சில எழுத்துகள் மொழி முதல் வாரா என்பதை உணருங்கள் !
ஒரு
சொல்லின் முதல் எழுத்தாக எந்தெந்த எழுத்துகள் வரும் என்பது பற்றி நன்னூலில் நூற்பா 102 கீழ்க் கண்டவாறு உரைக்கிறது
!
------------------------------------------------------------------------------------
பன்னீர் உயிரும் க,ச,த,ந,
ப,ம,வ,ய,
ஞ,ங,இவ் ஈரைந்து உயிர்மெய்யும் மொழிமுதல்
-------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
------------------------------
பன்னீர்
உயிரும்
= “அ” முதல் “ஔ” வரையிலான 12 உயிர் எழுத்துகளும்; க, ச,
த, ந, ப, ம, வ, ய, ஞ, ங, ஆகிய = க, ச, த, ந, ப, ம, வ, ய என்னும் எழுத்துகள், இவ்வீரைந்தும் = இந்த 10 உயிர்
மெய் எழுத்துகளும்; மொழி முதல் = சொல்லின்
முதல் எழுத்தாக வரும் !
-----------------------------------------------------------------------------------
நன்னூல்
என்பது தமிழ் இலக்கண நூல்.
இதில் 462 நூற்பாக்கள் (சூத்திரங்கள்)
உள்ளன ! இந்நூல் என்ன சொல்கிறது ? எந்தவொரு சொல்லிலும் முதல் எழுத்தாக மேற்குறிப்பிட்ட அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய 12 உயிர் எழுத்துகளில் ஏதாவது ஒன்று
வரும்; இவையன்றி, க, கா, கி, கீ என்று தொடங்கி கௌ என
முடியும் 12 உயிர்மெய் எழுத்துகளில் ஏதாவது ஒன்று வரும்.
”க்” மெயெழுத்து என்பதால், அது சொல்லின் முதலில் வராது !
இவ்வாறே
எஞ்சிய ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங ஆகிய ஒன்பது உயிர்மெய் எழுத்துகளும் அவற்றின் தொடர் எழுத்துகளும் மொழிக்கு
(சொல்லுக்கு) முதலில் வரும். இது தான் நன்னூல் வகுத்து அளித்திருக்கும் விதி !
நன்னூல்
இலக்கண விதியின்படி,
மொழிக்கு முதலாக (சொல்லின் முதல் எழுத்தாக) வரக் கூடாத எழுத்துகள் எவை
? ட, ண,
ர, ல, ழ, ள, ற, ன ஆகிய எட்டு எழுத்துகளும்
அவற்றின் தொடர் எழுத்துகளும் , ஆய்த எழுத்தும் எந்த வொரு சொல்லிலும்
முதல் எழுத்தாக வராது; வந்தால் அது தமிழ் இலக்கணத்திற்குப் புறம்பானது
!
நாம்
தமிழ்நாட்டில் பிறந்து,
வளர்ந்து வாழ்ந்து வருகிறோம் ! தமிழில் படித்து
அல்லது தமிழைப் படித்து ஏதாவதொரு பணியில் ஈடுபட்டு வருகிறோம். தமிழில் பேசுகிறோம்; தமிழில் எழுதுகிறோம்; தமிழிலேயே சிந்திக்கவும் செய்கிறோம் !
இத்தகு
நிலைமையில்,
தமிழை நாம் சரியாக எழுதுகிறோமா ? சற்று ஆழ்ந்து
நோக்கினால், தமிழை நாம் முறைப்படி எழுதுவது இல்லை என்பது புரியும்
! எப்படி என்று கேட்கிறீர்களா ? நம்மில் பலர் கீழ்க்
கண்டவாறு தானே எழுதுகிறோம் ?
(01)
ரகுராமன் (02) ராசேந்திரன் (03) ரீட்டா (04) ரூபாய் (05) ரெங்கசாமி
(06) ரேகா (07) ரொக்கம் (08) ரோசுமேரி (09) லவகுசா (10) லாவண்யா
(11) லீலா (12) லெட்சுமி (13) லைலா (14) லோகமாதா
பெற்றோர்கள்
சூட்டிய பெயர்களை மாற்ற வேண்டும் என்று சொல்ல வில்லை ! ஆனால்,
அப் பெயர்களை தமிழ் மரபின்படியாவது (தமிழ் இலக்கணப்படியாவது)
எழுதலாமே ! இரகுராமன், இராசேந்திரன், இரீட்டா,
உருபா, அரங்கசாமி / இரெங்கசாமி,
இரேகா, உரொக்கம், உரோசுமேரி,
இலவகுசா, இலாவண்யா, இலீலா,
இலட்சுமி / இலெட்சுமி, இலைலா,
உலோகமாதா என்று எழுதுவதில் இடையூறு ஒன்றுமில்லையே !
என்
பெயர் ரகுராமன்.
அதை ஆங்கிலத்தில் ”RAGURAMAN” என்று தான் எழுதுகிறேன்.
எனவே என் பெயரை “இரகுராமன்” என்று எழுத மாட்டேன், “ரகுராமன்” என்று எழுதுவதே சரி என்று வாதம் புரிபவர்களும் இருக்கிறார்கள் ! இத்தகைய மாந்தர்களுக்குத்
தமிழ் சொல்லிக் கொடுத்த ஆசிரியரைத் தான் நாம் குறை சொல்ல வேண்டும்; ஏனெனில் அந்த ஆசிரியர் தமிழ் சொல்லிக் கொடுத்திருக்கிறாரே தவிர தமிழ் உணர்வை
அந்த மாந்தனுக்கு ஊட்டத் தவறி விட்டாரே !
இராமசாமியின்
மகன் தமிழ்ச் செல்வன் என்று ஒருவர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவர் தன்
பெயரை எழுதுகையில் இரா.தமிழ்ச் செல்வன் என்று தான் எழுத வேண்டும்;
ஆனால் அப்படி எழுதாமல் ரா.தமிழ்ச் செல்வன் என்று
எழுதினால், அவர் பெயருக்கும் செயலுக்கும் பொருத்தம் இல்லாமல்
போய்விடுகிறதே ! ”ரா” என்று தலைப்பு எழுத்துப்
போட்டுக் கொள்ளும் தமிழ்க் கவிஞர்களும், தமிழ் எழுத்தாளர்களும்,
தமிழ் ஆசிரியர்களும், தமிழ்ப் பேராசிரியர்களும்
இருக்கவே செய்கிறார்கள் ! இவர்கள் எல்லாம் தமிழ் படித்த தமிழர்கள்
என்பதை நாம் நம்புவோமாக !
தமிழ்ப்பணி
மன்றத்தில்,
ஒரு நண்பர் என் தமிழ் உணர்வைப் பற்றி முன்பு முனைப்பாகக் குறை கூறி வந்தார்.
அவர் ஒரு தமிழ் இயக்கம் சார்ந்தவர். தமிழுக்காக
உயிரையும் கொடுப்பேன் என்று மார் தட்டிக் கொள்பவர். அவர் பெயருக்கு
முன்னால் அவர் போட்டுக் கொள்ளும் தலைப்பு எழுத்துகள் எவை தெரியுமோ ? ”ரா.வெ.” இத்தகைய போலித் தமிழர்களும்
இம் மண்ணில் உலா வரத்தான் செய்கின்றனர் !
நண்பர்களே ! தமிழன்
என்று நம்மை நாம் சொல்லிக் கொள்ள வேண்டுமென்றால், இயன்ற அளவுக்கு
அவ்வுணர்வைப் பெயரிலும் எழுத்திலுமாவது காண்பிப்போமே ! சொல் ஒன்றும்
செயல் ஒன்றுமாக வாழ்தல் நகைப்புக்கு உரியதாக அன்றோ ஆகிவிடும் !
-----------------------------------------------------------------------------------------------------------
பின் குறிப்பு:
டப்பா, டாம்பீகம்
என்று “ட” வரிசையில் எழுதப்படும் எந்தச்
சொற்களும் தமிழ்ச் சொற்களே அல்ல ! அது போன்றே ”ர” வரிசை எழுத்துகளில் தொடங்கும் ”ரம்பம்”, ராணி”, போன்ற சொற்களும்,
”ல” வரிசை எழுத்துகளில் தொடங்கும் “லட்சுமி”, “லஞ்சம்” போன்ற சொற்களும்
தமிழ்ச் சொற்களே அல்ல ! எல்லாவற்றையும் படித்து விட்டு,
நான் “ரா” என்று தான் என்
தலைப்பெழுத்தை (INITIAL) போட்டுக் கொள்வேன் என்று விடாப்பிடியாக
யாராவது சொன்னால், அவர்களை மன்னித்து விடுவோம் ! வேறென்ன செய்வது ?
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.ஆ:2050,கன்னி (புரட்டாசி),10]
{27-09-2019}
----------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------