name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: இலக்கணம்
இலக்கணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மே 05, 2021

இலக்கணம் (19) பா வகைகள்

ஆசிரியப் பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா!

------------------------------------------------------------------------------------------------------------


01. பா வகைகள் :- பா வகைகள் நான்கு வகைப்படும். அவை;- (01) வெண்பா (02) ஆசிரியப்பா (03) கலிப்பா (04) வஞ்சிப்பா.

 

02. வெண்பாவின் இலக்கணம் :-

 

01. ஈற்றடி முச்சீராகவும், ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும்.

02. இயற்சீர் (மாச்சீர், விளச்சீர்), வெண்சீர் (காய்ச்சீர்) ஆகியவை வரும். பிற சீர்கள் வரா.

03. இயற்சீர் வெண்டளையும் (மாமுன் நிரை, விளமுன் நேர்), வெண்சீர் வெண்டளையும் (காய்முன் நேர்) வரும். பிற தளைகள் வரா.

04. ஈற்றடியின் ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாடுகளுள் ஒன்று கொண்டு முடியும்.

05. செப்பலோசை பெற்று வரும்.

06. இரண்டடி முதல் பன்னிரண்டு அடிகள் வரை வரும்.

 

03. வெண்பாவின் வகைகள் (பக்216):- வெண்பாவின் வகைகள் ஆறு ஆகும். அவை;- (01) குறள் வெண்பா (02) நேரிசை வெண்பா (03) இன்னிசை வெண்பா (04) பஃறொடை வெண்பா (05) நேரிசைச் சிந்தியல் வெண்பா (06) இன்னிசைச் சிந்தியல் வெண்பா.

 

04. குறள் வெண்பா (பக். 216) :- வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகளைக் கொண்டு, ஒரு விகற்பத்தானும், இரு விகற்பத்தானும் வருவது குறள் வெண்பா. (விகற்பம் = வேறுபாடு) (எ-டு)

 

(01) அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி

       பகவன் முதற்றே உலகு.

(இரண்டு அடிகளும் ககர எதுகை பெற்று வந்துள்ளதால், இது ஒரு விகற்பம் எனப்படும்)

 

(02) பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்

       எண்ணிய தேயத்துச் சென்று.

(எதுகைக்குரிய இரண்டாமெழுத்து இரண்டு அடியிலும் ஒன்றி வராததால், இது இருவிகற்பம் எனப்படும்.)

 

05. நேரிசை வெண்பா (பக் 216) :- வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று, நான்கு அடிகளைக் கொண்டதாகவும், இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்றும், முதல் இரண்டடி ஒரு விகற்பமாகவும், நான்கடிகளும் ஒரே விகற்பமாகவும் வருவது நேரிசை வெண்பா எனப்படும்.

 

(எடுத்துக் காட்டுப்பாடலைப் புத்தகத்தில் பக்கம் 217-ல் காண்க.)

 

06. இன்னிசை வெண்பா :-வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று, (01) இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் இல்லாமல் நான்கடிகள் உடையதாய் வரும். (அல்லது) (02) இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று, மூன்று விகற்பத்தான் வரும். (அல்லது) (03) மூன்றாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று இரண்டு விகற்பத்தான் வரும்.

 

(எடுத்துக்காட்டுப் பாடலை புத்தகத்தில் பக்கம் 217-ல் காண்க)

 

07. பஃறொடை வெண்பா (பக். 217) :- வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று, ஐந்தடி முதல் பன்னிரண்டு அடி வரை பெற்று வருவது பஃறொடை வெண்பா. (எடுத்துக் காட்டுப்பாடலை புத்தகத்தில் பக்கம் 218-ல் காண்க)

 

08. நேரிசைச் சிந்தியல் வெண்பா (பக்.218):- வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று நேரிசை வெண்பாவைப் போல் இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று, ஒரு விகற்பத்தானும், இரு விகற்பத்தானும் மூன்றடிகளாய் வருவது நேரிசைச் சிந்தியல் வெண்பா. (எடுத்துக்காட்டுப் பாடலை புத்தகத்தில் பக்கம் 218-ல் காண்க)

 

09. இன்னிசைச் சிந்தியல் வெண்பா (பக் 218):-வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று, மூன்றடி கொண்டதாய், தனிச்சொல் இன்றி, ஒரு விகற்பத்தானும், பல விகற்பத்தானும் வருவது இன்னிசைச் சிந்தியல் வெண்பா. (எடுத்துக் காட்டுப் பாடலை புத்தகத்தில் பக்கம் 218 –ல் காண்க)

 

10. ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் :-

 

(01) ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்கள் (அளவடி) பெற்று வரும்.

 

(02) இயற்சீர் (மாச்சீர், விளச்சீர்) கொண்டதாக வரும். பிற சீரும் அரிதாக வரும். ஆனால் வஞ்சி உரிச்சீர்கள் வரா.

 

(03) ஆசிரியத் தளைகள் பயின்று (கொண்டதாக) வரும். பிற தளைகளும் கலந்து வரும்.

 

(04) குறைந்த பட்சம் மூன்று அடிகளைக் கொண்டிருக்கும். அடிகளின் எண்ணிக்கையில் மேல்வரம்பு ஏதுமில்லை.

 

(05) அகவலோசை பெற்று வரும்.

 

(06) ஈற்றடியின் ஈற்றுச் சீர் என்னும் எழுத்தில் முடியும்.

 

11. ஆசிரியப் பாவின் வகைகள் (பக்.219):- (01) நேரிசை ஆசிரியப்பா (02) இணைக்குறள் ஆசிரியப்பா (03) நிலை மண்டில ஆசிரியப்பா (04) அடிமறி மண்டில ஆசிரியப்பா. (ஆசிரியப் பாவுக்கு அகவற்பா என்றும் ஒரு பெயர் உண்டு)

 

12. நேரிசை ஆசிரியப்பா :- ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று, ஈற்றயலடி (கடைசிக்கு முந்திய அடி) முச்சீராயும், பிற அடிகள் நாற்சீராயும் வருவது நேரிசை ஆசிரியப்பா.

 

(எடுத்துகாட்டுப் பாடலை புத்தகத்தில் பக்கம் 220 –ல் காண்க)

 

13. இணைக்குறள் ஆசிரியப்பா (பக். 220):- ஆசிரியப் பாவின் பொது இலக்கணத்தோடு, முதல் அடியும் கடைசி அடியும் நாற்சீர் அடிகளாகவும், இடையில் உள்ள அடிகள் இருசீர் அடிகளாகவும் (குறளடி), முச்சீர் அடிகளாகவும் (சிந்தடி), வருவது இணைக்குறள் ஆசிரியப்பா. (எடுத்துக் காட்டுப் பாடலை புத்தகத்தில் பக்கம் 220 –ல் காண்க)

 

14. நிலைமண்டில ஆசிரியப்பா (பக்.220):- ஆசிரியப் பாவின் பொது இலக்கணம் பெற்று, எல்லா அடிகளும் நாற்சீர் அடிகளாய் (அளவடி), வருவது நிலைமண்டில ஆசிரியப்பா ஆகும். (எடுத்துக்காட்டுப் பாடலை புத்தகத்தில் பக்கம் 220 –ல் காண்க)

 

15. அடிமறி மண்டில ஆசிரியப்பா (பக்.220) :- ஆசிரியப் பாவின் பொது இலக்கணம் பெற்று, எல்லா அடிகளும் முன்பின்னாக மாற்றி மாற்றிப் படித்தாலும் ஓசையும் பொருளும் மாறாது வருவது, அடிமறி மண்டில ஆசிரியப்பா ஆகும். (எடுத்துகாட்டுப்ம்பாடலை புத்தகம் பக்கம் 221 –ல் காண்க.)

 

-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,


வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[28-12-2018]

-------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்ப் பணி மன்றம்  முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை!
-------------------------------------------------------------------------------------------------------------
  

வெள்ளி, செப்டம்பர் 11, 2020

இலக்கணம் (18) முயற்சிக்கிறேன் என்று எழுதாதீர்; பேசாதீர்

தவறு செய்யலாமா ?


சொற்கள் நான்கு வகைப்படும். அவை பெயர்ச் சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியன.  நாம் இங்கு வினைச்சொல் பற்றி மட்டும் பார்ப்போம் !

வினைச்சொற்கள் என்பவை வினைமுற்று, வினையெச்சம், பெயரெச்சம் என மூவகைப்படும்.  இச்சொற்களை, பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி எனச் சொற்களுக்குக்கு ஏற்பப்  பகுக்க முடியும் !

”எழுதுகிறான்” என்னும் வினைமுற்றை ,  எழுது + கிறு + ஆன் என்று மூன்றாகப் பகுக்க முடியும். இதில் “எழுது” என்பது பகுதி. 
”எழுதி” என்னும் வினையெச்சச் சொல்லை “எழுது + இ” என்று பகுக்கலாம். இதிலும் “எழுது”  என்பது பகுதி. “எழுதிய” என்னும் பெயரெச்சச் சொல்லை  “எழுது + இ +  அ” என்று பகுக்கலாம். இதிலும் “எழுது” என்பது பகுதி !

“பகுதி”யிலிருந்து தான் ஒரு வினைமுற்றுச் சொல்லோ, ஒரு வினையெச்சச் சொல்லோ அல்லது ஒரு பெயரெச்சச் சொல்லோ உருவாகிறது. இது தான் சொல் இலக்கணத்தின் அடிப்படை !

“எழுது” என்னும் பகுதியின் அடைப்படையில் உருவாகும்  இன்னொரு சொல் “எழுத்து” என்பது. இதற்குத் தொழிற்பெயர் என்று பெயர்.

இதிலிருந்து உங்களுக்கு ஒன்று விளங்கும். அஃதாவது, “பகுதி” என்னும் தண்டிலிருந்து தான் (1) வினைமுற்று (2) வினையெச்சம் (3) பெயரெச்சம் (4) தொழிற் பெயர் ஆகிய நான்கும்  கிளைக்கின்றன. மாறாக, வினைமுற்றிலிருந்து ஒரு வினையெச்சமோ, பெயரெச்சமோ கிளைப்பதில்லை. இவ்வாறே மற்றவற்றுக்கும் பொருத்திக் கொள்க !

குறிப்பாக, இப்போது நீங்கள் நினைவிற் கொள்ள வேண்டியது, ”ஒரு தொழிற் பெயரிலிருந்து  ஒரு வினைமுற்றோ, ஒரு வினையெச்சமோ அல்லது ஒரு பெயரெச்சமோ கிளைப்பதில்லை’”!  கிளைக்கவும் முடியாது; கிளைப்பதாகச் சொன்னால் அது தவறான கூற்று !


”பயணம்” என்பது இப்போது வழக்கில் இருக்கும் ஒரு சொல். இலக்கணப்படி இது தொழிற் பெயர்.  தொழிற் பெயரென்றாலும் அதைப் பகுதி, விகுதி என்று பகுக்க முடியுமல்லவா ? ”பயணம் என்பதை எப்படிப் பகுப்பது ? பயண் + அம் என்றா ? ஆம் என்றால் “பயண்” என்பதற்கு என்ன பொருள் ? பொருளற்ற சொல் ”பயண்” என்பது ! 

வேறு சில தொழிற் பெயர்களையும் அவற்றைப் பகுக்கும் விதத்தையும் பார்ப்போம் !

பயிற்சி = பயில் + ச் + இ = பயிற்சி
நடை = நட + ஐ = நடை
பார்வை = பார் + வ் + ஐ = பார்வை
துடிப்பு = துடி + ப் + ப் +உ = துடிப்பு
கொலை = கொல் + ஐ = கொலை

இந்த ஐந்து எடுத்துக் காட்டுகளிலும்  உள்ள பகுதிச் சொற்களான “பயில்”, “நட”. “பார்”, “துடி”. “கொல்”  ஏனும் சொற்களுக்குப் பொருளுண்டு.  பொருளுள்ளவை மட்டுமே “பகுதி” யாக அமையும்!

பயணம் = பயண் + அம் = பயணம்.
பயணம் = பய + ண் = அம் = பயணம்

இந்த எடுத்துக் காட்டுகளில் ”பகுதி”யாக வரும்  “பயண்” என்றாலும் சரி, “பய” என்றாலும் சரி, அதில் பொருள் இருக்கிறதா ? இல்லையே ! பொருளற்றவை பகுதியாக இருக்க முடியாதல்லவா ?

ஏன் இப்படி ? காரணம் “பயணம்” என்பது தமிழ்ச் சொல்லே அன்று ! அதலால்தான் அதைப் பகுதி, விகுதி என்று பகுக்க முடியவில்லை !

“பகுதி” இல்லாத “பயணம்” என்னும் சொல்லை வைத்துக் கொண்டு” ”பயணிக்கிறான்”, “பயணித்தேன்” “பயணிப்பேன்” என்றெல்லாம் எழுதுவது எங்ஙனம் தமிழாகும் ? 

இத்தகைய இன்னொரு சொல் தான் “மரணித்தல்”.  “மர்” என்னும் வடமொழிச் சொல்லின் திரிபு தான் “மரணம்”. ‘மரணம்” என்னும் சொல்லை பகுதி விகுதி என்று பகுக்கமுடியாது.  “மரணம்” என்பதே தமிழ்ச் சொல் அல்லாத போது  “மரணிக்கிறான்”, “மரணித்தான்” என்றெல்லாம் எழுதுவது  பொருளற்ற வெற்றுச் சொற்கள் அல்லவா ? 

இதே போன்ற இன்னொரு தவற்றைப் பலரும் செய்கிறார்கள். ”முயல்” என்னும் பகுதியிலிருந்து தோன்றுபவை “முயன்றான்”, “முயல்கிறான்”, ”முயல்வான்”, “முயன்று”, “முயன்ற”, ”முயற்சி” ஆகிய சொற்கள்.  “முயல்” என்னும் பகுதியிலிருந்து தான் “முயற்சி” போன்ற பிற சொற்கள் உருவாகின்றன. “முயற்சி” என்னும் தொழிற்பெயரிலிருந்து  வேறு சொற்கள் தோன்றுவதில்லை ! அப்படி இருக்கையில் “முயற்சிப்பேன்”, ‘முயற்சிக்கிறேன்”, “முயற்சிப்போம்’ என்றெல்லாம் பேசுவதும் எழுதுவதும் தவறல்லவா ?

முயற்சிப்பேன் (பிழை) ----முயல்வேன் (சரி)
முயற்சிக்கிறேன் (பிழை)----முயல்கிறேன் (சரி)
முயற்சிப்போம் (பிழை) ----முயல்வோம் (சரி)

”முயற்சி” என்னும் தொழிற் பெயரில் இருந்து முயற்சிப்பேன், முயற்சிக்கிறேன், முயற்சிப்போம்  போன்ற சொற்களை உருவாக்கலாம் என்றால், “சுண்டல்” என்னும் தொழிற் பெயரிலிருந்து “சுண்டலிப்பேன்”, ”சுண்டலிக்கிறேன்”, “சுண்டலிப்போம்” என்னும் சொற்களையும் உருவாக்கலாமே !

”குளியல்” என்னும் தொழிற் பெயரிலிருந்து “குளியலிக்கிறேன்”, “குளியலித்தேன்”’ “குளியலிப்பேன்” போன்ற சொற்களையும் உருவாக்கலாம் அல்லவா ?

“வெற்றி” என்னும் தொழிற் பெயரிலிருந்து ”வெற்றிப்பேன்”. “வெற்றிக்கிறேன்”’, “வெற்றிப்போம்” போன்ற சொற்களையும்  உருவாக்கலாம் அல்லவா ?

”முயற்சிக்கிறேன்’, “பயணிக்கிறேன்”, “மரணிக்கிறான்”, போன்ற பொருளற்ற சொற்களை உரையாடலில் கொண்டு வராதீர்கள்; எழுத்துகளில்  இடம் பெறச் செய்யாதீர் !  தமிழ்த் தொண்டில் மெய்யான நாட்டம் உள்ளோர் இனி இத்தகைய தவறுகளைச் செய்யாதீர் !

------------------------------------------------------------------------------------------------------------
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
(தி.பி: 2051, மடங்கல் (ஆவணி),25)
{10-09-2020}
-----------------------------------------------------------------------------------------------------------
           
 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------







இலக்கணம் (17) சரியான புரிதல் வேண்டும்

ஏன் கசக்கிறது ?


ஒரு மொழி, சிதைவு அடைவதைத்  தடுக்கும் அரணாக இலங்குவது இலக்கணம்.  ஆனால் இலக்கணம் என்னும் சொல்லைக் கேட்டவுடன் வேப்பங்காயைச் சுவைத்த உணர்வு தான் பலருக்கும் ஏற்படுகிறது.  இந்த உணர்வுக்குக் காரணம் இலக்கணம் பற்றிச் சரியான புரிதல் இல்லாமை தான் !

இலக்கணம் என்பது புதிதாக உருவாக்கப் பெற்ற  விதிகளின் தொகுப்பு அன்று ! நாம் பேசுகின்ற பேச்சில் இலக்கணம் இருக்கிறது; நாம் எழுதுகின்ற எழுத்தில் இலக்கணம் இருக்கிறது ! இந்த இலக்கணம் தான் நமது பேச்சுக்கும் எழுத்துக்கும் மிகுந்த அழகு சேர்க்கிறது !

”நான் பழம் தின்கிறேன்” என்பது நான் செய்கின்ற செயலை முறையான வகையில் வெளிப்படுத்தும் ஒரு சொற்றொடர்.  இந்தச் சொற்றொடரில் உள்ள மூன்று சொற்களையும் வேறு எந்த வகையில் உருமாற்றி எழுதினாலும் அந்தத் தொடருக்குப் பொருள் இருக்காது ! “நானு பழமது தின்னுப்பேன்” என்று மாற்றி எழுதிப் பாருங்கள். இத் தொடரில் ஏதாவது பொருள் இருக்கிறதா ?

இதிலிருந்து ஒரு உண்மை விளங்கும் ! அதாவது, பொருளற்ற எந்தத் தொடரும் இலக்கணம் பொதிந்ததாக இருக்க முடியாது ! இலக்கணத்துக்கு உட்பட்ட பேச்சுக்கும்  எழுத்துக்குமே ஒரு திட்டவட்டமான பொருள் இருக்கும்  !

“நான் பாடல் எழுதுகிறேன்”  இதில் உள்ள கருத்து மாறுபடாமல் ”நான் பாடலை எழுதுகிறேன்” என்று எழுதலாம். இரண்டு சொற்றொடர்களுமே இலக்கணத்தை உள்ளடக்கியவை. முதல் தொடரில் உள்ள “பாடல்” என்னும் சொல் (பாடு + அல் =பாடல்)  இரண்டாவது தொடரில் “பாடலை” (பாடு + அல் + ஐ = பாடலை) என்று சிறிது உரு மாற்றம் அடைந்திருக்கிறது !

“பாடல்”, என்னும் சொல் “பாடலை” என்று உரு மாற்றம் பெற்றது எப்படி ? பாடல் + ஐ = பாடலை ! அவ்வளவுதான் !  ”பாடல்” என்னும் சொல்லுடன் கூடுதலாகச் சேர்ந்துள்ள “ஐ” என்பது இரண்டாம் வேற்றுமை உருபு எனப்படும் ! இதைத்தான் இலக்கணம் நமக்கு எடுத்து உரைக்கிறது !

இலக்கணம் படித்துவிட்டு வந்த பின்பா “நான் பாடலை எழுதுகிறேன்” என்று  எழுதுகிறோம் ?  பொருளுள்ள எந்தத் தொடரை எழுதினாலும் அதில் இலக்கணம் தானாகவே அமைகிறது ! அதில் அமைந்துள்ள இலக்கணம் எவ்வகையானது என்று  சொல்லித் தருவதுதான்  “இலக்கண நூல்”

“நான் பாடல் எழுதுகிறேன்” என்னும் தொடரில் இரண்டாம் வேற்றுமை உருபாகிய “ஐ” மறைந்து நிற்கிறது. மறைந்து  நிற்றலை “தொக்கி” நிற்றல் என்பார்கள்.  “பாடல் எழுதுகிறேன்” என்பதில் இரண்டாம் வேற்றுமை உருபான “ஐ” தொக்கி நிற்பதால் இதை இரண்டாம் வேற்றுமைத் தொகை என்கிறது இலக்கணம் ! வேற்றுமை உருபு தொக்கி நிற்காமல் வெளிப்படையாக விரிந்து நிற்குமானால் அதை “வேற்றுமை விரி” என்பார்கள்.

பாடல் எழுதுகிறேன் = இரண்டாம் வேற்றுமைத் தொகை
பாடலை எழுதுகிறேன் = இரண்டாம் வேற்றுமை விரி.

மேற்கண்ட இரண்டு தொடர்களும் இலக்கணப்படி அமைந்தவை; ஆகையால் அவற்றில் பொருள் இருக்கிறது ! பொருளற்ற சொற்களிலோ தொடர்களிலோ ”பொருளும்” இருக்காது; ”இலக்கணமும்” இருக்காது !

சொற்கள் பல வகைப்படும்; அவற்றுள் பெயர்ச் சொல் என்பதும் ஒன்று. இடத்தைக் குறிப்பது இடப்பெயர். (எ-டு) சென்னை;  நிறம் போன்ற பண்புகளைக் குறிப்பது பண்புப் பெயர். (எ-டு) பசுமை ! நடைபெற்ற தொழிலைக் குறிப்பது தொழிற்பெயர். (எ-டு) சுண்டல். இவ்வாறு பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் எனப் பெயர்ச் சொற்கள் ஆறு வகைப்படும் !

இலக்கணத்தை இன்னொருவர் எடுத்து உரைக்கும் போது, கேட்பவர்க்குத் தலை சுற்றுவது போல் தோன்றும். ஆனால் தனது  பேச்சிலும் எழுத்திலும் இலக்கணம் இருப்பதை அவர் உணர்ந்து கொண்டால், அவருக்குத் தலைச் சுற்றல் வாராது !

”நான் சுண்டல் தின்கிறேன்”. இது கபிலனின் குறிப்பேட்டில் காணப்படும் எழுத்து. இதில் வரும் “சுண்டல்” என்பதை, ”சுண்டு + அல்” என்று பிரிக்கலாம். ”சுண்டு” என்பது “நீர் சுண்டுதலை”க் குறிக்கும் ஒரு வினைச் சொல். இந்த வினைச் சொல்லில் இருந்து “சுண்டல்” என்னும் பெயர்ச் சொல் தோன்றி இருக்கிறது !  

தொழில், வினை இரண்டும் ஒரே பொருளைக் குறிப்பன. ”சுண்டுதல்” என்னும் வினை அல்லது தொழிலில் இருந்து தோன்றிய பெயர்ச் சொல் தான் “சுண்டல்” . ஆகையால் “சுண்டல்” என்பது தொழிற் பெயர் !

இங்கு “சுண்டல்” என்னும்  தொழிற் பெயர் எதைக் குறிக்கிறது ? “நீர்ச் சுண்டப் பெற்ற”  பயற்றை  அல்லது கடலையைக்  குறிக்கிறது. இவ்வாறு ஒரு தொழிற்பெயர், அந்தத் தொழிலுக்கு உட்படுத்தப்பட்ட  பயறுக்கு ஆகிவந்திருப்பதால், “சுண்டல்” என்பது தொழிலாகு பெயர் எனப்படும் !

ஒரு சொல்லில் அல்லது தொடரில் அமைந்துள்ள இலக்கணத்தை எடுத்து உரைக்கும் போது  மனக் கிறுகிறுப்பு  ஏற்படுகிறது. “சுண்டல்” என்றால் என்ன, அது எதைக் குறிக்கிறது என்பதைச் சிந்தித்துப் புரிந்து கொண்டால், கிறுகிறுப்பும் வாராது; இலக்கணம் மீது வெறுப்பும் ஏற்படாது !

“சுண்டல்” என்பது தொழிலாகு பெயர் என்று இலக்கணத்தைப் படித்துக் கொண்டு  வந்த பிறகா ”நான் சுண்டல் தின்கிறேன்” என்று ஒருவன் பேசுகிறான்; எழுதுகிறான் !  “நான் சுண்டல் தின்கிறேன்” என்பதில் ஒரு பொருள் பொதிந்து இருக்கிறது; ஆகவே அதில் இலக்கணமும் இருக்கிறது !

இதை வேறு வகையில் பார்ப்போம் ! “நான் சுண்டலித்துத் தின்கிறேன்” என்று யாரும் பேசுவதில்லை; எழுதுவதுமில்லை. ஆகவே இதில் இலக்கணமும் இல்லை.  இந்தச் சொற்றொடரில் பொருளும் இல்லை !

தமிழ் எழுத்துகள் ஒவ்வொன்றும் எவ்வாறு பிறக்கிறது, எவ்வாறு ஒலிக்கிறது  என்பதைப் புரிந்து கொண்டால், “ர”கர, “ற”கர வேறுபாடு  எளிதாக விளங்கும். “ன”கர, “ண”கர வேறுபாடு தெள்ளிதின் புரியும்.  எழுத்துகளின் பிறப்பு, ஒலிப்பைப் பற்றிப் புரிந்து கொள்ளாவிட்டால் “அவற் இன்ரு தண் பென்னுடன் செண்ணை செள்கிராற்” என்று தான் வாழ்நாள் முழுதும் தமிழைக் கடித்துத் துப்பிக் கொண்டிருக்க வேண்டும் !

------------------------------------------------------------------------------------------------------
 ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
(தி.பி: 2051, மடங்கல் (ஆவணி),23)
{08-09-2020}
-------------------------------------------------------------------------------------------------------
           தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------





புதன், அக்டோபர் 16, 2019

இலக்கணம் (16) பிழை என்று தெரியாமல் பிழை செய்கிறோம் !

அறியாப் பிழைகள் !



நமது அன்றாட வாழ்வில் நாம் பேசுகையிலும் எழுதுகையிலும் நம்மை அறியாமலேயே சில பிழைகள் நேர்ந்துவிடுகின்றன ! யாராவது விளக்கினால் தவிர அவை பிழையான சொற்கள் என்பது நமக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது !

சாலையில் இடது புறமாகச் செல்ல வேண்டும் என்று சொல்கிறோம். இந்தச் சொற்றொடரில் என்ன பிழை இருக்கிறது ? யாராவது சொல்ல முடியுமா ? சொல்லமுடியாது; ஆனாலும் அதில் பிழை இருக்கிறது ! என்ன பிழை ?

இடம் + புறம் = இடப்புறம்; இடம் + கை = இடக்கை;  இடம் + கண் = இடக்கண். “இடம்என்றால் ஆங்கிலத்தில் LEFT ! ”இடம்என்பது தான் சரியான சொல்லே தவிரஇடதுஎன்பது பிழையான வடிவம். அதுபோன்றேவலம்என்பது தான் சரியான சொல்; “வலதுஎன்பது பிழையான வடிவம் !

ஆனாலும், “இடது” ”வலதுஎன்னும் சொற்கள் நம்மோடு ஒன்றிவிட்டன !  இடது புறம்”, “இடது கை”, “இடது கண்” “”வலது சாரி”, ”வலது புறம்”, “வலது கம்யூனிசிட்என்பன போன்ற சொற்கள் நம்மை விட்டுவிடுமா என்ன ?

எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசைஎன்று சொல்லக் கேட்கிறோம். தமிழில் எந்தச் சொல்லும்கரத்தில் தொடங்காது ! அப்படி இருக்கையில்ரொம்பஎப்படி நம் நாவில் இடம் பிடித்து விட்டது ?  நிரம்பஎன்னும் சொல் தான்ரொம்பஎன்று பிழையாக உச்சரிக்கப்படுகிறது ! “ரொம்பஎன்னும் பிழையான வடிவத்திற்கு விடை கொடுத்து அனுப்புதல் தானே சரி  !

அவைகள் எப்படிக் கெட்டுப் போயின ?” என்று ஒருவர் என்னிடம் கேட்டார். அவர் பேச்சில் உள்ள பிழையை அவர் அறியவில்லை ! இதைப் படிக்கும் பலருக்கும் பிழை தெரியாமல் இருக்கலாம் ! ஒற்றைப் பொருளைக் குறிக்கும் போதுஅதுஎன்கிறோம். பல பொருள்களைக் குறிக்கும் போதுஅவைஎன்கிறோம். ”அவைஎன்பதே பன்மை; அப்புறம்அவைகள்என்பது ? பன்மைக்குப் பன்மையா ?

அதுகள்என்பதும் தவறு; “அவைகள்என்பதும் தவறு ! ”அது”, “அவைஎன்னும் சொற்களுடன் 2-ஆம் வேற்றுமை உருபான சேரும்போது அதை”,  அவற்றைஎன்று தான் வடிவம் பெறும் ! அது + = அதை; அவை + = அவற்றை ! “அவைகள்”, “அவைகளை”, “அவைகளுக்கு”, ”அவைகளில்”, என்பன போன்ற பிழையான வடிவங்களை இனிப் புறந்தள்ளுவோம் !

நாம் பேசுகின்ற சொற்கள் பலவகைப்படும். இலக்கணத்தில் அவற்றைப் பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச் சொல், பெயரெச்சம், வினையெச்சம், வினையாலணையும் பெயர்  என்றெல்லாம் வகைப்படுத்திச் சொல்வார்கள் ! அவற்றுள் தொழிற் பெயர்என்பதும் ஒன்று ! தொழில், வினை இரண்டுக்கும் பொருள் ஒன்றே தான் ! ”படித்தான்என்னும் சொல்லைப் பகுத்தால், படி + த் + த் + ஆன் என்று அமையும். இவற்றுள்படிஎன்பது பகுதிஎனச் சொல்லப்படும் !


படிஎன்னும்பகுதியிலிருந்து தோன்றுவதுபடிப்புஎன்னும் தொழிற் பெயர்” ! “காண்என்னும்பகுதியிலிருந்து தோன்றுவதுகாட்சிஎன்னும் தொழிற் பெயர்” ! “வற்றுஎன்னும்பகுதியிலிருந்து தோன்றுவதுவற்றல்என்னும் தொழிற் பெயர்” !

சுண்டுஎன்னும்பகுதியிலிருந்து தோன்றுவதுசுண்டல்என்னும் தொழிற் பெயர் !” “மறஎன்னும் பகுதியிலிருந்து தோன்றுவதுமறதிஎன்னும் தொழிற் பெயர்” ! ”படிப்பு”, “காட்சி”, “வற்றல்”, “சுண்டல்”, ”மறதிஎன்னும் தொழிற் பெயர்களைப் போலமுயல்என்னும் பகுதியிலிருந்து தோன்றுவதுமுயற்சிஎன்னும் தொழிற் பெயர்” !

படித்தான்”, “படிக்கிறான்”, “படிப்பான்”, “படித்து”, “படித்த”, ”படிப்பு”,  போன்ற எந்தச் சொல்லானாலும்  படிஎன்னும்பகுதியில் இருந்துதான் உருவாகிறது ! “படிஎன்னும் பகுதி தான் இந்தச்  சொற்களின்  வேர் ! இந்த வேரிலிருந்து தான் புதிய சொற்கள் உருவாகும். வேர் இன்றி எந்தச் சொல்லும் உருவாகாது ! “படிப்புஎன்பது வேர்அன்று ! வேரிலிருந்து உருவான ஒரு கிளைச்சொல்” !

வேர்ச் சொல்அல்லாதபடிப்புஎன்னும் கிளைச்சொல்லிலிருந்து  புதிய சொற்கள் உருவாகாது !  யாராவது உருவாக்கினாலும் அதற்குப் பொருள் இருக்காது !  

(படிப்புஎன்னும் தொழிற் பெயர்ச் சொல்லிலிருந்து படிப்புத்தான், படிப்புக்கிறான், படிப்புப்பான், படிப்புத்து, படிப்புத்த என்று சொல் உருவாக்கினால் அவற்றுக்குப் பொருள் ஏது ? பொருளற்ற குருட்டுச் சொற்களன்றோ இவை ? இவ்விளக்கமே பிற தொழிற் பெயர்ச் சொற்களுக்கும் பொருந்தும் )


படிப்புஎன்பதைப் போன்ற பிற தொழிற் பெயர்ச் சொற்களானவற்றல்”, “சுண்டல்”, ”காட்சி”, “படைப்பு”, “நீச்சல்”, “இருமல்”, “துவையல்”, “உறக்கம்”, “பொரியல்”, “ஓட்டம்”, “ஆடல்”, “வாட்டம்”, ”கொலை,” ”பார்வை”,” “மறதி”, “உணர்ச்சி”, போன்ற எந்தவொரு சொல்லில் இருந்தும் புதிய சொல்லை உருவாக்க முடியாது ! யாராவது உருவாக்கினாலும் அதற்குப் பொருள் இருக்காது !


அதுபோன்றே, “முயல்என்னும் வேரிலிருந்து முயன்றான்”, “முயல்கிறான்”, “முயல்வான்”, “முயன்று”, “முயன்ற”, ”முயற்சி”,  எனப் பல சொற்கள் தோன்றும். ஆனால், “முயற்சிஎன்னும் வேர்அல்லாத ஒரு கிளையிலிருந்து  எந்தச் சொற்களையும் உருவாக்க முடியாது ! உருவாக்கினாலும் அவை பிழையானவையே ! “முயற்சித்தான்”, ”முயற்சிக்கிறான்”, ”முயற்சிப்பான்”, ”முயற்சித்து”, “முயற்சித்தபோன்ற எந்தச் சொல்லும் பிழையானவையே ! ஆனால் இவை பார்வைக்குப் பிழையில்லாச் சொற்களாகத் தோன்றுவதே மதி மயக்கத்திற்கு  இடம் தந்துவிட்டது !

முயற்சிஎன்னும் தொழிற் பெயரிலிருந்துமுயற்சித்தான்”, ”முயற்சிக்கிறான்”, ”முயற்சிப்பான்”, ”முயற்சிக்கிறேன்”, “முயற்சிப்போம்என்பன போன்ற பிழையான சொற்களை உருவாக்கிப் பயன்படுத்துவது தவறாகாது  என்றால், ”சுண்டல்என்னும் தொழிற் பெயரிலிருந்துசுண்டலித்தான்”, ”சுண்டலிக்கிறான்”, ”சுண்டலிப்பான்”, “சுண்டலிக்கிறேன்”, “சுண்டலிப்போம்”, போன்ற பொருளற்ற சொற்களும் உருவாகும் !  மறதிஎன்னும் தொழிற் பெயர்ச் சொல்லிலிருந்துமறதித்தான்”, ”மறதிக்கிறான்”, “மறதிப்பான்”, “மறதித்து”, “மறதித்த”, போன்ற பொருளற்ற சொற்களும் உருவாகும் !

இப்படித்தான், “மரணித்தாள்என்று எழுதுகிறார்கள். இச்சொல்லைப்  பகுதி, விகுதி, இடைநிலை என்று யாராவது பகுத்துக் காண்பிக்க முடியுமா ?  முடியாது ! ஏனென்றால் மரணம்என்பதே தமிழ்ச் சொல் அன்று ! “இறப்புஎன்பதே இதன் சரியான வடிவம். இறந்தாள் என்பதை இற + (ந்)த் + த் + ஆள் என்று பகுக்கலாம்; ஏனெனில் இதுதமிழ் சொல் ! வாதத்திற்காக,  மரணித்தாள் என்பதை மரணி + த் + த் + ஆள் என்று பகுத்துக் காட்டலாம்; ஆனால்மரணிஎன்று எந்தச் சொல்லும் தமிழில் இல்லை ! ”மர்என்னும் வடசொல்லின் திரிபு வடிவேமரணம்” !

ஒரு மாணவன் சுவற்றில் பல்லி ஓடுகிறது என்று எழுதியிருந்தான். இதில் என்ன தவறு ? சரியாகத் தானே தோன்றுகிறது !  இல்லை ! தவறு தான் ! எப்படி ?  சுவர் + இல் = சுவரில் என்பது தானே  சரியாகும் ! எப்படியா ?  சுவரில் என்பதை வேறு வகையாகப் பகுத்துப் பார்ப்போம் ! சுவ + ர் + இல் ! முதலாவதாகர் + இல்என்பதைச் சேர்த்தால் என்னவாகும் ? “ர் + இல் = ரில்சரிதானே ! அடுத்து, “ரில்என்பதுடன்சுவஎன்பதைச் சேருங்கள். சுவ + ரில் = சுவரில் ! இதிலிருந்து என்ன தெரிகிறது ? “சுவரில்என்பதே சரி ! “சுவற்றில்என்பது பிழை !

(தேவர் + இல் = தேவரில்; மூவர் + இல் =மூவரில்; தாயர் + இல் = தாயரில்: மலர் + இல் =மலரில்; துயர் + இல் = துயரில்; சிலர் + இல் = சிலரில்; சுவர் + இல் = சுவரில்)

இனிமேல், வாடகைக்கு வீடு விடும்போதுசுவரில் ஆணி அடிக்கக் கூடாதுஎன்று சொல்லுங்கள் ! “சுவற்றில் ஆணி அடிக்கக் கூடாதுஎன்று பிழையாகச் சொல்ல மாட்டீர்களே ?

---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம்+இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,கன்னி (புரட்டாசி),9]
{26-09-2019}

---------------------------------------------------------------------------------------------------------
     
  “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

---------------------------------------------------------------------------------------------------------




வெள்ளி, அக்டோபர் 11, 2019

இலக்கணம் (15) சந்திப் பிழை சந்தியில் விடாது !

எப்படி நாம் உச்சரிக்கிறோமோஅப்படியே எழுத வேண்டும் !



தமிழில் எழுதும்போது, சந்திப் பிழை சந்தியில் விட்டுவிடும் என்று சிலர் அஞ்சுகின்றனர். இந்த அச்சம், தமிழ் மொழியின் இயற்கைக்கு மாறில்லாத பாங்கினை அறிந்து கொள்ளாததால் விளைவது. எப்படி நாம் உச்சரிக்கிறோமோ, அப்படியே எழுதுவதைத்தான்  தமிழ் இலக்கணம் எடுத்து இயம்புகிறது. ஆங்கிலத்தில் இருப்பதைப் போல, எழுதுவது ஒரு வகையாகவும், உச்சரிப்பது வேறு வகையாகவும் இருக்கும் பொருத்தமற்ற  மரபு, தமிழில் இல்லை.  B-U-T பட்என்போம். P-U-T புட்என்போம்.  தமிழில்பயன்” “நயன்போன்றவை ஒரே வகையான உச்சரிப்பு உடையன என்பதை அறிவோம். ”--ன்என்பதைபயுன்என்றும், ”--ன்என்பதைநயுன்என்றும் சொல்வதில்லை !

அவனை + கண்டேன்என்று இரு சொற்களைச் சேர்த்து உச்சரிக்கும் போதுஅவனைக் கண்டேன்என்றே உச்சரிப்போம். ”அவனைகண்டேன்என்று இடைவிட்டு மொழிவதில்லை. இந்த இயற்கை நிகழ்ச்சியை, இலக்கணத்தில், ”இரண்டாம் வேற்றுமை உருபாகிய”, ஒரு சொல்லின் ஈற்றில் (அவனை = அவன் + )  வந்து அடுத்து வரும் மொழிக்கு (ண்டேன்)  முதலாக ()  ஒரு வல்லெழுத்து (,,,) வருமானால், இடையில் அவ்வல்லெழுத்து மிகும் (புதிதாக ஒரு க்தோன்றும்) என்று எழுதி வைத்திருக்கின்றனர் !

அப்படியே  அவனுக்குகொடுத்தேன்என்னும் இரு சொற்கள் இணையும் போது அவனுக்குக் கொடுத்தேன்என்போம். உச்சரிக்கும் போது இயற்கையாக இடையில்க்வருகின்றது.  க்ஐ விட்டுவிட்டு உச்சரிப்பதில்லை.  இந்த உண்மையை, “நான்காம் வேற்றுமை உருபானகுஒரு சொல்லுக்கு இறுதியில் வரும்போது (அவனுக்கு = அவன் + கு), வருமொழி முதலில் உள்ள வல்லெழுத்து (கொடுத்தேன் என்பதிலுள்ளக்” (க் + = கொ) மிகும்என்று இலக்கண விதியாக எழுதி இருக்கின்றனர். இப்படியே பிறவும் !

இயற்கைக்கு மாறாக நாம் உச்சரிப்பதில்லை. ஆனால் எழுதும்போது மட்டும், இயற்கை ஓசைக்கு மாறாக வல்லெழுத்து மிகாமல் எழுதிவிடுகிறோம். இலக்கணம் பகுத்துவிட்டுத்தான் வல்லெழுத்தை இடையில் இட்டு எழுத வேண்டும் என்னும் அறிவை நாம் பெறவேண்டும் என்பதில்லை. நாம் எப்படி ஒலிக்கின்றோமோ, அதையே விதியாக்கி, இலக்கணமாக எழுதி வைத்திருக்கின்றனர் என்பதை உணர வேண்டும். சந்தி இலக்கணம் நமக்கு இடர் விளைவிப்பதன்று.  நாம் உச்சரிப்பதுதான் இலக்கணம் என்பதே உண்மை !

அவனைஉயர்த்திஎன்னும் இரு சொற்களைச் சேர்த்து ஒலிக்கும்போதுஅவனையுயர்த்திஎன்போம்.  வருமொழி முதலில் (உயர்த்தியில்) உள்ளஎன்னும் எழுத்துயுஎன்று ஆகிவிட்டிருக்கிறது.  இதுவும் இயல்பாக நிகழ்வதே.  இரு சொற்களையும் சேர்த்து உச்சரிக்கும்போது  அவனைஎன்னும் சொல்லைத் தனியேயும், “உயர்த்திஎன்னும் சொல்லைத் தனியேயும் இடைவிட்டுஅவனைஉயர்த்திஎன்று மொழிவதில்லை. இயற்கையாகஅவனையுயர்த்திஎன்றே ஒலிக்கிறோம்.  நிலைமொழி இறுதியில் ஓர் உயிர் எழுத்து [] வந்து, வருமொழி முதலிலும் ஓர் உயிரெழுத்து [] வரும்போது, இரண்டு உயிர் எழுத்தும் இயைவதால், வருமொழி முதலில் உள்ள உயிர்ய்அல்லதுஆக மாறிவிடும் !

அது அரிதுஎன்னும் சொற்களுக்கு இடையில்தோன்றிஅதுவரிதுஎன்றாகும். இவற்றை நாமாக வலிந்து சொல்வதன்று. இயல்பாக நிகழ்வது. இதனை இலக்கணப் படுத்தி இருக்கின்றனர், அவ்வளவே !

இவ்வாறாகத் தமிழில் எழுதும்போது  ஏற்படும் சந்தி மாற்றங்கள் யாவும், இயல்பாக நாம் உச்சரிப்பதை ஒட்டியே  ஏற்படுகின்றன என்பதை  உணர்ந்துகொள்ள வேண்டும். எழுதும் போது அவ்வுச்சரிப்புக்கு ஏற்றபடி எழுத்துகளை இட்டு எழுத வேண்டும்.  இவ்வாறு செய்தால் சந்திப் பிழை நேராது. சந்திமுறை, நம்மைச் சந்தியில் விடுவதற்கும் இல்லை !


---------------------------------------------------------------------------------------------------------------

(ஆட்சிச் சொற் காவலர் கீ.இராமலிங்கனார் எழுதிய
தமிழில் எழுதுவோம்” 
என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற ஒரு பகுதி)

--------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,கடகம்,24]
{09-08-2019}

--------------------------------------------------------------------------------------------------------------
             
   ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

--------------------------------------------------------------------------------------------------------------