புலமைச் செருக்கறுத்த புகழ் பெற்ற பாடல் !
இரு பொருள் படப் பாடுவதில் காளமேகம் மிகுந்த
கெட்டிக்காரர் ! அவரை யாராவது சீண்டிவிட்டால், சினம் கொண்டு அவர்களைப் பாட்டாலேயே கேலி
செய்வார் ! அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பாருங்கள் !
------------------------------------------------------------------------------------------------------
பாடல்
-------------------------------------------------------------------------------------------------------
வாலெங்கே நீண்ட
வயிறெங்கே முன்னிரண்டு
காலெங்கே
உட்குழிந்த கண்ணெங்கே - சாலப்
புவிராயர்
போற்றும் புலவீர்காள் நீவிர்
கவிராயர்
என்றிருந்தக் கால்.
-------------------------------------------------------------------------------------------------------
[புலவர்கள் பலர் கூடியிருந்த அவைக்குக் காளமேகம் ஒரு முறை சென்றிருந்தார். அவையினருக்குத் தன்னை ஒரு புலவர் என்று அறிமுகப் படுத்திக் கொண்ட காளமேகம், அவையினரைப் பார்த்து, நீங்களெல்லாம் யாரென்று அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள் என்று வேண்டினார். அவர்களில் ஒருவர் நாங்கள் ”கவிராயர்கள்” என்று ஆணவக் குரலில் சொன்னார். சினமுற்ற காளமேகம் அவர்களைப் பார்த்துப் பாடிய பாடல் இது !]
-------------------------------------------------------------------------------------------------------
பொருள்:-
{ கவிராயர் என்றால் கவிஞர்களுக்கு எல்லாம் அரசர் என்றும் குரங்கு இனத்தின் அரசன் என்றும் இரு பொருள்கள் உள்ளன.}
புவியாளும் மன்னர்கள் போற்றும் புலவர்களே ! நீவிர் கவிராயர் என்றால், உங்களது நீண்ட வால் எங்கே ? முடி நிறைந்த, தூய்மையற்ற நீண்ட வயிறு எங்கே ? அமர்ந்திருக்கும் போது முன் புறத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் இரண்டு கால்களும் எங்கே ? குழி விழுந்த கண்கள் எங்கே ? சொல்லுங்கள் !
-------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-
புவிராயர் = புவியை ஆளும் மன்னவர்; சால = நிரம்பவும்; போற்றும் = புகழ்ந்து பேசும் ; புலவீர்காள் = புலவர்களே ! ; நீவிர் = நீங்கள் எல்லாம்; கவிராயர் = குரங்கு இனத்தின் அரசர்கள் என்றால்; வாலெங்கே = உங்களது வால் எங்கே; நீண்ட வயிறெங்கே = முடிநிறைந்த தூய்மையற்ற வயிறு எங்கே; முன்னிரண்டு காலெங்கே = முன்பக்கம் துருத்திக் கொண்டிருக்கும் கால்கள் எங்கே; உட்குழிந்த கண்ணெங்கே = குழி விழுந்த கண்கள் எங்கே
------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப்
பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.ஆ: 2049, சிலை,
24..]
{08-01-2019}
--------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .