முயன்று பாருங்கள் ! வீடே இரண்டுபட்டுப் போகும்! சீரெழினியைத் தந்தால் தான் ஆயிற்று என்று பிடிவாதம் பிடிக்கும் அக்குழந்தை, சினத்தில் கண் மண் தெரியாமல் கையில் கிடைப்பதை எல்லாம் எடுத்து எறியத் தொடங்கிவிடுகிறது !

காளி கோயிலில், மருள் வந்து ஆடி, சாமியாடி அரற்றுவதைப் போல, அக்குழந்தை செய்கின்ற அட்டகாசம் வண்ணிக்க முடியாதது. பிடிவாதம், சினம், எதிர்ப்பு, மறுப்பு என்று அத்துணைத் தீய குணங்களும் சின்னஞ்சிறு குழந்தைகளிடம் குடி கொள்வதற்குச் சீரெழினி (SMART PHONE)  முதன்மைக் காரணமாக அமைகிறது !

இந்தக் குழந்தைகள் வளர வளர அவர்களிடம் பிடிவாதமும், கோப உணர்வும், எதிர்ப்புத் தெரிவிக்கும் துணிவும் மறுத்துப் பேசுகின்ற மன நிலையும், பொய்ப் பேச்சும் சேர்ந்தே வளர்கிறது ! தாய் தந்தையர் சொல்வதைக்  கேளாத தறுதலைகளாக, இக்குழந்தைகளை உருவாக்குவதில் சீரெழினியின் பங்கு பேராற்றல் வகிக்கிறது !

குழந்தைகளிடம் சீரெழினியைத் தந்து, அவர்களின் கருத்தினைத் திசைதிருப்பி அமைதிப் படுத்திவிட்டுத் தங்கள் பணிகளைக் கவனிக்கச் செல்லும் பெற்றோர் ஒவ்வொருவரும், அக்குழந்தைகளின் எதிர்காலத்தை ஊனப்படுத்துகின்ற குற்றவாளிகளே !

குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ நேரம் இல்லாத மனித இயந்திரங்களுக்கு குழந்தைச் செல்வம்  எதற்கு ? தாய் தந்தையரே தெய்வம் என்று கருதும் பிஞ்சுப் பருவத்தில், அவர்களுடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்ள இயலாத இணையர் (COUPLE) அக்குழந்தைகளின் எதிர்காலத்தை ஊனப்படுத்துகிறோம் என்பதை எப்போது உணரப் போகிறார்கள் ?

சின்னஞ்சிறு குழந்தைகளைப் பெற்றிருக்கும் தாய் தந்தையரே ! சீரெழினியை (SMART PHONE)  உங்கள் குழந்தைகளிடம் தந்து, அக்கருவியைக் கையாண்டு காணொலிகளையும், இயங்கும் பொம்மைப் படங்களையும், தீர விளையட்டுகளையும் (GAMES) கண்டு களிக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தராதீர்கள் ! அவை உங்கள் குழந்தைகளைப் பிடிவாதக்காரர்களாக மாற்றிவிடும் ! சிறு அகவையிலேயே கோப உணர்வில் குளித்து எழும் வன்முறையாளர்களாக மாற்றிவிடும் ! படிப்பில் அக்கறை அற்றவர்களாக உருவாக்கி விடும் ! அவர்களது எதிரகாலத்தையே சீரழித்து விடும் !

இப்போதே விழிப்படையுங்கள் ! இல்லையேல், எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் உங்களை விட்டுத் தொலைவாக விலகிச் செல்வதை உங்களால் தடுக்க முடியாது !


-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி.2050, கன்னி (புரட்டாசி),29]
{16-10-2019}

--------------------------------------------------------------------------------------------------------

      தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

--------------------------------------------------------------------------------------------------------