பக்கங்கள்

செவ்வாய், ஜூன் 30, 2020

சிந்தனை செய் மனமே (60) மது விலக்கின் இன்றியமையாமை !

மது என்பது தன்னிடம் அகப்பட்டோரை மீளவிடாத உளைசேறு !


மது என்பது மனிதனை மயக்கிக் கொல்கின்ற  ஒரு கொடிய  பிசாசு ! இறுகப் பற்றிக் கொள்கின்ற  சிலந்தி வலை ! மெல்ல மெல்லத் தன்னிடம் உள்வாங்கிக் கொன்றுவிடும் புதைமணல் ! அகப்பட்டோரை மீளவிடாத உளைசேறு !

இந்திய அளவில் 96 நிமிடத்துக்கு ஒருவர் வீதம் மதுவுக்குப் பலியாவதாக தேசியக் குற்றப்பதிவுக் கணக்கீட்டுப் புள்ளி  விவரம் தெரிவிக்கிறது ! இங்கு நடைபெறுகின்ற பெரும்பாலான குற்றச் செயல்களுக்கு மதுவே காரணம் என்றும் இந்தப் புள்ளி விரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது !

உலக அளவில் மது அருந்துவோர் எண்ணிக்கை, மொத்த மக்கள் தொகையில் 16% என்றும் இதில் 11% பேர் இந்தியாவில் உள்ளதாகவும் இன்னொரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது !

மதுவால் உயிர் இழப்போர் எண்ணிக்கையில் மராட்டிய மாநிலம் முதல் இடத்திலும், மத்தியப் பிரதேசம் இரண்டாம் இடத்திலும், தமிழ் நாடு மூன்றாம் இடத்திலும் இருப்பதாக வேறொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது !

மது அருந்தலாகாது என்று கூறிய அண்ணல் காந்தி பிறந்த நாட்டில், பீகாரைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இன்று மதுவிலக்கு இல்லை ! நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்தப் இந்தப் பெருந்தகையின் பேச்சுக்கு யாரும் மதிப்பு அளிக்கவில்லை !

ஊரெங்கும் காந்திக்குச் சிலை ! பணத்தாளில் காந்தி உருவம் ! நாடாளு மன்ற இரு அவைகளிலும், சட்ட மன்றங்களிலும், அரசு அலுவலகங்களிலும்  காந்திக்குப் படம் ! அவரது பிறந்த நாள், இறந்த நாள்களில் சிலைகளுக்கும் படங்களுக்கும்   மாலை அணிவித்துப் புகழஞ்சலி ! ஆனால் அவரது கொள்கைகளின்படி மட்டும் நடக்க மாட்டோம் !

என்ன போலித் தனமான அரசியல் ! காந்தியின் முதன்மைக் கொள்கைகளான  வாய்மை (சத்தியம்), கொல்லாமை (அஹிம்சை), மது அருந்தாமை ஆகிய அனைத்தையும் துறந்து விட்டோம் ! அப்புறம் எதற்குக் காந்தி பிறந்த நாள் (காந்தி ஜயந்தி) கொண்டாட்டமும், தேசிய விடுமுறையும் ?

தேசிய அளவில் இந்தியப் பேராயக் கட்சி (CONGRESS), பாரதிய சனதாக் கட்சி (B.J.P). சனதாக் கட்சி (JANATHA PARTY), ஆகியவை ஆட்சியில் இருந்திருக்கின்றன ! மாநில அளவில் ஆட்சியில் அமராத பெருங் கட்சிகளே இல்லை ! ஆனால் எந்தக் கட்சியும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை !

மது அருந்துவதால் எந்த  நன்மையும் கிடையாது; உடல் நலத்தைக் கெடுத்து, இறுதியில் உயிரையே குடித்து விடுகிறது ! அப்படிப்பட்ட மதுவை மாநில அரசுகளே கடை விரித்து விற்பனை செய்து மக்களைக் குடிக்க வைப்பது அறநெறி தவறிய செயல் அல்லவா ? மக்களைப் பார்த்து, வாருங்கள், வந்து மதுவை  வாங்கிச் சென்று குடியுங்கள் என்று அழைக்கும் விதமாக பல்லாயிரக்கணக்கில் மதுக் கடைகளைத் திறப்பதில் என்ன ஞாயமிருக்கிறது ?

மக்களின் நல மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுத்து நிறைவேற்ற வேண்டிய மாநில அரசு, மக்களின் நலத்தைக் கெடுக்கும் வகையில் மதுக்கடைகளைத் திறப்பதும்,  அங்கு மதுவை மக்களுக்கு விற்பதும் தான் நல்லாட்சி நடத்துவதற்கான  அடையாளமா ?

ஒரு பக்கம் மக்களுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து  அவர்கள் உடல் நலத்தைக் கெடுத்து விட்டு, இன்னொரு பக்கம் அவர்களுக்குப் பண்டுவம் (சிகிச்சை) செய்திட இலவய மருத்துவ மனைகளைத் திறப்பது தான்ஆட்சிஎன்பதற்கான இலக்கணமா ?

மாவட்டம் தோறும் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் திறப்பது எதற்காக ? மதுக் குடித்துக் குடல் வெந்து போனகுடிமக்களுக்குப் பண்டுவம் செய்யப் புதிய புதிய மருத்துவர்களை உருவாக்குவதற்காகவா ?

குடி குடியைக் கெடுக்கும்என்பதைத் தெரிந்தே, ”குடி கெடுக்கும் செயல்களில் மாநில அரசுகள் முனைப்பாக இயங்குவது ஒழுக்கம் தவறிய செயலாக ஆட்சியில் இருப்போர்க்குத் தெரியவில்லையா ?

மக்களுக்காக ஆட்சி, மக்கள் நலனுக்காக ஆட்சிஎன்னும் கோட்பாட்டை மறந்து விட்டு மதுக்கடைகளைத் திறந்து மக்களையே அழித்து வரும் மாபாதகர்களே  ! உங்கள் மனதில் இரக்கம் என்பதே இல்லையா ? முற்றிலுமாக வற்றிப் போய்விட்டதா ?

அறிவாளிகளும், அருளாளர்களும் அமர வேண்டிய ஆட்சிக் கட்டிலில், அமர்ந்திருக்கிறோம் என்பதை ஒரு கணமாவது சிந்தித்துப் பார்த்தீர்களா ? மக்களுக்கு நல்லது செய்வதற்காகவே நமக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஏன் மறந்து விட்டீர்கள் ?

அரசை நடத்துவதற்குப் பணம் தேவை என்பதற்காகத், தவறான பாதையில்  செல்வது என்ன ஞாயம் ? பணம் திரட்டுவதற்கு இன்னும் எத்தனையோ தவறான பாதைகள் இருக்கவே செய்கின்றன. அந்தப் பாதைகளையும் திறந்து விடுவீர்களா ?

நல்லொழுக்கமும், நற்சிந்தனையும், நாட்டுப் பற்றும் இல்லாத மனிதர்களை எல்லாம்  ஆட்சிக் கட்டிலில் அமர வைத்துவிடுகிறது நமது அரசியல் அமைப்பு ! இத்தகைய குறைபாடுகள், நமது மக்களாட்சிக் கோட்பாட்டையே குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறது !

கரையான் புற்றெடுக்கக் கருநாகம் அதில் வந்து குடியேறியதைப் போல, அண்ணல் அம்பேதகார் போன்ற அறிஞர்களால் உருவாக்கப் பெற்ற அரசியல் அமைப்புச் சட்டத்தை வளைத்துக் கொண்டு, இன்று எல்லா மாநிலங்களிலும், தவறானவர்களே ஆட்சிக் கட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறார்கள் !

அருமை தெரியாதவர்களின் கையில் அகப்பட்ட பூமாலை போன்று, மக்களாட்சி  கோட்பாடு  இன்று சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது. அவற்றுள் ஒன்று தான், மது விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ஆட்சி நடத்துகின்ற அவலம் !

மக்கள் நல ஆட்சி, ஒவ்வொரு மாநிலத்திலும், மக்களை மதிக்காத ஆட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த அழகில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்; தேர்தலுக்குப்பின் ஒழுக்கமில்லாத இன்னொருவர் வந்து ஆட்சியில் அமர்வதற்கு நாமெல்லாம் வாக்களிக்க வேண்டும் ! என்ன கோமாளித் தனமான அரசியல் !

மதுவிலக்குப்போன்ற எத்துணையோ நல்ல திட்டங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தத் துணிச்சல் இல்லாத அரசியல் வாதிகளைத் துரத்திட வேண்டும் ! நாடு உருப்பட, மக்கள் நலம் பெற நாம் இதைத் செய்திட வேண்டும் !

எனவே, மதிநுட்பம் வாய்ந்த  மக்களே ! இனி எந்தக் கட்சிக்கும் ஆதரவாக அரசியல் பேசாதீர்கள்; அரசியல் கட்சி ஆளிநர்க்கு எந்தத் தேர்தலிலும் வாக்களிக்காதீர்கள்; அரசியல் கட்சிக் கூட்டங்களுக்குப் போகாதீர்கள்;  அரசியல் வாதிகளின் பின் அணி வகுத்து நிற்காதீர்கள் !

அனைத்துக் கட்சி ஆதரவாளர்களும்  தங்கள் மீது படிந்திருக்கும் அரசியல் சேற்றைத் துடைத்துவிட்டு ஒதுங்கி விட்டால், அரசியல் களம் துப்புரவாகிவிடும். அரசியல் சார்பற்ற அறிவாளிகளையும் வல்லுநர்களையும் ஆட்சியில் அமரச் செய்து நல்லாட்சி நடத்திட நல்ல பாதையை அமைத்துத் தருவோம் !

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, ஆடவை (ஆனி)16]
{30-06-2020}
-----------------------------------------------------------------------------------------------------------
      தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------




சிந்தனை செய் மனமே (59) ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி !

பற்களைப் பாதுகாப்போம் !


ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி, என்பது நம் முன்னோர் நமக்கு அளித்துச் சென்றிருக்கும் அறிவுரை !  ஆலம் விழுது, கருவேலங் குச்சி இரண்டும் பல் துலக்க நல்லவை !

(நாலும் இரண்டும்) நாலடியாரும், திருக்குறளும் படித்து அறிந்தோரை, வேறு எவரும் பேச்சில் வெல்ல முடியாது ! அவர் பேச்சை மறுத்துப் பேச முடியாது ! அந்த அளவுக்கு அவர் அறிவிற் சிறந்தவராக விளங்குவார் !

நமது முன்னோர்கள், பல் துலக்குவதற்கு ஆலங்குச்சி, அரசங்குச்சி, கருவேலங்குச்சி, வேப்பங்குச்சி, நொச்சிக்குச்சி, காட்டாமணிக் குச்சி போன்றவற்றைப் பயன்படுத்தி வந்தார்கள். இவை எல்லாமே மூலிகை வகையைச் சேர்ந்தவை !

இக்குச்சிகளில்  இருக்கும்  மருந்துச் சத்துகள் பற்களுக்கும் ஈறுகளுக்கும் வலிமை சேர்க்கக் கூடியவை !. வாயில் இயல்பாகவே காணப்படும் தீமை பயக்கும்  நுண்ணுயிரிகளை அழிக்கும் வல்லமை உடையவை !

இயற்கை அளித்த கொடையான, மூலிகைக் குணம் உடைய குச்சிகளை நம் முன்னோர்கள்  பல் துலக்கப் பயன் படுத்தியதால், அவர்களைப் பல் சார்ந்த நோய்கள் எதுவும் அண்ட வில்லை !

வேறு சில காரணங்களால், ஆயிரத்தில் ஒருவருக்குத் தான் சொத்தைப் பல் அக்காலத்தில் காணப்பட்டது. ஆனால் இன்றைய நிலை என்ன ?

பற்களுக்குப் பகையாக இருப்பவை நான்கு ! அவை (1) உண்ணப்படும் இனிப்புப் பொருள்கள் (2) அடிக்கடி வாய் கொப்பளித்து வாயைத் தூய்மைப் படுத்தாமை  (03) பற்பசையில் உள்ள வேதிப் பொருள்கள் (04) பல் துலக்கும் தூரிகை !

சரி ! இனிப்புப் பண்டங்கள் எப்படிப் பற்களுக்குப் பகையாகிப் போகின்றன ? காரம், துவர்ப்பு போன்ற மற்ற சுவையுள்ள பண்டங்களை விட இனிப்புச் சுவையுள்ள பண்டங்கள் விரைவாகக் கெட்டுப் போகும். தீமை விளைவிக்கும் நுண்ணியிரிகளின் பிறப்பிடமாக விளங்குபவை இனிப்புப் பண்டங்கள் !

பலகாரக் கடைகளில் விற்கப்படும் இனிப்புப் பண்டங்களை வாங்கி வந்து உண்கிறோம். சாப்பிட்ட பின் வாய் கொப்பளிப்பது இல்லை. இதனால் பற்களின் இடுக்குகளில் தங்கியுள்ள இனிப்புப் பண்டங்களின் துணுக்குகள், விரைவாகக் கெட்டுப் போய் நுண்ணுயிரிகளின் வனைவு (தயாரிப்பு)க் கூடமாக மாறிவிடுகிறது !

இந்த நுண்ணுயிரிகள் பற்களின் குழிந்த பகுதிகளில் தங்கி ஒருவகைக் காடியை (அமிலத்தை)ச் சுரக்கச் செய்கிறது. இந்தக் காடி பற்களின் புறப்பகுதியை அரிக்கும் தன்மை கொண்டவை ! இத்தகைய அரிப்பு தான் சொத்தைப் பல்லின் தொடக்கம் !


முற்காலத்தில் தீபாவளிப் பண்டிகைக்கு வீட்டில் இனிப்புப் பலகாரம் செய்வார்கள். திருமண நிகழ்வுகளின் போது இனிப்புகள் செய்வார்கள். அவ்வளவுதான் !  எனவே இனிப்புச் சாப்பிடுவது என்பது மிக அரிதாகவே இருந்தது !

இப்போது நாம் உண்ணும் இனிப்புக்கு / இனிப்புப் பொருள்களுக்கு அளவே இல்லை. பலகாரக் கடைகளில் வாங்கி வரும் தீங்குழல் (ஜாங்கிரி), தேம்பாகு (அல்வா), பாற்கிளரி (பால்கோவா) போன்றவை அல்லாமல், தேனீர், குளம்பி (காப்பி) வாயிலாகவும் நிரம்பவும் இனிப்பு உண்கிறோம் !

இவையன்றி, மாச்சில் (BISCUIT), கன்னற்கட்டி (CHOCOLATE) என நாம் உண்ணும் இனிப்புப் பண்டங்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை ! ஒரு கன்னற்கட்டியைச் சுவைக்கிறோம். சுவைத்த பிறகு வாயைக் கொப்பளிப்பதில்லை. வாயில் தங்கி இருக்கும் கன்னற்கட்டியின் எச்சம், நுண்ணுயிரிகளுக்குத் தீனியாகிறது. அப்புறம் என்ன ? பற்களின் புறப்பகுதி அரிப்புக்கு இலக்காகிறது !

எந்த இல்லத்தில் இனிப்புப் பொருள்களின் புழக்கம் மிகுதியாக இருக்கிறதோ, அந்த இல்லத்தினர் பல் மருத்துவருக்கென இப்போதே உண்டியல் வைத்துப் பணம் சேர்த்து வாருங்கள் !

வாய் என்னும் சுரங்கத்திற்குள் என்னவெல்லாம் கொட்டப்பட்டு உள்ளே தள்ளப்படுகின்றன என்பதற்குக் கட்டுப்பாடும் கிடையாது; யாரும் கணக்கு வைத்துக் கொள்வதும் கிடையாது ! ஆனால்.. உரையாடும் நேரம் தவிர உண்டல், உறிஞ்சல், விழுங்கல், சுவைத்தல், கடித்தல், கொறித்தல், சப்பல், என பல செயல்களுக்காக அதிக நேரம் செலவழிக்கிறோம் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை !

வீட்டில் இருக்கும் பொறியுரல் (WET GRINDER) போன்ற அரைவை எந்திரங்களைக் கூடத் தூய்மையாக வைத்துக் கொள்கிறோம். ஆனால் வாய் என்னும் அரைவை ஆலையை   தூய்மையாக வைத்துக் கொள்வதில் அக்கறை செலுத்துவதில்லை ! உணவு உண்கின்ற  மூன்று வேளைகளில் மட்டும் வாயைப் பெயரளவுக்கு  கொப்பளிக்கிறோம்; ஆமாம் பெயரளவுக்குத் தான் கொப்பளிக்கிறோம் ! உணவுத் துணுக்குகள் போகுமளவுக்கு முழுமையாகக் கொப்பளிப்பதில்லை ! நொறுவைத் தீனிக்குப் பிறகு கொப்பளிப்பதே இல்லை !

தேநீர், குளம்பி போன்ற குடியங்களை (DRINGS) அருந்திய பிறகு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும். எந்த மனிதரும் இவ்வாறு செய்வதில்லை. குடியங்களின் (DRINKS) எச்சம் வாயில் இருக்கும் வரை நுண்ணியிரிகளுக்குக் கொண்டாட்டம் தானே !

எதை உண்டாலும், எதை அருந்தினாலும் அல்லது எதைக் கொறித்தாலும் உடனே நன்றாக வாய் கொப்பளித்துத் துப்பும் பழக்கம் இருக்குமாயின் பற்சொத்தை நம்மை ஏறிட்டும் பார்க்காது ! நம்மை அணுகவும் அச்சப்படும் !

நாகரிக வாழ்க்கை என்று சொல்லி, பல்துலக்கும் குச்சிகளுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டோம். பற்பசையை வழக்கிற்குக் கொண்டு வந்து விட்டோம். பற்பசையில் ஆலங்குச்சி, அரசங்குச்சி போல் மூலிகை மருந்துச் சத்துகளா இருக்கின்றன ? அதில் இருப்பவை அத்துணையும் வேதிப் பொருள்கள் (CHEMICALS) ! இந்த வேதிப் பொருள்கள் பற்களை அரிமானத்திற்கு  இலக்காக்கி, ஈறுகளை இளக்கி, நம்மையெல்லாம் பல் மருத்துவர்களிடம் அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றன !

உண்மை தெரியாமல் நாம் பல்வலிக்கும் பற் சொத்தைக்கும் இடங்கொடுத்து வருகிறோம். இந்தப் பற்பசை தன்னை வனைந்து தரும் (தயாரித்து) நிறுவன முதலாளிகளையும், பல் மருத்துவர்களையும் மறைமுகமாகப் பணக்காரர்கள் ஆக்கிக் கொண்டிருக்கிறது; நாம் பணத்தைச் செலவழித்துவிட்டு ஏழைகள் ஆகிக் கொண்டிருக்கிறோம் !

பற்பசையைப் பல் இடுக்குகள் முழுவதும் கொண்டு சேர்த்து, அங்கு ஒளிந்து கொண்டிருக்கும் உணவுத் துகள்களையும் நுண்ணுயிரிகளையும் அப்புறப் படுத்துவதாக எண்ணிக் கொண்டு  பல் தூரிகையை (TOOTH BRUSH) நாம் பயன் படுத்துகிறோம். பல் தூரிகை இப்பணிகளைச் செய்கிறதோ இல்லையோ,  பற்களின் புறப்பகுதி தேய்ந்து போவதில் பெரும் பங்கு வகிக்கிறது !

குடிமக்களுக்கு ஏற்படும் நோய்கள் பற்றி ஆய்வு செய்து, மக்களை எச்சரிக்க வேண்டிய அரசுகள் நன்றாக உறங்கிக் கொண்டு இருக்கின்றன ! நாமும் நோய்க்காகப் பெரும் பணத்தைச் செலவு செய்து கொண்டிருக்கிறோம் !

பல்நோய் வராமல் தடுக்கவும், போலி நாகரிகத்துக்கு இடம் தராமல் தவிர்க்கவும் உறுதியாக விரும்புவோர், பற்பசை கொண்டு தூரிகையால்  பல் துலக்கும் வழக்கத்தைத் தூக்கி எறிந்து விட்டு, மூலிகைக் குச்சிகளுக்கு மாறுங்கள்; குறிப்பாக உங்கள் பிள்ளைகளை, பேரப் பிள்ளைகளை இப்போதே பல் நோயிலிருந்து காப்பாற்ற உறுதி எடுத்துக் கொள்ளுங்கள் !

நகர வாழ்வுக்குப் பழக்கப் பட்டுப்போன மக்கள் மூலிகைக் குச்சிகளைக் கொண்டு பல் துலக்கும் பழக்கத்திற்கு மாறுவது என்பது அவர்களைப் பொறுத்தவரைக் கடினமான செயலே ! என்ன செய்வது ? பற்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், பல் மருத்துவரிடம் செல்ல வேண்டிய தேவை எழாமலிருக்க வேண்டுமானால், மாறித் தான் ஆக வேண்டும் !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, ஆடவை (ஆனி),15]
{29-06-2020}

----------------------------------------------------------------------------------------------------------
      தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------


சிந்தனை செய் மனமே (58) கல்வி முறையில் சீர்திருத்தம் தேவை !

தமிழில் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு இளைய தலைமுறை   உருவாகிக் கொண்டிருக்கிறது !


சிந்தனை தான் அறிவின் ஊற்றுக் கண் ! ஒரு மனிதன் சிந்திக்கச் சிந்திக்கத் தான் அவனுக்குத் தெளிவு பிறக்கிறது ! சிந்திக்கத் தெரிந்த மனிதன் அதைத் தன் வாழ்க்கை வளத்திற்கும் குமுகாய முன்னேற்றத்திற்கும் பயன் படுத்த வேண்டும் !

மனிதனின் வாழ்க்கைத் தேவைகள் அவன் வாழும் சூழல் மற்றும் செல்வ நிலைக்குத் தக்கபடி மாறுபடுகிறது. தெருவோரத்தில் வாழ்பவனுக்கு அடுத்த முதன்மையான தேவை குடியிருக்க ஒரு வீடு ! ஓலைக் குடிசையில் வாழ்பவனுக்கு அடுத்த முதன்மையான தேவை பிள்ளைகளுக்கு இலவயக் கல்வி. இவ்வாறே ஒவ்வொரு மனிதனுக்கும் முதன்மைத் தேவைகளின் பட்டியல் மாறு படுகிறது !

ஒவ்வொரு மனிதனுக்கும் அடுத்த முதன்மைத் தேவை எது என்பதில் மாறுபாடு இருக்கலாம் ஆனால் அனைத்து மனிதர்களுக்கும் மாறுபாடு இல்லாமல் அடிப்படைத் தேவையாக இருப்பது உண்பதற்கு உணவு ! தேவையான உடை, வசதியான உறையுள், அருகில் அமைந்துள்ள பள்ளி, பயணம் செய்யச் சீருந்து என எத்துணை வசதிகளை ஒரு மனிதன் பெற்றிருந்தாலும்  அடிப்படைத் தேவையான உணவு இல்லையேல், வாழ்க்கை என்பதற்குப் பொருளே இல்லாமல் போய்விடும் !

கல்வியும் அப்படித்தான் ! இக்காலத்தில் சிறார்கள் மூன்றாம் அகவையிலிருந்தே பள்ளிகளுக்கு அனுப்பப் படுகிறார்கள். மழலையர் பள்ளியிலிருந்து பிறமொழிகள் கற்பிப்புத் தொடங்கி விடுகிறது. குறிப்பாக ஆங்கிலம் கற்பிப்பது இங்கு தான் தொடங்குகிறது ! தமிழ்க் குழந்தைக்குஏ ஃபார் ஆப்பிள்”. “பி ஃபார் பால்”, “சி ஃபார் கேட்என்று சொல்லிக் கொடுத்து குழந்தைகளின் தொண்டைக்குள் ஆங்கிலம்  வலுக் கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது !

மழலையர் பள்ளியில் ஈராண்டுகள் கழிந்த பின்பு தொடக்கப் பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்க்கப்படுகிறார்கள். இங்கும் ஆங்கிலம் கற்பிப்புத் தொடர்கிறது.  மேல் வகுப்புக்குச் செல்லச் செல்ல கணிதம், அறிவியல், நிலவியல், சூழலியல், சமூகவியல் என்று கற்பிக்கப்படும் பாடங்கள் அனைத்தும் ஆங்கில வழியில் ! ஆங்கில வழியில் அனைத்துப் பாடங்களையும் கற்பித்தல் மட்டுமன்றி, இரண்டாவது மொழிப் பாடமாகத் தமிழைப் புறக்கணித்துவிட்டு  இந்தி, பிரஞ்சு போன்ற பிறமொழிகள் கற்பிப்பும் இங்கு தொடங்கிவிடுகிறது !

இந்தக் கல்வித் திட்டத்தில் இரண்டு பெருங் குறைகள் இருக்கின்றன ! அவை, (01) தாய்மொழிக் கல்விப் புறக்கணிப்பு (02) நல்லொழுக்கக் கல்வி இல்லாமை !

தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கு முதலில் தமிழைக் கற்றுக் கொடுக்க வேண்டும் ! தமிழைத் தெளிவாகப் பேசவும், எழுதவும் கற்றுக் கொடுக்க வேண்டும். இப்போது பின்பற்றப்படும் கல்வி முறையில் தாய்மொழிக் கல்வி முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுகிறது !

மழலையர் பள்ளிகள் நடத்தப்படுவதே மாபெறும் தவறு ! பெற்றோருடன், உற்றார் உறவினர்களுடன் பேசிப் பழகி அன்பையும் அவர்கள் பால் ஈர்ப்பையும் கற்றுக் கொள்ள வேண்டிய பருவத்தில் மழலையர் பள்ளி என்னும் சிறைகளுக்குள் இளங் குழந்தைகளை அடைத்து வைப்பது  குமுகாயக் குற்றம் ! இந்த நிலையில், , , ...” எனத் தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டிய பருவத்தில்ஏ பாஃர் ஆப்பிள்என்று ஆங்கிலம் புகட்டுவது அறநெறி வழுவிய செயலாகும் !

கொலை செய்வது குற்றம்; கொலைக்கு உடந்தையாக  இருப்பதும் குற்றம் என்று சட்டம் இயற்றத் தெரிந்தவர்களுக்கு தாய்மொழிக் கல்வியைச் சொல்லித் தராமல்  மழலையர் பள்ளியுள்பட அனைத்துப் பள்ளிகளும் புறக்கணித்து வருவது  குற்றம் என்பதும் அதற்கு உடந்தையாக மாநில அரசு செயல்படுவது அதைவிடக் குற்றம் என்பதும் ஏன் தெரியவில்லை ?

தமிழைப் புறக்கணித்து விட்டு, ஆங்கிலத்தையும், இந்தியையும், பிரஞ்சையும் கற்றுக் கொடுக்கும் பள்ளிகள், சேவை நோக்கிலிருந்து விலகி வணிக நோக்கில் செயல்படுகின்றன என்பதை மாநில அரசு ஏன் உணரவில்லை ? பிரஞ்சு படிக்கும் பள்ளிக் குழந்தைகள் எல்லாம் வேலை வாய்ப்பிற்காக பிரான்சு நாட்டுக்கா செல்லப் போகிறார்கள் !

தமிழைத் தள்ளி வைத்து விட்டு, இந்தியைக் கற்றுக் கொடுக்கும் பள்ளிகள், இந்தக் குழந்தைகளின் எதிர்கால வாழ்வுக்கு மாபெரும் தீங்கு செய்கின்றன என்பதை மாநில அரசு ஏன் உணரவில்லை ? இந்தி கற்றுக் கொள்ளும் பிள்ளைகள் எல்லாம் இந்தி பேசும் மாநிலங்களில் குடியேறித் தங்கள் எதிர்கால வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவா போகிறார்களா ?

மக்களுக்கு நல்ல வழிகாட்டியாக விளங்க வேண்டிய பள்ளிகளும், மாநில அரசும் குழந்தைகளின் எதிர்கால வாழ்வுடன் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருக்கின்றன ! அறிவு என்னும் விளக்கை ஒளித்து வைத்துவிட்டு, அறியாமை என்னும் இருளில் உழலும் பெற்றோர்கள், தம் குழந்தைகளின் எதிர்கால வாழ்வுக்கு வலிவான அடித்தளத்தை இடுவதாக நினைத்துக்கொண்டு, அவர்களுக்குச் சோளத்தட்டையைக் கொண்டு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள் !

தமிழில் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு இளைய குமுகாயம் தமிழ் நாட்டில் உருவாகிக் கொண்டிருக்கிறது. நாடோடி இனத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் மொழியில் பேசுவார்கள்; ஆனால்  அவர்கள் பேச்சை எழுத்து வடிவில் எழுதத் தெரியாது, யாராவது எழுதி இருந்தாலும் அதைப் படிக்கத் தெரியாது ! தமிழ் இனத்தை, தமிழ் மக்களை, நாடோடிக் கும்பல்களாக உருமாற்றம் செய்யும் பணியை, அனைத்துத் தனியார் பள்ளிகளும் செய்து வருகின்றன; அதைத் தமிழக அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது !

இரண்டாவதாக, இன்றைய கல்வித் திட்டத்தில் நல்லொழுக்கக் கல்விக்கு முற்றிலும் இடம் இல்லாமற் போய்விட்டது ! மனிதனின் வாழ்க்கை, கணிதம், அறிவியல், சூழலியல்  போன்ற பாடங்களைக் கற்றுக் கொள்வதால் மட்டும் முழுமை அடைந்து விடுவதில்லை. நல்லொழுக்கத்தையும் அவன் கற்றுக் கொண்டால் தான், அவனது வாழ்வு சிறக்கும் !

திருடாதே”, பொய் சொல்லாதே”, மது அருந்தாதே”, சூதாட்டத்தில் ஈடுபடாதே”, பிற உயிர்களைத் துன்புறுத்தாதே”, “அனைவரிடமும் அன்பு செலுத்து”, ”பெரியோர்களை மதித்து ஒழுகு”’, என்பதையெல்லாம் இளம் பருவத்திலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து அவர்களைப் பண்படுத்த வேண்டிய  பெரும் பொறுப்பு பள்ளிகளுக்குத் தான் இருக்கிறது. !

பள்ளிகளின் பாடத் திட்டத்தில் இதற்கான வகுப்புகள் அன்றாடம் ஒரு பாடவேளையாவது இருக்க வேண்டும். இதற்கானப் பாடப் புத்தகங்கள்  எழுதப்படவேண்டும். நல்லொழுக்கக் கல்வியைக் கற்றுத் தருவதற்கென தனி ஆசிரியர் இருக்க வேண்டும். கல்லூரிப்படிப்பு வரை நல்லொழுக்கக் கல்வி ஒரு பாடமாக வைக்கப்படவேண்டும் !

மூன்று அகவையிலேயே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகின்ற பண்பாடு நிலவுகின்ற நம் நாட்டில், நல்லொழுக்கக் கல்வி, பெற்றோர்களால் கற்றுத் தரப்படும் வாய்ப்பு அடைபட்டுப் போய்விட்டது. கூட்டுக் குடும்ப வாழ்க்கை மறைந்துபோய், சிறகு முளைத்த கிளிகளாய் ஆடவர்கள் எல்லாம், திருமணமான பிறகு தனிக் குடித்தனம் செல்கின்ற நம் நாட்டில், இளங்குழந்தைகள், தாத்தா பாட்டியிடமிருந்து சுவையான கதைகள் மூலம் நல்லொழுக்கக்   கல்வியைப்  பெறுகின்ற  வாய்ப்பு சிறிது கூட இல்லாமற் போய்விட்டது !

பணத்தை மட்டுமே தம் இலக்காகக் கொண்டு  நடைபெற்று வரும் தனியார் பள்ளிகள் நல்லொழுக்கக்   கல்வியைப் பற்றிச் சிந்திக்க மறுக்கின்றன. தனியார் பள்ளிகளுக்கும் பாடத் திட்டத்தை வகுத்துக் கொடுத்து, அவர்களை ஒழுங்கு படுத்திக் கண்காணிக்க வேண்டிய மாநில அரசும் தன் கடமையிலிருந்து வழுவி நிற்கிறது !

அரசுஎன்றால் என்ன என்பதற்கு இலக்கணம் தெரிந்தவர்கள் ஆட்சிக்கு வரும் வரை இத்தகைய தாழ்வு நிலை தமிழகத்தை விட்டு நீங்கப் போவதில்லை ! தமிழ்க் குழந்தைகளின் எதிர்காலமும் ஒளிபெறப் போவதில்லை ! தமிழினம் நாடோடிக் கும்பல்களின் நிலைக்குத் தள்ளப் படுவதிலிருந்தும் மீளப் போவதில்லை !

சிந்தனை செய்யுங்கள், மக்களே, சிந்தனை செய்யுங்கள் ! சிந்தித்தால்தான் தெளிவு பிறக்கும் !

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, ஆடவை (ஆனி),14]
{28-06-2020}
-------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------

சனி, ஜூன் 27, 2020

சிந்தனை செய் மனமே (57) வெளிச்சம் பரவட்டும் ! விடியல் பிறக்கட்டும் !

மக்கள் ஏதாவதொரு அரசியல் கட்சி மீது பற்றுக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் !



வெளிச்சத்தில் இருக்கும் பொருள்கள் நம் கண்களுக்குப் பளிச்செனத் துலங்குகின்றன! இருளில் இருப்பவை நம் பார்வைக்குத் தென்படுவதில்லை ! இருளில் இருப்பனவற்றையும் நாம் பார்க்க வேண்டுமானால், நமக்கு ஒரு விளக்குத் தேவை !

இந்த விளக்கு தான் நமது அறிவு ! அறிவு என்னும் விளக்கைப் பயன்படுத்தினால், இதுவரை நாம் அறியாமல் புதைந்து கிடக்கும் மறை பொருள்கள் பலவும் நம் அகக் கண்களுக்குத் தெற்றெனப் புலப்படும் ! அறிவு என்னும் இந்த விளக்கை முறையாகப் பயன்படுத்தத் தெரிய வேண்டும் !

பற்றுஎன்னும் திரை, நமது அறிவு விளக்குக்குப் பகையாகக் குறுக்கே வந்து மறித்து நிற்கும் !

நமது அகக் கண்களை மறைக்கும் பற்றினைவிலக்கி விட்டு அறிவு வெளிச்சம் கொண்டு தேடினால் புதைந்து கிடக்கும் எந்தப் பொருளும் நம் ஞானக் கண்களுக்குத் தெளிவாகத் தெரியும் !

நம் நாட்டில் அரசியல் களத்தில் நடக்கும் தவறான செயல்களை நாம் நமது அறிவால் பகுத்துப் பார்க்கவேண்டும் !

ஆனால், அவ்வாறு பகுத்துப் பார்க்கத் துணியும் முன், நமக்கு எந்தவொரு அரசியல் கட்சியின் மீதும் பற்றுஇருக்குமானால், அதை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்க்கும் திறன் நமக்கு இருக்க வேண்டும்!

ஆனால், தமிழ் நாட்டில் நிலைமை அப்படி இல்லை ! அறுபது விழுக்காடு மக்கள் ஏதாவதொரு அரசியல் கட்சி மீதுபற்றுக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் !

இந்தப் பற்றை ஒதுக்கி வைத்து விட்டு, அந்தக் கட்சியின் செயல்பாடுகள் பற்றிப் பகுத்தறியும் திறனை அவர்கள் முற்றிலுமாக இழந்து நிற்கிறார்கள்!

மக்களிடம் காணப்படும் இந்த பற்றுதான் பல அரசியல் கட்சிகளுக்கும் வலுவூட்டும் அடித் தளமாகப் பயன்படுகிறது !

எந்த அரசியல் கட்சியும் செய்யும் தவறான செயல்களை, மேற்கொள்ளும் தவறான அணுகு முறைகளைப் பகுத்து ஆய்ந்து பார்க்கும் திறனை இந்தப் பற்றுதான் பறித்துக் கொள்கிறது !

கட்சிப் பற்றுக் கொண்ட 60 % மக்களை இனி தொண்டர்கள்என்று அழைப்போம் !

எஞ்சிய 40% -ல், 20% மக்களுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை ! வாக்களிப்பதற்கு எந்தக் கட்சிக் கூடுதலாகப் பணம் தருகிறதோ, அதற்கு வாக்களிப்பார்கள் !

மீதமுள்ள 20% மக்கள் இராமன் ஆண்டால் என்ன ?, இராவணன் ஆண்டால் என்ன ? ” என்று மெய்ப்பொருள் பேசும் ஞானிகளாக (தத்துவ ஞானி)த் தங்களைக் கருதிக் கொள்பவர்கள்!

மக்கள் தொகையில் 60% அளவுக்கு இருக்கும் தொண்டர்கள்பற்றி இனி பார்ப்போம். இந்தத் தொண்டர்கள் ஏதாவது ஒரு கட்சி மீது பற்றுவைத்திருப்பவர்கள். இவர்களுக்கு இந்தப்பற்றுஎப்படி ஏற்பட்டது ?

தன் கட்சித் தலைவர் பிறரை விடப் புள்ளி விவரங்களுடன் ஏற்ற இறக்கமாக நன்றாகப் பேசுகிறார் என்பதற்காகச் சில தொண்டர்கள் அவர் கட்சி மீது பற்றுவைக்கிறார்கள் !

தனது தலைவர், தான் விரும்பிச் சுவைத்த நடிப்புக் கலையின் நாயகனாகத் திரைவானில் கொடிகட்டிப் பறந்தவர் என்பதற்காக அவர் கட்சி மீது சில தொண்டர்கள் பற்றுவைக்கிறார்கள்!

தனது சாதியைச் சேர்ந்தவர் என்பதற்காகச் சில தொண்டர்கள் ஒரு கட்சி மீதும் கட்சித் தலைவர் மீதும் பற்றுவைக்கிறார்கள் !

தான் சார்ந்த இனத்தை முன்னேற்ற வந்த தலைவர் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சில தொண்டர்கள் அவர் கட்சி மீது பற்றுவைக்கிறார்கள் !

தன் தந்தை ஆதரித்த கட்சி என்பதற்காகச் சில தொண்டர்கள் குறிப்பிட்ட ஒரு கட்சி மீதும், கட்சித் தலைவர் மீதும் பற்றுவைக்கிறார்கள். !

தமக்கு வேலைவாய்ப்பு அளித்தவர் என்பதற்காகச் சில தொண்டர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சித் தலைவர் மீதும் அவரது கட்சி மீதும் பற்றுவைக்கிறார்கள் !

தமக்குப் பிடிக்காத தலைவர் ஒருவரை கிழி கிழியென்று கிழிக்கிறார் என்பதற்காக ஒரு குறிப்பிட்டக் கட்சித் தலைவர் மீதும் அவர் சார்ந்த கட்சி மீதும் சில தொண்டர்கள் பற்றுவைக்கிறார்கள் !

தமது மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகச் சில தொண்டர்கள் ஒரு தலைவர் மீதும் அவரது கட்சி மீதும் பற்று வைக்கிறார்கள் !

தான் மிகவும் நேசிக்கும் மடலாட்ட வீரர்(CRICKET PLAYER) ஆதரிக்கும் கட்சி என்பதற்காகச் சில தொண்டர்கள் ஒரு கட்சி மீது பற்றுவைக்கிறார்கள் !

ஆன்மிகம் சார்புள்ள கட்சி என்பதற்காக, சில தொண்டர்கள் ஒரு கட்சி மீது பற்றுவைக்கிறார்கள் !

போலி ஆன்மிகத்தைத் தோலுரித்துக் காட்டும் கட்சி என்பதற்காகச் சில தொண்டர்கள் ஒரு கட்சி மீது பற்றுவைக்கிறார்கள் !

மொழியுணர்வு மிக்கவர்கள் நிறைந்த கட்சி என்பதற்காக, சில தொண்டர்கள் ஒரு கட்சி மீது பற்றுவைக்கிறார்கள் !

குறிப்பிட்ட தெய்வத்திற்குக் கோயில் கட்டுவதே தமது கோட்பாடு என்று கொள்கை உடைய கட்சி என்பதற்காக சில தொண்டர்கள் ஒரு கட்சி மீது பற்றுவைக்கிறார்கள் !

குறிப்பிட்ட விலங்கினைக் காக்க வந்திருக்கும் காவலர்களாகச் சிலரைக் கருதி அவர்கள் சார்ந்த கட்சி மீது சில தொண்டர்கள் பற்றுவைக்கிறார்கள் !

இவ்வாறு ஏதோ சில காரணங்களின் அடிப்படையில் தொண்டர்கள், கட்சிகள் மீதுபற்றுவைக்கிறார்களே அன்றி, அந்தக் கட்சியினால் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை கிடைக்குமா என்பதைப் பகுத்துப் பார்த்து பற்றுவைக்கின்ற திறனைத் தொண்டர்கள் முற்றிலுமாக இழந்து நிற்கிறார்கள். !

தனது கட்சித் தலைவருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது, அது நேர்மையாக ஈட்டிய வருமானத்தால் வாங்கப் பட்டவையா என்று எந்தத் தொண்டனும் சிந்தித்துப் பார்ப்பதில்லை !

தனது கட்சி, செல்வந்தர்களுக்கு மட்டுமே சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் வாய்ப்புகளை வழங்கி வருவது ஏன் என்று எந்தத் தொண்டனும் சிந்தித்துப் பார்ப்பதில்லை !

தனது கட்சி, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அமைச்சர் பதவி வாய்ப்புகளை வழங்கி வருவது ஏன் என்று எந்தத் தொண்டனும் சிந்தித்துப் பார்ப்பதில்லை !

தனது கட்சித் தலைவர்கள் மக்களைப் பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து அறிக்கை விடுவதுடன் நிறுத்திக் கொள்கிறார்களே தவிர, போராட்டம் நடத்திச் சிறை செல்ல அஞ்சுவது ஏன் என்று எந்தத் தொண்டனும் சிந்தித்துப் பார்ப்பது இல்லை!

தானோ தனது குடும்பத்தினரோ எந்தக் காலத்திலும் எந்தப் பதவியையும் ஏற்கமாட்டோம் என்று மக்களுக்குத் தந்த உறுதிமொழியை, தான்

பற்றுவைத்திருக்கும் கட்சித் தலைவர் மீறியது ஏன் என்று எந்தத் தொண்டரும் சிந்தித்துப் பார்ப்பது இல்லை !


எதிர்க்கட்சியைச் சேர்ந்த எந்த ஒரு ஆளிநருடனும், பேசக் கூடாது, அவர்கள் எதிரில் வந்தால் விலகிப் போகவேண்டும், அவர் குடும்பத்து நல்லது கெட்டதுகளுக்குப் போகக் கூடாது, அவர் வணக்கம் சொன்னாலும் திரும்ப வணக்கம் சொல்லக் கூடாது, அவரைப் பார்த்துப் புன்னகை செய்யக் கூடாது என்று தன் தலைவர் எழுதப்படாத கட்டுப்பாடுகளை ஏவியது சரிதானா என்று எந்தத் தொண்டனும் சிந்தித்துப் பார்ப்பது இல்லை !

ஒரு குடும்பத்தினரே கட்சிக்குள் மேலாண்மை செலுத்தும் வகையில், தன் குடும்ப உறுப்பினர்களைக் கட்சிப் பதவிகளில் அமர்த்துவது ஏன் என்று அந்தக் கட்சித் தலைவர் மீதும் அவரது கட்சி மீதும் பற்றுவைத்திருக்கும் தொண்டர்கள் சிந்தித்துப் பார்ப்பது இல்லை !

அமைச்சர்களும் சரி, அரசியல் தலைவர்களும் சரி, அனைத்து மதத்தவர்களுக்கும் அனைத்து மக்களுக்கும் பொதுவானராக இருக்க வேண்டும். இந்த கோட்பாடுகளைப் பின்பற்றி காமராஜரோ, பக்தவத்சலமோ, இராஜாஜியோ, அண்ணாவோ, நேருவோ, இந்திரா காந்தியோ, ஜெயலலிதாவோ, ம.கோ.இரா.வோ தமது மதச் சின்னங்களை நெற்றியில் அணிந்து கொண்டதில்லை !

ஆனால், இப்போதைய அமைச்சர்கள் சிலர், நெற்றியில் திருநீறு அல்லது திருநீற்றுடன் குங்குமமும் அணிந்து கொள்ளாமல் வெளியில் தோன்றுவதே இல்லை. இது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடா அல்லது மக்களை ஏமாற்றி வாக்கு வங்கியைப் பெருக்கும் மலிவான அரசியல் தந்திரமா என்பதை எந்தத் தொண்டனும் சிந்தித்துப் பார்ப்பதில்லை !

ஆளுநரைச் சந்தித்து விண்ணப்பம் தந்தவர்களின் பதவி பறிக்கப்பட்டது; ஆனால் அரசைக் கவிழ்க்கும் வகையில் சட்ட மன்றத்தில் எதிர்த்து வாக்களித்தவர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படுகிறது. இது என்ன ஞாயம் என்று எந்தத் தொண்டனும் சிந்தித்துப் பார்ப்பது இல்லை !

கண்மூடித் தனமாக அரசியல் கட்சிகளை ஆதரிக்கும் தொண்டர்களால் தான், தவறு செய்யும் கட்சிகள் மேலும் மேலும் தவறுகளைச் செய்யத் துணிகின்றன!

60% அளவுக்கு உள்ள கட்சித் தொண்டர்கள், பகுத்தறிந்து பார்க்க வேண்டும். குறிப்பிட்ட கட்சியை ஆதரிப்பதால், ஒட்டு மொத்த மக்களுக்கும் என்ன நன்மை என்பதை இந்தத் தொண்டர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் !

இரட்டியார், நாயுடு, கம்மவார், பத்மசாலியர், இராஜு, நாயக்கர், 24 மனைத் தெலுங்குச் செட்டியார், தெலுங்குப் பார்ப்பனர், ஆதி ஆந்திரர், ஒட்டர், கம்பளத்தார், போயர், தேவாங்கர், பட்ராஜு, தாசரி, தொம்மாரா, ஜங்கம், ஜோகி என்று பல இனங்களைச் சேர்ந்த தெலுங்கு பேசும் மக்கள் தமிழ்நாட்டில், வாழ்ந்து வருகிறார்கள் !

ஆனால், ஒரு அரசியல் தலைவரை மட்டும் குறி வைத்து, தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட வடுகர்என்ற பொய்ப் பரப்புரையைச் செய்து ஆட்சிக்கு வர நினைக்கும் உணர்ச்சித் தலைவரின் தொண்டர்கள், தங்கள் தலைவர் தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் இதுவரை என்ன தொண்டு செய்திருக்கிறார், மக்களுக்காக என்ன ஈகம்(தியாகம்) செய்திருக்கிறார் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது இல்லை ?

மேற்குறிப்பிட்ட அனைவருமே தெலுங்கு பேசுபவர்கள்என்னும் நிலையில் அவர்களது வாக்குகள் இல்லாமல், “உணர்ச்சித் தலைவர் ஆட்சிக்கு வந்து விட முடியுமா, என்பதை எந்தத் தொண்டரும் சிந்தித்துப் பார்ப்பது இல்லை ?

தொண்டர்கள் தவிர்த்து, 20% அளவுக்கு உள்ள மெய்ப்பொருள் ஞானிகள்எனத் தங்களைக் கருதிக் கொள்வோர், தங்கள் நிலைசரிதானா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் !

தவறு செய்யும் அரசியல் வாதிகளைக் குப்புறக் கவிழ்க்க இவர்கள் முன்வந்தாலன்றி, அரசியல் அரங்கில் உள்ள களைகளை எப்படி அகற்ற முடியும் என்பதை இவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் !

தேர்தல் நேரத்தில் விலைபோகும் எஞ்சிய 20% மக்களே! உங்கள் செயல் யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக் கொள்ளும் செயலுக்கு ஒப்பானது அல்லவா ?

உங்கள் செயல், உங்களுக்கு நீங்களே தோண்டிக் கொள்ளும் சவக்குழி அல்லவா ?

மக்களே ! சிந்தியுங்கள் ! அரசியல் அரங்கில் தவறு செய்பவர்களை ஆதரிக்காதீர்கள் !

கட்சிப்பற்றுக்குகட்டுப்பட்டு மீண்டும் மீண்டும் தவறு செய்யாதீர்கள் ! தேர்தல் வரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை!

இனி, கட்சிக் கூட்டங்களுக்குப் போகாதீர்கள்! கட்சி சார்பு நிகழ்ச்சிகளுக்குப் போகாதீர்கள் ! கட்சி சார்ந்த தலைவர்கள்வீட்டு நிகழ்ச்சிகளைப் புறக்கணியுங்கள் !

கட்சித் தலைவர்களுக்குக் கொடி பிடித்து அவர்கள் பின்னே அணி வகுத்துச் செல்லாதீர்கள் ! கட்சித் தலைவர்களைப் பார்த்து வாழ்கஎன்று முழங்காதீர்கள்!

இவை எல்லாம் கட்சித் தலைவர்களுக்கு நீங்கள் விடுக்கும்எச்சரிக்கைசைகையாக அமையும் ! இந்த எச்சரிக்கையக் கண்டாவது தலைவர்கள் திருந்தக் கூடுமல்லவா ? வெளிச்சம் பரவட்டும் ! புதிய விடியல் பிறக்கட்டும் !

---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, ஆடவை (ஆனி),13]
{27-06-2020}
-------------------------------------------------------------------------------------------------------
              தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற
 கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------