பிச்சை எடுக்கும் ஈன வாழ்வையும் கூட ஏற்பேன் - எப்போது ?
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான நாலடியார் திருக்குறளுக்கு அடுத்ததாக வைத்துப் போற்றப்படும் அறநெறி நூல் ! சமண முனிவர்கள் பலரால் இயற்றப்பட்ட 400 வெண்பாப் பாடல்களைக் கொண்டுள்ள இந்நூல் பல அறநெறிக் கருத்துகளை வலியுறுத்துகிறது ! இதிலிருந்து ஒரு பாடல் !
-----------------------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (40)
-----------------------------------------------------------------------------------------------------------
மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந் திவ்வுடம்பு
நீட்டித்து நிற்கு மெனின்
!
-----------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
-----------------------------------------------------------------------------------------------------------
மான அருங்கலம் நீக்கி இரவு என்னும்
ஈன இளிவினால் வாழ்வேன் மன் – ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதி சேர்ந்து இவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும்
எனின் !
-----------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
-------------------
இந்த உடம்பானது அழிவே இல்லாமல்
நீடித்து நிற்குமெனில் , மானமுடைமை என்னும் அரிய
அணிகலனை நீக்கிவிட்டு பிச்சை எடுக்கும் ஈன வாழ்க்கையும் கூட வாழ்வேன் !
[ அப்படி ஈனப் பிழைப்புப்
பிழைத்தாலும் இந்த உடம்பு நீடித்து இருப்பதில்லையே
! பின் எதற்காக ஈனப்
பிழைப்புப் பிழைக்க வேண்டும் ? அறம் செய்து நற்பேறு பெறலாமே !
என்பது உள்ளுறைக் கருத்து ]
-----------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------
ஈனத்தால் = இழிவான செயல்களால்,; ஊட்டியக் கண்ணும் = (சோறு முதலியவற்றை ஈட்டி ) துய்க்கச் செய்தும்; இவ்வுடம்பு = இந்த உடம்பானது ; உறுதிசேர்ந்து = உறுதிப்பட்டு; நீட்டித்து நிற்கும் எனின் = அழியாமல் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்றால் ; மான அருங் கலம் நீக்கி = மானம் என்னும் மதிப்பு மிக்க அணிகலனை விலக்கிவிட்டு ;
இரவு என்னும் = இரப்பது (பிச்சை எடுத்தல்)
என்று சொல்லுகிற; ஈன இளிவினால் = தாழ்மையான இழிசெயலைச் செய்தும் கூட ; வாழ்வேன்மன் = உயிர் வாழ்வேன்.
[அப்படி ஈனப் பிழைப்புப் பிழைத்தாலும்
இந்த உடம்பு நீடித்து இருப்பதில்லையே ! பின் எதற்காக ஈனப் பிழைப்புப்
பிழைக்க வேண்டும் ? அறச்
செயல்களைச் செய்து நற்பேறு பெறலாமே ! என்பது உள்ளுறைக் கருத்து
!]
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம்
& இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.பி:2052, சுறவம் (தை) 11]
(24-01-2021)
------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .