name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

வெள்ளி, அக்டோபர் 11, 2019

தமிழ் (18) புதுச் சொல் உருவாக்கும் முறை !

பின்பற்ற வேண்டிய 5 (ஐந்து) விதிகள் !


(ஆட்சிச் சொற் காவலர் கீ.இராமலிங்கனார் எழுதியதமிழில் எழுதுவோம்என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற ஒரு பகுதி)
----------------------------------------------------------------------------------------------------------

ஆட்சித் துறைக்குத் தேவையான சொற்கள், நாட்டிலும், ஏட்டிலும், கல்வெட்டுகளிலும் பலவாகக் கிடைக்குமாயினும், அவற்றை ஒருபுறம் திரட்டிக் கொண்டே, புதுச் சொற்களையும் ஆக்கி வரவேண்டும்.  பண்டைக் காலங்களில் போல் அல்லாமல், அரசாட்சி, இந்நாளில், பரந்தும் விரிந்தும் வளர்ந்து விட்டிருப்பதால், பேச்சிலும் நூலிலும் கல்வெட்டுகளிலும் காணாத பலவகைப் புதுச் சொற்களைச் செய்தமைக்க வேண்டிய கடமை இன்றியமையாதது ஆகின்றது !

புதுச் சொற்களை ஆக்குவதற்குச் சில விதிகளைப் பின்பற்ற வேண்டும்.  மனம் போனபடிச் சொற்களைச் செய்துவிட்டால், மொழியின் நலம் குன்றும்; ஆட்சிச் செய்திகளைத் திட்டவட்டமாக வரைய இயலாது போகும்; ஆட்சிப் பணி தவக்கமுறும் !

கைக்கொள்ள வேண்டிய சொல்லாக்க விதிகள் ஐந்து. அவை பின் வருவன: (01) செய்யப்பெறும் சொல், தமிழ்ச் சொல்லாக இருக்க வேண்டும். (02) பொருள் பொருத்தம் உடையதாக அமைய வேண்டும்.  (03) வடிவில் சிறியதாக இருக்க வேண்டும்  (04) ஓசை நயம் உள்ளதாக விளங்க வேண்டும். (05) தமிழ் இலக்கண மரபுக்கு மாறானதாக இருத்தல் ஆகாது !

தமிழில் ஆட்சி நடத்துவதற்கு, ஆக்கப் பெறும் சொல், தமிழ்ச் சொல்லாக இருக்க வேண்டும் என்று கூறுவது மிகை போலத் தோன்றும்.  ஆனால், சிலருடைய போக்கைக் காணும் போது, இவ்வாறு முறை வகுப்பது எவ்வளவு தேவையானது என்பது புரியும் !

பிறமொழிச் சொல் ஒன்றைத் தமிழாக்கிக் கொள்ள வேண்டுமானால், அச்சொல்லின் ஓசையை அப்படியே தமிழ் எழுத்துகளில் எழுதிவிட்டால், அது தமிழ்ச் சொல்லாகிவிடும் என்று அவர்கள் கருதுகின்றனர். “MAGISTRATE”க்குத் தமிழ்ச்சொல் மாஜிஸ்திரேட்என்று அவர்கள் கூசாமல் கூறுவர்.  இங்ஙனம்  சொல் செய்வதால், தமிழில் குருட்டுச் சொற்கள் பெருகிவிடுமே என்றோ, பிறமொழி எழுத்துகளைக் கடன் வாங்க வேண்டி இருக்குமே என்றோ அவர்கள் கவலைப் படுவதில்லை !

அவர்களது கருத்துக்கு ஆதாரமாக அவர்கள் சொல்வது, “நமக்கு அச்சொல் புரிய வேண்டியது தானேஎன்பதாகும். அவர்கள் சொல்வது இன்றைக்கு ஓரளவு உண்மையாக இருக்கலாம்.  ஆங்கிலம் தெரியாத ஒரு தமிழர் கூடமாஜிஸ்திரேட்என்னும் சொல் எந்த அலுவரைக் குறிக்கின்றது என்று தெரிந்து கொள்ளக் கூடும்.  எனினும் ஒரு குருட்டுச் சொல்லாக  அஃது அவருக்கு இருக்குமே தவிர, பொருளுடையதாக என்றும் ஆகாது. இச்சொல்லை ஆங்கிலம் தெரிந்தவர்கள் சொல்ல, அவர் காதால் கேட்டுக் கேட்டு மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டிருப்பார். இதை அவர் கற்றுக் கொள்வதற்கும், உச்சரிப்பதற்கும் பலநாள் ஆகியிருக்கும் !

ஆனபோதிலும், ஒரு பிறமொழிச் சொல்லை, இவ்வாறு அவர் நினைவில் வைத்துக் கொள்வதற்குத் தேவையான அவ்வளவு நாள்களா பிடிக்கும், ஒரு புதுத் தமிழ்ச் சொல்லை அவர் மனதில் நிறுத்திக் கொள்ள ?  “SECRETARY” என்னும் ஓர் ஆங்கிலச் சொல்லை, சிலகாலம் முயன்று அவர் கற்றுக் கொண்டுவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு நேரான தமிழ்ச் சொல்லானசெயலாளர்என்னும் சொல்லை, வேர் அறிந்து, அவர் பொருள் பண்ணிக் கொள்வது போல, SECRETARY  என்னும் சொல்லை, ஆங்கிலம் படிக்காமல், என்றாவது அவர் புரிந்து கொள்ள முடியுமா ?

ஒரு புதுச் சொல்லை அரியணையில் அமர்த்திவிட்டால், அதைத் தமிழ் மட்டும் தெரிந்தவர்கள் எளிதில் பழக்கப் படுத்திக் கொள்ளக் கூடும். ஆங்கிலம் தெரிந்தவர்கள், அதற்கு ஈடான  ஆங்கிலச் சொல்லை அவர்கள் பெரிதாக எண்ணிக் கொண்டிருப்பதாலும், அஃது அவர்களுக்கு எளிதானதாகத் தோன்றுவதாலும், தமிழ்ச்சொல்லை வரவேற்பதில் அவர்கள் முதலில் தயங்குவது இயல்பே.  துவக்கத்தில் அப் பிறமொழிச் சொல்லுடன் தமிழ்ச் சொல்லையும் பயன்படுத்திக் கொண்டு வருவாரானால், நாளாவட்டத்தில், தமிழ்ச் சொல் தனித்து நின்று பெரு வழக்கினதாக நிலைத்து விடும் !

இன்று இருப்பவர்களுக்கு ஆங்கிலச் சொல் எளிதில் புரியலாம். புதிதாக ஆக்கப்பெறும் தமிழ்ச் சொல் ஒருவேளைப் புரியாமல் இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் பிறக்கப் போகின்ற தமிழர்களுக்குக் கூட, ஆங்கிலச் சொல் புரிந்ததாகவும், தமிழ்ச் சொல் புதிதாகவும் புரியாததாகவும் இருக்குமா ?  நாம் செய்யும் சொற்கள் இன்றைக்கு மட்டும் பயன்பட்டு மறைந்துவிட வேண்டியனவா ?  இனி வரும் பல நூற்றாண்டுகளிலும், ஏன்பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளிலும், தமிழகத்தில் பயன்பட வேண்டிய  சொற்கள் அல்லவா அவை ?  நம் கால்வழியினர் (சந்ததியினர்) நம்மைப் பழிக்காமல் இருப்பதற்காகவாவது, நல்ல தமிழ்ச் சொற்களை நாம் ஆக்கி அமைத்து விட்டுப்போக வேண்டாவா ?

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
(தி.:2050, மடங்கல் (ஆவணி),02]
{19-08-2019}

-------------------------------------------------------------------------------------------------------------
      
 “தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------------