name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

திங்கள், அக்டோபர் 07, 2019

சிந்தனை செய் மனமே (43) விசுவநாதன் ! வேலை வேணும் ! !

ஆப்பக் கடை ஆயாக்கள்  சென்ற இடமே தெரியாமல் போய்விட்டது !



இந்தியாவில் 80 விழுக்காடு மக்கள் வேளாண்மைத் தொழில் சார்ந்தவர்கள்.  5 விழுக்காடு மக்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்கள். சிறு குறு தொழில்களில் ஈடுபட்டு அதன் வருமானத்தை நம்பி 5 விழுக்காடு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 5 விழுக்காடு மக்கள் அற்றைக் கூலிகள். எஞ்சிய 5 விழுக்காடு மக்கள் செல்வச் செழிப்பு  வாய்ந்த குடும்பத்தினர் அல்லது அவர்களைச் சார்ந்துள்ளவர்கள் !

இவர்கள் அனைவருக்குமே வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதே நல்ல அரசின் கடமையாகும். வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் அதை விட்டு விட்டு  வருமானத்திற்கு வேறு வாய்ப்பை நாடிச் செல்லாத வகையில் வேளாண்மையை ஆதாயம் தரும் தொழிலாக உருவாக்கித் தர வேண்டியது அரசின் பொறுப்பு !

சிறு, குறு தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், பெருந் தொழிலகங்களால் பாதிக்கப் படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். எடுத்துக் காட்டாக, கைகளால் தீப்பெட்டி செய்யும்  தொழிலில் பல்லாயிரக் கணக்கானோர் ஈடுபட்டிருக்கையில், அவர்களது வாழ்வாதாரத்தைப் பறித்து விட்டு, பெருந் தொழிற்சாலைகளில் எந்திரங்கள் மூலம் தீப்பெட்டி செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது !

பெட்டிக் கடைகள் வைத்துப் பிழைப்போர் இந்தியாவில் ஏராளம். காய்கறிக் கடைகள், பூக்கடைகள் வைத்து வியாபாரம் செய்து வயிற்றுப் பசி ஆற்றிக் கொள்வோர் எண்ணிக்கை கோடிக் கணக்கில் இருக்கும். இவர்களது வாழ்வாதாரத்தைப் பறித்து விட்டு வெளிநாட்டு நிறுவனமான வால்மார்ட்டுக்கும், இந்திய நாட்டின் பகாசூரனானரிலையன்சுக்கும் அரசு அனுமதி கொடுப்பது மிக மிகத் தவறான செயல் !

சிறிய அளவில் துணிக்கடை வைத்து நடத்தி, அதன் வருமானத்தை நம்பி வாழும் மக்கள் கோடிக் கணக்கில் உள்ளனர். இவர்களது தொழிலை நசுக்கும் வகையில்சென்னை சில்க்ஸ்”, “போத்தீஸ்”, சரவணா ஸ்டோர்ஸ்போன்ற பெரு வணிக நிறுவனங்கள் தங்கள் கிளைகளை நகரங்கள் தோறும் திறந்து வணிகம் செய்திட அனுமதிப்பது கெடுமதியாளர்களின் செயலாகவே தோன்றுகிறது !

சிறு அளவில் நகை செய்து விற்பனை செய்தவர்கள் எல்லாம் காணாமற் போய்விட்டார்கள்:  கல்யாண் ஜுவல்லர்ஸ்”, “ஜோஸ் ஆலுக்காஸ்”, போன்ற பெரு முதலாளிகள் தமிழகத்தில் கடை விரிக்க அனுமதிக்கப்பட்ட பிறகு !

அடையாறு ஆனந்த பவன்”, “ஹோட்டல் சரவணாஸ்”, ”ஹோட்டல் அன்னபூர்ணா”, போன்ற பெரு முதலாளிகள் நகரங்கள் தோறும் கிளைகளைத் திறந்திட அனுமதித்த பிறகு சிறிய உணவு விடுதிகள், ஆப்பக் கடை ஆயாக்கள் போன்றோர் சென்ற இடமே தெரியாமல் போய்விட்டது !

பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலைகளைத் திறக்க அனுமதித்த போது, படித்த இளைஞர்களுக்கு எல்லாம் வேலை கிடைக்கப் போகிறது என்று மைய, மாநில அரசுகள் நம்மை நம்ப வைத்தன. தொடக்கத்தில் படித்த இளைஞர்களுக்கு ஓரளவுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்ததன என்பது என்னவோ உண்மைதான் !

ஆனால், இன்றைய நிலை என்ன தெரியுமா ? இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் பணியாளர்கள் எண்ணிக்கையைக் குறைத்து, அவர்கள் செய்யும் வேலையை எந்திரங்கள் மூலம் செய்விக்கும்எந்திரமயமாக்கல்” (AUTOMATION), என்னும் கீழறுப்பு வேலையைச் செய்து வருகின்றன. இந்தக் கீழ்த்தரமான செயலை மைய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன !

எந்தத் தொழிற்சாலையிலும்பணியமர்த்தம்என்பதே இப்போது இல்லை. பொறியியல் பட்டதாரிகளும், கணினிப் பயனியல் பட்டதாரிகளும், பிற வகையில் பயிற்சி பெற்ற இளைஞர்களும் வேலை தேடி ஆலாய்ப் பறந்து கொண்டிருக்கின்றனர் !

அனைத்து மக்களும் உணவும் உடையும், உறையுளும் பெறத்தக்க வகையில் அவர்கள் வருமானம் ஈட்டக் கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கான சிந்தனை மைய, மாநில அரசுகளிடம் துப்புரவாக இல்லை. பணி அமர்த்துவதில் நிலைத் தன்மை (REGULAR APPOINTMENT) என்பது எந்தத் துறையிலும்  இல்லை. ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே இறுதி வரை வைத்திருக்கும் இழிநிலை இன்னும் தொடர்கிறது. தகுதி படைத்தவர்களை குறைந்த ஊதியத்தில் அமர்த்தி வேலை வாங்கும் கோமாளித்தனம் நடைமுறைப் படுத்தப்படுகிறது !

இத்தகைய இழி நிலை ஏற்பட என்ன காரணம் ? துறை வல்லுநர்கள் இங்கு அமைச்சர்கள் ஆவதில்லை.  பொருளாதார விற்பன்னர்கள் நிதி அமைச்சகப் பொறுப்புக்கு வரமுடிவதில்லை. பள்ளிக்குள் மழைக்குக் கூட ஒதுங்காதவர், இங்கு கல்வி அமைச்சராக முடிகிறது. சட்ட அமைச்சருக்குச் சட்டம் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம்  ஏதுமில்லை. நெல் வயலுக்குள் காலடி வைக்காதவர் எல்லாம் இங்கு வேளாண் அமைச்சராக வீற்றிருக்க முடிகிறது. இந்த நிலை நீடிக்கும் வரை இளைஞர்களுக்கு விடிவு காலம் எங்கிருந்து வரப்போகிறது ?

மக்கள் தொகை நிரம்ப இருக்கும் ஒரு நாட்டில், அவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில்தான் அரசின் கொள்கை இருக்க வேண்டும். நூறு தொழிலாளர்கள் உழைத்து ஒரு நாளில் ஒருமகிழுந்து” (CAR), உற்பத்தி செய்யும் தொழிலகம் தான் நமக்கு வேண்டும். அதற்குப் பதில், இரண்டு மூன்று தானியங்கி எந்திரங்கள் இயங்கி, தொழிலளர்களின் பங்களிப்பு ஏதுமில்லாமல், ஒரு நாளில் நூறுமகிழுந்துகள் செய்கின்ற தொழிலகம் நம் நாட்டிற்குத் தேவையே இல்லை. இதைப் பற்றி தொழிற்துறை அமைச்சர் எவரும்  இதுவரை சிந்தித்ததாக எனக்குத்  தெரியவில்லை !

மைய, மாநில அரசுகளின் அமைச்சர்கள் எல்லாம் பெரு முதலாளிகளின் மறைமுக முகவர்களாகத்தான் இருக்கிறார்களே தவிர, மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாக இல்லை. இவர்களது எண்ணமும் செயலும் பதவி, பணம், பகட்டு, ஆட்சி, அதிகாரம் ஆகியவற்றை மையமாக வைத்து இயங்குகிறதே தவிர, மக்களைப் பற்றிக் கவலைப் படுவதாக இல்லை !

படித்த இளைஞர்கள் வேலை கிடைக்காமல், மனம் நொந்து நூலாகிக் கொண்டிருக்கிறார்கள். பதவியில் அமர்ந்திருக்கும் அமைச்சர்களோ இன்ன வேலைக்கு இத்தனை இலட்சம் என்று விலை வரையறை செய்து  அதிகாரிகள் மூலம் அறுவடை செய்துகொண்டிருக்கிறார்கள் !

இந்த இலட்சணத்தில், தாங்கள்யோக்யமானவர்கள்என்றும் ஏழைகளைக் காப்பாற்ற வந்தஇரட்சகர்கள்என்றும் நாள்தோறும் கூவிக் கொண்டிருக்கின்றனர் சில அரசியல் கட்சினர் ! 

மக்கள் நினைத்தால்தான்  வாக்குச் சீட்டு மூலம் இந்த நிலைமைக்கு முடிவு கட்ட முடியும். அதுவரை விசுவநாதன் வேலை வேணும்என்னும் இளஞர்களின் அவலக் குரல்  இந்த நாடு முழுவதும் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும் !

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, சுறவம், 11.]
{25-01-2019}
---------------------------------------------------------------------------------------------------------
      “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------