கொத்து (01) மலர்
(055)
---------------------------------------------------------------------------------------------
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி
1983 சனவரி முதல் நாள்
முதல்வர் திரு. இரா.அ.தங்கவேலு அவர்களுக்கு
வாசித்தளித்த புத்தாண்டு வாழ்த்து !
---------------------------------------------------------------------------------------------
{ இயற்கை அளிக்கும் இனிமை ! }
வரையோடு உறவாடி வானின்று தரைவீழும்
வாரியைக் காண்பதினிது !
கரையோடு விளையாடி நுரையோடு எழில்சிந்தும்
கலிகடல் காண்பதினிது !
மரையோடு உறவாடி மணமோடு இசைபாடும்
மலரூதி காண்பதினிது !
நரையோடு திரைசூழ்ந்த நல்லோர்தம் உளமார்ந்த
நல்லாசி காண்பதினிது !
{ புத்தாண்டு காண்பதும் இனிது ! }
புதுப்புனல் காண்பதினிது ! - மலரும்
பூவிதழைக் காண்பதினிது !
பொன்னிலவைக் காண்பதினிது ! - மழலைப்
புன்னகையக் காண்பதினிது !
மதுக்குயில் காண்பதினிது ! – ஓடும்
மான்மறியைக் காண்பதினிது !
மாந்தளிரைக் காண்பதினிது ! – தோகை
மயிலினம் காண்பதினிது !
செம்பரிதி காண்பதினிது ! – துள்ளும்
செம்மீன்கள் காண்பதினிது !
சூல்முகிலைக் காண்பதினிது ! – வானில்
சூழ்வில்லைக் காண்பதினிது !
அம்புயத்தைக் காண்பதினிது ! – வீழும்
ஐந்தருவி காண்பதினிது !
ஆலயத்தை காண்பதினிது ! – புதிய
ஆண்டுதனைக் காண்பதினிது !
{ புத்தாண்டு நாளில் நமது கடமை ! }
ஓராண்டு காலத்தில் உற்றபயன் செய்தவினை
உன்னித்துப் பார்க்கவேண்டும் !
சீராண்டு நேராண்டு செயத்தக்க செயலாண்டு
செய்தபணி எண்ணவேண்டும்!
தாராண்டு நேயமுடன் தாளாண்மை மேற்கொண்டு
தாம்செய்த தெண்ணவேண்டும்!
ஏராண்டு உலகூட்டும் எளியோர்க்கும் ஏழைக்கும்
இயற்றியன எண்ணவேண்டும்!
{ நாம் மேற்கொள்ள வேண்டிய உறுதிமொழி }
கருவாகி ! உருவாகி ! கனிவாகி ! பணிவாகி !
காசினியில் வாழும் மாந்தன் !
எருவாகி ! அருவாகி ! இயற்கைக்கு இரையாகி !
இவ்வுலக வாழ்வை நீங்கி !
சருகாகி ! உதிர்வதனால் சாதித்த பயனென்ன ?
சமுதாய வீதி தன்னில் !
தருவாகி ! உறவுக்குத் தணியாத நிழலாகி !
தகையாளன் ஆவ தன்றோ ?
புத்தாண்டு நன்னாளில் புகழோடு செயலாற்றப்
புடைசூழ உறுதி கொள்வோம் !
எத்தடைகள் வந்தாலும் எதிர்கொண்டு வலிவோடு
எல்லோர்க்கும் நன்மை செய்வோம் !
இத்தரையில் அன்புதனை வித்தாக்கி எல்லோரும்
இனிமையெனும் நெல்லை விளைப்போம் !
நத்துவிளை முத்துஎன எத்தினமும் புத்துவகை
நத்திமிகத் தொண்டு புரிவோம் !
{ புத்தாண்டு வாழ்த்து ! }
இலக்கியமாம் கடல்மூழ்கி எண்ணற்ற சுவடிகளில்
எழில்முத்தக் கருத்தை ஏந்தி,
துலங்கமுதப் பொறியியலில் துறைபோகி சட்டவியல்
துய்க்கவுளம் நாடி இன்று,
அலங்கலுடை மாலவனாய் நெடிதுயர்ந்து இலங்குமெங்கள்
அன்பிற்கு உரிய கோவே !
புலமைமிகு தங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துதனைப்
பூந்தமிழால் கோத்தோம் வாழி !!
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்
{01--1-1983}
------------------------------------------------------------------------------------------------------------