name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

சனி, அக்டோபர் 12, 2019

சிந்தனை செய் மனமே (51) திருமண வாழ்வு தோல்வியில் முடிவது ஏன் ?

மன நிறைவில்லா  இல்லற வாழ்வு - காரணம் என்ன ? 



மருத்துவ அறிவியல் தொடர்பான ஒரு கட்டுரையை எழுதி வெளியிட, கடந்த ஆறு மாத காலமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். இன்று தான் அதைச் செயல்படுத்த முடிந்தது. அதை எழுதி இன்று வெளியிடத் தூண்டுகோலாக அமைந்தது 22-09-2019 நாளிட்ட இராணி வார இதழில் மருத்துவர் இரவீந்திரன் குமரன் எழுதியுள்ள ஒரு கட்டுரை !

கடந்த   பத்திருபது ஆண்டுகளாக (ONE OR TWO DECADES), திருமண வாழ்வில் நிறைவின்மை காரணமாகப் (DUE TO IMPOTENCY OF HUSBAND) பல பெண்கள் மணவிலக்கு கோரி நீதி மன்றங்களை நாடிய செய்திகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  அதுபோலவே, திருமணமாகிப் பல ஆண்டுகளாகியும் குழந்தைப் பேறு இல்லாமல் இருக்கும்  இளம் அகவையினர் பலரைப் பற்றிய செய்திகளையும் தெரிந்திருப்பீர்கள் !

குறிப்பிட்ட இத்தகைய இரு நேர்வுகளும் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி வருவதையும் அறிந்திருப்பீர்கள். ஏனிந்தத் துன்ப நிலை ? கடந்த பத்திருபது ஆண்டுகளாக (ONE OR TWO DECADES) மட்டும் இவை நிகழ்வது ஏன் ?

மனிதனின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் அவ்வவற்றின் பணிகளுக்காகத் தனித் தன்மையுடன் இயற்கையால் படைக்கப் பட்டிருக்கின்றன. அந்த உறுப்புகளை நாம் பாதுகாக்கக் தவறினால், அவற்றின் செயல் வலிவிழந்து போகிறது !

ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் ஒன்று விதைப்பை (SCROTUM). இந்த விதைப்பைக்குள் உயிரணுக்களை உருவாக்கும் விதைகள் (TESTICLES) இரண்டு இருக்கின்றன. நமது உடல் வெப்பநிலையைவிட ஓரிரு பாகைகள் குறைவாகவே இந்த விதைப் பையின் வெப்பநிலை இருக்க வேண்டும் !

கோடை காலத்தில், வெளிப்புற வெப்பம் கூடுதலாக இருக்கும் காரணத்தால் மனிதனின் உடல் வெப்பமும் சிறிது கூடுதலாக இருக்கும். உடல் வெப்பம் அளவுக்கு விஞ்சி கூடுதல் ஆகாமல் இருப்பதற்காக, உடலில் உள்ள வேர்வைச் சுரப்பிகள் இயங்கி, வேர்வையை வெளிப்படுத்தி, உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்துகிறது !

கோடை காலத்தில், மனிதனின் விதைப் பை, உடலுடன் ஒட்டி இராமல் தளர்வாக கீழே இறங்கி நிற்கும். இதற்குக் காரணம், கோடை காலத்தில் சிறிது உயர்ந்து  இருக்கும் உடல் வெப்பம் விதைப் பைக்குள் பாதுகாப்பாக இருக்கும் விதைகளைத் தாக்கக் கூடாது என்பது தான் !

குளிர் காலத்தில் வெளிப்புற வெப்பம் மிகக் குறைந்து காணப்படும். இதன் தாக்கம் உடலைப் பாதிக்கக் கூடாது என்பதற்காக, உடல் வெப்பத்தை இயல்பு நிலையில் வைத்துக் கொள்ள உடலின் திசுக்களுக்குள் சில வேலைகள் நடைபெறுகின்றன. அதைப் பற்றிய விரிவு இப்போது வேண்டாம் ! வெளிப்புறத்தில் நிலவும் குளிர்ச் சூழல், விதைப் பைக்குள் இருக்கும் விதைகளைத் தாக்கக் கூடாது என்பதற்காக, விதைப் பையானது குளிர்காலத்தில் சுருங்கி உடலுடன் ஒட்டிக் கொள்கிறது ! வெப்பம் மிதமாக இருக்கும் உடலுடன் ஒட்டிக் கொண்டு, அதன் கத கதப்பில் , தாயின் அரவணைப்பில் இருக்கும் குழந்தைபோல, விதைப் பைக்குள் பாதுகாப்பாக இருந்து கொள்கின்றன விதைகள் இரண்டும் !

இவ்விரு நிகழ்வுகளும் தன்னியல்பாக (INVOLUNTARILY) நடைபெறுகின்றன.  ஏன் இப்படி நிகழ வேண்டும் ? முன் பத்தியொன்றில், விவரிக்கும் போது, உடல் வெப்பத்தை விட ஓரிரு பாகை குறைந்த வெப்ப நிலையே விதைப்பைக்குள் இருக்கும் விதைகளுக்குத்  தேவை என்பதைப் பார்த்தோம். கோடை காலத்தில், உயரும் உடல் வெப்பம் விதைகளைத் தாக்காமல் இருக்க விதைப் பை தளர்ந்து தொங்குகிறது; குளிர்காலத்தில், வெளியில் வெப்பம் குறைவாகவும் குளிர் அதிகமாகவும்  உள்ளதால், அதனால் பாதிக்கப் படாமல் இருப்பதற்காக விதைப் பை சுருங்கி, உடலுடன் ஒட்டிக் கொண்டு, உடல் வெப்பத்தை பெற்றுத் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது !

உயர் வெப்பம் அல்லது போதுமான வெப்பமின்மை காரணமாக விதைப் பைக்குள் இருக்கும் விதைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன ? இதைப் பார்ப்பதற்கு முன்பு விதைகளின் இயக்கம் பற்றிச் சிறிது பார்க்கலாம் !

கணையத்தைப் (PANCREAS)  போன்றே விதைகளும் (TESTICLES)  இரண்டு வேலைகளைச் செய்கின்றன.   உயிரணுக்களை உருவாக்குவது (PRODUCTION OF  SPERMS) , “டெசிடோடிரான்என்ற ஊக்குநீரை (HORMONE) சுரக்கச் செய்வது ஆகியவை அவற்றின் பணிகள் ! உயிரணுக்கள் (SPERMS)  பெண்ணைக் கருவுறச் செய்வதற்குப் பயன்படுகிறது; ஊக்குநீர் (HORMONE) பருவ வயதை எட்டிய ஆண்களுக்கு, மீசை அரும்புவதையும், குரல் தன்மை மாறுவதையும், ஆண்மைக்குரிய உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் செயல்களையும் செய்கிறது !

இதில் ஏதாவது ஒரு வேலையை விதைகள் சரியாகச் செய்யாமல், இன்னொரு வேலையைச் சிறப்பாகச் செய்வதும் உண்டு !

விதைகள், இயல்பைவிடச் சற்று அதிகமான வெப்பத்தாலோ அல்லது  குளிராலோ பாதிக்கப் பட்டால், அவற்றின் செயல்பாடுகள் வீழ்ச்சி அடைகின்றன ! உயிரணுக்களை உருவாக்கும் (PRODUCTION OF  SPERMS) திறன் குறைகிறது அல்லது முற்றிலுமாக நின்று போகிறது ! அல்லது ஆண்மைக்குரிய உணர்ச்சிகளைத் தூண்டி விடும் வேலை (INDUCING ERECTION) நின்று போகிறது !

எப்பொழுது இந்தியாவுக்குள் கீழாடை (JATTY) அணியும் பண்பாடு தோன்றியதோ அப்பொழுதான் சிக்கலும் தோன்றியது. ஆங்கிலேயர்கள் குளிர் அதிகமுள்ள நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கீழாடை (JATTY) அணிந்தால் தான், விதைகளுக்குப் பாதுகாப்பு. விதைப் பை கீழாடையால் (JATTY) இறுக்கப்பட்டு எப்பொழுதும் உடலுடன் ஒட்டியே இருப்பதால், அதிலுள்ள விதைகள் குளிரால் செயலிழக்காமல் பாதுகாப்பாக இருக்கிறது. வெளிப்புற வெப்பம் குறைவாகவே இருப்பதால், அவர்களின் உடல் வெப்பமும் இயல்பாகவே இருக்கும். ஆகையால் உடல் வெப்பத்தால் விதைகள் செயலிழக்கும் பிரச்சினையே அங்கு இல்லை ! 

புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக, குளிர் நாட்டுக் காரர்கள் அணியும் கீழாடையை (JATTY) வெப்ப நாட்டுக் காரர்களாகிய நாம் அணியத் தொடங்கினோம். அதிலும் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் 24 மணி நேரமும் கீழாடை (JATTY) இல்லாமல் இருப்பதில்லை . கல்லூரிக் காளைகளும் இரவில் கைலி (லுங்கி) அணிந்தாலும், கீழாடையைக் களைவதில்லை.

இதன் விளைவு, உடல் வெப்பத்தால், விதைகளின் செயல் பாதிப்படைந்து இரண்டு வகைகளில் வெளிப்படுகிறது. அதில் ஒன்று உயிரணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு ஏற்படுதல் (DECREASE IN SPERM COUNTS) அல்லது வலுவில்லாத உயிரணுக்கள் (WEAKER SPERMS)  உருவாகுதல். இவ்விரண்டுமே அந்த ஆணிடம் மலட்டுத் தன்மையை (INFERTILITY) ஏற்படுத்துகிறது. உடல் நலம் நன்றாக இருக்கும்; உடல் வலிமையும் சிறப்பாக இருக்கும்; ஆனால் திருமணம் ஆன பின் குழந்தைப் பேறு இருக்காது !

இரண்டாவது வகையில், உடல் நலத்தில் நலிவு இருக்காது; வலிமையிலும் குறைவிருக்காது; ஆனால் விதைகள் பாதிப்பால்ஊக்குநீர் சுரப்பு போதுமானதாக இல்லாததால் ஆணுறுப்பில் விரைப்புத் தன்மை (PENIS ERECTION)  அற்றுப்போய்விடும். இத்தகைய குறைபாடு உடைய ஆண்களின் கோழைத் தனத்தால், பெண் பார்த்து, திருமணம் செய்வித்து, முதலிரவு வரை செல்லும்  இல்லற ஏற்பாடு, முதலிரவு நாளிலேயே  தோல்வியில் முடிந்துவிடும் ! ஏமாற்றமடையும் பெண், திருமணமான ஓரிரு மாதங்களிலேயே மணவிலக்கு கேட்கும் நிலைக்கு ஆளாகிறாள் !

நண்பர்களே ! இப்பொழுது உங்களுக்கு ஒன்று புரிந்திருக்கும் ! ஆங்கிலேயர்களை அடியொற்றிக் கீழாடை (JATTY) அணிவதன் பலன் எங்கு கொண்டு போய் விடுகிறது பார்த்தீர்களா ? நண்பர்களே ! உங்கள் வீட்டு ஆண் குழந்தைகளை பள்ளி செல்லும் நேரம் தவிர பிற நேரங்களில் கீழாடை (JATTY) அணியாமல் இருக்க,  தக்க அறிவுரை வழங்குங்கள் ! இரவு நேரங்களில் தளர்வான துயிலாடை (NIGHT-DRESS)  அணிந்து உறங்கும் வழக்கத்தினை மேற்கொள்ளச் செய்யுங்கள் !

வருமுன் காப்பதே வளமான வாழ்வுக்கு வழி !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2050,கன்னி (புரட்டாசி),02]
{18-09-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
       “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------