name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: காளமேகம் பாடல் (06) செருப்புக்கு வீரர்களை !

திங்கள், செப்டம்பர் 02, 2019

காளமேகம் பாடல் (06) செருப்புக்கு வீரர்களை !

போர்க்களத்தில் புகுந்து பகைவர்களை வெல்லும் வீரனை !

நினைத்தவுடன் பாடல் பாடும் புலமை வளம் கொண்டவர் காளமேகம் ! காளமேகம் என்றால் கரிய மழை மேகம் ! மழை போல் கவிதை சொரியும் ஆற்றலால் தானோ என்னவோ இவருக்குக் காளமேகம் என்னும் பெயர் வழங்கலாயிற்று !
--------------------------------------------------------------------------------------------------------
பாடல்
--------------------------------------------------------------------------------------------------------
செருப்புக்கு வீரர்களைச் சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல மருப்புக்குத்
தண்டேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே  விளக்குமா றே !
--------------------------------------------------------------------------------------------------------
பொருள்.

மேல்நோக்குப் பொருள்:-

செருப்புக்காக வீரர்களைக் கொன்று ஒழிக்கும் வேலனை நான் கண்டு கட்டித் தழுவ வேண்டும்;  அவனிடம் செல்லும் வழியை விளக்குமாறாகிய வண்டே நீ எனக்கு விளக்குவாயாக !
-------------------------------------------------------------------------------------------------------
கூர்நோக்குப் பொருள்;-

போர்க்களம் புகுந்து வீரர்களைச் சிதறடித்துப் போர் புரியும்  குறிஞ்சி நிலத் தலைவனான வேலனை,  நான்  நேரில் கண்டு பாராட்டிக் கட்டித் தழுவும் வகைபற்றி, தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் வண்டே எனக்கு விளக்கிக் கூறுவாயாக !
-------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-

செரு = போர்க்களம்; புக்கு = புகுந்து; சென்று உழக்கும் = வீரர்களைக் கொன்று குவித்து வெற்றி ஈட்டும்; பொருப்புக்கு நாயகனை = மலைகள் சூழ்ந்த குறிஞ்சி நிலத்தின் தலைவனான ;  வேலன் =  மன்னவனாகிய வேலன் ; புல்ல = ஆரத் தழுவிக் கொள்ள ; மரு = மணம் ; புக்கு = புகுந்து; தண் தேன் = குளிர்ச்சியான தேன்; பொழிந்த = பொழிகின்ற ; திருத் தாமரை மேல் வீற்றிருக்கும் = அழகிய தாமரை மலர் மேல் அமர்ந்திருக்கும்; வண்டே = அறுகாற் பறவை எனப்படும் வண்டே; விளக்கு = விளக்கிச் சொல்வாயாக !
------------------------------------------------------------------------------------------------------

       ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை, 15..]
{30-12-2018}
-------------------------------------------------------------------------------------------------------

2 கருத்துகள்:

  1. பாடலும், விளக்கமும் நன்று ஐயா!

    நேரிசை வெண்பா

    செருப்புக்கு வீர(ர்)களைச் சென்றுழக்கும் வேலன்
    பொருப்புக்கு நாயகனைப் புல்ல - மருப்புக்குத்
    தண்டேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும்
    வண்டே விளக்குமா றே. 40 – கவி காளமேகம்

    வீர(ர்)களை - ர் ஒலி சிறக்காது; கூவிளங்காயாகக் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான விளக்கம் ! மிக்க மகிழ்ச்சி ஐயா !

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .