name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: காளமேகம் பாடல் (09) நஞ்சிருக்கும் ! தோலுரிக்கும் !

திங்கள், செப்டம்பர் 02, 2019

காளமேகம் பாடல் (09) நஞ்சிருக்கும் ! தோலுரிக்கும் !

இரட்டுற மொழியும் இன்றமிழ் வேந்தன் !

நினைத்தவுடன் கவி படுவதில் வல்லவரான காளமேகம் ஐந்நூறுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இரு பொருள்படப் பாடுவதில் வல்லவரான இவர் பாம்பும் வாழைப்பழமும் ஒரே தன்மையன  எனப் பாடியுள்ள பாடலைக் காணுங்கள் !
------------------------------------------------------------------------------------------------------------
பாடல்
------------------------------------------------------------------------------------------------------------

நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பற்பட்டால் மீளாது விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம் .
------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
-----------------

பாம்பும் வாழைப் பழமும் ஒன்றே ! எப்படி ?

பாம்பிடம் நஞ்சு இருக்கும்; உண்பதற்கு ஏற்ற  வாழைப்பழம் நஞ்சு (நைந்து) கனிவாக இருக்கும்;

பாம்பு குறிப்பிட்ட காலங்களில் தன் முதிர்ந்த தோலை உரித்துக் கழற்றிவிடும்; வாழைப்பழம் உண்பதற்கு ஏற்றவாறு தன் தோலினை உரிக்கச் செய்துவிடும்.

பாம்பு, தன் நாதனாகிய சிவபிரானின் முடியில் அமர்ந்திருக்கும்; வாழைப்பழம் சிவனுக்கு திருமுழுக்கு (அபிஷேகம்) செய்யும் போது, ஐந்தமுது (பஞ்சாமிதம்) வடிவிலே சிவனின் முடி மீது சென்று அமரும்.

பாம்புக்குக் கோபம் வந்து பற்களால் தீண்டி விட்டால் யாரும் நஞ்சுத் தாக்கத்திலிருந்து மீளமுடியாது

வாழைப்பழத்தை (வெஞ்சனமாக) துணை உணவாகக் கொள்ள எண்ணி வாயில் இட்டு மென்றால் நம் பற்களின் தாக்குதலிலிருந்து அது மீளமுடியாது

எனவே, மிகுதியான மலர்கள் பூத்துக் குலுங்கி, அவற்றிலிருந்து தேன் வழிந்து ஓடும் சோலைகளைக் கொண்ட திருமலைராயன் பட்டினம் ஊரைப் பொறுத்த வரை பாம்பும் வாழைப் பழமும் ஒன்றே !

------------------------------------------------------------------------------------------------------------
     
  “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணிமன்றம்.
[ தி.: 2049, சிலை, 22.] 
(06-01-2019)
------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .