name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: காளமேகம்
காளமேகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காளமேகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், செப்டம்பர் 02, 2019

காளமேகம் பாடல் (09) நஞ்சிருக்கும் ! தோலுரிக்கும் !

இரட்டுற மொழியும் இன்றமிழ் வேந்தன் !

நினைத்தவுடன் கவி படுவதில் வல்லவரான காளமேகம் ஐந்நூறுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இரு பொருள்படப் பாடுவதில் வல்லவரான இவர் பாம்பும் வாழைப்பழமும் ஒரே தன்மையன  எனப் பாடியுள்ள பாடலைக் காணுங்கள் !
------------------------------------------------------------------------------------------------------------
பாடல்
------------------------------------------------------------------------------------------------------------

நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பற்பட்டால் மீளாது விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம் .
------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
-----------------

பாம்பும் வாழைப் பழமும் ஒன்றே ! எப்படி ?

பாம்பிடம் நஞ்சு இருக்கும்; உண்பதற்கு ஏற்ற  வாழைப்பழம் நஞ்சு (நைந்து) கனிவாக இருக்கும்;

பாம்பு குறிப்பிட்ட காலங்களில் தன் முதிர்ந்த தோலை உரித்துக் கழற்றிவிடும்; வாழைப்பழம் உண்பதற்கு ஏற்றவாறு தன் தோலினை உரிக்கச் செய்துவிடும்.

பாம்பு, தன் நாதனாகிய சிவபிரானின் முடியில் அமர்ந்திருக்கும்; வாழைப்பழம் சிவனுக்கு திருமுழுக்கு (அபிஷேகம்) செய்யும் போது, ஐந்தமுது (பஞ்சாமிதம்) வடிவிலே சிவனின் முடி மீது சென்று அமரும்.

பாம்புக்குக் கோபம் வந்து பற்களால் தீண்டி விட்டால் யாரும் நஞ்சுத் தாக்கத்திலிருந்து மீளமுடியாது

வாழைப்பழத்தை (வெஞ்சனமாக) துணை உணவாகக் கொள்ள எண்ணி வாயில் இட்டு மென்றால் நம் பற்களின் தாக்குதலிலிருந்து அது மீளமுடியாது

எனவே, மிகுதியான மலர்கள் பூத்துக் குலுங்கி, அவற்றிலிருந்து தேன் வழிந்து ஓடும் சோலைகளைக் கொண்ட திருமலைராயன் பட்டினம் ஊரைப் பொறுத்த வரை பாம்பும் வாழைப் பழமும் ஒன்றே !

------------------------------------------------------------------------------------------------------------
     
  “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணிமன்றம்.
[ தி.: 2049, சிலை, 22.] 
(06-01-2019)
------------------------------------------------------------------------------------------------------------

காளமேகம் பாடல் (10) ஒன்றிரண்டு மூன்றுநான்கு !

எண்களை வைத்து எழுத்தில் ஒரு பாடல் !

காளமேகம் கி.பி.15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது. இரு பொருள்படப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்.
---------------------------------------------------------------------------------------------------------
பாடல்
---------------------------------------------------------------------------------------------------------
ஒன்றிரண்டு   மூன்றுநான்   கைந்தாறே  ழெட்டு
ஒன்பது   பத்துப்பதி   னொன்றுபன்னி  ரெண்டுபதி
மூன்றுபதி   நான்குபதி   ஐந்துபதி   னாறுபதி
னேழ்பதி   னெட்டுபத்தொன்  பது !
---------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதப்பட்ட பாடல்
---------------------------------------------------------------------------------------------------------
ஒன்று,இரண்டு   மூன்று,நான்கு   ஐந்து,ஆறு,ஏழு   எட்டு
ஒன்பது   பத்து,பதினொன்று  பன்னிரண்டு, பதின்
மூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதின்
ஏழு, பதினெட்டு, பத்தொன்பது !
--------------------------------------------------------------------------------------------------------

அறுநூறு ஆண்டுகளுக்கு முன் காளமேகத்தால் எழுதப்பட் இந்தப் பாடலில் எண்கள் ஒன்று முதல் பத்தொன்பது வரை வரிசையாகச் சொல்லப் படுகிறது. இதைத் தவிர பாடலுக்கு வேறு பொருள் ஏதுமில்லை. ஆனால் பலரையும் வியக்க வைக்கும் ஆற்றலுள்ள பாடல் !

நேரிசை வெண்பாவில் அமைந்துள்ள இந்தப் பாடல் இன்னும் நிலைத்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம், இலக்கணம் என்னும் வரையறைக்குள் அது அமைந்திருப்பதே. நேற்று எழுதிய புதுக்கவிதை நாளை உயிர்ப்புடன் இருக்காது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய செய்யுள்கள் இன்னும் நிலைத்து நிற்கின்றன. இலக்கண வரையறையின் கட்டமைப்பே மரபுக் கவிதைகளையும், மரபு வழியில் அமைந்த செய்யுள்களையும் இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது !

---------------------------------------------------------------------------------------------------------
          ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை 
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை,13.]
{28-12-2018}
---------------------------------------------------------------------------------------------------------

காளமேகம் பாடல் (11) காக்கைக்கு ஆகா கூகை !

காக்கைக்கும் கூகைக்கும் ஆகாது !

காளமேகப் புலவர் கி.பி.15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். திருச்சி, திருவானைக்காவைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. இரு பொருள் படும்படிப் பாடுவதில் வல்லவர் !
------------------------------------------------------------------------------------------------------------

காக்கைகா காகூகை  கூகைக்கா  காகாக்கை
கோக்குக்கூ  காக்கைக்குக்  கொக்கொக்ககைக்கைக்குக்
காக்கைக்குக்  கைக்கைக்கா  கா

-------------------------------------------------------------------------------------------------------------
பொருள்:-
----------------
[காக்கைக்கு ஆகாது கூகை; கூகைக்கு ஆகாது காக்கை. நாட்டை ஆளும் அரசன், நாட்டைக் காப்பதற்கு கொக்கு போலக் காத்திருக்க வேண்டும். இல்லையேல் அரசனுக்கு கசப்புக்குரிய காலமாக ஆகிவிடும் ]
-------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு:-
--------------
இந்தப் பாடலில்கர வரிசை எழுத்துகள் மட்டுமே இடம் பெற்றுள்ளதைக் காண்க !
------------------------------------------------------------------------------------------------------------
விளக்கம்:-
----------------
காக்கையானது பகலில் (கூகையை) ஆந்தையை வெல்ல முடியும். (கூகையானது) ஆந்தையானது இரவில் காக்கையை வெல்ல முடியும். அதுபோல் அரசன் தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்க வேண்டும்.  எதிரியின் வலிமைக் குறைவு அறிந்து, கொக்கு காத்திருப்பது போல, தக்க நேரம் வரும் வரைக் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் அரசனுக்குக் கூட கையாலாகாதது ஆகிவிடக் கூடும் !

------------------------------------------------------------------------------------------------------------சொற்பொருள்:-
-------------------------
காக்கைக்கு ஆகா = காக்கைக்கு ஆகாது; கூகை = கூகை எனப்படும் பேராந்தை (பெரிய ஆந்தை).;கூகைக்கு ஆகா = பேராந்தைக்கு ஆகாது; காக்கை = காகம் எனப்படும்  காக்கை; கோக்கு = அரசனுக்கு; கூ = பூமி; காக்கைக்கு = காப்பதற்கு; கொக்கு ஒக்க = கொக்கு போல உரிய காலம் வரும் வரைக் காத்திருக்க வேண்டும்; (இல்லையேல்); காக்கைக்கு = நாட்டைக் காப்பாற்றுவதற்கு; கைக்கு = அரசனுக்கு; கைக்கைக்கு = கசப்புக்கு உரிய ; ஐக்கு ஆகா= காலமாக ஆகிவிடும்.

------------------------------------------------------------------------------------------------------------

        "தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை.
------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை,11.]
{26-12-2018}
-----------------------------------------------------------------------------------------------------------

கூகை

காக்கை

காளமேகம் பாடல் (12) தத்தித் தாதூதித் தத்துதி !

வானம்பாடி படத்தில் ஒலித்த  “தாதி தூது ”  பாடல் !

காளமேகப் புலவர் இரட்டுற மொழிதல் என்னும் வகையில் இரு பொருள் 

படும்படிப் பாடுவதில் வல்லவர்.  இந்தப் பாடல் சற்று வேறுபட்டது !

------------------------------------------------------------------------------------------------------------
பாடல்
------------------------------------------------------------------------------------------------------------

தத்தித்தா    தூதுதி    தாதூதித்    தத்துதி
துத்தித்    துதைதி    துதைதத்தா    தாதுதி
தித்தித்த    தித்தித்த    தாதெது    தித்தித்த
தெத்தாதோ    தித்தித்த    தாது?

------------------------------------------------------------------------------------------------------------
பொருள்:-
----------------

தத்தித்   தாவிப் பறந்து சென்று பூக்களில் இருக்கும் தேன் துளியாகிய 

தாதுவை  உண்கின்ற வண்டே ! ஒரு பூவினுள் உள்ள தாதுவை (தேன் 

துளிகளை) உண்ட பின்பு மீண்டும்  வேறு  ஒரு பூவினுள் சென்று தாது 

எடுத்து உண்ணுகிறாய்.  உனக்கு  எந்தப்  பூவினுள்   உள்ள  தேன்  

(எத்தாதுதித்தித்தது (இனித்தது) ?

------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு :-

இப்பாடலில் கர   வரிசை  எழுத்துகள்    மட்டுமே   பயன்படுத்தப் 

பட்டுள்ளன.
-----------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
--------------------------

தத்தி = பாய்ந்து பறந்து சென்று; தாது = பூவில் இருக்கும் தேனை; ஊதுதி 

= நுகர்கிறாய் (உண்கிறாய்);  தாது ஊதி  = அந்த மலரில் இருக்கும் தேன் 

துளிகளை   உண்டபின்;   தத்துதி   = மீண்டும்  தத்திப்  பறந்து  அடுத்த 

மலருக்குச்  செல்கிறாய்;  துத்தி =  அந்த  மலரில் உள்ள உண்பதற்குரிய 

தேனை;  துதைதி  = நீ  நெருங்கி;  துதை  தத்து = மிகுதியாக அப்பூவில் 

பரவி;       தாதுதி  =  அந்தத்  தேனை  உண்டு  வெளி  வருகிறாய்

தித்தித்தது  =  அப்படி  உண்ட தேன் உனக்கு  இனிப்பாக இருந்திருக்கும்

இத் தித்தித்த = இந்த வகையில்  இனிப்பான;  தாது  எது ? = தேன் எந்த 

மலருடையது ?  தித்தித்தது  =  இனிமை  ததும்பிய  தேன்   துளிகளில் 

மிகுதியும்  இனித்தது  ;  எத்தாதோ  =  எந்த  மலரின் தேன் துளியோ

தித்தித்தது யாது = அவ்வாறு இனித்தமைக்குக் காரணம் யாது ?

------------------------------------------------------------------------------------------------------------
       
 ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை.

                    --------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
 தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை, 10.]
{25-12-2018}
----------------------------------------------------------------------------------------