name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: கீழ்க்கணக்கு
கீழ்க்கணக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கீழ்க்கணக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 02, 2019

கீழ்க்கணக்கு (13) ஆசாரக்கோவை !

வைகறைத் துயில் எழுதல், காலைக் கடன், நீராடல், உண்ணல், உடுத்தல், உறங்கல் போன்ற பல  ஒழுக்கங்கள் வலியுறுத்தப் படுகின்றன ! 


ஆசாரக் கோவை என்னும் தொடருக்கு ஒழுக்கங்களின் தொகுதி என்பது பொருள். ‘ஆசாரங்களினது கோவைஎன்றோ, ‘ஆசாரங்களைத் தொகுத்த கோவைஎன்றோ இத்தொடருக்குப் பொருள் கூறலாம். இப் பெயர் நூலுள் பொதிந்துள்ள பொருள் பற்றி அமைந்தது !

கி.பி. 7 – ஆம் நூற்றாண்டு வாக்கில்  இந்நூல் தோன்றியதாக அறிஞர்கள் பலர் கருதுகின்றனர்.  தமிழ்நாட்டில் வடமொழி மேலாண்மை மிகுந்திருந்த காலகட்டத்தில், எழுந்த நூலாகையால், இந்நூற் பெயரிலும், வடமொழிச் சொல்; பாடல்களிலும் வடமொழிச் சொற்கள்  ! 

பொது வகையான ஒழுக்கங்களைத் தொகுத்தது தவிர, நாள்தோறும் வாழ்க்கையில் பின்பற்றி நடக்க வேண்டிய கடமைகள் அல்லது நித்திய ஒழுக்கங்களையும் மிகுதியாக ஆசிரியர் தந்துள்ளார். அகத் தூய்மை அளிக்கும் அறங்களோடு உடல் நலம் பேணும் புறத் தூய்மையை வற்புறுத்திக் கூறும் பகுதிகள் பலவுள்ளன !

வைகறைத் துயில் எழுதல், காலைக் கடன் கழித்தல், நீராடல், உடுத்தல், உண்ணல், உறங்குதல் முதலிய பல நிகழ்ச்சிகளிலும் ஒழுகும் நெறிகள் வற்புறுத்தப் படுகின்றன. மேற்கொள்ளத் தக்கன இவை, விலக்கத் தக்கன இவை, எனச் சில ஒழுக்கங்களை விதித்தும், சிலவற்றை விலக்கியும் செல்லும் முறை கருத்திற் கொள்ளத் தக்கது !

இந்நூல் வடமொழி சுமிருதிக் கருத்துகளைப் பின்பற்றி எழுந்தது என்பது பல அறிஞர்களின் கருத்து. வடமொழி சுமிருதிகளின் அடிப்படையில் தொகுக்கப் பெற்றுள்ள இந்நூலிற் கூறப்பட்டுள்ள ஒழுக்கங்களில் சில இக்காலத்திற்கு ஒவ்வாது இருக்கலாம். சிலவற்றை இன்றைய சூழ்நிலையில் பின்பற்ற முடியாமலும்  இருக்கலாம். ஆயினும் இவை எல்லாம் முன்னோர் கண்ட ஒழுக்க நெறிகளே !

இந்நூலை இயற்றியவர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார்  என்பதாகும். இந்நூலுள் சிறப்புப் பாயிரம் நீங்கலாக நூறு செய்யுள்கள் உள்ளன.  வெண்பாவின் வகையாகிய குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, சவலை வெண்பா என்பனவெல்லாம் இதில் உள்ளன !

எப்பொழுதெல்லாம் நீராட வேண்டும் என்பது பற்றி ஆசிரியர் கூறும் கருத்து வருமாறு :- (01) இறை வணக்கம் செய்வதற்கு முன்பு (02) தீய கனவு கண்டு விழிப்பு அடைந்த பின்பு (03) ஏதாவதொரு காரணத்தால் உடலில் தூய்மையின்மை ஏற்பட்ட பின்பு (04) உண்டதைக் கக்கிவிட்டால், அதன் பின்பு (05) முடி திருத்தம் செய்து கொண்ட பின்பு (06) உணவு உண்பதற்கு முன்பு (07) எப்பொழுது உறங்கினாலும், உறங்கி எழுந்த பின்பு (08) உடலுறவு கொண்ட பின்பு (09) தூய்மைக் குறைவானவர்களைத் தொட நேர்ந்த பின்பு (10) மலங் கழித்த பின்பு ! இப்பத்து நேர்வுகளிலும் தவறாது நீராட (குளிக்க) வேண்டும் ! இதோ அப்பாடலைப் பாருங்கள் !

-----------------------------------------------------------------------------------------

தேவர்  வழிபாடு,  தீக்கனா, வாலாமை,
உண்டது  கான்றல், மயிர்களைதல்,  ஊண்பொழுது,
வைகுதுயிலோடு, இணைவிழைச்சு, கீழ்மக்கள்
மெய்யுறல், ஏனை  மயலுறல், - ஈரைந்தும்
ஐயுறாது ஆடுக நீர் !

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

வாலாமை = அழுக்கு, தீட்டு, தூய்மையின்மை; கான்றல் = கக்குதல் (வாந்தி எடுத்தல்); ஊண் = உணவு; வைகு துயில் = துயிலெழுதல்; இணைவிழைச்சு = உடலுறவு; ஏனை மயல் உறல் = மலம், நீர் கழித்தல்; ஈரைந்து = இப் பத்தும்; ஐயுறாது = ஐயத்திற்கு இடம் கொடுக்காமல்; ஆடுக நீர் = நீராடுக !

---------------------------------------------------------------------------------------------------------

இன்னொரு பாடலில் பெருவாயின் முள்ளியார் சொல்வதைக் கேளுங்கள் !
---------------------------------------------------------------------------------------------------------

இருகையால் தண்ணீர் பருகார்; ஒருகையால்,
கொள்ளார், கொடாஅர், குரவர்க்கு; இருகை
சொறியார், உடம்பு மடுத்து !

----------------------------------------------------------------------------------------------------------

இரு கைகளாலும் அள்ளித் தண்ணீரைப் பருகலாகாது ! (ஏனெனில் இடக்கையால் உண்ணும் பொருளைத் தொடலாகாது ! ) பிறரிடமிருந்து ஏதாவதொன்றை நாம் பெறுகையில் அதை ஒரு கையால் வாங்கலாகாது ! நம்மைவிட உயர் நிலையில் உள்ள அரசர், ஆசிரியர், தந்தை, மூத்தோர், வழிபடத்தக்க பெரியோர் ஆகியோருக்கு நாம் எதைத் தந்தாலும் அதை ஒரு கையால் தரலாகாது ! உணவு உண்கையில் (உடலில் அரிப்பு ஏற்பட்டால்) இரு கைகளாலும் சொறிந்து கொள்ளலாகாது !

---------------------------------------------------------------------------------------------------------

இவ்வாறு பல நித்திய ஒழுக்கங்கள் இந்நூலில் சொல்லப்படுகின்றன ! படித்தறிந்து பயனுள்ள கருத்துகளைப் பின்பற்றி நலமெய்துக !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,கன்னி(புரட்டாசி),03]
(20-09-2019}
---------------------------------------------------------------------------------------------------------
      ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------

கீழ்க்கணக்கு (12) திரிகடுகம் !

மனிதனின் அறியாமை நோயைப் போக்கிவாழ்வு செம்மை பெற உதவுவது  திரிகடுகம்  !


திரிகடுகம்  என்பது  பதினெண் கீழ்க்கணக்கு  நூல்களுள் ஒன்று.  இந்நூல் நல்லாதனார்  என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும் !

இம்மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது !

நூற்று ஒரு வெண்பாக்களைக் கொண்ட இந்நூல், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் ஒவ்வொரு பாடலிலும் இம்மூவர் அல்லது இம்மூன்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது !

பிறர் நம்மை உயர்த்திப் பேசுகையில், அச்செயல்  தவறான ஒன்று என்பதை உணர்ந்து, நாம் நாணித் தலை குனிய வேண்டும் !

நம்மீது பொறாமை கொண்டு யாரேனும் தாழ்வாகப் பேசினால், அவர்கள் மீது சினம் கொள்ளாமல் நாம் பொறுத்துக் கொள்ள  வேண்டும் !

மழை பொழிந்து உலகை வளப்படுத்தும் மேகமானது எப்படிக் கைம்மாறு கருதாமல் தனது பணியைச் செய்கிறதோ அவ்வாறே, நாமும் எவ்விதப் பயனையும் எதிர்பாராமல் எளியோர்பால் அன்பு கொண்டு அறச்செயல்ளைச் செய்து வரவேண்டும் !

இச்செயல்களே ஊரார் மதிக்கத் தக்க உயர்ந்த மனிதனாக வாழ்வதற்கான ஊற்றுக் கண்களாக அமையும் என்று உரைக்கிறது ஒரு பாடல். அஃது இதோ !

--------------------------------------------------------------------------------------------------

பிறர்தன்னைப்  பேணுங்கால்  நாணலும்,  பேணார்
திறன்வேறு  கூறிற் பொறையும், அறவினையைக்
காராண்மை  போல ஒழுகலும், -  இம்மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு.

--------------------------------------------------------------------------------------------------

இன்னொரு பாடலில் நல்லாதனார் கூறுவதைக் கேளுங்கள்

நம்மை மதித்து அழைக்காத எந்தவொரு மனிதனது இல்லத்திற்கும் சென்று, அவன் செய்துகாட்டும்  களியாட்டக் கூத்துகளைக் கண்டு களிப்பது கடுமையான துன்பம் விளைய வழி வகுக்கும் !

மதுப்பழக்கம் தன்னை அடிமைப்படுத்த விடாமல்  நேர்மையுடன் தலைநிமிர்ந்து நடைபயில்கின்ற  மனிதனாயினும் கூட, நாவடக்கமின்றிப் பிறர் மனதைப் புண்படுத்திப் பேசுவது நம்மைத் துன்பம் சூழ வழிவகை செய்வதாக அமையும் !
எள்முனையளவு கூட நம்மை  நம்பாமல் ஐயத்துடனேயே  அணுகும் ஒருவனது இல்லத்திற்கு அவன் அழையாமலேயே பன்முறை சென்று பழகுதலும் கடுமையான துன்பத்திற்கு  வழிவகை செய்வதாக அமையும் !

பாடலைப் பாருங்கள் !

-------------------------------------------------------------------------------------------------

விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும், வீழக்
களியாதான் காவாது உரையும்,  தெளியாதான்
கூரையுள் பல்காலும் சேறலும், - இம்மூன்றும்
ஊரெலாம் நோவது உடைத்து.

-------------------------------------------------------------------------------------------------
நீங்கள் பள்ளிப் பருவத்தில் படித்திருக்கக் கூடிய வேறொரு பாடலைப் பாருங்கள் !
-------------------------------------------------------------------------------------------------

தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்,
வேளாளன் என்பான் விருந்திருக்க  உண்ணாதான்,
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.

------------------------------------------------------------------------------------------------

இப்பாடல் கூறும் கருத்து :- 

முயற்சியைக் கைவிடாமல் ஊக்கத்துடன் உழைக்கும் எந்தவொரு மனிதனும்  தன் செல்வங்களை இழந்து எந்தக் காலத்திலும் கடனாளியாக  வாழமாட்டான்

நிலத்தை உழுதுப் பண் படுத்திப் பயிர்செய்து நெல் விளைவித்து வாழ்கின்ற உழவன் வீட்டிற்கு வந்த விருந்தினன் வெளியில் அமர்ந்திருக்க, அவனைத் தவிர்த்து விட்டு உணவருந்த மாட்டான்

கற்றறிந்த நூல்களின் கருத்துகளைப் பின்பற்றி வாழ்பவன், அந்நூல்கள் அளித்த கருத்துக் கருவூலங்களை என்றுமே மறக்கமாட்டான்

இத்தகைய பண்பாடு உடைய இம்மூன்று வகையினரும் ஒருவர்க்கொருவர் நண்பர்களாக, உறவினர்களாக இணைந்து வாழ்தல் மிகவும் இனிய பயன் விளையும் செயலாக அமையும் !

ஒவ்வொரு மனிதனும், தன் வாழ்நாளில் கற்றுக் கொண்டது அவனது கைம் மண்ணளவே. இன்னும் கற்க வேண்டியவை உலகளவு இருக்கின்றன. திரிகடுகம் நூலைப் படித்தவர்கள், படித்ததை நினவுகூர்ந்து மகிழுங்கள் ! படிக்கும் வாழ்ப்பை இழந்தவர்கள், நூலகத்திலாவது தேடிக் கண்டறிந்து படித்து இன்புறுங்கள் !

----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,29]
{14-07-2019)
-----------------------------------------------------------------------------------------------------------
      “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------

கீழ்க்கணக்கு (11) முப்பால் !

பொதுமறை என உலகே போற்றும்  புகழுக்குரிய  நூல்  திருக்குறள் !


தமிழ் இலக்கிய உலகில் தனிப் பெருஞ் சிறப்புடன் விளங்குவது திருக்குறள். இதனை இளைஞர் முதல் முதியோர் ஈறாக, அனைவரும் சாதி, மதம் ,பால், வேறுபாடு இன்றிப் போற்றிக் கற்று வருகின்றனர்.  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பாடல் அளவினாலும், பொருளின் நுட்பத்தாலும் இந்நூல் தலை சிறந்து விளங்குகிறது !

இதனைக்குறள்என்றும்திருஎன்னும் அடைமொழி சேர்த்து, “திருக்குறள்என்றும் இப்போது வழங்கி வருகின்றனர்.  முப்பால் என்று குறிப்பிடும் வழக்குப் பல தனிப்பாடல்களில் மிகுதியாய்க் காணப்படுகிறது. இஃதன்றி, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தெய்வநூல், பொதுமறை, தமிழ்மறை என்று வேறு பல பெயர்களும் இந்நூலுக்கு உள்ளன !

இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவரைச் செந்நாப்புலவர், செந்நாப் போதார், பெருநாவலர், முதற்பாவலர், நான்முகனார் என்ற பெயர்களாலும் சில நூல்கள் விளிக்கின்றன !

இவர் வாழ்ந்த காலம் பற்றி மாறுபட்டக் கருத்துகள் நிலவி வந்தன. கி.பி முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையில் பல காலங்களைப் பலரும் கூறி வந்தனர். திருவள்ளுவர் கி.மு. 31 –ல் பிறந்தவர் என்று பல சான்றுகளைக் காட்டி மறைமலை அடிகள் நிறுவியுள்ளார் !

திருக்குறளில் 133 அதிகாரங்களும், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் பப்பத்து வீதம் மொத்தம் 1330 குறட்பாக்களும் உள்ளன. அறம், பொருள், இன்பம் என்று மூன்று பெரும் பிரிவுகளாக இந்நூல் பகுக்கப்பட்டுள்ளது !

தமிழும் திருகுறளும் ஒன்றிணைந்தவை. தமிழை மறந்துவிட்டுத் திருக்குறளைப் படிக்க முடியாது; திருக்குறளைப் புறந்தள்ளி விட்டுத் தமிழைப் பயில முடியாது ! அதனால்தானோ என்னவோ திருக்குறள்என்று தொடங்கி (“கர முதல எழுத்தெல்லாம்), “ன்என்று (கூடி முயங்கப்பெறின்”) முடிகிறது !

ஒன்றேமுக்கால் அடியில் ஏழு சீர்களினால் இயன்ற திருக்குறள் வெண்பா என்னும் பா வகையைச் சார்ந்தது.  அடிகளின் சிற்றெல்லை கருதி, இவ் வெண்பாக்களைக்குறள் வெண்பாஎன்று அழைக்கிறோம் !

வள்ளுவர் தொடாத தளங்கள் இல்லை; சொல்லாத கருத்துகள் இல்லை ! நயத்தக்க நாகரிகம் என்பதற்கு விளக்கம் சொல்லும் வள்ளுவர், மற்றவர்களிடமிருந்து மாறுபடுகிறார் !

கிரேக்க நாட்டு அறிஞன் சாக்ரட்டீசு, அரசனது தீர்ப்பு காரணமாக  நஞ்சுண்டு சாகையில், அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து எழுச்சியுரை ஆற்றுகிறார். அவரது உரையின் தாக்கத்தினால் மக்கள் மனம் துன்பப்படுகிறது; கண்கள் நீரைப் பொழிகின்றன. இளைஞர்கள் அழுது அரற்றுகின்றனர் !

வள்ளுவர் சொல்கிறார்; நயத்தக்க நாகரிகம் என்பது நஞ்சுண்டு அமைதியாக உயிரை விடுவதாகத்தான்  இருக்க வேண்டும். கூடியிருக்கும் மக்கள் மனம் நொந்து கண்ணீர் வடிப்பதாக இருத்தலாகாது ! எந்தக் காரணத்திற்காகவும், அடுத்தவர் மனம் துன்பப்படச்  செய்தல் நயத்தக்க நாகரிகமாக இருக்காது என்கிறார். இதோ அந்தக் குறள் !

--------------------------------------------------------------------------------------

பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்ததக்க
நாகரிகம் வேண்டு பவர். (குறள்:580)

---------------------------------------------------------------------------------------

எத்துணை ஆழமாகச் சிந்தித்து இந்தக் குறளை வடித்துள்ளார் பொய்யாமொழிப் புலவர் ! என்னே அவரது நுண்மாண் நுழைபுலத்தின்  திறம் !

திருக்குறளின் சிறப்புகள் ஏராளம் ! ஏராளம் !!. அவற்றைப் படித்து வாழ்க்கையில் கடைப்பிடித்தல் நமது கடமை !

அருமையான கலைச் சொற்கள் பல திருக்குறளில் பரவலாக விரவிக் கிடக்கின்றன ! அவற்றுள் ஒரு சில மட்டும் உங்கள் பார்வைக்காக !

---------------------------------------------------------------------------------------------------------

மறவி (மறதி) (குறள். 605)........................= AMNESIA
வெகுளி (கோபம்) (குறள்.029)................= ANGER
விழுப்பம் (நன்மை) (குறள்.131).............= BENEFIT
குறியெதிர்ப்பை (குறள்.221)..................= BORROWED THINGS
எழிலி (மேகம்) குறள்.017)........................= CLOUD
வைகலும் (குறள். 083)..............................= DAILY
மோத்தல் (குறள்.090)................................= DISCERN BY SMELL
விழுமம் (துன்பம்) (குறள்.107).................= DISTRESS
 கடப்பாடு குறள்.211).................................= DUTY
தக்கார் (தகுதி உள்ளவர்)(குறள்.114).....= FIT PERSON
துப்பு (உணவு) (குறள்.012)........................= FOOD
துயில் (குறள். 605).................................= INORDINATE SLEEP
 நெடுநீர்மை (காலம்தாழ்த்தல்)(605).= PROCRASTINATION
ஆர்வலர் (ரசிகர்)  (குறள்.71)....................= LOVER
என்பியல் (எலும்பு இயல்) (.072)...............= ORTHOPAEDY
மிச்சில் (மிச்சமுள்ளது) (085)................... = REMAINDER
இடையீடு......................................................= SANDWICH
ஏமாப்பு (பாதுகாப்பு) (குறள்.126)........... = SECURITY
இடும்பை (துன்பம்) (குறள்.4,138).......... = SUFFERING
உறுகண் (துன்பம்)  (குறள்.261).............. = SUFFERING
தகவிலர் (தகுதி இல்லாதவர்)(114).........= UNFIT PERSON
மடிமை (சோம்பல்) (குறள். 608)..............= LAZINESS

---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மடங்கல்(ஆவணி),29]
{15-09-2019)
---------------------------------------------------------------------------------------------------------
      ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------








கீழ்க்கணக்கு (10) திணைமாலை நூற்றைம்பது !

இலக்கியங்களின் பால் மனதைச்  செலுத்துவது,  சற்று இளைப்பாறுதலாக   அமையும் !



பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் திணைமாலை நூற்றைம்பதும் ஒன்று ! கீழ்க் கணக்கு வரிசையில் அகப் பொருள் நூல்கள் ஆறு ! அவற்றுள் இரண்டு நூல்கள்திணைஎன்றும், வேறு இரண்டுஐந்திணைஎன்றும் பெயர் பெற்றுள்ளன !

ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது  ஆகிய ஆறுமே அகப் பொருள் சார்ந்த கீழ்க் கணக்கு நூல்கள் !

ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக  அமைத்து, மாலை போலத் தந்துள்ளமையால்திணைமாலைஎன்றும், பாடல் அளவினால், “திணைமாலை நூற்றைம்பதுஎன்றும் இந்நூல் பெயர் பெற்றுள்ளது. கீழ்க் கணக்கில் அமைந்த ஐந்திணை நூல்களில் அளவால் பெரியது இதுவே !

குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்னும் வரிசையில் ஐந்திணைகளை இந்நூல் முறைப்படுத்தி உள்ளது ! நூற்றைம்பது என்னும் எண் வரையறைக்கு ஏற்ப, திணை ஒவ்வொன்றும் 30 பாடல்களைக் கொண்டிருத்தலே முறையாகும். ஆனால், குறிஞ்சி, நெய்தல், முல்லை ஆகிய மூன்று திணைகளும் ஒவ்வொன்றும் 31 பாடல்களைப் பெற்றுள்ளன !  இதனால், இந்நூலில் நூற்றைம்பது என்னும் அளவினை விஞ்சி நூற்று ஐம்பத்து மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன !

இந்நூலை இயற்றியவர் கணிமேதாவியார். ஏலாதியை இயற்றியவரும் இவரே ! இந்நூல் கி.பி. 6 –ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பது பல அறிஞர்களின் கருத்து !

இந்நூலில் குறிஞ்சித் திணையில் வரும் முதற் பாடல் ! குறிஞ்சித் திணை என்பது கூடற் கருத்தை உரைப்பதன்றோ ! கூடலின் முதற் படி தலைவனும் தலைவியும் சந்தித்தல் ! இதோ காட்சி தொடர்கிறது !

தலைவியும் அவள் தோழியும் தினைப் புலத்தில் காவல் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். அங்கு தலைவன் வருகிறான். நான்கு விழிகள் மோதிக் கொள்கின்றன ! தலைவன் அவர்களைப் பார்த்து வினவுகிறான் !

! பெண்களே !  மணம் மிக்கப் பூங்கொடிகள் படர்ந்திருந்த சந்தன மரங்களை வேருடன் பெயர்த்து எடுத்து அப்புறப் படுத்திவிட்டு, அந்த இடத்தைச் சமப்படுத்தி உழுது, மழையை எதிர்பார்த்து நல்ல நாளில் தினை விதைத்துப் பயிராக்கி, கதிர்கள் முதிர்ந்திருக்கும் இந்நாளில் பறவைகள் கதிர்களைக் கொய்திடா வண்ணம் தினைப் புனத்தில் காவல் காத்து நிற்கும் இளம் பெண்களே ! தாமரை போன்ற ஒளிமிக்க முகமும், நீண்ட கூந்தலும் உடைய  கோதையரே ! நான் எய்த அம்பினை உடலில் தாங்கிக் கொண்டு ஒரு மான் இவ்விடம் ஓடி வந்ததா ? அதை நீங்கள் பார்த்தீர்களா ? “ என்று கேட்கிறான்.

-------------------------------------------------------------------------------------------------------

இதோ அந்தப் பாடல் !

--------------------------------------------------------------------------------------------------------

நறைபடர்  சாந்தம்   அறவெறிந்து,   நாளால்
உறையெதிர்ந்து  வித்திய ஊழேனல்பிறையெதிர்ந்த
தாமரைபோல்  வாள்முகத்துத்  தாழ்குழலீர் !  காணிரோ ?
ஏமரை   போந்தன  ஈண்டு !

--------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:
---------------------------------------

நறைபடர் = மணம் மிக்க பூங்கொடிகள் படர்ந்துள்ள ; சாந்தம் = சந்தனமரம்; அற எறிந்து = வேருடன் களைந்து அப்புறப்படுத்தி, உறை = மழை; எதிர்ந்து =  எதிர்பார்த்து; நாளால் = நல்ல நாள் பார்த்து; வித்திய = விதைத்து; ஊழ் ஏனல் = விளைந்திருக்கும் இந்த முதிர்ந்த தினைப் புனத்தில் ; பிறை எதிர்ந்த = நிலவை எதிர்த்து இதழ் குவியாத; தாமரை போல் = தாமரை பலர் போல்; வாள் முகத்து = ஒளி பொருந்திய முகமும்; தாழ் குழலீர் =  நீண்ட கூந்தலையும் உடைய பெண்களே; = அம்பு; மரை = தைத்த மான் ஒன்று; போந்தன= வந்தது; ஈண்டு = இங்கே; காணிரோ = அதைக் கண்டீர்களா ?

