name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கீழ்க்கணக்கு (10) திணைமாலை நூற்றைம்பது !

புதன், அக்டோபர் 02, 2019

கீழ்க்கணக்கு (10) திணைமாலை நூற்றைம்பது !

இலக்கியங்களின் பால் மனதைச்  செலுத்துவது,  சற்று இளைப்பாறுதலாக   அமையும் !



பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் திணைமாலை நூற்றைம்பதும் ஒன்று ! கீழ்க் கணக்கு வரிசையில் அகப் பொருள் நூல்கள் ஆறு ! அவற்றுள் இரண்டு நூல்கள்திணைஎன்றும், வேறு இரண்டுஐந்திணைஎன்றும் பெயர் பெற்றுள்ளன !

ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது  ஆகிய ஆறுமே அகப் பொருள் சார்ந்த கீழ்க் கணக்கு நூல்கள் !

ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக  அமைத்து, மாலை போலத் தந்துள்ளமையால்திணைமாலைஎன்றும், பாடல் அளவினால், “திணைமாலை நூற்றைம்பதுஎன்றும் இந்நூல் பெயர் பெற்றுள்ளது. கீழ்க் கணக்கில் அமைந்த ஐந்திணை நூல்களில் அளவால் பெரியது இதுவே !

குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்னும் வரிசையில் ஐந்திணைகளை இந்நூல் முறைப்படுத்தி உள்ளது ! நூற்றைம்பது என்னும் எண் வரையறைக்கு ஏற்ப, திணை ஒவ்வொன்றும் 30 பாடல்களைக் கொண்டிருத்தலே முறையாகும். ஆனால், குறிஞ்சி, நெய்தல், முல்லை ஆகிய மூன்று திணைகளும் ஒவ்வொன்றும் 31 பாடல்களைப் பெற்றுள்ளன !  இதனால், இந்நூலில் நூற்றைம்பது என்னும் அளவினை விஞ்சி நூற்று ஐம்பத்து மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன !

இந்நூலை இயற்றியவர் கணிமேதாவியார். ஏலாதியை இயற்றியவரும் இவரே ! இந்நூல் கி.பி. 6 –ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பது பல அறிஞர்களின் கருத்து !

இந்நூலில் குறிஞ்சித் திணையில் வரும் முதற் பாடல் ! குறிஞ்சித் திணை என்பது கூடற் கருத்தை உரைப்பதன்றோ ! கூடலின் முதற் படி தலைவனும் தலைவியும் சந்தித்தல் ! இதோ காட்சி தொடர்கிறது !

தலைவியும் அவள் தோழியும் தினைப் புலத்தில் காவல் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். அங்கு தலைவன் வருகிறான். நான்கு விழிகள் மோதிக் கொள்கின்றன ! தலைவன் அவர்களைப் பார்த்து வினவுகிறான் !

! பெண்களே !  மணம் மிக்கப் பூங்கொடிகள் படர்ந்திருந்த சந்தன மரங்களை வேருடன் பெயர்த்து எடுத்து அப்புறப் படுத்திவிட்டு, அந்த இடத்தைச் சமப்படுத்தி உழுது, மழையை எதிர்பார்த்து நல்ல நாளில் தினை விதைத்துப் பயிராக்கி, கதிர்கள் முதிர்ந்திருக்கும் இந்நாளில் பறவைகள் கதிர்களைக் கொய்திடா வண்ணம் தினைப் புனத்தில் காவல் காத்து நிற்கும் இளம் பெண்களே ! தாமரை போன்ற ஒளிமிக்க முகமும், நீண்ட கூந்தலும் உடைய  கோதையரே ! நான் எய்த அம்பினை உடலில் தாங்கிக் கொண்டு ஒரு மான் இவ்விடம் ஓடி வந்ததா ? அதை நீங்கள் பார்த்தீர்களா ? “ என்று கேட்கிறான்.

-------------------------------------------------------------------------------------------------------

இதோ அந்தப் பாடல் !

--------------------------------------------------------------------------------------------------------

நறைபடர்  சாந்தம்   அறவெறிந்து,   நாளால்
உறையெதிர்ந்து  வித்திய ஊழேனல்பிறையெதிர்ந்த
தாமரைபோல்  வாள்முகத்துத்  தாழ்குழலீர் !  காணிரோ ?
ஏமரை   போந்தன  ஈண்டு !

--------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:
---------------------------------------

நறைபடர் = மணம் மிக்க பூங்கொடிகள் படர்ந்துள்ள ; சாந்தம் = சந்தனமரம்; அற எறிந்து = வேருடன் களைந்து அப்புறப்படுத்தி, உறை = மழை; எதிர்ந்து =  எதிர்பார்த்து; நாளால் = நல்ல நாள் பார்த்து; வித்திய = விதைத்து; ஊழ் ஏனல் = விளைந்திருக்கும் இந்த முதிர்ந்த தினைப் புனத்தில் ; பிறை எதிர்ந்த = நிலவை எதிர்த்து இதழ் குவியாத; தாமரை போல் = தாமரை பலர் போல்; வாள் முகத்து = ஒளி பொருந்திய முகமும்; தாழ் குழலீர் =  நீண்ட கூந்தலையும் உடைய பெண்களே; = அம்பு; மரை = தைத்த மான் ஒன்று; போந்தன= வந்தது; ஈண்டு = இங்கே; காணிரோ = அதைக் கண்டீர்களா ?

-----------------------------------------------------------------------------------------------------------
இப்பாடல் சொல்லும் செய்திகள் !
--------------------------------------------------------------
(01) சந்தன மரங்கள் விலை உயர்ந்தவை ! தினை விதைப்பதற்காகச் சந்தனக்காடுகள் அழிக்கப் பட்டன என்றால், பண்டைத் தமிழகத்தில் சந்தனமரங்கள் அக் குறிஞ்சி நிலத்தில் அளவிறந்த எண்ணிக்கையில் வளர்ந்திருந்தன என்று பொருள் !

(02)  சந்தன மரங்கள் நிறைய இருந்தன என்றால், அந்நாடு செல்வ வளத்தில் சிறந்த ஒன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும் ! இஃது பண்டைத் தமிழகத்தின் மலை வளத்தைக் காட்டுகிறது !

(03)  தினைப் புனம் பக்கமாக மான் வருகிறது என்றால், மான்கள் வளர்வதற்கான வன வளமும் மிகுதியாக இருந்தன என்பது தெரிகிறது ! இச்செய்தி, அற்றைத் தமிழகம் வனவளம் மிக்கதாக இருந்தது என்பதைக் காட்டுகிறது !

(04)  மழையை எதிர்பார்த்துத் தினை விதைத்தார்கள் என்பதிலிருந்து, மழை வளம் அந்நாளில் குறைவற இருந்தது என்பதும் இப்பாடல் மூலம் புலனாகிறது !

(05)  இளம் பெண்கள் தினைப் புனத்தைக் காவல் காத்தார்கள் என்பதிலிருந்து, பண்டைத் தமிழகத்தில், மகளிர் அச்சமின்றித் தனியாக எங்கும் சென்றுவரும் சூழ்நிலை  இருந்தது என்பது புலனாகிறது !

(06)  தாமரை போன்ற ஒளி பொருந்திய முகம், பெற்ற மகளிர் என்னும் கருத்து, அக்காலத் தமிழகத்தில், பெண்கள் மனக் கவலையின்றி வாழ்ந்தார்கள்; எனவே முக வாட்ட்த்திற்கு வாய்ப்பு  இல்லை. துன்பங்கள் அவர்களது இல்லத்தின் பக்கம் எட்டிக் கூடப் பார்த்ததில்லை என்பதைக் காட்டுகிறது !

(07)  நீண்ட தலைமுடி என்னும் கருத்து, அவர்களது செல்வச் செழுமைக்கும் நலவாழ்வுக்கும் எடுத்துக் காட்டு ! வறுமையும், அதனால் ஏற்படும் உடல் நலிவும் இருந்திருந்தால் மகளிருக்கு நீண்ட கூந்தல் இருக்க வாய்ப்பில்லை !

(08)  மொத்தத்தில், அக்காலத் தமிழகம் வளமாக இருந்தது என்பது திணை மாலை நூற்றைம்பது நமக்கு எடுத்துச் சொல்லும் செய்தியாகும் !

இலக்கியங்களை நுணுகி ஆராய்ந்தால், பண்டைத் தமிழகம் நம் கண்களின் முன்னால் காட்சிகளாய் விரிவதைக் காணலாம் ! பாடுபட்டுத் தேடிப் பணத்தை ஈட்டுகின்ற ஓட்டப் போட்டிகளுக்கு இடையிலும், இலக்கியங்களின் பால் மனதைச் செலுத்துவது, சற்று இளைப்பாறுதலாக  அமையும் !

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் & இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2050,கன்னி(புரட்டாசி,08)
{25-09-2019}

---------------------------------------------------------------------------------------------------------
                ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .