name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: சிந்தனை செய் மனமே (47) இயற்கை வளங்கள் அழிப்பு !

வெள்ளி, அக்டோபர் 11, 2019

சிந்தனை செய் மனமே (47) இயற்கை வளங்கள் அழிப்பு !

மக்களின் மனக் களிப்புக்காக மலைவளங்களை முற்றிலும் இழந்து விடத்தான் வேண்டுமா ? 



உலகின் நிலப்பரப்பு நான்கு வகைப்பட்டது. மலை, காடு, வயல் மற்றும் கடல் ஆகியவையே அவை. இதைத்தான் நம் மூதாதையர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று பகுத்து வைத்திருந்தனர் !

இவை ஒவ்வொன்றும் தனித் தன்மை வாய்ந்தவை. கடல் இல்லாவிட்டால் கார்முகில் உருவாகாது. மலைகள் இல்லாவிட்டால், மழைப் பொழிவு இருக்காது. காடுகள் இல்லாவிட்டால் மனிதன் உயிர்வாழ உயிர்வளி கிடைக்காது. வயல்கள் இல்லாவிட்டால், உண்பதற்கு உணவும் கிடைக்காது !

சுற்றுலா என்ற பெயரில் மலைவளம் தொடர்ந்து அழிக்கப்படுகிறது. புதிய குடியிருப்புகள் அமைப்பதற்காகவும் மனிதனின் மரத் தேவைகளுக்காகவும் வனவளம் அழிக்கப்படுகிறது. நிலத்தடி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவளி எடுப்புக்காக பயிர் செய்யும் வயல்வளம் அழிக்கப்படுகிறது. மாசு படிந்த கழிவு நீர் கலப்பு மற்றும் பவளப் பாறைகள் சிதைப்புகளால் கடல் வளம் அழிக்கப்படுகிறது !

மாநில அரசுகளும் நடுவணரசும் போட்டி போட்டுக் கொண்டு சுற்றுலாவை மேம்படுத்துகிறோம், அயல்நாட்டுப் பணத்தை (அந்நியச் செலாவணி) அள்ளிக் குவிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு மலைவளத்தையும், வனவளத்தையும் பெருமளவில் அழித்து வருகின்றன.  மலைவளம் அழிப்பு மற்றும் அதனால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றி மக்களிடையே இன்னும் போதுமான விழிப்புணர்வு ஏற்படவில்லை !

மலையும் மலை சார்ந்த இடங்களின் இயற்கை அமைப்பும் எத்தகையது ? உயர்ந்த மலை முடிகள், பசுமைப் போர்வைக்குள் உறங்கும் பாறைகள், விண்முட்ட ஓங்கி வளர்ந்த மரங்கள், அடர்ந்த புதர்கள், அரிய மூலிகைகள், சுற்றித் திரியும் வன விலங்குகள், சலசலத்து ஓடும் சிற்றோடைகள், அங்கேயே பிறந்து, வளர்ந்து வாழும் பழங்குடி இன மக்கள், எல்லாவற்றுக்கும் மேலாகக் குளிர்ந்த காற்றுஇவை தானே மலையின் இலக்கணம் !

சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் மலையின் இயற்கைச்சூழல்  பெருமளவு அழிக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் மலைவளத்தைக் கண்டு களிக்க வசதி செய்து தருவதாகச்  சொல்லி, பாறைகள் உடைக்கப்பட்டு பல்வேறு சாலைகள் மலைப் பரப்பில் உருவாக்கப்படுகின்றன. அவர்கள் தங்குவதற்கெனத் துச்சில்கள் (LODGES), உடுவிடுதிகள் (STAR HOTELS), புற்றீசல்கள் போல மலைப் பரப்பெங்கும் முளைத்து வருகின்றன. உணவகங்கள் வரைமுறை இன்றிப் பல்கிப் பெருகி மலைப்புறத்தின் தூய்மைக்கு அச்சுறுத்தல் தருகின்றன !

மலையின் இயற்கைச் சூழ்நிலையைக் கெடுக்கும் இத்தகையக் கட்டடங்கள் அல்லாமல் செல்வச் செழிப்பில் மிதக்கும் தனியாரின்  வளமனைகள் (PRIVATE BUNGALOWS), வசதி படைத்தவர்களுக்காகவே இயங்கும் பள்ளிக் கூடங்கள், மருந்தகங்கள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என மலையெங்கும் கற்காரைக் கட்டடங்கள்  நாள்தோறும்  பெருகிவருகின்றன !

இத்தகையக் கட்டடங்களின் பெருக்கத்தால், ஓங்கி உயர்ந்து வளரும் மரங்கள் நாள்தோறும் அழிக்கப்படுகின்றன. மூலிகைப் பயிர்களும் புதர்களும் காணாமற் போகின்றன. உலா வரும் மக்கள் பெருக்கத்தால், மலையெங்கும் குப்பைக்  கூளங்கள் குவிந்து வருகின்றன. கழிவுநீர்த் தேங்கி நாற்றம் மலிந்துவிட்டது. ஊர்திகளின் பெருக்கத்தாலும், இயக்கத்தாலும், நச்சுக் காற்றும் புகையும் மலைப் பரப்பில் காற்றின் தூய்மையை மாசுபடுத்திப் பாழ்படுத்தி  வருகின்றன !

மாநில மற்றும் நடுவண் அரசுகளின் தவறான கொள்கைகளால், மலைகளும், பழங்குடியினர் வாழும் மலையூர்களும் தன் இயற்கை அழகை இழந்து வருகின்றன.. குளிர்ந்த காற்று மண்டலம் மறைந்து வருகிறது.. வெப்பக் காற்று மண்டலம் வியர்வைக்குக் கட்டியம் கூறி அழைப்பு விடுக்கிறது. மலையின் இயற்கைச் சூழல் சிதைக்கப்படுவதால், மழைப் பொழிவின் அளவும் ஆண்டுதோறும்  வீட்சியடைந்து வருகிறது !

சமவெளிகளைப் பாழ்படுத்திவிட்ட இந்த மனிதக் குமுகாயம், மலை வெளிகளையும் பாழ்படுத்தத் தொடங்கிவிட்டது. உதகமண்டலம், கோடைக்கானல், ஏற்காடு (ஏரிக்காடு) போன்ற மலைவாழிடங்கள் (HILL STATIONS)   கற்காரைக் கட்டடங்களின் வரைமுறையற்ற பெருக்கத்தால், பொலிவிழந்து போய்விட்டன. மழை பெய்விக்க வேண்டிய மலைகள் எல்லாம் தன் இயற்கை வளங்களை இழந்து நகரங்கள் ஆகிவிட்டன !

கோடைக் காலங்களில் இந்த மலைவாழிடங்களில் (HILL STATIONS)    குளிர்ச்சியைக் காண முடியவில்லை.  மழையின்மையால், பசுமைப் போர்வைகள் தீய்ந்து சருகாகிப் போகின்றன. மலையில் இருக்கும் அரியவகை மரங்களும் மூலிகைகளும் ஆண்டுதோறும் தீயின் கொடிய நாக்குகளால் சுழற்றி   விழுங்கப்படுகின்றன. மலைவாழ் விலங்குகள் மடிந்து போகின்றன !


உதகை, கோடைக்கானல், ஏற்காடு (ஏரிக்காடு) போன்ற மலை வாழிடங்கள் (HILL STATIONS)   எல்லாம்  முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையையும், இப்போது இருக்கும் நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள் ! மாநில, நடுவண் அரசுகளின் தவறான கொள்கைகளால் இயற்கையின் கொடையான மலைவளம் புயல் வீச்சைப் போலப் பொசுங்கி வருவது தெற்றென விளங்கும் !

காசுக்காக (அந்நியச் செலாவணி) நமது இயற்கை வளங்களை இழப்பதா ? மக்களின் மனக் களிப்புக்காக மலைவளங்களை முற்றிலும் இழந்து விடத்தான் வேண்டுமா ? மாநில அரசும் நடுவணரசும் சிந்திக்குமா ? காலம் தான் விடை சொல்ல வேண்டும் !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மடங்கல்(ஆவணி)05]
{22-08-2019}
----------------------------------------------------------------------------------------------------------
       “தமிழ்ப் பணி மன்றம்முக நூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------

1 கருத்து:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .