name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: இலக்கணம் (17) சரியான புரிதல் வேண்டும்

வெள்ளி, செப்டம்பர் 11, 2020

இலக்கணம் (17) சரியான புரிதல் வேண்டும்

ஏன் கசக்கிறது ?


ஒரு மொழி, சிதைவு அடைவதைத்  தடுக்கும் அரணாக இலங்குவது இலக்கணம்.  ஆனால் இலக்கணம் என்னும் சொல்லைக் கேட்டவுடன் வேப்பங்காயைச் சுவைத்த உணர்வு தான் பலருக்கும் ஏற்படுகிறது.  இந்த உணர்வுக்குக் காரணம் இலக்கணம் பற்றிச் சரியான புரிதல் இல்லாமை தான் !

இலக்கணம் என்பது புதிதாக உருவாக்கப் பெற்ற  விதிகளின் தொகுப்பு அன்று ! நாம் பேசுகின்ற பேச்சில் இலக்கணம் இருக்கிறது; நாம் எழுதுகின்ற எழுத்தில் இலக்கணம் இருக்கிறது ! இந்த இலக்கணம் தான் நமது பேச்சுக்கும் எழுத்துக்கும் மிகுந்த அழகு சேர்க்கிறது !

”நான் பழம் தின்கிறேன்” என்பது நான் செய்கின்ற செயலை முறையான வகையில் வெளிப்படுத்தும் ஒரு சொற்றொடர்.  இந்தச் சொற்றொடரில் உள்ள மூன்று சொற்களையும் வேறு எந்த வகையில் உருமாற்றி எழுதினாலும் அந்தத் தொடருக்குப் பொருள் இருக்காது ! “நானு பழமது தின்னுப்பேன்” என்று மாற்றி எழுதிப் பாருங்கள். இத் தொடரில் ஏதாவது பொருள் இருக்கிறதா ?

இதிலிருந்து ஒரு உண்மை விளங்கும் ! அதாவது, பொருளற்ற எந்தத் தொடரும் இலக்கணம் பொதிந்ததாக இருக்க முடியாது ! இலக்கணத்துக்கு உட்பட்ட பேச்சுக்கும்  எழுத்துக்குமே ஒரு திட்டவட்டமான பொருள் இருக்கும்  !

“நான் பாடல் எழுதுகிறேன்”  இதில் உள்ள கருத்து மாறுபடாமல் ”நான் பாடலை எழுதுகிறேன்” என்று எழுதலாம். இரண்டு சொற்றொடர்களுமே இலக்கணத்தை உள்ளடக்கியவை. முதல் தொடரில் உள்ள “பாடல்” என்னும் சொல் (பாடு + அல் =பாடல்)  இரண்டாவது தொடரில் “பாடலை” (பாடு + அல் + ஐ = பாடலை) என்று சிறிது உரு மாற்றம் அடைந்திருக்கிறது !

“பாடல்”, என்னும் சொல் “பாடலை” என்று உரு மாற்றம் பெற்றது எப்படி ? பாடல் + ஐ = பாடலை ! அவ்வளவுதான் !  ”பாடல்” என்னும் சொல்லுடன் கூடுதலாகச் சேர்ந்துள்ள “ஐ” என்பது இரண்டாம் வேற்றுமை உருபு எனப்படும் ! இதைத்தான் இலக்கணம் நமக்கு எடுத்து உரைக்கிறது !

இலக்கணம் படித்துவிட்டு வந்த பின்பா “நான் பாடலை எழுதுகிறேன்” என்று  எழுதுகிறோம் ?  பொருளுள்ள எந்தத் தொடரை எழுதினாலும் அதில் இலக்கணம் தானாகவே அமைகிறது ! அதில் அமைந்துள்ள இலக்கணம் எவ்வகையானது என்று  சொல்லித் தருவதுதான்  “இலக்கண நூல்”

“நான் பாடல் எழுதுகிறேன்” என்னும் தொடரில் இரண்டாம் வேற்றுமை உருபாகிய “ஐ” மறைந்து நிற்கிறது. மறைந்து  நிற்றலை “தொக்கி” நிற்றல் என்பார்கள்.  “பாடல் எழுதுகிறேன்” என்பதில் இரண்டாம் வேற்றுமை உருபான “ஐ” தொக்கி நிற்பதால் இதை இரண்டாம் வேற்றுமைத் தொகை என்கிறது இலக்கணம் ! வேற்றுமை உருபு தொக்கி நிற்காமல் வெளிப்படையாக விரிந்து நிற்குமானால் அதை “வேற்றுமை விரி” என்பார்கள்.

பாடல் எழுதுகிறேன் = இரண்டாம் வேற்றுமைத் தொகை
பாடலை எழுதுகிறேன் = இரண்டாம் வேற்றுமை விரி.

மேற்கண்ட இரண்டு தொடர்களும் இலக்கணப்படி அமைந்தவை; ஆகையால் அவற்றில் பொருள் இருக்கிறது ! பொருளற்ற சொற்களிலோ தொடர்களிலோ ”பொருளும்” இருக்காது; ”இலக்கணமும்” இருக்காது !

சொற்கள் பல வகைப்படும்; அவற்றுள் பெயர்ச் சொல் என்பதும் ஒன்று. இடத்தைக் குறிப்பது இடப்பெயர். (எ-டு) சென்னை;  நிறம் போன்ற பண்புகளைக் குறிப்பது பண்புப் பெயர். (எ-டு) பசுமை ! நடைபெற்ற தொழிலைக் குறிப்பது தொழிற்பெயர். (எ-டு) சுண்டல். இவ்வாறு பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் எனப் பெயர்ச் சொற்கள் ஆறு வகைப்படும் !

இலக்கணத்தை இன்னொருவர் எடுத்து உரைக்கும் போது, கேட்பவர்க்குத் தலை சுற்றுவது போல் தோன்றும். ஆனால் தனது  பேச்சிலும் எழுத்திலும் இலக்கணம் இருப்பதை அவர் உணர்ந்து கொண்டால், அவருக்குத் தலைச் சுற்றல் வாராது !

”நான் சுண்டல் தின்கிறேன்”. இது கபிலனின் குறிப்பேட்டில் காணப்படும் எழுத்து. இதில் வரும் “சுண்டல்” என்பதை, ”சுண்டு + அல்” என்று பிரிக்கலாம். ”சுண்டு” என்பது “நீர் சுண்டுதலை”க் குறிக்கும் ஒரு வினைச் சொல். இந்த வினைச் சொல்லில் இருந்து “சுண்டல்” என்னும் பெயர்ச் சொல் தோன்றி இருக்கிறது !  

தொழில், வினை இரண்டும் ஒரே பொருளைக் குறிப்பன. ”சுண்டுதல்” என்னும் வினை அல்லது தொழிலில் இருந்து தோன்றிய பெயர்ச் சொல் தான் “சுண்டல்” . ஆகையால் “சுண்டல்” என்பது தொழிற் பெயர் !

இங்கு “சுண்டல்” என்னும்  தொழிற் பெயர் எதைக் குறிக்கிறது ? “நீர்ச் சுண்டப் பெற்ற”  பயற்றை  அல்லது கடலையைக்  குறிக்கிறது. இவ்வாறு ஒரு தொழிற்பெயர், அந்தத் தொழிலுக்கு உட்படுத்தப்பட்ட  பயறுக்கு ஆகிவந்திருப்பதால், “சுண்டல்” என்பது தொழிலாகு பெயர் எனப்படும் !

ஒரு சொல்லில் அல்லது தொடரில் அமைந்துள்ள இலக்கணத்தை எடுத்து உரைக்கும் போது  மனக் கிறுகிறுப்பு  ஏற்படுகிறது. “சுண்டல்” என்றால் என்ன, அது எதைக் குறிக்கிறது என்பதைச் சிந்தித்துப் புரிந்து கொண்டால், கிறுகிறுப்பும் வாராது; இலக்கணம் மீது வெறுப்பும் ஏற்படாது !

“சுண்டல்” என்பது தொழிலாகு பெயர் என்று இலக்கணத்தைப் படித்துக் கொண்டு  வந்த பிறகா ”நான் சுண்டல் தின்கிறேன்” என்று ஒருவன் பேசுகிறான்; எழுதுகிறான் !  “நான் சுண்டல் தின்கிறேன்” என்பதில் ஒரு பொருள் பொதிந்து இருக்கிறது; ஆகவே அதில் இலக்கணமும் இருக்கிறது !

இதை வேறு வகையில் பார்ப்போம் ! “நான் சுண்டலித்துத் தின்கிறேன்” என்று யாரும் பேசுவதில்லை; எழுதுவதுமில்லை. ஆகவே இதில் இலக்கணமும் இல்லை.  இந்தச் சொற்றொடரில் பொருளும் இல்லை !

தமிழ் எழுத்துகள் ஒவ்வொன்றும் எவ்வாறு பிறக்கிறது, எவ்வாறு ஒலிக்கிறது  என்பதைப் புரிந்து கொண்டால், “ர”கர, “ற”கர வேறுபாடு  எளிதாக விளங்கும். “ன”கர, “ண”கர வேறுபாடு தெள்ளிதின் புரியும்.  எழுத்துகளின் பிறப்பு, ஒலிப்பைப் பற்றிப் புரிந்து கொள்ளாவிட்டால் “அவற் இன்ரு தண் பென்னுடன் செண்ணை செள்கிராற்” என்று தான் வாழ்நாள் முழுதும் தமிழைக் கடித்துத் துப்பிக் கொண்டிருக்க வேண்டும் !

------------------------------------------------------------------------------------------------------
 ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
(தி.பி: 2051, மடங்கல் (ஆவணி),23)
{08-09-2020}
-------------------------------------------------------------------------------------------------------
           தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .