பங்குனி மாதத்து முன்னிரவில் ! - புறநானூறு !
பண்டைத்
தமிழர்கள் பல துறைகளிலும் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள் ! வானவியலிலும் சிறந்து விளங்கி இருக்கிறார்கள்.
ஆனால்
வானவியல் என்பது ஆரியர்களின் வருகைக்குப் பிறகு கணியம் (சோதிடம்)
என நீட்சி பெற்று, தவறான நம்பிக்கைகளை வளர்க்கும்
நாற்றங்காலாக மாறியது தான் காலத்தின் கோலம் ! புறநானூறில் ஒரு பாடல் ! வானவியல் தொடர்பான செய்திகளைத் தரும் இப்பாடல், விண்வீழ்
கொள்ளி விழுந்த நிகழ்வுடன், சேர மன்னன் இறந்த நிகழ்வை முடிச்சுப்
போட்டுப் பார்ப்பது தான் ஆரிய நாகரிகத்தின் தாக்கம் போலும் !
----------------------------------------------------------------------------------------------------
பாடப்பெற்றவன்: கோச்சேரமான்
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
பாடியவர்:
புலவர் கூடலூர் கிழார
----------------------------------------------------------------------------------------
ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள்
அரை இரவில்,
முடப் பனையத்து வேர் முதலாக்
கடைக் குளத்துக் கயம் காய,
பங்குனி உயர் அழுவத்துத்
தலைநாள் மீன் நிலை திரிய,
நிலைநாள் மீன் அதன்எதிர் ஏர்தர,
தொல்நாள் மீன் துறைபடிய,
பாசிச் செல்லாது ஊசி முன்னாது,
அளக்கர்த் திணை விளக்காகக்
கனைஎரி பரப்ப, கால்எதிர்பு பொங்கி
ஒருமீன் விழுந்தன்றால், விசும்பினானே !
அதுகண்டு, யாமும், பிறரும்
பல்வேறு இரவலர்
பறைஇசை அருவி நன்னாட்டுப் பொருநன்
நோயிலன் ஆயின் நன்று ! மற்று இல்லென
அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப,
அஞ்சினம் எழுநாள் வந்தன்று இன்றே;
மைந்துடை யானை கைவைத்து உறங்கவும்
திண்பிணி முரசும் கண்கிழிந்து உருளவும்
காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும்
கலிமாக் கதிஇன்றி வைகவும்,
மேலோர் உலகம் எய்தினன் ஆகலின்
ஒண்தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகித்
தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ !
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு
அளந்துகொடை அறியா ஈகை,
மணிவரை அன்ன மாஅ யோனே !
-------------------------------------------------------------------------------------------------------------
[ பாடலின் பொருள் அடி நேருரையாகத் தரப்படுகிறது ]
பங்குனி உயர் அழுவத்து = ஒரு பங்குனி
மாதத்து நடுப் பகுதியையொட்டி,
ஆர் இருள் அரை இரவில் = செறிந்த
இருள் சூழ்ந்த இரவு நேரத்தில்,
முடப் பனையத்து வேர் முதலா = வளைந்த
பனை போன்ற தோற்றம் உடைய அனுச மீன் கூட்டத்தினை அடுத்து வருகின்ற கேட்டை மீன் தொடங்கி,
கடைக் குளத்துக் கயம் காய = கயம்
எனப்படும் குளம் போல் தோற்றம் அளிக்கும் புனர்பூச மீனுக்கு முன்னதாக உள்ள திருவாதிரை மீன் வரை உள்ள
13 மீன்களும் வானிலே ஒளிவிட்டுத் திகழ,
[ கேட்டை, அனுஷம்,
விசாகம், சுவாதி, சித்திரை,
அஸ்தம்,
உத்தரம், பூரம், மகம், ஆயில்யம், பூசம், புனர்பூசம்,
திருவாதிரை
= 13
]
தலைநாள் மீன் நிலை திரிய = அப்பொழுது
வானின் உச்சியில் இருந்த உத்தரம் என்னும் மீன் அவ்வுச்சியிலிருந்து மேல் திசை நோக்கிச்
சாய்ந்தது (நகர்ந்தது) !
நிலைநாள் மீன் அதன் எதிர்
ஏர் தர
= அதே
நேரத்தில் அந்த உத்தர மீனிலிருந்து எட்டாவதாக
வரும் மூலம் மீன் கீழ்த் திசையில் அடிவானத்தில் எழுந்தது !
[ (1) உத்தரம் (2) அத்தம், (3) சித்திரை, (4) சுவாதி,
(5) விசாகம், (6) அனுசம், (7) கேட்டை, (8) மூலம்.
]
தொல் நாள் மீன் துறை படிய = அந்த உத்தர மீனுக்கு முன்னதாக மேல் திசை
நோக்கி நகர்ந்து சென்றவற்றுள் எட்டாவதாக
அமையும் மீனாகிய மிருகசீரிடம் அடிவானில் மறையும் அந்த நேரத்தில்,
[ (1) உத்தரம் (2) பூரம் (3) மகம் (4) ஆயில்யம்
(5) பூசம் (6) புனர்பூசம் (7) திருவாதிரை (8) மிருகசீரிடபம். ]
ஒருமீன் = ஒரு விண்வீழ் கொள்ளியானது,
பாசிச் செல்லாது, ஊசி முன்னாது
= கிழக்கும்
போகாமல்,
வடக்கும் போகாமல், வடகிழக்காக
அளக்கர்த் திணை விளக்காக
= கடல்
சூழ்ந்த உலகுக்கு விளக்குப் போல்,
கனை எரி பரப்ப, கால் எதிர்பு
பொங்கி = காற்றில் கிளந்து எழுந்து, தீப் பரந்து,
ஆடு இயல் அழல் குட்டத்து = ஆடு போன்ற
தோற்றம் உடைய மேழ இராசியில்
நிலைத்திருக்கும் கார்த்திகை மீனின் முதலாம் பாதம் நோக்கி,
விழுந்தன்றால், விசும்பினானே
= விசும்பிலிருந்து
வீழ்ந்தது !
அது கண்டு யாமும் பிறரும்
பல்வேறு இரவலர்
= அதைக்
கண்டு, யாமும் பிறரும், பல்வேறு இரவலரும்,
[ இது ஒரு தீய அறிகுறி ஆயிற்றே,
என்று அன்று கவலை கொண்டோம் ! ]
பறை இசை அருவி நல் நாட்டுப்
பொருநன்
= பறை
ஓசை போல் ஒலிக்கும் அருவிகள் நிறைந்த நல்ல மலை நாட்டின்
தலைவனாகிய சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை,
நோய் இலன் ஆயின் நன்று
மற்று இல் என = நோயின்றி நலமுடன் இருக்க வேண்டுமே
என்று எண்ணி ஏங்கினோம் !
அழிந்த நெஞ்சம் மடிஉளம்
பரப்ப
= வருந்திய
நெஞ்சத்துடன் வாடிக் கலங்கி,
அஞ்சினம் = அஞ்சினோம் !
எழு நாள் வந்தன்று - அந்த மீன் நிலம்
நோக்கி விழுந்து இன்று ஏழு நாள் ஆகிறது !
இன்றே = இன்றைய நாளில் (யாம் காண்கையில்),
மைந்துடை யானை கை வைத்து
உறங்கவும்
= மன்னனின்
பட்டத்து யானை தன் தும்பிக்கையை நிலத்தில் வைத்து உறங்குகிறது !
திண் பிணி முரசம் கண் கிழிந்து
உருளவும்
= வாரால்
பிணிக்கப்பட்ட முரசு கிழிந்து உருண்டு கிடக்கிறது !
காவல் வெண் குடை கால் பரிந்து
உலறவும்
= காவலுக்கு
அடையாளமாக இருக்கும் வெண் கொற்றக் குடையின் காம்பு ஒடிந்து சிதைந்து காணப்படுகிறது !
கால் இயற் கலிமாக் கதி
இன்றி வைகவும்
= காற்றைப் போல் கடிது செல்லும்
அரசனின் புரவி (குதிரை) நிலை
குலைந்து நிற்கிறது !
[ இவை எல்லாம் நல்ல குறிகளாகத் தோன்றவில்லையே
! ]
ஆகலின் = ஆகையால்
ஒண் தொடி மகளிர்க்கு உறு
துணை ஆகி
= தன்
மனைவியர்க்கு உற்ற துணைவனாக இலங்கிய சேர மன்னன்,
தன் துணை ஆயம் மறந்தனன்
கொல்லோ
= தன்
மனைவியரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டானோ ? ஆமாம் !
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு
= பகைவரைக்
கொல்லும் வலிமையும்,
தன்னை நாடி வந்தவர்களுக்கு
அளந்து கொடை அறியா ஈகை = அளவற்ற பொருள்களை
அளித்த கொடை வள்ளலும்
மணி வரை அன்ன மாஅயோனே ? = நீல நிறமுடைய திருமால்
போன்றவனுமாகிய சேரன்
மேலோர் உலகம் எய்தினன் = இயற்கை எய்தி விட்டான் என்பது மேற்கண்ட நிகழ்வுகளிலிருந்து
உறுதியாகத் தெரிகிறது !
------------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
ஒரு பங்குனி
மாதத்து முன்னிரவில், கிழக்கே அடிவானத்தில் கேட்டை மீன் தொடங்கி, மேற்கே திருவாதிரை ஈறாக 13 மீன்களும் வானில் மின்மினி
போல் கண் சிமிட்டிக்
கொண்டிருக்க, உச்சி வானில் இருக்கும் உத்தர மீன் மெல்ல மேற்கு நோக்கி நகர்கிறது
!
இந்த
நேரத்தில் விசும்பிலிருந்து ஒரு விண்வீழ் கொள்ளியானது, மேழ மண்டலத்தில் இருக்கும் கார்த்திகை மீன் நோக்கி விழுகிறது ! இதைக் கண்ணுறும் யாமும், எம்முடன் இருந்த பிறரும்,
இரவலர்களும், இஃதோர் தீக்குறி ஆயிற்றே,
எம் மன்னனாகிய சேரன் இரும்பொறைக்கு இஃது ஆகாதே, அவன் நலமுடன் இருக்க வேண்டுமே என்று மிக்க கவலை கொண்டோம் !
இது நிகழ்ந்த
ஏழாம் நாள் மன்னனைக் காண அரண்மனைக்குச் செல்கிறோம் ! அங்கு, மண்ணில் படுத்தறியாத மன்னனின் பட்டத்து யானை தரையில்
கைவைத்துக் கிடக்கிறது ! அவனது வெற்றி முரசு தரையில் வீழ்ந்து
கிடக்கிறது ! வெண்கொற்றக் குடையைத் தாங்கி நிற்கும் காம்பு உடைந்து
கிடக்கிறது, மன்னனின் தனிப் புரவி நிலையின்றித் தவிக்கிறது
!
இவற்றை
எல்லாம் காண்கையில் விண்வீழ் கொள்ளி விளம்பிய தீயூழ் தன் திறத்தைக் காட்டிவிட்டதோ என்று
தோன்றுகிறது ! தன் துணைவியைப் பிரிந்து மன்னன் விண்ணுலகம்
சென்றுவிட்டானோ ? ஆம் ! அப்படித்தான் தோன்றுகிறது
!
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்,
[தி.ஆ:2050: நளி (கார்த்திகை) 22]
{8-12-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .