name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: இலக்கணம் (18) முயற்சிக்கிறேன் என்று எழுதாதீர்; பேசாதீர்

வெள்ளி, செப்டம்பர் 11, 2020

இலக்கணம் (18) முயற்சிக்கிறேன் என்று எழுதாதீர்; பேசாதீர்

தவறு செய்யலாமா ?


சொற்கள் நான்கு வகைப்படும். அவை பெயர்ச் சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியன.  நாம் இங்கு வினைச்சொல் பற்றி மட்டும் பார்ப்போம் !

வினைச்சொற்கள் என்பவை வினைமுற்று, வினையெச்சம், பெயரெச்சம் என மூவகைப்படும்.  இச்சொற்களை, பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி எனச் சொற்களுக்குக்கு ஏற்பப்  பகுக்க முடியும் !

”எழுதுகிறான்” என்னும் வினைமுற்றை ,  எழுது + கிறு + ஆன் என்று மூன்றாகப் பகுக்க முடியும். இதில் “எழுது” என்பது பகுதி. 
”எழுதி” என்னும் வினையெச்சச் சொல்லை “எழுது + இ” என்று பகுக்கலாம். இதிலும் “எழுது”  என்பது பகுதி. “எழுதிய” என்னும் பெயரெச்சச் சொல்லை  “எழுது + இ +  அ” என்று பகுக்கலாம். இதிலும் “எழுது” என்பது பகுதி !

“பகுதி”யிலிருந்து தான் ஒரு வினைமுற்றுச் சொல்லோ, ஒரு வினையெச்சச் சொல்லோ அல்லது ஒரு பெயரெச்சச் சொல்லோ உருவாகிறது. இது தான் சொல் இலக்கணத்தின் அடிப்படை !

“எழுது” என்னும் பகுதியின் அடைப்படையில் உருவாகும்  இன்னொரு சொல் “எழுத்து” என்பது. இதற்குத் தொழிற்பெயர் என்று பெயர்.

இதிலிருந்து உங்களுக்கு ஒன்று விளங்கும். அஃதாவது, “பகுதி” என்னும் தண்டிலிருந்து தான் (1) வினைமுற்று (2) வினையெச்சம் (3) பெயரெச்சம் (4) தொழிற் பெயர் ஆகிய நான்கும்  கிளைக்கின்றன. மாறாக, வினைமுற்றிலிருந்து ஒரு வினையெச்சமோ, பெயரெச்சமோ கிளைப்பதில்லை. இவ்வாறே மற்றவற்றுக்கும் பொருத்திக் கொள்க !

குறிப்பாக, இப்போது நீங்கள் நினைவிற் கொள்ள வேண்டியது, ”ஒரு தொழிற் பெயரிலிருந்து  ஒரு வினைமுற்றோ, ஒரு வினையெச்சமோ அல்லது ஒரு பெயரெச்சமோ கிளைப்பதில்லை’”!  கிளைக்கவும் முடியாது; கிளைப்பதாகச் சொன்னால் அது தவறான கூற்று !


”பயணம்” என்பது இப்போது வழக்கில் இருக்கும் ஒரு சொல். இலக்கணப்படி இது தொழிற் பெயர்.  தொழிற் பெயரென்றாலும் அதைப் பகுதி, விகுதி என்று பகுக்க முடியுமல்லவா ? ”பயணம் என்பதை எப்படிப் பகுப்பது ? பயண் + அம் என்றா ? ஆம் என்றால் “பயண்” என்பதற்கு என்ன பொருள் ? பொருளற்ற சொல் ”பயண்” என்பது ! 

வேறு சில தொழிற் பெயர்களையும் அவற்றைப் பகுக்கும் விதத்தையும் பார்ப்போம் !

பயிற்சி = பயில் + ச் + இ = பயிற்சி
நடை = நட + ஐ = நடை
பார்வை = பார் + வ் + ஐ = பார்வை
துடிப்பு = துடி + ப் + ப் +உ = துடிப்பு
கொலை = கொல் + ஐ = கொலை

இந்த ஐந்து எடுத்துக் காட்டுகளிலும்  உள்ள பகுதிச் சொற்களான “பயில்”, “நட”. “பார்”, “துடி”. “கொல்”  ஏனும் சொற்களுக்குப் பொருளுண்டு.  பொருளுள்ளவை மட்டுமே “பகுதி” யாக அமையும்!

பயணம் = பயண் + அம் = பயணம்.
பயணம் = பய + ண் = அம் = பயணம்

இந்த எடுத்துக் காட்டுகளில் ”பகுதி”யாக வரும்  “பயண்” என்றாலும் சரி, “பய” என்றாலும் சரி, அதில் பொருள் இருக்கிறதா ? இல்லையே ! பொருளற்றவை பகுதியாக இருக்க முடியாதல்லவா ?

ஏன் இப்படி ? காரணம் “பயணம்” என்பது தமிழ்ச் சொல்லே அன்று ! அதலால்தான் அதைப் பகுதி, விகுதி என்று பகுக்க முடியவில்லை !

“பகுதி” இல்லாத “பயணம்” என்னும் சொல்லை வைத்துக் கொண்டு” ”பயணிக்கிறான்”, “பயணித்தேன்” “பயணிப்பேன்” என்றெல்லாம் எழுதுவது எங்ஙனம் தமிழாகும் ? 

இத்தகைய இன்னொரு சொல் தான் “மரணித்தல்”.  “மர்” என்னும் வடமொழிச் சொல்லின் திரிபு தான் “மரணம்”. ‘மரணம்” என்னும் சொல்லை பகுதி விகுதி என்று பகுக்கமுடியாது.  “மரணம்” என்பதே தமிழ்ச் சொல் அல்லாத போது  “மரணிக்கிறான்”, “மரணித்தான்” என்றெல்லாம் எழுதுவது  பொருளற்ற வெற்றுச் சொற்கள் அல்லவா ? 

இதே போன்ற இன்னொரு தவற்றைப் பலரும் செய்கிறார்கள். ”முயல்” என்னும் பகுதியிலிருந்து தோன்றுபவை “முயன்றான்”, “முயல்கிறான்”, ”முயல்வான்”, “முயன்று”, “முயன்ற”, ”முயற்சி” ஆகிய சொற்கள்.  “முயல்” என்னும் பகுதியிலிருந்து தான் “முயற்சி” போன்ற பிற சொற்கள் உருவாகின்றன. “முயற்சி” என்னும் தொழிற்பெயரிலிருந்து  வேறு சொற்கள் தோன்றுவதில்லை ! அப்படி இருக்கையில் “முயற்சிப்பேன்”, ‘முயற்சிக்கிறேன்”, “முயற்சிப்போம்’ என்றெல்லாம் பேசுவதும் எழுதுவதும் தவறல்லவா ?

முயற்சிப்பேன் (பிழை) ----முயல்வேன் (சரி)
முயற்சிக்கிறேன் (பிழை)----முயல்கிறேன் (சரி)
முயற்சிப்போம் (பிழை) ----முயல்வோம் (சரி)

”முயற்சி” என்னும் தொழிற் பெயரில் இருந்து முயற்சிப்பேன், முயற்சிக்கிறேன், முயற்சிப்போம்  போன்ற சொற்களை உருவாக்கலாம் என்றால், “சுண்டல்” என்னும் தொழிற் பெயரிலிருந்து “சுண்டலிப்பேன்”, ”சுண்டலிக்கிறேன்”, “சுண்டலிப்போம்” என்னும் சொற்களையும் உருவாக்கலாமே !

”குளியல்” என்னும் தொழிற் பெயரிலிருந்து “குளியலிக்கிறேன்”, “குளியலித்தேன்”’ “குளியலிப்பேன்” போன்ற சொற்களையும் உருவாக்கலாம் அல்லவா ?

“வெற்றி” என்னும் தொழிற் பெயரிலிருந்து ”வெற்றிப்பேன்”. “வெற்றிக்கிறேன்”’, “வெற்றிப்போம்” போன்ற சொற்களையும்  உருவாக்கலாம் அல்லவா ?

”முயற்சிக்கிறேன்’, “பயணிக்கிறேன்”, “மரணிக்கிறான்”, போன்ற பொருளற்ற சொற்களை உரையாடலில் கொண்டு வராதீர்கள்; எழுத்துகளில்  இடம் பெறச் செய்யாதீர் !  தமிழ்த் தொண்டில் மெய்யான நாட்டம் உள்ளோர் இனி இத்தகைய தவறுகளைச் செய்யாதீர் !

------------------------------------------------------------------------------------------------------------
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
(தி.பி: 2051, மடங்கல் (ஆவணி),25)
{10-09-2020}
-----------------------------------------------------------------------------------------------------------
           
 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------







1 கருத்து:

  1. நல்ல 👌 அருமையான விளக்கம்
    சாதம் தமிழ் சொல்லா ❓
    சோறு பகுதி, விகுதி கூறுங்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .