name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: தனிப்பாடல் (510) மாங்குயில் மொழி கொண்ட வனிதையே !

வியாழன், நவம்பர் 26, 2020

தனிப்பாடல் (510) மாங்குயில் மொழி கொண்ட வனிதையே !

மாநிலத்தில்   இல்லாத  புதுமையைக் கேளடி என் கண்மணி  !

பாலாற்றங்கரையில் ஒரு ஊர்;  சேண்பாகை என்று பெயர் ! அந்த ஊர் எப்படிப் பட்டது தெரியுமா ?  கோங்கு, சண்பகம், கொன்றை, பொற்கூவிளம், மா, தென்னை, வாழை, பலா  ஆகிய  மரங்கள் சூழ்ந்த சோலைகள் நிறைந்த வளமான ஊர் !

------------------------------------------------------------------------------------------------------------

இந்த ஊரை நிலைக்களமாக வைத்து, ஒரு புலவர் பாடல் ஒன்றைப் படைத்திருக்கிறார். பாடல் வாயிலாகப் புலவர் பேசுகிறார் !

------------------------------------------------------------------------------------------------------------

மாங்குயில் போன்ற இனிய குரல் வளம் மிக்க பெண்ணே ! கேள் ! இந்த மாநிலத்திலேயே இல்லாத  ஒரு புதுமை நிகழ்வு இவ்வூரில் நடந்தேறி இருக்கிறது ! ஆம் ! சேண்பாகையின் நெருங்கிய  தெரு வழியாக யாவரும் பார்க்கும் வேளையிலே ஒரு எலி மீது யானை ஒன்று அமர்ந்து செல்கிறது. அதன் அருகில் புல் சிதறிக் கிடக்கிறது ! என்ன வியப்பு இது ? இப்படியும் நடக்குமா ? ”

 இதோ அந்தப் பாடல் :-

------------------------------------------------------------------------------------------------------------

                                   மாங்கு   யின்மொழி   கொண்ட   வனிதையே

                                   .....மாநி   லத்தில்   இலாத  புதுமைகேள் !

                                   கோங்கு   சண்பகங்   கொன்றைபொற்   கூவிளம்

                                   .....கோதின்   மாதெங்கு   வாழை   வருக்கையார்

                                   பாங்கு   பால்கதி   சூழுஞ்சேண்   பாகைவாழ்

                                    .....பன்னும்   வீதியில்   யாவரும் பார்க்கவே

                                   வீங்கும்   ஓரெலி   மேலொரு   யானைகொல்

                                    ....வெம்பு   லிப்பல   கொண்டு   நடந்ததே !

------------------------------------------------------------------------------------------------------------

பாடலைச் சந்தி பிரித்து எழுதித் தருகிறேன் !

------------------------------------------------------------------------------------------------------------

                                   மாங்குயில்   மொழி   கொண்ட   வனிதையே !

                                    .....மாநிலத்தில்   இலாத   புதுமை   கேள் !

                                   கோங்கு   சண்பகம்,   கொன்றை,   பொற்கூவிளம்,

                                   .....கோது இல்  மா, தெங்கு, வாழை, வருக்கை  ஆர்,

                                   பாங்கு   பால்கதி   சூழும்   சேண்பாகை   வாழ்

                                    .....பன்னும் வீதியில்   யாவரும்   பார்க்கவே

                                   வீங்கும்   ஓர் எலிமேல்   ஒரு   யானை கொல் !

                         .          ....வெம்   புலிப் பல கொண்டு நடந்ததே !  

------------------------------------------------------------------------------------------------------------

எலியின் மேல் யானை அமரமுடியுமா ? அப்படி அமர்ந்தால், எலி  நசுங்கிக் கூழாகித் துறக்கம்  (சொர்க்கம்) போயிருக்காதா ? எப்படி அது இயலும் ? சொல்லுங்களேன் !

இந்த அழகிய பாடலை எழுதிய புலவர் பெயர் வரலாற்றில் பதிவாக வில்லை ! வரலாற்றின் பக்கங்களுக்குள் வராத எத்துனையோ புலவர்களுள் இவரும் ஒருவர் !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2051, துலை (ஐப்பசி),24]

{09-11-2020}

-----------------------------------------------------------------------------------------------------------

தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளிடப் பெற்ற கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .