name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

திங்கள், செப்டம்பர் 06, 2021

சிந்தனை செய் மனமே (86) ஆழ்ந்து உறங்கும் தமிழர்கள் !


மொழிவாரி மாநில அமைப்புச் சட்டம்  1956-ஆம் ஆண்டு  நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகியவற்றின் நிலப் பகுதிகளுள் பல  சென்னை மாகாணம் (Mardas Presidency) என்ற பெயரில் இந்திய அரசின் ஆளுகையில் இருந்து வந்தன !

 

அப்போது இத்தகைய மாகாணங்களின் ஆட்சித் தலைவர்பிரதமர்” (Premier) என்று அழைக்கப்பட்டார். சென்னை மாகாணப் பிரதமராக பேராயக் கட்சியை (CONGRESS) சேர்ந்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் 1947-ஆம் ஆண்டு மார்ச் 03 முதல்,   1949  ஏப்ரல் 06 வரை பதவியில் இருந்தார் !

 

இவரது ஆட்சிக் காலத்தில்தான்தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்  1947-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ஆம் நாள் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரியார் ஈ.வெ.இராவும் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியும் !

 

தேவதாசி முறை  என்றால் என்னவென்று உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்து மதப் பழக்க வழக்கங்களில் (சடங்குகளில்)  ஒன்று பசுமாடுகளை கோவிலுக்குத் தானமாகக் கொடுத்தல். இன்னொரு சடங்கு குறிப்பிட்ட  ஒரு சாதிப் பெண்களைக் கோவிலில் ஊழியம் செய்வதற்கு  நேர்ந்துவிடுதல் !

 

இளம் அகவைச் சிறுமியரை கோவிலுக்கென்று ஒப்படைக்கும் இதற்குபொட்டுக் கட்டி விடுதல்என்று பெயர். இந்தச் சிறுமியர், இசை, நடனம் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டு, அன்றாடம் கோயில் கருவறையில் பூசை நடக்கும் போது பாட்டுப் பாடி நடனம் ஆடுவர். அவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் கோவிலில் ஊழியம் செய்துவரவேண்டும் ! இவர்கள்தேவன்எனப்படும் இறைவனுக்குதாசியாக வாழ்வதால் இவர்களுக்குத்தேவதாசிஎன்று பெயர் !

 

தாசிஎன்னும் சொல்லுக்கு என்ன பொருள் என்பது உங்களில் பெரும்பாலானோர்க்குத் தெரியும் என்று நினைக்கிறேன். கோயிலின் சொத்து ஆகிவிட்ட இந்ததேவதாசி  சிறுமியருக்கு, குமுகாயப் பாதுகாப்பு ஏதுமில்லை. அவர்கள் வயதுக்கு வந்த பின்பு, பலருக்கும் ஆசைநாயகியாக வாழவேண்டிய அவல நிலை. இதில் கருவுறும் பெண்கள், குழந்தை பெற்ற பின்பு, அக்குழந்தையைத் தன் குடும்பத்தில் ஒப்படைத்துவிடுவாள். அக்குழந்தை, அங்கு தன் தாத்தா பாட்டியோடு வளர்ந்து வரும் !

 

இவ்வாறு வளரும் குழந்தை பெண்ணாக இருந்துவிட்டால், அக்குழந்தையும், பருவத்திற்கு வருவதற்கு முன்புபொட்டுகட்டிகோயிலுக்கு நேர்ந்து விடப்படும். இவ்வாறு தந்தை பெயர் தெரியாத குழந்தைகள் அக்காலத்தில் குறிப்பிட்ட சாதிக் குடும்பங்களில் நிரம்பவே இருந்துவந்தன !

 

கோயிலுக்குபசுமாடுநேர்ந்துவிடும் செயலுக்கு நிகராக, “இளஞ் சிறுமியரைகோயிலுக்கு நேர்ந்துவிடும்தேவதாசிமுறைக்கு, புதுக்கோட்டையைச் சேர்ந்த, தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர், முத்துலட்சுமி ரெட்டி அவர்களும், பெரியார் ஈ.வெ.இரா. அவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஊரெங்கும் பரப்புரைகள் செய்துவந்தனர். பெரியாரின் திராவிடர் கழகம் இதில் மிகுந்த முனைப்புக் காட்டியது !

 

நாடு விடுதலை பெற்ற பிறகு, ஒமந்தூரார் தலைமையில் அமைந்த  சென்னை மாகாண அரசுதேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றி, இந்து மதச் சடங்குகளில் நிலவி வந்த  முட்டாள்தனமான பகுத்தறிவற்ற,  முடைநாற்றம் வீசும்  இந்த  வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது !

 

நாட்டிலும், அரசியலிலும், கோயில்களிலும் மேலாளுமை செலுத்திவந்த இன்றும் செலுத்தி வருகிற - பிரம்மனின் சிரசிலிருந்து பிறந்ததாகச் சொல்லிக் கொள்ளும் -  குறிப்பிட்ட உயர்சாதி மக்கள் பொறுப்பார்களாதேவதாசி ஒழிப்புமுறையை ?  பேராயக் கட்சிக்குள் (காங்கிரசுக்குள்) ஓமந்தூராருக்கு எதிராகக் கலகத்தைத் தொடங்கினர். விளைவு ? ஓமந்தூரார் பதவி விலக நேர்ந்தது ! பி.எஸ்.குமாரசாமி ராஜா அடுத்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது அன்றைய கதை !

 

இன்றைய கதை என்ன ? அனைத்து சாதியினரும் அர்ச்சகரா ? விடுவோமா ? கலகக் குரல்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர் பிரம்மனின் சிரசிலிருந்து குதித்து வந்த  சாதியினர்.  வழக்கம் போல்இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன?” என்று ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறதுபிரம்மனின் பாதத்திலிருந்துபிறந்ததாக சொல்லப்படும் சூத்திர சமுதாயம் ! வாழ்க தமிழர்கள் !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.: 2052, மடங்கல் (ஆவணி) 13]

{13-08-2021}

----------------------------------------------------------------------------------------