name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: காளமேகம் பாடல் (05) முக்காலுக்கு ஏகாமுன் !

திங்கள், செப்டம்பர் 02, 2019

காளமேகம் பாடல் (05) முக்காலுக்கு ஏகாமுன் !

நரை, திரை தோன்றி, கோலூன்றி நடக்கும் முன் !

இரு பொருள்படப் பாடல் எழுதுவதில் மிகச் சிறந்தவர் காளமேகம். ஐந்நூற்றுக்கும் அதிகமான பாடல்களை இவர் எழுதியிருக்கிறார் ! முக்கால் அரைக்கால் என்று கணிதத்தில் புழங்கும் சொற்களைக் கொண்டு பாடல்களைப் பாடி இருக்கும் இவரது திறம் வியப்புக்குரியது !
------------------------------------------------------------------------------------------------------------
பாடல்
------------------------------------------------------------------------------------------------------------
முக்காலுக்  கேகாமுன்  முன்னரையில்  வீழாமுன்
அக்கா  லரைக்கால்கண்  டஞ்சாமுன்  -  விக்கி
இருமாமுன்   மாகாணிக்   கேகாமுன்   கச்சி
ஒருமாவின்  கீழரையின்  றோது
------------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்
------------------------------------------------------------------------------------------------------------
முக்காலுக்கு  ஏகாமுன்  முன்நரையில் வீழாமுன்
அக்காலரைக்  கால் கண்டு அஞ்சாமுன்  -  விக்கி
இருமாமுன்  மாகாணிக்கு ஏகாமுன்  கச்சி
ஒருமாவின்  கீழரை இன்று ஓது.
-------------------------------------------------------------------------------------------------------------
பொருள்:-

இரண்டு காலகளும் வலுவிழந்து, கோல் ஊன்றி நடப்பதற்கு முன், தலை முடியின் முன் புறம் நரை தோன்றும் முன், அந்தக் காலனைக் கண்டு அஞ்சி நடுங்குவதற்கு முன், விக்கல் எடுத்து இருமி உயிர் போகும் முன், மரணமடைந்து சுடுகாட்டுக்குப் போகும் முன், காஞ்சி மாநகரில், எழுந்தருளியுள்ள ஏகாம்பரனை இன்றே நீ வணங்குவாய் மானிடனே !
-------------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள் :-

முக்காலுக்கு = மூன்றாவது காலான ஊன்று கோலுக்கு; ஏகாமுன் = மாறுவதற்கு முன்பு; முன் நரையில் வீழா முன் = தலைமுடியில் முன் பக்கம் நரை விழுவதற்கு முன்னதாக ; அக் காலரை = அந்தக் காலனாகிய எமனை; கண்டு = பார்த்து ; கால் அஞ்சா முன் = அஞ்சிக் கால்கள் நடுங்கித் தள்ளாடும் முன்னதாக ; விக்கி = விக்கலெடுத்து; இருமா முன் = இருமி இருமி உயிர் விடும் முன்பாக; மா = மரணம் ; காணிக்கு = நிலத்திற்கு, அதாவது சுடுகாட்டுக்கு; ஏகா முன் = செல்வதற்கு முன்னதாக ; கச்சி = கச்சி என்று சொல்லப்படும் காஞ்சி மாநகரில் உள்ள ஈசன் கோயிலில் உள்ள ; ஒருமாவின் கீழரை = ஒற்றையுடை தரித்தவரான ஏகாம்பரனை ; இன்று = இன்றே ; ஓது = பாமாலைகள் பாடி வணங்குவாய் மானிடனே !  [ஒருமாவின் கீழன் = ஏகாம்பரன் பாவாணரின் தமிழர் மதம்- பக்கம் 84 காண்க ]
-------------------------------------------------------------------------------------------------------------
இதில் வரக்கூடிய சொற்கள், பின்னங்களைப் (fractions) போல் தோன்றும் சொற்கள் !

அவை எந்த பின்னங்களைக் குறிக்கின்றன தெரியுமா ?

முக்கால் = ¾ (மூன்றின் கீழ் நான்கு)
முன்-ரை = ½ (ஒன்றின் கீழ் இரண்டு)
அக்-காலரைக்கால் = 3/8 (மூன்றின் கீழ் எட்டு)
இருமா = 1/10 (ஒன்றின் கீழ் பத்து)
மாகாணி = 1/16; வீசம் (ஒன்றின் கீழ் பதினாறு)
ஒரு மா = 1/20 (ஒன்றின் கீழ் இருபது)
-------------------------------------------------------------------------------------------------------------
      
 ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------------

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 20149, சிலை, 25.]
(09-01-2019)
-------------------------------------------------------------------------------------------------------------

4 கருத்துகள்:

  1. அன்புடையீர், கச்சி ஒரு மாவின் கீழர் என்று ஈசனைக் குறிப்பிடுங்கால், ஒரியா நாட்டு புவனேஸ்வரருக்கும் ஏகாம்ரர் என்ற திருநாமம் ஒரு மாமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் அண்ணலையே குறிப்பிடும் வண்ணம் அமைந்திருப்பது நினைவுக்கு வருகிறது. கச்சியிலும் அவ்வாறே சிவனாரைப் புலவர் அழைத்திருக்கிறாரா அல்லது ஓராடையே அணியும் ஏகாம்பரனாகப் பாடி இருக்கிறாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒற்றையாடை அணியும் ஈசனுக்குப் பெய்ர் ஏகாம்பரன். ஏகம் = ஒன்று (ஒற்றை); அம்பரம் = ஆடை; ஏகாம்பரன் = ஒற்றையாடை அணிந்தவன் !

      நீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .