name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: வரலாறு
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, பிப்ரவரி 09, 2020

வரலாறு பேசுகிறது (24) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர்


தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்.


தோற்றம்:
சென்னை நகரின் ஒரு பகுதியான சிந்தாதிரிப் பேட்டையில், 1901 –ஆம் ஆண்டு, சனவரித் திங்கள் 8 –ஆம் நாள்  மீனாட்சி சுந்தரம் பிறந்தார். தந்தையின்பெயர், பொன்னுசாமி கிராமணியார்; தாயார் பெயர் இணையத்தில் காணக் கிடைக்கவில்லைபொன்னுசாமிக் கிராமணியாருக்குத் தமிழ் மீது இருந்த பற்றின் காரணமாக மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை நினைவாக அவர் பெயரைத் தன் மகனுக்குச் சூட்டினார் !
கல்வி:
சென்னையிலேயே தொடக்கக் கல்வி, உயர்நிலைப் பள்ளிக் கல்வி இரண்டையும் நிறைவு செய்த மீனாட்சி சுந்தரம், பச்சையப்பன் கல்லூரியில் கலையியல் வாலை (B.A) படிப்பை முடித்தார். பின்னர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டவியல் வாலை (B.L) படிப்பை 1922 –ஆம் ஆண்டு நிறைவு செய்தார். அடுத்த ஆண்டே சென்னை உயர் முறை மன்றத்தில் (HIGH COURT) வழக்குரைஞராகத் தன்னைப் பதிவு செய்துகொண்டார். இதே ஆண்டில் கலையியல் மேதை (M.A) பட்டமும்பெற்றார் !
பொதுப் பணி:
பொதுப் பணியில் நாட்டம் கொண்டிருந்த மீனாட்சி சுந்தரம் 1924 –ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இஃதன்றி பெருவங்கத் தொழிலாளர்கள் சங்கத் தலைவராகவும் (ALUMINIUM INDUSTRIAL WORKERS UNION LEADER) 1925 ஆம் ஆண்டு தேர்வு செய்யப் பெற்றுப் பணியாற்றினார் !
தமிழார்வம்:
மீனாட்சி சுந்தரத்திற்கு இருந்த கல்வி ஆர்வம் காரணமாக வரலாறு, பொருளியல் ஆகிய துறைகளிலும் கலையியல் மேதைப் (M.A) பட்டங்களைப் பெற்றார்அதுவுமல்லாமல் தமிழில் கீழ்த் திசை மொழிகளுக்கான வாலைப் பட்டமும் (B.O.L). மேதை பட்டமும் (M.O.L) அடுத்த சில ஆண்டுகளிலேயே அடுத்தடுத்துப் பெற்றார் !
சிறை வாழ்வு:
நாட்டு விடுதலையில் கொண்டிருந்த ஆர்வம் காரணமாக, 1941 ஆம் ஆண்டு மீனாட்சி சுந்தரம் மறியல் போராட்டத்தில் கலநது கொண்டு சிறை சென்றார். சிறையிலிருந்து மீண்ட பிறகும் அவர் இந்தியப் பேராயக் கட்சியில் ஈடுபாடு கொண்டு உழைத்து வந்தார்.
பேராசிரியர்:
இவரது தமிழ்ப் புலமையைக் கண்ட அண்ணாமலை அரசர் அவர்கள் இவரை 1944 –ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக அமர்வு செய்தார். 1945 –ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அனைத்திந்திய வரலாற்று மாநாட்டில், புதிதாகத் திராவிடப் பிரிவு அமைக்கப்பட்டபோது, அதற்குத் தெ.பொ.மீ தலைவராக்கப்பட்டார். பிறகு, மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத் துறைத் தலைமைப் பேராசிரியராகப் 1958 –ஆம் ஆண்டு  பொறுப்பேற்றார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா சென்று அங்குள்ள சிகாகோ பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசியராகப் பணியாற்றினார்.
துணைவேந்தர்:
மீனாட்சி  சுந்தரனாரின் தமிழ்ப் புலமையும், ஆளுமைத் திறனும் அவரை மதுரைப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பொறுப்பேற்கச் செய்தது. 1966 முதல் 1971 வரை ஐந்தாண்டுகள் அவர் இப்பணியில் தொடர்ந்தார்.
பிற பணிப் பொறுப்புகள்:
துணைவேந்தர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் திருப்பதி, திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் திராவிட மொழியியல் கழகச் சிறப்பு ஆய்வளராக 1973, 1974 –ஆம் ஆண்டுகளில் பணி புரிந்தார் !
பன்மொழிப் புலவர்:
தெ.பொ.மீ அவர்கள் தமிழ் மட்டுமல்லாது, ஆங்கிலம், சமற்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரஞ்சு, செருமானியம் ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற அறிஞராகத் திகழ்ந்தார்.
படைப்புகள்:
தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம், ஒப்பிலக்கியம், மொழியியல் குறித்த பல கட்டுரைகளையும், நூல்களையும், திறனாய்வுகளையும் எழுதியுள்ளார். வள்ளுவரும் மகளிரும், அன்பு முடி, கால்டுவெல் ஒப்பிலக்கணம், தமிழா நினைத்துப் பார், நீங்களும் சுவையுங்கள், வள்ளுவர் கண்ட நாடும் காமமும், பிறந்தது எப்படியோ ?, கானல்வரி, தமிழ் மணம், வாழும் கலை, தமிழ் மொழி வரலாறு, பத்துப் பாட்டு ஆய்வு, மொழியியல் விளையாட்டுகள் போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார் !
சிறப்புகள்:
இவருக்குத் தருமபுரம் திருமடத்தின் தலைவர்பல்கலைச் செல்வர்என்ற பட்டத்தையும், குன்றக்குடித் திருமடத்தின் தலைவரான  அடிகளார் பன்மொழிப் புலவர்என்னும் பட்டத்தையும் அளித்துப் பெருமைப் படுத்தினர்.  இவையன்றிப் பல்வேறு அமைப்புகள் இவருக்கு பெருந்தமிழ் மணி, நடமாடும் பல்கலைக் கழகம், குருதேவர் ஆகிய பட்டங்கலையும் அளித்துப் பெருமைப் படுத்தின. அத்துடன் தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதினையும், ஒன்றிய அரசு  “பத்மபூசன்விருதினையும் அளித்துப் பெருமைப் படுத்தின !
தெ.பொ.மீ.யின் நம்பிக்கை:
தமிழன் வாழ்ந்தாலன்றித் தமிழ் வாழ முடியாது என்று தெ.பொ.மீ உறுதியாக நம்பினார். தமிழனை விட்டுவிட்டுத் தமிழினைக் காணும் முயற்சி வீண், வீண், வீணென்று அவர் மும்முறை அழுத்திக் கூறினார். எத்துறையினர் ஆயினும் தமிழ்ப் பற்று கொண்டு போற்றுவாராயின் தமிழ் உலக மொழியாகுமென்று அவர் நம்பினார்.
தெ.பொ.மீ.புனைந்த புதுச் சொற்கள்:
ஆளுமை (PERSONALITY), எதிர்நிலைத் தலைவன் (VILLAIN), உயர்தானிச் செம்மை (CLASSICAL), நனவோடை (STREAM OF CONSCIOUSNESS), இருப்பு நிலைக் கொள்கை (EXISTENTIALISM) செய்யுணிலை அறம்(POETIC JUSTICE) நாடகக் கீழறைப் பொருள் (DRAMATIC IRONY) முதலிய சொல்லாக்கங்களைப் படைத்த பெருமை அவாருக்கு உண்டு.
மறைவு:
இத்தகைய ஆற்றல்கள் பல மிக்க பேரறிஞரான தெ.பொ.மீ அவர்கள் 27-08-1980 அன்று, தமது 79 ஆம் அகவையில் பூதவுடலை நீத்துப் புகழுடம்பு எய்தினார்பன்மொழிப் புலவர்கள் என்ற வரிசையில் தெ.பொ.மீ தான் ஈற்றாய் நின்ற மனிதர் போலும் !
முடிவுரை:
தமிழ் மீது பற்றுக் கொண்ட முந்தைய தலைமுறையினர், தமிழை உயர்நிலைக்குக் கொண்டு சென்றார்கள்; தாமும் உலகம் போற்றும் மாமனிதர்களாக   வாழ்க்கையில் உயர்ந்து நின்றார்கள்; அவர்களுக்கு ஒரு எடுத்துக் காட்டு தெ.பொ.மீ. இப்போதைய தலைமுறையினர், பொருள் புரியாத ஒற்றை வரியை மடக்கி மடக்கி எழுதிப்புதுக் கவிதைஎன்றும்ஐக்கூ கவிதைஎன்றும் வெளியிட்டு, தனக்குத் தானே கவிஞர் பட்டம் சூட்டிக் கொள்ளும் மனப் பாங்கினை நினைத்துப் பார்த்தால், தமிழுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கும் என்று நம்மால் நம்ப முடியவில்லை !
------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)24]

{07-02-2020}
--------------------------------------------------------------------------------------------------------------







 

 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற


 கட்டுரை !














-------------------------------------------------------------------------------------------------------------




















































புதன், பிப்ரவரி 05, 2020

வரலாறு பேசுகிறது (23) ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர்


ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை


தோற்றம்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஔவையார் குப்பம் என்னும் சிற்றூரில் 1903 –ஆம் ஆண்டு, செப்டம்பர்த் திங்கள் 5-ஆம் நாள் துரைசாமி பிறந்தார். அவருடைய தந்தையார் பெயர் பாவலர். சுந்தரம் பிள்ளை. தாயார் சந்திரமதி அம்மையார் !

கல்வி:

ஔவையார்க் குப்பத்தில் தனது தொடக்கக் கல்வியைப் பெற்ற துரைசாமி, பின்னர் திண்டிவனத்திலிருந்த உயர்நிலைப் பள்ளியில்  பள்ளியிறுதி வகுப்பு வரைப் பயின்றார். அடுத்து வேலூர் ஊரிசுக் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் (INTERMEDIATE) படிப்பைத் தொடர்ந்தார். குடும்பச் செல்வ நிலை நலிவுற்றிருந்த காரணத்தால், கல்லூரிப் படிப்பை மேற்கொண்டு அவரால் தொடர இயலாமற் போயிற்று ! 

பணியில் சேர்வு:

படிப்பை நிறுத்தியதும், குடும்பத்திற்கு உதவும் பொருட்டுநலத் தூய்மைக் கண்காணிப்பாளர்பணியில் சேர்ந்தார். அவருக்குள் கனன்று கொண்டிருந்த தமிழார்வம், அவரை அப்பணியில் தொடர விட வில்லை ! தமிழை முறையாகப் பயின்று புலமை பெறுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். எனவே ஆறே மாதங்களில் அப்பணியிலிருந்து விலகினார் !

தமிழ்க் கல்வி:

தமிழை முறையாகப் பயில வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்த துரைசாமி, தஞ்சை, கரந்தைத் தமிழ்ச் சங்கப்பள்ளியில் தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளையால் ஆசிரியராகப் பணியில் அமர்த்தப் பட்டார். அப்பணியில் இருந்து கொண்டே, தமிழ்ப்பாடம் பயின்று 1930 –ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்  வித்துவான்தேர்வில் தேர்ச்சிப் பெற்றார் !

திருமணம்:

ஔவை துரைசாமி அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் பெயர் உலோகாம்பாள். இவ்விணையருக்கு 4 பெண் பிள்ளைகளும் 5 ஆண் பிள்ளைகளும் பிறந்தனர். ஆண்மக்களின் பெயர் (01) ஔவை. து. நடராசன் (தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக மேனாள் துணை வேந்தர் (02) ஔவை .து. திருநாவுக்கரசு (03) ஔவை .து. திருஞான சம்பந்தம் (04) ஔவை .து. மெய்கண்டான் (மருத்துவர்) (05) ஔவை .து. நெடுமாறன் (மருத்துவர்). பெண்மக்களின் பெயர் (01) பாலகுசம் (02) மணிமேகலை (03) திலகவதி (04) தமிழரசி.

தமிழ்ப் பணி:

தமிழ்வித்துவான்தேர்வு எழுதியிருந்த நிலையில் காவேரிப்பாக்கம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியேற்றார். ”வித்துவான்பட்டம் பெற்ற பிறகு செய்யாறு, செங்கம், போளூர் ஆகிய இடங்களில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் ஏறத்தாழ 12 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தமிழ்ப் பொழில், செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ் முதலிய இதழ்களில் தமிழ் இலக்கிய, இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதிவந்தார் !

திருப்பதி திருவேங்கடவன் கீழ்த் திசை மொழிகள் கல்லூரியில் 1942 –ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளராகப் பணியில் சேர்ந்தார். இங்கு ஓராண்டுப் பணிபுரிந்த  பின் , சிதம்பரம் அண்ணாமலைப் பலகலைக் கழகத்தில் 1943 -ஆம் ஆண்டு முதல் எட்டு ஆண்டுகள் ஆராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணி புரிந்தார். பின்னர்  மதுரைத் தியாகராயர் கல்லூரியில் பேராசிரியராக 1951 –ஆம் ஆண்டு பணியேற்றார்.

தமிழ் இலக்கியப் பணி:

மணிமேகலைக் காப்பியத்திற்குப் புத்துரை எழுதிக் கொண்டிருந்த நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் எதிர்பாராமல் இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளையின் அழைப்பை ஏற்று, தஞ்சை வந்து மணிமேகலைக் காப்பியத்தின் இறுதி நான்கு காதைகளுக்கும் விளக்கவுரை எழுதிக் கொடுத்தார் !

படைப்புகள்:

ஔவையார்க் குப்பம் என்னும் தன் ஊர்ப் பெயரின் முன் பாதியைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்ட துரைசாமி, பின்பு ஔவை.துரைசாமி என்றே தமிழ் கூறும் நல்லுலகால் அழைக்கப்பட்டார். ஔவை.துரைசாமி அவர்கள் (01) சேர மன்னர் வரலாறு (02) சைவ இலக்கிய வரலாறு (03) ஐங்குறுநூறு உரை (04) நற்றிணை உரை (05) புறநானூறு உரை (2 பகுதிகள்) (06) பதிற்றுப்பத்து உரை (07) திருவருட்பா உரை (9 தொகுதிகள்) (08) தமிழ்ச் செல்வம் (09) தெய்வப் புலவர் திருவள்ளுவர் (10) பரணர் (11) வரலாற்றுக் காட்சிகள் (12) மதுரைக் குமாரனார் (13) பெருந்தகைப் பெண்டிர் (14) தமிழ்த் தாமரை (15) நந்தாவிளக்கு (16) சிலப்பதிகார ஆராய்ச்சி (17) மணிமேகலை ஆராய்ச்சி (18) சீவக சிந்தாமணி ஆராய்ச்சி (19) சூளாமணிச் சுருக்கம் (20) தமிழ் நாவலர் சரிதை உள்பட 33 நூல்களைப் படைத்துள்ளார். இவையன்றி எட்டு நூல்கள்  அச்சில் வராதவையாக இருந்தன !

உரைவேந்தர்:

மதுரைத் தியாகராயர் கல்லூரித் தாளாளர் திருமதி இராதா தியாகராசன் அவர்கள் ஔவை. துரைசாமி அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டி அவருக்குஉரை வேந்தர்என்னும் பட்டத்தை அளித்து, தங்கப்பதக்கம் அணிவித்துப் பாராட்டிப் பெருமைப் படுத்தினார். இஃதன்றி, ”பல்துறை முற்றிய புலவர்”, “தமிழ்ப் பேரவைச் செம்மல்”, “தமிழ்த் தொண்டு செய்த பெரியார்போன்ற பட்டங்களும் ஔவை. துரைசாமி அவர்களுக்கு பல்வேறு அமைப்புகளின் சார்பில் வழங்கப் பெற்றுள்ளன !

பிற தமிழ்ப் பணிகள்:

கல்வெட்டுகளை ஆய்வு செய்து படியெடுத்தல், ஓலைச் சுவடிகளை ஆய்வு செய்து படியெடுத்தல், செப்பேடுகளை தேடியெடுத்து ஆய்வு செய்தல், ஆகிய பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஔவை. துரைசாமி அவர்கள் தேர்ந்த இலக்கிய இலக்கண ஆய்வறிஞர் ஆவார்.  பேரவைத் தமிழ்ச் செம்மல், சித்தாந்த கலாநிதி என்று தமிழுலகால் போற்றப் பெற்றவர் ஔவை.துரைசாமி அவர்கள் !

மறைவு:

அன்னைத் தமிழுக்கு அளப்பரிய தொண்டுகளை ஆற்றியுள்ள ஔவை.சு.துரைசாமி அவர்கள் தமது தமிழ்ப் பணிக்கு முற்றுப் புள்ளியைச் சான்றாக வைத்து விட்டு 1981 –ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம், 3 –ஆம் தமது  78 –ஆம் அகவையில்  நம்மிடமிருந்து மறைந்து, போனார்; இவ்வுலக வாழ்வை நீத்துப் புகழுடம்பு எய்தினார் !

முடிவுரை:

அன்னைத் தமிழின் பால் அளப்பரியப் பற்றுக் கொண்டு, பணியாற்றிய தமிழ் சான்றோர் நூற்றுக் கணக்கில் இருக்கின்றனர். அவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் ஔவை.சு.துரைசாமி அவர்கள் ! தமிழ் இலக்கியங்கள் பலவற்றுக்கு முற்கால நடையில் புரிந்து கொள்ளக் கடினமான வகையில் பலரால் உரை எழுதப் பெற்றிருந்தன. இந்நிலையை மாற்றி தமிழ் இலக்கியங்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் வண்ணம் எளிய நடையில் உரை எழுதி வெளியிட்ட அரிய தமிழறிஞர் ஔவை. சு.துரைசாமி அவர்கள் ! வாழ்க அவரது அரிய தமிழ்த் தொண்டு ! வளர்க அவரது  புகழ் !


------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2051, சுறவம் (தை),22]
{05-02-2020}

------------------------------------------------------------------------------------------------------------
            
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------


ஞாயிறு, பிப்ரவரி 02, 2020

வரலாறு பேசுகிறது (22) பேராசிரியர்.மா. நன்னன் !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர் !

பேராசிரியர்.மா. நன்னன் !


தோற்றம்:

பேராசிரியர் மா.நன்னன் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ள சாத்துக்குடல்  என்னும் சிற்றூரில் 1924 ஆம் ஆண்டு சூலை மாதம் 30 ஆம் நாள் பிறந்தார். தந்தை பெயர் மாணிக்கம். தாயார் மீனாட்சி அம்மையார். பெற்றோர் தமது குழந்தைக்கு இட்ட பெயர் திருஞானசம்பந்தன். தமிழ் மீது கொண்ட பற்றால், இவர் தமது பெயரை நன்னன் என்று பின்னாளில் மாற்றிக் கொண்டார் !

கல்வி:

தனது சொந்த ஊரை அடுத்து உள்ள திருமுட்டத்தில் 8 –ஆம் வகுப்பு வரைப் படித்த நன்னன், தனது உயர்நிலைக் கல்வியைச் சிதம்பரத்தில் தொடர்ந்தார். அங்கு புகுமுக வகுப்பு தேர்ச்சி பெற்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்று புலவர் பட்டம் பெற்றார் !

தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்த நன்னன், ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே, சென்னைப் பல்கலைக் கழகத்தில் கலையியல் வாலை (B.A.) , கலையியல் மேதை (M.A.) ஆகிய  பட்டங்களைப் பெற்றார். பின்பு  தொல்காப்பியம் பற்றி ஆய்வு செய்து முனைவர் (Ph.D) பட்டமும் பெற்றார் !

ஆசிரியப் பணி:

தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கலைக் கல்லூரி, சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரி என இவரது பணிப் புலங்கள் மேலும் மேலும் உயர்ந்துகொண்டே இருந்ததன. மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.  

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்:

பின்னர் தமிழக அரசுத் துறையான தமிழ்வளர்ச்சித் துறையின் இயக்குநராக 11-2-1980 முதல் 31-5-1983 வரைப் பணியாற்றித் தமிழக அரசு அலுவலகங்களில் தமிழ்த் திட்டச் செயல்பாடுகளைச் செம்மைப் படுத்தி  மேம்படுத்தினார் !

தொலைக் காட்சியில் தமிழ்ப் பணி:

சென்னைத் தொலைக்காட்சியில் எண்ணும் எழுத்தும்என்ற தலைப்பில் 17 ஆண்டுகள்தமிழ் கற்பித்தல்நிகழ்ச்சியை நடத்தி வந்தார். எழுத்துப் பயிற்றுவித்தலில்நன்னன் முறை என்னும் புதிய முறையை ஏற்படுத்தியவர். மக்கள் தொலைக் காட்சியில்அறிவோம் அன்னை மொழிஎன்ற தலைப்பில் தமிழைப் பிழையின்றி எழுதவும், சொற்றொடர்களை அமைக்கவும், நாள்தோறும் தமிழ்ப் பண்ணைஎன்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். காலை மணி  7-30 முதல் 8-00 வரை நடந்து வந்த இந்நிகழ்ச்சியில்   இக்காலத் தமிழ்ப் பயன்பாட்டில் உள்ள நிறை குறைகளையும், குறை களைவுத் தீர்வுகளையும் வழங்கி வந்தார் !

நன்னனின் இல்லம்:

பேராசிரியர் நன்னனின் மனைவி பெயர் பார்வதி. இவர்களுக்கு வேண்மா”,அவ்வை என இரு பெண் குழந்தைகளும் அண்ணல்எனும் ஒரு ஆண் மகவும் பிறந்தன. ”அண்ணல் வளர்ந்து மருத்துவக் கல்வி பயின்று மருத்துவராகப் பணியாற்றி வந்ததுடன் சில மருத்துவ ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வந்தார். இக்காலத்தில் மனிதர்களை வாட்டி எடுக்கும் மூட்டு வலிக்கான புதிய மருந்து ஒன்றை வெற்றிகரமாகக் கண்டு பிடித்த நிலையில், எதிர்பாராவகையில் இறந்து போனார் !

அண்ணல் அறக்கட்டளை:

அவர் நினைவைப் போற்றும் வகையில், நன்னன்  அவர்கள்அண்ணல்பெயரில்  அறக்கட்டளை ஒன்றை  ஏற்படுத்தி, மாணவர்களிடம் தமிழ்ப் பற்றை வளர்க்கும் வகையில் பேச்சுப் போட்டி. கட்டுரைப் போட்டி ஆகியவற்றை ஆண்டுதோறும் நடத்தி பரிசுகளையும் வழங்கி வந்தார் !

பெரியாரிடம் ஈடுபாடு:

பேரசிரியர் நன்னன் அவர்கள் தந்தை பெரியாரிடம் பேரன்பு கொண்டவர். அவரது கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கடவுள் மறுப்பு, பகுத்தறிவுக் கொள்கை, கலப்புத் திருமணம், எழுத்துச் சீர்திருத்தம், கைம்பெண் மறுவாழ்வு, மகளிர் சமத்துவம் ஆகியவற்றை ஆதரித்து வந்தார். அத்துடன் சீர்திருத்தத் திருமணங்களை, நல்ல நேரம் பார்க்காமலும், தாலி அணிவிக்காமலும் நடத்தியும் வந்தார் ! கையூட்டு (BRIBERY) பெறுவதையும் எதிர்த்தார்; கொடுப்பதையும் எதிர்த்தார். யாருக்கும், எதற்காகவும் அன்பளிப்புத் தரக் கூடாது என்னும் கொள்கையைப் பின்பற்றி வந்தார்.

பெற்ற விருதுகள்:

இவர் பெரியார் விருது, திரு.வி..விருது போன்ற பல விருதுகளையும் பெற்றவர். பெரியாரைக் கேளுங்கள் என்னும் நூலுக்காகத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் தறையின் பரிசையும் நன்னன் அவர்கள் பெற்றிருக்கிறார் !

போராட்டமும் சிறை வாழ்வும்:

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வெள்ளையனே வெளியேறு போராட்டங்களில் பங்கேற்றார். திராவிட இயக்க உணர்வு பெற்ற பின் தமிழிசைக் கிளர்ச்சி, இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி  ஆகிவற்றில் பங்கேற்று இருப்பூர்தி நிலையப் பெயர்ப் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துகளை அழித்து, சிறைத் தண்டனை பெற்றிருக்கிறார் !

உயரிய பேச்சாளர்:

1942 ஆம் ஆண்டு முதல் கல்வியியல், குமுகாயவியல், அரசியல், தொழிலாளர் இயல் ஆகியவை குறித்துப் பல மேடைகளில் பேசி இருக்கிறார். படிப்படியாக, பெரியாரியம், பகுத்தறிவுச் சிந்தனை, மூடநம்பிக்கை ஓழிப்பு, சிக்கன வாழ்வு, பேச்சிலும் எழுத்திலும் தமிழையே பயன்படுத்துதல், ஊடகத் துறையில் மொழிச் சிதைவு, குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைத்தல் ஆகியவை குறித்தும் பேசலானார் ! 

படைப்புகள்:

1990 – 2010 ஆகிய காலப் பகுதியில் பேராசிரியர் நன்னன் அவர்கள் ஏறத் தாழ 70 நூல்களை எழுதி இருக்கிறார். (01) உரைநடையா ? குறைநடையா? (02) எல்லார்க்குந் தமிழ் (03) எழுதுகோலா ? கன்னக் கோலா? (04) கல்விக்கு அழகு கசடற எழுதல் (05) கெடுவது காட்டும் குறி (06) சும்மா இருக்கமுடியவில்லை (07) கையடக்க நூல்கள் (08) செந்தமிழா ? கொடுந்தமிழா ? (09) செந்தமிழைச் செத்த மொழி ஆக்கிவிடாதீர் (10) தடம் புரள்கிறதா தமிழ் உரைநடை (11) தமிழ் உரை நடை போகிற போக்கு (12) தமிழ் எழுத்து அறிவோம் (13) தமிழைத் தமிழாக்குவோம் I, II, III (14) தமிழியல்தொல் எழுத்தும் சொல்லும்தொடருடன் (15) தவறின்றித் தமிழ் எழுதுவோம் I, II 

(16) தளர்ச்சியின் கிளர்ச்சி I, II (17) திருக்குறள் மூலமும் விளக்க உரையும் (18) தொல்காப்பியம்பேராசிரியர் உரைத் திறன் (19) நல்ல உரைநடை எழுத வேண்டுமா ? I, II  (20) நன்னன் கட்டுரைகள் (21) புதுக்கப்பட்ட பதிப்புகள் (22) பைந்தமிழ் உரைநடை நைந்திடலாமா ? (23) வாழ்வியல் கட்டுரைகள் (24) பெரியாரைக் கேளுங்கள் I, II, III (24) பெரியாரின் புத்துலகு I, II (25) பெரியாரின் பழமொழிகள் I, Ii  (26) பெரியாரின் குட்டிக் கதைகள் I, II, (27) பெரியாரின்  உவமைகள் I, II (28) பெரியாரியல்  1 – 20  (29) பெரியார் அடங்கல் (30) பெரியார் பதிற்றுப் பத்து (31) பெரியார் கணினி மற்றும் இன்னும் பல !

மறைவு:

தமிழ் தமிழ் எனத் தமிழையே தம் உயிர் மூச்சாகக் கொண்ட அன்னப்பறவை 2017 ஆம் ஆண்டு, நவம்பர்த் திங்கள் 7 ஆம் நாள் தனது 94 ஆம் அகவையில் இப்பூவுலக வாழ்வைத் துறந்து மறைந்துவிட்டது !

முடிவுரை:

தமிழ் தமிழ் என்று வாழ்ந்த அறிஞர்கள்  எல்லாம் கைம்மாறு கருதாமல் உழைத்து விட்டு நம்மை விட்டு மறைந்து சென்று விட்டார்கள்.. ஆனால் தமிழ் உணர்வே இல்லாததமிழர்கள் எல்லாம் மறைந்த தமிழறிஞர்களின் பெயர்களைச் சொல்லி வாக்குகளை அறுவடை செய்ய முயன்று கொண்டிருக்கிறார்கள். நாம் இன்னும் உறங்கிக் கொண்டு இருக்கிறோம் !


------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[திபி.2051:சுறவம்,20]
{03-02-2020}

-----------------------------------------------------------------------------------------------------------
      
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------







செவ்வாய், ஜனவரி 28, 2020

வரலாறு பேசுகிறது (21) முனைவர்.மா.இராசமாணிக்கனார் !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர் !


முனைவர் மா.இராசமாணிக்கனார் ! 


தோற்றம்:

முனைவர் மா.இராசமாணிக்கனார்  1907 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 12 ஆம் நாள் ஆந்திர மாநிலம் கர்நூலில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் மாணிக்கம் பிள்ளை. அன்னை பெயர் தாயாரம்மாள் !

மாணிக்கம் பிளளை நில அளவைத் துறையில் பணி புரிந்ததால், அவர் ஆந்திராவில் பணிபுரிகையில், இராசமாணிக்கம் பிறந்தார். ஆந்திராவில் பிறந்தாலும், இராசமாணிக்கனார் இனத்தால் மொழியால்  தமிழர் ! மாணிக்கம்பிள்ளைதாயாரம்மாள் இனையருக்கு  ஏழு குழந்தைகள் பிறந்தன. அவர்களுள் எஞ்சியவர்கள், இராசமாணிக்கமும் அவரது அண்ணன் இராமகிருட்டிணனுமே !

தொடக்கக் கல்வி:

மாணிக்கம் பிள்ளை, வட்டாட்சியராகப் பதவி உயர்வு பெற்றுப் பல ஊர்களில் பணிபுரிந்திருக்கிறார். அவர் ஆந்திர மாநிலம் கர்நூல், சித்தூர் ஆகிய ஊர்களில்  பணிபுரிந்தமையால், இராசமாணிக்கம் நான்காம் வகுப்பு வரைத் தெலுங்கினைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்வி பயின்றார் ! பின்பு, மாணிக்கம் பிள்ளை இடமாற்றலாகி மதுரை மாவட்டம் நிலக் கோட்டைக்கு வந்த பின்பே இராசமாணிக்கம் தமிழ் பயிலத் தொடங்கினார்.  மாணிக்கம் பிள்ளையின் மறைவுக்குப் பின் இராசமாணிக்கம் அவரது அண்ணன் இராமகிருட்டிணன் பாதுகாப்பில் வளர்ந்தார் !

பள்ளிக் கல்வி:

வறுமை காரணமாக, இராசமாணிக்கம் [ இப்போதைய திருவாரூர் மாவட்டம் ] நன்னிலத்தில் ஒரு தையற்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். பின்பு ஒருமுறை, தஞ்சாவூர் புனித பீட்டர் பள்ளியின் தலைமை ஆசிரியரை அவர் சந்திக்க நேர்ந்தது. அவரிடம், தனது படிப்புக்கு உதவி வேண்டினார். அவர் உதவியால் இராசமாணிக்கம் அப்பள்ளியில் சேர்ந்து பள்ளி இறுதி வகுப்பு வரைப் படித்துத் தேர்ச்சி பெற்றார் !

தமிழ்ப் பயிற்சி:

இராசமாணிக்கத்தின் படிப்பார்வத்தைக் கண்ட  கரந்தைக் கவிஞரும் ஆசிரியருமான இரா. வேங்கடாசலம், அவரைக் கரந்தை உமாமகேசுவரன் பிள்ளை, .மு.வேங்கடசாமி நாட்டார், இரா. இராகவையங்கார் ஆகியோரிடம் அனுப்பி தமிழில் மேலும்  பயிற்சி  பெறச்செய்தார் !

பட்டப் படிப்பு:

பின்பு 1928 ஆம் ஆண்டு தமது 21 –ஆம் அகவையில் சென்னை வண்ணாரப் பேட்டையில் உள்ள தியாகராயர் நடுநிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். ஏழு ஆண்டுகள் கழித்து 1935 ஆம் ஆண்டு, தமிழில்வித்வான்பட்டம் பெற்றார். நான்காண்டுகள் சென்றபின், 1939 ஆம் ஆண்டு கீழைமொழி வாலை (B.O.L.) பட்டம் பெற்றார் ! ”பெரியபுராண ஆராய்ச்சிஎன்னும் ஆய்வுக் கட்டுரை எழுதி 1945 ஆம் ஆண்டு கீழைமொழி மேதை (M.O.L) பட்டம் பெற்றார். 1951 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார் !

முற்போக்குச் சிந்தனையாளர்:

இவரது இளமைக் காலத்தில் சித்தர் பாடல்கள், வடலூர் வள்ளலாரின் திருவருட்பா போன்றவைகளை ஆழ்ந்து படித்தார். அதன் விளைவாக இவரிடம் தன்மானச் சிந்தனைகள் (சுயமரியாதை) மேலோங்கி நின்றன. சாதி ஒழிப்பு பற்றிப் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறார். வேள்வித் தீவளர்த்து சடங்குகள் செய்து மந்திரம் சொல்லித் திருமணங்கள் நடத்தப்படுவதை ஏற்க மறுத்தார் ! அதற்காகவேதமிழர் திருமணம்என்னும் முற்போக்குச் சிந்தனைகள் அமைந்த நூலை எழுதி, தன்மானத் திருமணங்களை வரவேற்றார் !

தமிழ்ப் பேராசிரியர்:

சென்னை விவேகானந்தர் கல்லூரியில் 1947 முதல் 1953 வரை  தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். இராசமாணிக்கனார் 1951 ஆம் ஆண்டுசைவ சமய வளர்ச்சிபற்றி ஆய்வு செய்துமுனைவர்பட்டம் பெற்றார்.  பிறகு,  1953 ஆம் ஆண்டில் மதுரை தியாகரசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்றுத் துறைத் தலைவராகவும் விளங்கினார் !

தமிழ்த் துறைத் தலைவர்:

பின்பு 1959 தொடங்கி 1967 வரை, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றினார் ! 1966 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற முதலாம் உலகத் தமிழ் மாநாட்டில் தமிழக அரசின் சார்பில் பங்கேற்றுசங்க காலத் தமிழ்ச் சமுதாயம்என்னும் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார் !

திருமண வாழ்வு:

இராசமாணிக்கம் 1930 -ஆம் ஆண்டு தனது 23 ஆம் அகவையில் கண்ணம்மாள் என்னும் மங்கையை மணந்தார். இவ்விணையருக்குப் பிறந்த குழந்தைகளுள், கலைக்கோவன் என்பவர் திருச்சியில் கண் மருத்துவராகவும், ”மா.இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையஆட்சியராகவும் இருந்து வருகிறார் !

சிறப்புப் பட்டங்கள்:

சைவசித்தாந்தம் குறித்த இவரின் ஆய்வுகளும், கட்டுரைகளும், நூல்களும்  பெரும் வரவேற்பைப் பெற்றன. இதனால் திருவாவடுதுறை மடத்தின் தலைவர்  இவருக்குசைவ வரலாற்று  ஆராய்ச்சிப் பேரறிஞர்என்னும் பட்டத்தை வழங்கினார். மதுரை திருஞானசம்பந்தர் மடத்தின் தலைவரிடமிருந்துஆராய்ச்சிக் கலைஞர்என்னும் பட்டத்தைப் பெற்றார்.  தருமபுரம் மடத்தின் தலைவர்சைவ இலக்கியப் பேரறிஞர்என்னும் பட்டத்தை அளித்துப் பெருமைப்படுத்தினார் !

படைப்புகள்:

இராசமாணிக்கனார், தமிழ், வரலாறு, இலக்கியம், சைவம் போன்ற பல துறைகளில் ஆய்வு நூல்களை எழுதி இருக்கிறார். (01) பல்லவர் வரலாறு, (02) பல்லவப் பேரரசர், (03) மொகஞ்சதாரோ அல்லது சிந்து வெளி நாகரிகம், (04) தமிழக வரலாறும் பண்பாடும், (05) தமிழ் மொழி இலக்கிய வரலாறு, (06) சோழர்வரலாறு, (07) தமிழ் இனம், (08) தமிழக ஆட்சி, (09) தமிழ் அமுதம், (10) தமிழ் நாட்டு வட எல்லை, (11) தமிழகக் கலைகள், (12) புதிய தமிழகம், (13) சிலப்பதிகாரக் காட்சிகள், (14) சேக்கிழார், (15) சேக்கிழார் ஆராய்ச்சி, (16) சைவ சமயம், (17) சைவ சமய வளர்ச்சி (18) பெரிய புராண ஆராய்ச்சி (19) நாற் பெரும் புலவர்கள் (20) பத்துப் பாட்டு ஆராய்ச்சி  எனப் பல நூல்களை எழுதியிருக்கிறார் !

மறைவு:

பல வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு, உண்மையான நிகழ்வுகளை வெளிக் கொணர்ந்த முனைவர் மா.இராசமாணிக்கனார், சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகையில் 1967 ஆம் ஆண்டு, மே மாதம், 26 ஆம் நாள், தமது 60 ஆம் அகவையில் காலமானார் !

முடிவுரை:

தமிழன்னை வரலாற்று ஆய்வறிஞர் ஒருவரை இழந்தாள் ! இவருக்குப் பின் இத்தகைய ஆய்வறிஞர்கள் தமிழகத்தில் தோன்றாதது நமது தவக்குறையே !


--------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)14]
{28-01-2020}

------------------------------------------------------------------------------------------------------------
    
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------