name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: புறநானூறு
புறநானூறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புறநானூறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மே 04, 2022

புறநானூறு (218) பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய !

எங்கோ பிறக்கும் மணிகள் தங்க அணிகலனில் இணைகையில் பெரும் மதிப்பைப் பெறுகிறது !

-------------------------------------------------------------------------------------------------------

பாடலின் பின்னணி:

--------------------------------------

கோப்பெருஞ் சோழன், பிசிராந்தையார் இருவரும் ஒருவரையொருவர் நேரில் பாராமலேயே நட்புப் பூண்டிருந்தனர். தான் பெற்ற  மக்களால் ஏற்பட்ட மனவருத்தத்தில் உயிரை மாய்த்துகொள்ள  எண்ணி உண்ணாமல் உறங்காமல் வடக்கு நோக்கி அமர்ந்திருந்தான் கோப்பெருஞ் சோழன். அவனைக் காண பிசிராந்தையார் வந்தார். சோழனின் நிலையை எண்ணி வருந்தி அவரும் வடக்கிருந்து மன்னனுடனேயே உயிரைத் துறந்தார். நட்பால் இணைந்தவர்கள் இறப்பிலும் ஒன்றிணைந்தார்கள் !

 

இந்த நிகழ்வு தூண்டு கோலாக அமைய புலவர் கண்ணகனார் ஒரு பாடலைப் படைக்கிறார். இதோ அந்தப் பாடல்:--

 

---------------------------------------------------------------------------------------------------------

 

பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய

மாமலை பயந்த காமரு மணியும்

இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்(து)

அருவிலை நன்கலம் அமைக்கும் காலை

ஒருவழித் தோன்றியாங்(கு) என்றும் சான்றோர்

சான்றோர் பாலர் ஆப

சாலார் சாலார் பாலர் ஆகுபவே.

--------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------------

 

வரி.(01) பொன்னும் = தங்கமும் ; துகிரும் = பவளமும் ; முத்தும் =

சிப்பி விளை நன் முத்தும்;

 

வரி.(02) மாமலை = உயர்ந்த மலை ; பயந்த = தருகின்ற ; காமரு

மணியும் = அழகிய மாணிக்கமும்

 

வரி.(03) இடைபட = தோன்றுகின்ற இடங்கள் ; சேய ஆயினும் =

ஒன்றுக்கொன்று மிகத் தொலைவாயினும் ; தொடை புணர்ந்து =

இவற்றையெல்லாம் பதித்து;

 

வரி.(04) அருவிலை நன்கலம் = விலையுயர்ந்த அணிகலன்

செய்கையில் ;

 

வரி.(05) ஒருவழித் தோன்றியாங்கு = அனைத்தும் ஓரிடத்தில்

சேர்ந்திருப்பது போல ; என்றும் சான்றோர் = சான்றோர்கள்

எப்போதும் ;

 

வரி.(06) சான்றோர் பாலர் ஆகுப ; ஒருவரையொருவர் நாடிச்

சென்று ஒன்றிணைவார்கள்

 

வரி.(07) சாலார் சாலார் = சான்றோர் அல்லாதவர்களும் ; பாலர்

ஆகுபவே = ஒருவரையொருவர் நாடி ஒன்றிணைவார்கள்.

 

--------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------

தங்கம் மண்ணிற்குடியிலிருந்து தோண்டி எடுக்கப்படுகிறது. கடலில் உருவாகும்   பவளப்பாறைகளிலிருந்து பவளம் பெறப்படுகிறது. மக்கள்  விரும்பும் மாணிக்கக் கற்கள் , உயர்ந்த மலைகளில் பிறக்கின்றன. இவ்வாறாக இவை ஒவ்வொன்றும் பிறக்குமிடங்கள் மாறுபட்டவை; ஒன்றுக்கொன்று இடைவெளியும் தொலைவும் உடையவை !


ஆனால், வற்றைக்கொண்டு விலையுயர்ந்த ணிகலன்கள் செய்யும்போது, அவை அவ்வணிகலனில் பதியப்பெற்று ஒரே இடத்தில் ஒன்றாகத் தோன்றுகின்றன. அதுபோல், நல்லியல்புகள் அமைந்த  சான்றோர் தொலைவிலிருந்தாலும், ஒருவரையொருவர் நாடி ஒன்றுசேர்வர். (இதனால் பயனுண்டு). நல்லியல்புகளற்ற கீழோரும் எங்கிருந்தாலும் ஒருவரையொருவர் நாடிச் சென்று இணைந்து கொள்வார்கள். (இதனால் பயனேதுமில்லை) !

 

எனவே, நாம் முதலில் நம்மை மதிப்புமிக்க பண்புடையவர்களாக ஆக்கிக்கொண்டால், அச்சான்றாண்மை தன்னினமான சான்றோரிடம் நம்மைக்கொண்டு சேர்க்கும் என்பதே இப்பாடல் சொல்லும் கருத்து !

 

நம் வாழ்க்கைக்கு வேண்டிய மணியான ஒழுக்கங்களை, விலையுயர்ந்த மணிகளை உவமைகளாகச் சொல்லி , நமக்கு நல்வழி காட்டுகிறார் கண்ணகனார் என்னும் நல்லிசைப்புலவர் !

-------------------------------------------------------------------------------------------------------

 காலக் கண்ணாடி:

-----------------------------------

இப்பாடலிலிருந்து நாம் வரலாற்றுச் செய்திகள் சிலவற்றையும் தெரிந்துகொள்ள முடிகிறது !

 

(01)பண்டைத் தமிழர்கள்  ஒன்பான்  (ஒன்பது) மணிகளையும் அவற்றைக் கொண்டு தங்கத்தினாலான அணிகலன்களையும் செய்வதில் வல்லவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள் !

(02)சான்றோர்கள் தம்மையொத்த சான்றோர்களை நாடிச் சென்று அவர்களிடம் நல்லுறவு பூண்டு மக்களுக்கு நல்வழி காட்டியிருக்கிறார்கள் ! கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் !

 

புறநானூறு என்பது பண்டைய தமிழகத்தின் வளத்தையும் மாண்பையும் உணர்த்தும் காலக் கண்ணாடியாகத் திகழ்கிறது என்பது எவரும் மறுக்கமுடியாத  உண்மையாகும் !

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 21]

{04-05-2022}

-------------------------------------------------------------------------------------------------------

 

 


செவ்வாய், மே 03, 2022

புறநானூறு (351) படுமணி மருங்கின பணைத்தாள் யானையும் !

இளவரசியை மணக்காமல் இவர்கள் அமைதி கொள்ளப் போவதில்லை !

 --------------------------------------------------------------------------------------------------------

 பாடலின் பின்னணி :

 ----------------------------------------

 

குறுநில மன்னன் ஒருவனின் மகளை மணந்துகொள்ள அண்டை நாட்டு மன்னர்கள் சிலர் விரும்புகின்றனர். ஆனால் மகளைப் பெற்ற மன்னன் அவர்களில் யாருக்கும் அவளை மணம் செய்துகொடுக்க விரும்பவில்லை.  எப்படியும் இளவரசியை அடைந்தே தீருவது என்னும் கருத்துடன் அண்டை நாட்டு மன்னர்கள் தங்கள் படைகளுடன் இவன் நாட்டுக்கு வருகின்றனர். இவனது கோட்டைக்கு வெளியே அவர்களது  படைகள் அணி வகுத்து நிற்கும் ஆரவாரம் கேட்கிறது !

 

இந்தச் சூழ்நிலையைக் கண்ணுற்ற படைமங்க மன்னியார் என்னும் புலவர்இளவரசியை மணம் செய்து கொடுக்க  மன்னனோ உடன்படவில்லை; வந்திருக்கும் மன்னர்களோ அவளை அடையாமல் திரும்பப் போவதில்லை. போர் மூளுமோ அழகிய வளம் பொருந்திய இந்த நல்லூர் இனி என்னவாகுமோ என்று வருந்துகிறார்  புலவர் !  இதோ அந்தப் பாடல்:--

 

----------------------------------------------------------------------------------------------------------

 

படுமணி மருங்கின பணைத்தாள் யானையும்

கொடிநுடங்கு மிசைய தேரும் மாவும்

படையமை மறவரொடு துவன்றிக் கல்லெனக்

கடல்கண் டன்ன கண்ணகன் தானை

வென்றெறி முரசின் வேந்தர் என்றும்

 

வண்கை எயினன் வாகை அன்ன

இவள்நலம் தாராது அமைகுவர் அல்லர்;

என்னா வதுகொல் தானே; தெண்ணீர்ப்

பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை

தேங்கொள் மருதின் பூஞ்சினை முனையின்

 

காமரு காஞ்சித் துஞ்சும்

ஏமம்சால் சிறப்பினிப் பணைநல் லூரே !

 

----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

----------------------------------------

 

வரி.(01). படுமணி = ஒலிக்கும் மணி ; மருங்கு = யானையின் விலாப் பக்கம் ; பணைத் தாள் = பருத்த கால் ;

 

வரி.(02). கொடி நுடங்கு = கட்டப்பட்ட கொடி அசைய ; மிசை = மேல் ; தேரும் = தேர்ப்படையும் ; மாவும் = குதிரைகளும் ;

 

வரி.(03) படையமை மறவரொடு = படை வீரர்களோடு ; துவன்றி = நெருக்கமாக ; கல்லென = சேர்ந்து ஒலியெழுப்ப

 

வரி.(04). கடல் கண்டன்ன = கடல் போன்ற ; கண் அகன் தானை = பரந்து விரிந்த படைகள் ;

 

வரி.(05) வென்று எறி முரசின் = வெற்றி முரசு கொட்டுகின்ற; வேந்தர் = அண்டை நாட்டு மன்னர்கள்

 

வரி.(06) வண்கை எயினன் வாகை அன்ன = வள்ளல் எயினனது வாகை என்னும் ஊரைப் போன்ற செழுமை பொருந்திய ;

 

வரி.(07) இவள் நலம் தாராது = இவளைத் திருமணம் செய்யாது ; அமைகுவர் அல்லர் = ஓயமாட்டார்கள்.

 

வரி.(08) என்னாவது கொல் தானே = என்ன நடக்குமோ தெரியவில்லை ; தெண்ணீர் = தெளிந்த நீரையுடைய  ;

 

வரி.(09) பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை = குளத்து மீன்களைப் பிடித்து உண்ட நாரைகள் ;

 

வரி.(10) தேங்கொள் மருதின் = தேன்மலர் நிறைந்த மருத மரத்து ; பூஞ்சினை முனையின் = பூஞ்கிளைகள் வேண்டாமென வெறுத்து ;

 

வரி.(11) காமரு காஞ்சித் துஞ்சும் = அழகிய காஞ்சி மரத்தின் கிளைகளுக்குச் சென்று அமர்ந்து அமைதியாக உறங்கும் ;

 

வரி.(12)  ஏமம் சால் = பாதுகாப்பு நிறைந்த ; சிறப்பின் = சிறப்புடைய ; பணை நல்லூரே = மருத நிலம் நிறைந்த இந்த நல்லூர். (இனி என்னவாகுமோ ?)

 

----------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

---------------------

 

முதுகின் இருபுறமும் மணிகள் தொங்கவிடப்பட்டு ஒலியெழுப்ப, பருத்த கால்களையுடைய யானைகள்  இந்தக் கூட்டத்தில் காணப்படுகின்றன. கொடிகள் கட்டப்பட்ட தேர்ப்படைகள் இருக்கின்றன. விரைந்து நடைபோடும் குதிரைகளும், படைவீரர்களும் காணப்படுகின்றனர். இத்தகைய கடல் போன்ற பெரிய படையுடன் வெற்றிமுரசு கொட்டும் வேந்தர்கள் சிலர் இவளைத் திருமணம் செய்துகொள்ள வந்துள்ளனர் !

 

மகளைப் பெற்ற இந்த நாட்டு மன்னனோ அவர்கள் விருப்பத்திற்கு உடன்படவில்லை. ஆனால், முப்படைகளுடன் வந்துள்ள அண்டை நாட்டு மன்னர்கள் இவளை அடையாது திரும்ப மாட்டார்கள். போர் உறுதியாக நடக்கும் என்று தான் தோன்றுகிறது !

 

வளம் மிக்க இந்த நாட்டில், பொய்கையில் துள்ளித் திரியும் மீன்களைப் பிடித்து உண்டுவிட்டு நாரைகள் எல்லாம் மருத மரக் கிளைகளில் தங்காமல் காஞ்சி மரம் தான் தமக்குப் பாதுகாப்பானது என்று கருதி அதன் கிளைகளில் சென்றமர்ந்து இளைப்பாறுகின்றன. போர் மூண்டுவிட்டால் இந்த நாரைகள் இனி எங்கு செல்லும் ? இந்த வளநாடும் இனி என்னவாகும் ?

 

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 20]

{03-05-2020}

----------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, ஜனவரி 24, 2021

புறநானூறு (290) நுந்தை தந்தைக்கு இவன் தந்தை !

இவன் பாட்டன் உன் பாட்டனின் உயிரைக் காப்பதற்காக !


பாடலின் பின்னணி: 
---------------------------------

ஒருஅரசனின் ஆநிரைகளை (பசுக் கூட்டத்தினை) மற்றொரு அரசனின் வீரர்கள் கவர்ந்து சென்றனர். ஆநிரைகளை இழந்த அரசன் அவற்றை மீட்பதற்காகக் கரந்தை மலர் சூடிப் போர் நடத்த விரும்பினான். அவன் தன் நாட்டிலுள்ள வீரர்களைப் போருக்கு வருமாறு அழைத்தான். அரசனின் அழைப்பிற்கிணங்கி, வீரர்கள் பலரும் ஒன்று கூடினர். போருக்குப் போகுமுன் அரசன் வீரர்களுக்கு விருந்தளித்து, அவர்களின் வீரச் செயல்களைப் புகழ்வது வழக்கம். அவ்விருந்தில், ஒளவையாரும் கலந்துகொண்டார். 

வீரர்களைப் புகழும் பணியை ஒளவையார் மேற்கொண்டார். ஒரு வீரனின் குடிப்பெருமையைக் கூற விரும்பிய ஒளவையார், “அரசே, இவன் பாட்டன் உன் பாட்டனின் உயிரைக் காப்பதற்காக, வண்டியின் குடத்தில் ஆரக்கால்கள் போல் தன் உடல் முழுதும் வேல்கள் பாய்ந்து இறந்தான். இவனும், தன் பாட்டனைப்போல், உன்னை மழையிலிருந்து காக்கும் பனையோலைக் குடைபோலக் காப்பான்.என்று கூறுவதை இப்பாடலில் காணலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
புறநானூறு. பாடல்.290.
------------------------------------------------------------------------------------------------------------
இவற்குஈத்து உண்மதி கள்ளே; சினப்போர்
இனக்களிற்று யானை, இயல்தேர்க் குருசில்!
நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை,
எடுத்துஎறி ஞாட்பின் இமையான், தச்சன்
அடுத்துஎறி குறட்டின், நின்று மாய்ந் தனனே:
மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்
உறைப்புழி ஓலை போல,
மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே.

------------------------------------------------------------------------------------------------------------
உரை:
----------
அரசே, முதலில் கள்ளை இவனுக்கு அளித்து பின்னர் நீ உண்பாயாக; சினத்துடன் செய்யும் போரையும், யானைகளையும், நன்கு செய்யப்பட்ட தேர்களையுமுடைய தலைவனே ! உன் பாட்டனை நோக்கிப் பகைவர்கள் எறிந்த வேல்களைக் கண்ணிமைக்காமல் இவன் பாட்டன் தாங்கிக்கொண்டான்; தச்சனால் வண்டியின் குடத்தில் செருகப்பட்ட ஆரக்கால்கள் போல் அவன் காட்சி அளித்து இறந்தான். வீரத்துடன் போர்செய்து புகழ்பெற்ற வலிமையுடைய இவன், மழை பெய்யும்பொழுது நம்மை அதனின்று காக்கும் பனையோலையால் செய்யப்பட்ட குடைபோல் உன்னை நோக்கி வரும் வேல்களைத் தாங்கி உன்னைக் காப்பான்.
-------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------
இவற்கு = இவனுக்கு; ஈத்து = கொடுத்து; மதி அசைச்சொல்.; இனம் = கூட்டம்; இயற்றல் = புதிதாகச் செய்தல்; குருசில் = குரிசில் = தலைவன், அரசன்நுந்தை = உன் தந்தை ; ஞாட்பு = போர், போர்க்களம் ; குறடு = வண்டிச் சக்கரத்தின் குடம் (நடுப்பகுதி.) ; மறம் = வீரம்; மைந்து = வலிமை.உறை = மழை; உறைப்புழி = மழை பெய்யும்பொழுது; ஓலை = ஓலைக்குடை.

-----------------------------------------------------------------------------------------------------------
          ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை
-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.: 2050, மீனம், 08]

{22-03-2019)

------------------------------------------------------------------------------------------------------------

நுந்தை தந்தைக்கு









புறநானூறு (229) ஆடு இயல் அழல் குட்டத்து !


பங்குனி மாதத்து முன்னிரவில் ! - புறநானூறு  !


பண்டைத் தமிழர்கள் பல துறைகளிலும் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள் ! வானவியலிலும் சிறந்து விளங்கி இருக்கிறார்கள்.
ஆனால் வானவியல் என்பது ஆரியர்களின் வருகைக்குப் பிறகு கணியம் (சோதிடம்) என நீட்சி பெற்று, தவறான நம்பிக்கைகளை வளர்க்கும் நாற்றங்காலாக மாறியது தான்  காலத்தின் கோலம் ! புறநானூறில் ஒரு பாடல் ! வானவியல் தொடர்பான செய்திகளைத் தரும் இப்பாடல், விண்வீழ் கொள்ளி விழுந்த நிகழ்வுடன், சேர மன்னன் இறந்த நிகழ்வை முடிச்சுப் போட்டுப் பார்ப்பது தான் ஆரிய நாகரிகத்தின் தாக்கம் போலும் !
----------------------------------------------------------------------------------------------------
பாடப்பெற்றவன்: கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
பாடியவர்:  புலவர் கூடலூர் கிழார
----------------------------------------------------------------------------------------

          ஆடு இயல் அழல் குட்டத்து
          ஆர்  இருள்  அரை இரவில்,
     முடப் பனையத்து வேர் முதலாக்
          கடைக் குளத்துக்  கயம்  காய,
     பங்குனி உயர் அழுவத்துத்
          தலைநாள் மீன் நிலை திரிய,
     நிலைநாள் மீன் அதன்எதிர் ஏர்தர,
          தொல்நாள் மீன் துறைபடிய,
     பாசிச் செல்லாது ஊசி முன்னாது,
          அளக்கர்த் திணை விளக்காகக்
     கனைஎரி பரப்ப, கால்எதிர்பு பொங்கி
          ஒருமீன் விழுந்தன்றால், விசும்பினானே !
     அதுகண்டு, யாமும், பிறரும் பல்வேறு இரவலர்
     பறைஇசை அருவி நன்னாட்டுப் பொருநன்
     நோயிலன் ஆயின் நன்று ! மற்று இல்லென
          அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப,
     அஞ்சினம் எழுநாள் வந்தன்று இன்றே;
          மைந்துடை யானை கைவைத்து உறங்கவும்
     திண்பிணி முரசும் கண்கிழிந்து உருளவும்
          காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும்
     கலிமாக் கதிஇன்றி வைகவும்,
          மேலோர் உலகம் எய்தினன் ஆகலின்
     ஒண்தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகித்
          தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ !
     பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு
          அளந்துகொடை அறியா ஈகை,
     மணிவரை அன்ன மாஅ யோனே !

-------------------------------------------------------------------------------------------------------------

[ பாடலின் பொருள் அடி நேருரையாகத் தரப்படுகிறது ]


பங்குனி உயர் அழுவத்து = ஒரு பங்குனி மாதத்து நடுப் பகுதியையொட்டி,

ஆர் இருள் அரை இரவில் = செறிந்த இருள் சூழ்ந்த இரவு நேரத்தில்,

முடப் பனையத்து வேர் முதலா = வளைந்த பனை போன்ற தோற்றம் உடைய அனுச மீன் கூட்டத்தினை அடுத்து வருகின்ற கேட்டை மீன் தொடங்கி,

கடைக் குளத்துக் கயம் காய = கயம் எனப்படும் குளம் போல் தோற்றம் அளிக்கும் புனர்பூச மீனுக்கு முன்னதாக  உள்ள திருவாதிரை மீன் வரை உள்ள 13 மீன்களும் வானிலே ஒளிவிட்டுத் திகழ,
[ கேட்டை, அனுஷம், விசாகம், சுவாதி, சித்திரை, அஸ்தம்,
  உத்தரம், பூரம், மகம், ஆயில்யம், பூசம், புனர்பூசம், திருவாதிரை
  = 13 ]

தலைநாள் மீன் நிலை திரிய = அப்பொழுது வானின் உச்சியில் இருந்த உத்தரம் என்னும் மீன் அவ்வுச்சியிலிருந்து மேல் திசை நோக்கிச் சாய்ந்தது (நகர்ந்தது) !

நிலைநாள் மீன் அதன் எதிர் ஏர் தர = அதே நேரத்தில் அந்த உத்தர மீனிலிருந்து  எட்டாவதாக வரும் மூலம் மீன் கீழ்த் திசையில் அடிவானத்தில் எழுந்தது !

[ (1) உத்தரம் (2) அத்தம், (3) சித்திரை, (4) சுவாதி, (5) விசாகம், (6)   அனுசம், (7) கேட்டை, (8) மூலம். ]

தொல் நாள் மீன் துறை படிய  = அந்த உத்தர மீனுக்கு முன்னதாக மேல் திசை நோக்கி நகர்ந்து சென்றவற்றுள்   எட்டாவதாக அமையும் மீனாகிய மிருகசீரிடம் அடிவானில் மறையும் அந்த நேரத்தில்,

[ (1) உத்தரம் (2) பூரம் (3) மகம் (4) ஆயில்யம் (5) பூசம் (6) புனர்பூசம் (7) திருவாதிரை (8) மிருகசீரிடபம். ]

ஒருமீன் = ஒரு விண்வீழ் கொள்ளியானது,

பாசிச் செல்லாது, ஊசி முன்னாது = கிழக்கும் போகாமல், வடக்கும் போகாமல், வடகிழக்காக

ளக்கர்த் திணை விளக்காக = கடல் சூழ்ந்த உலகுக்கு விளக்குப் போல்,

கனை எரி பரப்ப, கால் எதிர்பு பொங்கி = காற்றில் கிளந்து எழுந்து, தீப் பரந்து,

ஆடு இயல் அழல் குட்டத்து = ஆடு போன்ற தோற்றம்  உடைய மேழ இராசியில் நிலைத்திருக்கும் கார்த்திகை மீனின் முதலாம் பாதம் நோக்கி,

விழுந்தன்றால், விசும்பினானே = விசும்பிலிருந்து வீழ்ந்தது !


அது கண்டு யாமும் பிறரும் பல்வேறு இரவலர் = அதைக் கண்டு, யாமும் பிறரும், பல்வேறு இரவலரும்,

[ இது ஒரு தீய அறிகுறி ஆயிற்றே, என்று அன்று கவலை கொண்டோம் ! ]

பறை இசை அருவி நல் நாட்டுப் பொருநன் = பறை ஓசை போல் ஒலிக்கும்  அருவிகள் நிறைந்த நல்ல மலை நாட்டின் தலைவனாகிய சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை,

நோய் இலன் ஆயின் நன்று மற்று இல் என நோயின்றி நலமுடன் இருக்க வேண்டுமே என்று எண்ணி ஏங்கினோம் !

அழிந்த நெஞ்சம் மடிஉளம் பரப்ப = வருந்திய நெஞ்சத்துடன் வாடிக் கலங்கி,

அஞ்சினம் = அஞ்சினோம் !

எழு நாள் வந்தன்று - அந்த மீன் நிலம் நோக்கி விழுந்து இன்று ஏழு நாள் ஆகிறது !

இன்றே = இன்றைய நாளில்  (யாம் காண்கையில்),

மைந்துடை யானை கை வைத்து உறங்கவும் = மன்னனின் பட்டத்து யானை தன் தும்பிக்கையை நிலத்தில் வைத்து உறங்குகிறது !

திண் பிணி முரசம் கண் கிழிந்து உருளவும் = வாரால் பிணிக்கப்பட்ட முரசு கிழிந்து உருண்டு கிடக்கிறது !

காவல் வெண் குடை கால் பரிந்து உலறவும் = காவலுக்கு அடையாளமாக இருக்கும் வெண் கொற்றக் குடையின் காம்பு ஒடிந்து சிதைந்து காணப்படுகிறது !

கால் இயற் கலிமாக் கதி இன்றி வைகவும்காற்றைப் போல் கடிது செல்லும் அரசனின் புரவி (குதிரை)  நிலை குலைந்து நிற்கிறது !

[ இவை எல்லாம் நல்ல குறிகளாகத் தோன்றவில்லையே ! ]

ஆகலின் = ஆகையால்

ஒண் தொடி மகளிர்க்கு உறு துணை ஆகி = தன் மனைவியர்க்கு உற்ற துணைவனாக இலங்கிய சேர மன்னன்,

தன் துணை ஆயம் மறந்தனன் கொல்லோ = தன் மனைவியரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டானோஆமாம் !

பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு = பகைவரைக் கொல்லும் வலிமையும், தன்னை நாடி வந்தவர்களுக்கு

அளந்து கொடை அறியா ஈகை = அளவற்ற பொருள்களை அளித்த கொடை வள்ளலும்

மணி வரை அன்ன  மாஅயோனே ? = நீல நிறமுடைய திருமால் போன்றவனுமாகிய சேரன்

மேலோர் உலகம் எய்தினன் = இயற்கை எய்தி விட்டான்  என்பது மேற்கண்ட நிகழ்வுகளிலிருந்து உறுதியாகத் தெரிகிறது  !

------------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:

ஒரு பங்குனி மாதத்து முன்னிரவில், கிழக்கே அடிவானத்தில்  கேட்டை மீன் தொடங்கி, மேற்கே திருவாதிரை ஈறாக 13 மீன்களும் வானில் மின்மினி போல்  கண் சிமிட்டிக் கொண்டிருக்க, உச்சி வானில்  இருக்கும் உத்தர மீன் மெல்ல மேற்கு நோக்கி நகர்கிறது !

இந்த நேரத்தில் விசும்பிலிருந்து ஒரு விண்வீழ் கொள்ளியானது, மேழ மண்டலத்தில் இருக்கும் கார்த்திகை மீன் நோக்கி விழுகிறது ! இதைக் கண்ணுறும் யாமும், எம்முடன் இருந்த பிறரும், இரவலர்களும், இஃதோர் தீக்குறி ஆயிற்றே, எம் மன்னனாகிய சேரன் இரும்பொறைக்கு இஃது ஆகாதே, அவன் நலமுடன் இருக்க வேண்டுமே என்று மிக்க கவலை கொண்டோம் !

இது நிகழ்ந்த ஏழாம் நாள் மன்னனைக் காண அரண்மனைக்குச்  செல்கிறோம் ! அங்கு, மண்ணில் படுத்தறியாத மன்னனின் பட்டத்து யானை தரையில் கைவைத்துக் கிடக்கிறது ! அவனது வெற்றி முரசு தரையில் வீழ்ந்து கிடக்கிறது ! வெண்கொற்றக் குடையைத் தாங்கி நிற்கும் காம்பு உடைந்து கிடக்கிறது, மன்னனின் தனிப் புரவி நிலையின்றித் தவிக்கிறது !

இவற்றை எல்லாம் காண்கையில் விண்வீழ் கொள்ளி விளம்பிய தீயூழ் தன் திறத்தைக் காட்டிவிட்டதோ என்று தோன்றுகிறது ! தன் துணைவியைப் பிரிந்து மன்னன் விண்ணுலகம் சென்றுவிட்டானோ ? ஆம் ! அப்படித்தான் தோன்றுகிறது !
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.:2050: நளி (கார்த்திகை) 22]

{8-12-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
     தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------


ஆடு இயல் அழல்