-----------------------------------------------------------------------------------------------------------
இப்பாடல் சொல்லும் செய்திகள் !
--------------------------------------------------------------
(01) சந்தன மரங்கள் விலை உயர்ந்தவை ! தினை விதைப்பதற்காகச் சந்தனக்காடுகள் அழிக்கப் பட்டன என்றால், பண்டைத் தமிழகத்தில் சந்தனமரங்கள் அக் குறிஞ்சி நிலத்தில் அளவிறந்த எண்ணிக்கையில் வளர்ந்திருந்தன என்று பொருள் !

(02)  சந்தன மரங்கள் நிறைய இருந்தன என்றால், அந்நாடு செல்வ வளத்தில் சிறந்த ஒன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும் ! இஃது பண்டைத் தமிழகத்தின் மலை வளத்தைக் காட்டுகிறது !

(03)  தினைப் புனம் பக்கமாக மான் வருகிறது என்றால், மான்கள் வளர்வதற்கான வன வளமும் மிகுதியாக இருந்தன என்பது தெரிகிறது ! இச்செய்தி, அற்றைத் தமிழகம் வனவளம் மிக்கதாக இருந்தது என்பதைக் காட்டுகிறது !

(04)  மழையை எதிர்பார்த்துத் தினை விதைத்தார்கள் என்பதிலிருந்து, மழை வளம் அந்நாளில் குறைவற இருந்தது என்பதும் இப்பாடல் மூலம் புலனாகிறது !

(05)  இளம் பெண்கள் தினைப் புனத்தைக் காவல் காத்தார்கள் என்பதிலிருந்து, பண்டைத் தமிழகத்தில், மகளிர் அச்சமின்றித் தனியாக எங்கும் சென்றுவரும் சூழ்நிலை  இருந்தது என்பது புலனாகிறது !

(06)  தாமரை போன்ற ஒளி பொருந்திய முகம், பெற்ற மகளிர் என்னும் கருத்து, அக்காலத் தமிழகத்தில், பெண்கள் மனக் கவலையின்றி வாழ்ந்தார்கள்; எனவே முக வாட்ட்த்திற்கு வாய்ப்பு  இல்லை. துன்பங்கள் அவர்களது இல்லத்தின் பக்கம் எட்டிக் கூடப் பார்த்ததில்லை என்பதைக் காட்டுகிறது !

(07)  நீண்ட தலைமுடி என்னும் கருத்து, அவர்களது செல்வச் செழுமைக்கும் நலவாழ்வுக்கும் எடுத்துக் காட்டு ! வறுமையும், அதனால் ஏற்படும் உடல் நலிவும் இருந்திருந்தால் மகளிருக்கு நீண்ட கூந்தல் இருக்க வாய்ப்பில்லை !

(08)  மொத்தத்தில், அக்காலத் தமிழகம் வளமாக இருந்தது என்பது திணை மாலை நூற்றைம்பது நமக்கு எடுத்துச் சொல்லும் செய்தியாகும் !

இலக்கியங்களை நுணுகி ஆராய்ந்தால், பண்டைத் தமிழகம் நம் கண்களின் முன்னால் காட்சிகளாய் விரிவதைக் காணலாம் ! பாடுபட்டுத் தேடிப் பணத்தை ஈட்டுகின்ற ஓட்டப் போட்டிகளுக்கு இடையிலும், இலக்கியங்களின் பால் மனதைச் செலுத்துவது, சற்று இளைப்பாறுதலாக  அமையும் !

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் & இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2050,கன்னி(புரட்டாசி,08)
{25-09-2019}

---------------------------------------------------------------------------------------------------------
                ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------

கீழ்க்கணக்கு (09) திணைமொழி ஐம்பது !

ஒவ்வொரு திணைக்கும் பப்பத்துப் பாடல்களைப் பெற்று, அகத்துறை இலக்கியமாகத் திகழ்வது      இந்நூல்!



ஐந்திணை ஐம்பதைப் போன்று ஒவ்வொரு திணைக்கும் பப்பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளது இந் நூல். அந் நூலோடு வேறு பாடு தெரியத் திணைமொழி ஐம்பது என்று பெயர் குறித்தனர் போலும் ! இரண்டு நூல்களும் ஒரே வகையான அமைப்பு உடைமையினால், இவற்றுள் ஏதேனும் ஒன்று மற்றொன்றுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கலாம் ! எந்த நூல் எதற்கு முன் மாதிரியாய் அமைந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை !

இந்நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் வரிசையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன ! இந்த முறையானது, அகப்பொருள் நிகழ்ச்சிகளின் போக்கிற்கு ஒத்ததாக உள்ளது !

------------------------------------------------------------------------------------

புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல்,
ஊடல், அவற்றின் நிமித்தம் என்றுஇவை
தேரும் காலைதிணைக்கு உரிபொருளே

------------------------------------------------------------------------------------

என்று தொகாப்பியர் வகுத்துள்ள முறையை (தொல்:பொருள்:நூற்பா.16) இந்நூல் பெரிதும் பின்பற்றியுள்ளது ! ஆனால்,  தொல்காப்பியர் இரங்கலை அடுத்து ஊடலை வைக்க இந்நூல் ஊடலை அடுத்து இரங்கலை வைத்துள்ளது !

இந்நூலை இயற்றியவர் கண்ணஞ் சேந்தனார். இவர் சாத்தந்தையாரின் புதல்வர். இவரது பெயரை வைத்தே, இவர் வைணவச் சமயத்தினர் எனத் தெளியலாம். கார் நாற்பதின் ஆசிரியர் கண்ணங் கூத்தனார் இவரது தமையனாக இருக்கக் கூடும் !

இந்நூலில் குறிஞ்சித் திணையில் வரும் ஒரு பாடற் காட்சி ! தலைவியைக் காணவரும் தலைவன் அவளை காணாமல் தோழியிடம் சென்று உசாவுகிறான் ! தோழியோ அவனுக்கு நேரடியாக விடை கூறவில்லை !

எம் தலைவியின் மனம் கவர்ந்த மன்னவனே ! தலைவனே ! உன் நாட்டில் மலையில் விளையும் சந்தன மரங்கள் முதிர்ந்து உலர்ந்தவுடன், அவற்றை வெட்டித் தீயிலிட்டு எரிப்பதால், மலையெங்கும் சந்தன மணம் கமழ்கிறது ! 

இந்த நறும் புகை வானளாவச் சென்று அங்குள்ள வானவர்களை மகிழ்விப்பதால், அவர்கள் மனம் கனிந்து உன் நாட்டில் மழையைப் பொழிவிக்கின்றனர் !  இதனால் உன் நாடு மலைவளமும் மழை வளமும் மிக்க செழுமையான நாடாகத் திகழ்கிறது !

இத்தகைய வளமான நாட்டின் தலைவனே ! நீ தலைவியைக் காண்பதற்குப்  மாலையும் இரவும்  மயங்குகின்ற இவ் வேளையில் வரல் வேண்டா ! நீ வருகின்ற வழியெங்கும் யானைக் கூட்டங்கள் திரிகின்றன. உனைக் கண்டு அந்த யானைகள் சினம் கொண்டால் உன் நிலைமை என்னவாகும் ?” என்கிறாள் !

தலைவனை நோக்கித் தோழி கூறுகின்ற இந்த அச்சமூட்டும் உரையின் உட்பொருள், “ தலைவா ! இப்படி மாலை மயங்கும் நேரத்தில், ஊரார் கண்களில் படாமல், நீ ஒளிந்து ஒளிந்து வரவேண்டுமா ? தலைவியைத் திருமணம் செய்துகொண்டு அவளை உன் நாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டியது தானே ? ”

----------------------------------------------------------------------------------------------------
இதோ அந்தப் பாடல் !
----------------------------------------------------------------------------------------------------

புகழ்மிகு  சாந்துஎறிந்து  புல்லெரி ஊட்டி.
புகைகொடுக்கப்  பெற்ற  புலவோர்  துகள்பொழியும்,
வான்உயர்  வெற்ப  இரவில்  வரல்வேண்டா !
யானை உடைய சுரம் !

----------------------------------------------------------------------------------------------------

இதைப் போன்ற சுவையான காட்சிகள் அமைந்த பாடல்கள் பல உள்ளன ! பொருள் புரிந்து படித்தால் இலக்கிய இன்பம் நுகரலாம் ! முயன்றால் முடியாதது எதுவுமில்லை ! முயன்று பாருங்கள் நண்பர்களே !

------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,கன்னி(புரட்டாசி),04)
{21-09-2019}
-------------------------------------------------------------------------------------------------------
      ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------