name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: சிந்தனை செய் மனமே (03) ஓய்வுபெற்ற தமிழறிஞர்கள் ஒதுங்கலாமா ?

புதன், செப்டம்பர் 04, 2019

சிந்தனை செய் மனமே (03) ஓய்வுபெற்ற தமிழறிஞர்கள் ஒதுங்கலாமா ?

தமிழ் உங்களுக்கு உயரிய வாழ்வைத்  தந்திருக்கிறது ! தமிழுக்கு நீங்கள் என்ன தரப் போகிறீர்கள் ?



தமிழறிஞர்கள் என்பார் யார் ? தமிழைப் பயின்று, தமிழால்  பதவிப் பொறுப்புகளில் அமர்ந்து, தமிழால் வளமான வாழ்க்கையைப் பெற்று, வாழ்ந்துவரும் அனைவருமே தமிழறிஞர்கள் தான் !

பணி ஓய்வு பெற்ற பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்கள், கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்கள், பள்ளித் தமிழாசிரியர்கள் அனைவருமே தமிழன்னையின் பால் அருந்தி வளர்ந்தவர்கள் தானே ! தமிழைப் பழுதறக் கற்று, புலமை பெற்ற பூங்கலன்கள் தானே !

இன்று, ஆங்கிலம், இந்தி இரண்டுக்கும் இடையே அன்னைத் தமிழ் அகப்பட்டுக்கொண்டு அல்லாடிக் கொண்டிருப்பது உங்கள் கண்களில் படவில்லையா ?. “அஞ்சேல்என்று ஆதரவுக் கரம் நீட்ட வேண்டிய தமிழக அரசு, முதல் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  ஆங்கில வழிக் கல்வியை [2013 ஆம் ஆண்டு முதல்] அறிமுகப் படுத்தி, தமிழை இருட் சிறைக்குள் தளைப்படுத்தி வைத்திருப்பது உங்கள் கருத்திற்குப் புலப்படவில்லையா ?

பெயரோ தமிழ் நாடு; பேசும் மொழியோ தமிழ்; பெருமைப் பட்டுக் கொள்ளும் ஆட்சி மொழியும் தமிழ்; ஆனால் அரசு ஆணைகளில், தமிழ் இல்லை; அறிவிக்கைகளிலும் தமிழ் இல்லை; அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கிலப் பயிற்றுமொழி வகுப்புகள் ஆண்டுதோறும் தொடங்கப்படுகின்றன !

கல்வி வணிகர்கள் பதின்மப் பள்ளிகளைத் தொடங்கி, தமிழ் மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள்; பதின்மப் பள்ளிகளில் பயிற்று மொழியும் தமிழ் இல்லை; பள்ளிகளின் பெயரிலும் தமிழ் இல்லை ! தடுத்து நிறுத்த வேண்டிய அரசிடமும் தமிழ் உணர்வில்லை ! தமிழ் படித்த தமிழன் அரசின் கல்வித் துறைக்கு அகப்படவில்லை போலும் ! கல்வித் துறைச் செயலரோ பிரதீப் யாதவ் என்னும் பீகார் மாநிலத்தவர். என்னே தமிழுக்கு வந்த சோதனை !

வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் தள்ளாடுகிறது; தமிழகத்தை ஏய்த்துப் பிழைக்கும் திரைப்படத் துறையில் தமிழ் ஊனப்படுத்தப் படுகிறது; மின்ம ஊடகத் துறையில் தமிழ் சிதைக்கப்படுகிறது. செய்தித் தாள்கள் மக்கள் சிந்தனைக்கு வைப்பதுஜல் சக்தி அபியான்பற்றிய தமிழ்ச் சீர்குலைவுச் செய்திகள் !

இத்துணைக் கொடுஞ் செயல்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டு, கொதித்து எழ வேண்டிய தமிழறிஞர்கள், விழிகளை மூடிக்கொண்டு வேதிகைகளில் முடங்கிக் கிடப்பது ஏன் ?

நீங்களெல்லாம் பணியில் இருக்கையில் எத்தனை மாணவர்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து இருக்கிறீர்கள்  என்பது பெரிதன்று ! எத்தனைப் புத்தகங்கள் எழுதி இருக்கிறீர்கள் என்பது பெரிதன்று ! எத்தனை ஆய்வுகளை மேற்கொண்டீர்கள் என்பது பெரிதன்று !  எத்தனைக் கருத்தரங்குகள் நடத்தியிருக்கிறீர்கள் என்பது பெரிதன்று !! எத்தனை இளைஞர்களைத் தமிழுணர்வு கொண்டவர்களாக உருவாக்கி இருக்கிறீர்கள், என்பதை எண்ணிப் பாருங்கள் !

இன்றைய இளைஞர்களிடம் தமிழுணர்வு அருகிவிட்டது ஏன் ? இடைநிலை அகவையினரிடம் தமிழுணர்வு அற்றுப் போய்விட்டது ஏன் ? ஹர்ஷா, ஜுவாலா, ஹிரண், விருஷிகா, புருஷ்கா, துருவ்  என்றெல்லாம் தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பவர்கள் எல்லாம் யார் ? உங்களிடம் தமிழ் பயின்றவர்கள் தானே  ! நீங்கள் தமிழ் சொல்லிக் கொடுத்தீர்கள்; ஆனால் தமிழ் உணர்வை ஊட்ட மறந்து விட்டீர்களே !

எதிர்ப்பே இல்லாமல், தமிழ் நாட்டுப் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்றுமொழி வகுப்புகளை அரசே தொடங்குகிறது ! தமிழ் மக்களின் ஒழுக்கக் குலைவுகளுக்கு முழு முதற் காரணமாக இருக்கும் திரைப்படத் துறையினர், தாம் உருவாக்கும் தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலப் பெயர்களைச் சூட்டி அழகு பார்க்கிறார்கள்.  இந்தக் கொடுமைகளை எதிர்த்து எந்த அமைப்பும் குரல் கொடுக்க வில்லை ! எந்த மக்களமைப்பும் போராட்டம் நடத்துவதில்லை !

தமிழறிஞர்களான நீங்களும் முடங்கிக் கிடக்கலாமா ? தமிழ் உங்களுக்கு உயரிய வாழ்வை அளித்திருக்கிறது ! தமிழுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ? பல்லாண்டுகளுக்கு முன்பு தமிழகப் புலவர் குழு என்று ஒரு அமைப்பு இயங்கி வந்தது. தமிழுக்கு ஊறு நேரும் போதெல்லாம் அவர்கள் வெகுண்டு எழுந்து எதிர்த்தார்கள் ! அன்னை மொழிக்கு  வந்த இடையூறுகள் அலறியடித்துக் கொண்டு ஓடிப் போயின  !

தமிழை முற்றும் முழுதாகப் படிக்காத என்னைப் போன்றோர் தமிழ்ப் பணி மன்றத்தில் நிரம்ப உள்ளனர்; எங்கள் உள்ளத்தில் தமிழுணர்வு ஊற்றாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது ! தமிழ்ப் பணி ஆற்றுவதிலும், தமிழ் உணர்வை ஊட்டுவதிலும் நாங்கள் ஊக்கமுடன் உழைத்து வருகிறோம் ! எங்களை விடப் பன்மடங்கு தமிழ்ப் புலமை வாய்ந்த நீங்கள் தமிழுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் ? தமிழ் எதிர்கொண்டிருக்கும் கேடுகளை எவ்வாறு துடைத்து எறியப் போகிறீர்கள் ?

மீண்டும் தமிழகப் புலவர் குழுவை அமையுங்கள் ! ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்கள், பேராசிரியர்களை அதில் உறுப்பினராக்குங்கள் ! பணியில் இருக்கும் இத்தகையவர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் ! பதிவு பெற்ற அமைப்பாகப் புலவர் குழுவைக் கட்டமைத்து, தமிழுக்கு அரணாகத் திகழுங்கள் ! தமிழ் தாழ் நிலைக்குத் தள்ளப் படாமலிருக்க, தமிழகமெங்கும் தமிழுணர்வைத் தட்டி எழுப்புங்கள் !

தமிழகமெங்கும் பல்லாயிரக் கணக்கில் பரவிக் கிடக்கும் தமிழறிஞர்களே ! ஓய்வெடுத்தது போதும் ! ஊக்கமுடன் தமிழ் காக்க ஓரணியில் திரண்டு  வாருங்கள் !

தமிழ்ப் பணி மன்றத்தில் உறுப்பினராக இருக்கும் ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் யாரேனும் ஒருவர் இதில் முன்முயற்சி எடுத்து, அறிவுப்புக் கொடுக்கலாம். அல்லது உறுப்பினராக இல்லாத ஒருவர், இப்போது உறுப்பினராகச் சேர்ந்து, தமிழ்ப் பணி மன்றத்திலேயே உரிய அறிவிப்பைத் தரலாம். யார் முன்வந்தாலும் தமிழ்ப் பணி மன்றம் உங்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கிறது !

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2050,கடகம்,17]
{2-8-2019}

--------------------------------------------------------------------------------------------------------
               “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .