விளம்பி நாகனார் என்னும் சங்க காலப் புலவர் படைத்த நூல் நான்மணிக்கடிகை ! முழுவதும் வெண்பாக்களால் ஆன இந்நூலில் கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்கள் இடம்பெற்றுள்ளன ! இதிலிருந்து ஒரு பாடல் !
-----------------------------------------------------------------------------------
பாடல் எண்:
(27)
--------------------------
அஞ்சாமை   அஞ்சுதி   ஒன்றின்   தனக்கொத்த 
எஞ்சாமை   எஞ்சல்   அளவெல்லாம்  –  நெஞ்சறியக்
கோடாமை   கோடி   பொருள்பெறினும்   நாடாதி
நட்டார்கண்   விட்ட   வினை.
------------------------------------------------------------------------------------
பொருள்:
-------------
அஞ்சுதற்குரிய  செயல்களைக்  கண்டு  அஞ்சவேண்டும்;
அதற்கு மாறாக  அஞ்சாமலிருப்பது தவறு;
எனவே அதைக்   கைவிடுவாயாக
!
பிறருக்கு  உதவி  செய்யும்  நற்பண்பினை  எந்நாளும்   கைக்கொள்வாயாக;  அப்பண்பு உன்னைவிட்டு    நீங்க  விடாதே !
மனசாட்சிக்கு  எதிராக  நடுநிலை  தவறி ஒருசார்பாக  நடந்துகொள்ளும்  தவறைச் செய்யாதே;  நடு நிலையைப் போற்றுவாயாக !
அதுபோல், பெருஞ் செல்வம் உன்னை வந்து அடைவதாயினும் கூட, நண்பர்கள் மீது ஐயம் கொண்டு அவர்களிடம் ஒப்படைத்த செயலைப் பற்றி ஆராய்ச்சி செய்யாதே !
-----------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------
அஞ்சாமை
= அஞ்சுதற்குரிய செயல்களில் அஞ்சாமலிருக்கும்   பண்புக்கு
; அஞ்சுதி =  நீ
அஞ்சுவாயாக ; ஒன்றில் = ஒரு செயலில்
; தனக்கு ஒத்த = தனக்குக் கூடுமான ; அளவு
எல்லாம் = அளவுக்கு ; எஞ்சாமை
= பிறருக்கு உதவி செய்யும் பண்பினை ; எஞ்சல்
= குறைய விடாதே ; நெஞ்சு அறிய = உள்ளமறிய
; கோடாமை = ஒருசார்பாக ஒழுகாச் செயலை ; கோடி
= கொள்வாயாக ; பொருள் பெறினும் = எத்துணைப்
பெருஞ்  செல்வம் கிடைப்பதாயினும்
;  நட்டார்கண்
= நண்பர்களின் பொறுப்பில் ;  விட்ட
வினை = ஒப்படைத்த செயல் பற்றி ; நாடாதி
=  ஐயம் கொண்டு ஆராய்ச்சி செய்யாதே.
------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
------------------------------
அஞ்சவேண்டிய  செயல்களுக்கு அஞ்சுக !  உன்னால் இயன்ற அளவுக்குப் பிறருக்கு உதவி செய்வதில்  பின்வாங்காதே ! எதிலும் நடுநிலை
தவறி ஒருசார்பாக நடந்து கொள்ளாதே !  நண்பர்களிடம்
ஒப்படைத்த பணியைப்  பற்றி  வீண் ஆராய்ச்சி செய்யாதே !
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2052,கடகம்(ஆடி),06]
{22-07-2021}
-------------------------------------------------------------------------------------
