name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: காளமேகம் பாடல் (03) சுருக்கவிழ்ந்த முன்குடுமி !

திங்கள், செப்டம்பர் 02, 2019

காளமேகம் பாடல் (03) சுருக்கவிழ்ந்த முன்குடுமி !

அவிழ்ந்த குடுமி ! உதிர்ந்த பாடல் !

[ஒருமுறை காளமேகப் புலவர் குடந்தைக்கு (கும்பகோணத்திற்கு) சென்றிருந்தார். அங்கு, ஒரு விடுதியில் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, பக்கத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்த ஒருவரது குடுமி ( நீண்ட தலைமுடி ) அவிழ்ந்து, காளமேகத்தின் உணவில் விழுந்தது. உணவு பாழ்பட்டுப் போயிற்று. பசி மயக்கத்தில் இருந்த காளமேகத்திற்கு, உணவு கிடைத்தும் உண்ண முடியாமல் பாழ்பட்டுப் போயிற்றே என்ற ஆதங்கத்தில் கட்டுக்கடங்காத கோபம் வந்தது. அடக்கமுடியாச் சினமடைந்த  காளமேகம், குடுமி வைத்திருந்தவரைப் பார்த்து உடனடியாகப் பாடிய பாடல் இது]
-------------------------------------------------------------------------------------------------------------
பாடல்
-------------------------------------------------------------------------------------------------------------

சுருக்கவிழ்ந்த முன்குடுமிச்  சோழியா!  சோற்றுப்
பொருக்குலர்ந்த  வாயா ! புலையா ! – திருக்குடந்தைக்
கோட்டானே ! நாயே ! குரங்கே ! உனையொருத்திப்
போட்டாளே ! வேலையற்றுப்  போய் !
-------------------------------------------------------------------------------------------------------------
பொருள்:-

முடிந்து வைத்திருந்த குடுமி அவிழ்ந்து என் இலையில் விழ,  என் உணவைப் பாழ்படுத்திவிட்ட சோழநாட்டு மானிடா ! உணவை நாகரிகமாக உண்ணத் தெரியாமல் வாய் ஓரங்களில் ஒட்டிக் கொள்ள, அவை உலர்ந்து காட்சியளிக்கும் இழிமகனே ! குடந்தை நகரில் வாழும் கோட்டானே! (பெரிய ஆந்தையே ), நாயினும் இழிந்தவனே !, வானரமே ! உன்னைப் போய் வேறு வேலையில்லாமல் பெற்றுப் போட்டாளே ஒருத்தி !
-------------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-

சுருக்கு = நீண்ட தலைமுடியை புரிமணை போல் சுற்றி முடிச்சுப் போட்டு வைத்தல்; முன்குடுமி = தலையின் முன் உச்சியில் வளையமாய்ச் சுற்றி வைத்த நீண்ட தலைமுடி; சோழியா = சோழ நாட்டவனே; சோற்றுப் பொருக்கு = உலர்ந்த சோறு;  புலையா = இழிமகனே; திருக்குடந்தை = குடந்தை நகரின் ; கோட்டானே = பெரிய ஆந்தையே ;
-------------------------------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:

      தமிழில் மேதைகளாக இருப்பவர்களுக்கு சினமும் கூடுதலாக இருக்குமோ ?
-------------------------------------------------------------------------------------------------------------

        ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை, 27]
(11-01-2019)
-------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .