name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

செவ்வாய், செப்டம்பர் 29, 2020

தமிழ் (31) நமது பெயர்கள் வடமொழிப் பெயர்களாக இருப்பது ஏன் ?

தமிழ் நாட்டில் தமிழில் பெயர் வைத்துக் கொள்ளல் அருகிவிட்டது ஏன் ?

------------------------------------------------------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்கள் பொதுவாகசங்க கால இலக்கியங்கள்என்றும்சங்கம் மருவிய கால இலக்கியங்கள்என்றும் வகைப் படுத்தப்படுகின்றன.  சங்க காலம் என்பது கி.மு 5 ஆம் நூற்றாண்டு தொடங்கி கி,பி 2 ஆம் நூற்றாண்டு வரை விரிந்து நிற்கும் காலம். சங்கம் மருவிய காலம் என்பது கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டு கி.பி 7 ஆம் நூற்றாண்டு வரை விரிந்து நிற்பவை !


எட்டுத் தொகை நூல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை சங்ககால நூல்களாகக் கருதப்படுபவை ! இவை கி.மு 500 தொடங்கி கி,பி 200 வரையுள்ள காலத்தைச் சேர்ந்தவை என அறிஞர்களால் கணிக்கப்பட்டுள்ளன !

 

கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே ஆரியர்களின் வருகை தமிழ்நாட்டுக்குள்  நிகழ்ந்திருக்கிறது என வரலாற்று அறிஞர்கள் கணிக்கின்றனர். சங்க கால இலக்கியங்களில் உள்ள பாடல்களில் ஒரு சில ஆரியர் வருகையையொட்டி இயற்றப்பட்டிருக்கலாம். அதனால் தான் அதன் தாக்கம் புறநானூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து   மற்றும் கலித்தொகைப் பாடல் வரிகளில் எதிரொலிக்கிறது !

 

 ஒரு சில பாடல் வரிகளைக் காண்போம் !

 ----------------------------------------------------------------------------------------------------

(01)      ஆலமர் கடவுள் அன்ன நின் செல்வம் (புறநானூறு198)

(02)     ஆவும்  ஆன் இயல் பார்ப்பன மாக்களும் (புறநானூறு.9)

(03)      ஈப்பாய் அடுநறாக் கொண்டது இவ்யாறெனப்

       பார்ப்பார் ஒழிந்தார் படிவு. (பரி.திர.2:59)

(04)      ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழிய 

             (புறநாநூறு.2)

(05)      உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் (புறம்.182)

(06)      ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறைய (புறம்.367)

(07)      ஐந்தலை சுமந்த வேக வெந்திறல் நாகம் (புறம்.37)

(08)      ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ என் (கலி.130:9)

(09)      ஐயிரு தலையின் அரக்கர் கோமான்(கலி.38:3,)

(10)      ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா

        கைபுனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு

        (கலி.25:3)

(11)      கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை (புறம்.378)

(12)      கறை மிடற்று அண்ணல் காமர் சென்னி (புறம். 55)

(13)      கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு (புறம்.361)

(14)      சூர் நவை முருகன் சுற்றத்து அன்ன நின் (புறம்.23)

(15)      தாலி களைந் தன்றும்  இலனே ; பால்விட்டு (புறம்.77)

(16)      தேவர் உலகம் எய்தினன் ஆதலின் (புறம்.228)

(17)      தைஇத் திங்கள் தண் கயம் போல (புறம்.70)

(18)      நல் பனுவல் நால் வேதத்து  (புறம்.15)

(19)      நீல மணி மிடற்று ஒருவன் போல (புறம்.91)

(20)      நீல் நிற உருவின் நேமியோனும் (புறம்.58)

(21)      நெய்ம்  மலி ஆவுதி பொங்க பல் மான் (புறம்.15)

(22)      பனி பொழி சாரலும்,பார்ப்பாரும் (பரி.8:52,)

(23)      பாம்பு சேர் மதி போல, பசப்பு ஊர்ந்து தொலைந்த

                   (கலி.15:17)

(24)      பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய (நற். 321:5,)

(25)      பார்ப்பன மகனே ! பார்ப்பன மகனே ! குறு. 156.

(26)      பார்ப்பார் தப்பிய கொடுமை யோர்க்கும் (புறம்.34)

(27)      பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இது (புறம்.43)

(28)      பால் நிற உருவின் பனைக் கொடியோனும் (புறம்)

(29)      பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல (புறம்.55)

(30)      போர் தலைமிகுத்த ஈர்-ஐம்பதின் மரொடு (பதிற். 14:5)

(31)      மறம் தலைக்கொண்ட நூற்றுவர் 

            தலைவனை (கலி.52:2)

(32)      மாற்று அருங் கணிச்சி மணி மிடற்றோனும் (புறம் )

(33)      முதுபார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து (கலி. 65:20)

(34)      வடமீன் புரையும் கற்பின், மடமொழி (புறம்.122.)

(35)      வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற

       முகத்தவன் (திருதராட்டிரன்) (கலி.25:1)

(36)      வல் வேற் கந்தன் நல் இசை அல்ல (புறம்.380)

(37)      வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் (புறம்.183)

---------------------------------------------------------------------------------------------------

ஆரியர்களின் அறிமுகமான ஆலமர் கடவுள் (தெட்சணாமூர்த்தி), இந்திரன், இராமன், சீதை, தேவர் உலகம், மணிமிடற்று ஒருவன் (பரமசிவன்) நேமியோன் (திருமால்), பனைக்கொடியோன், நுதல் விளங்குமொரு கண் (பரமசிவன்), கந்தன் ஆகிய கடவுளர் பெயர்கள் புறநானூற்றுப் பாடல்களில் இடம் பெற்றிருப்பது எப்படி ?

 

ஈரைம்பதின்மர் (கௌரவர்கள்), ஐந்தலை நாகம், ஐயிரு தலையின் அரக்கர் கோமான் (இராவணன்), நால்வேதம், வேள்வி அந்தணர், தாலி களைதல், நெய்ம்மலி ஆவுதி, பாம்பு சேர் மதி (சந்திர கிரகணம்), வடமீன் கற்பு ஆகிய ஆரியர்களின் கருத்துகள் புறநானூற்றில் இடம் பெற்றிருப்பது எப்படி ?

 

ஆரியர்களின் கான்முளைகளாகக் கருதப்படும்  ஒரு பிரிவினரைக் குறிக்கும் வகையில்பார்ப்பனர்என்னும் சொல் ஒன்பது பாடல் வரிகளில் இடம் பெற்றிருப்பது எப்படி ?

 

வேறு எந்தப் பிரிவினரையும், எடுத்துக் காட்டாகசத்திரியர்”, “வைசியர்”, “சூத்திரர்ஆகியோரைக் குறிக்கும் எந்தச் சொல்லும் புறநானூற்றில் காணப்படாத போதுபிராமணர்களைக் குறிக்கும்பார்ப்பனர்என்ற சொல் மட்டும் ஒன்பது பாடல் வரிகளில் இடம் பெற்றிருப்பது எப்படி?

 

பத்துப் பாட்டு நூல்களான, திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, முல்லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகியவை கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை. இவற்றில் ஆரியக் கலப்பு இருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை.


---------------------------------------------------------------------------------------------------

1).ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய (பெரும்.415.)

2).பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் (பெரும்.373)

---------------------------------------------------------------------------------------------------

 

திருமுருகாற்றுப்படை கி.பி. 7 ஆம் நூற்றாண்டு இலக்கியம். இதில் தான் திருமால், சிவன், இந்திரன், பிரம்மா, பார்ப்பனர்   பற்றிய குறிப்புகள் வருகின்றன !

---------------------------------------------------------------------------------------------------

 

(01) புள் அணி நீள் கொடிச் செல்வன் ( திருமால்),

(02) உமை அமர்ந்து விளங்கும் இமையா முக்கண் (சிவன்),

(03) யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வன் (இந்திரன்),

(04) நான்முக ஒருவற் சுட்டி (பிரம்மா)

(05) ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் (பார்ப்பனர்)

----------------------------------------------------------------------------------------------------

 

சங்க கால நூல்களில் தொடங்கி இன்று வரை ஆரியர்களின் மேலாளுமை முனைப்பாக இருந்தே வருகிறது. தங்கள் மொழியையும், பண்பாட்டையும் தமிழர்கள் மீது திணிப்பதற்கு அவர்கள் கையில் எடுத்த ஆயுதம் தான் ‘”கடவுள்” !

 

கடவுளின் பெயரால் தான், தமிழ் நாட்டில் மாந்தர்களின் பெயர்களெல்லாம்வடமொழி:”ப் பெயர்களாகவே இருக்கின்றன. மாந்தர்களுக்குப் பெயர் சூட்டுவதில் தமிழை அடியோடு ஒதுக்கி வைத்து விட்டது ஆரியம். இது புரியாமல் நாம் இன்னும் ஆரியத்துக்கு அடிமைப்பட்டு, வடமொழிப் பெயர்களாகவே வைத்துக் கொண்டிருக்கிறோம் !

 

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam76@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2051, கன்னி (புரட்டாசி),12]

{28-09-2020}

---------------------------------------------------------------------------------------------------------

             தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற

 கட்டுரை !

--------------------------------------------------------------------------------------------------------