name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: காளமேகம்
காளமேகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காளமேகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், செப்டம்பர் 02, 2019

காளமேகம் பாடல் (06) செருப்புக்கு வீரர்களை !

போர்க்களத்தில் புகுந்து பகைவர்களை வெல்லும் வீரனை !

நினைத்தவுடன் பாடல் பாடும் புலமை வளம் கொண்டவர் காளமேகம் ! காளமேகம் என்றால் கரிய மழை மேகம் ! மழை போல் கவிதை சொரியும் ஆற்றலால் தானோ என்னவோ இவருக்குக் காளமேகம் என்னும் பெயர் வழங்கலாயிற்று !
--------------------------------------------------------------------------------------------------------
பாடல்
--------------------------------------------------------------------------------------------------------
செருப்புக்கு வீரர்களைச் சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல மருப்புக்குத்
தண்டேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே  விளக்குமா றே !
--------------------------------------------------------------------------------------------------------
பொருள்.

மேல்நோக்குப் பொருள்:-

செருப்புக்காக வீரர்களைக் கொன்று ஒழிக்கும் வேலனை நான் கண்டு கட்டித் தழுவ வேண்டும்;  அவனிடம் செல்லும் வழியை விளக்குமாறாகிய வண்டே நீ எனக்கு விளக்குவாயாக !
-------------------------------------------------------------------------------------------------------
கூர்நோக்குப் பொருள்;-

போர்க்களம் புகுந்து வீரர்களைச் சிதறடித்துப் போர் புரியும்  குறிஞ்சி நிலத் தலைவனான வேலனை,  நான்  நேரில் கண்டு பாராட்டிக் கட்டித் தழுவும் வகைபற்றி, தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் வண்டே எனக்கு விளக்கிக் கூறுவாயாக !
-------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-

செரு = போர்க்களம்; புக்கு = புகுந்து; சென்று உழக்கும் = வீரர்களைக் கொன்று குவித்து வெற்றி ஈட்டும்; பொருப்புக்கு நாயகனை = மலைகள் சூழ்ந்த குறிஞ்சி நிலத்தின் தலைவனான ;  வேலன் =  மன்னவனாகிய வேலன் ; புல்ல = ஆரத் தழுவிக் கொள்ள ; மரு = மணம் ; புக்கு = புகுந்து; தண் தேன் = குளிர்ச்சியான தேன்; பொழிந்த = பொழிகின்ற ; திருத் தாமரை மேல் வீற்றிருக்கும் = அழகிய தாமரை மலர் மேல் அமர்ந்திருக்கும்; வண்டே = அறுகாற் பறவை எனப்படும் வண்டே; விளக்கு = விளக்கிச் சொல்வாயாக !
------------------------------------------------------------------------------------------------------

       ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை, 15..]
{30-12-2018}
-------------------------------------------------------------------------------------------------------

காளமேகம் பாடல் (07) வாலெங்கே ? நீண்ட வயிறெங்கே?

புலமைச் செருக்கறுத்த  புகழ் பெற்ற பாடல் !

இரு பொருள் படப் பாடுவதில் காளமேகம் மிகுந்த கெட்டிக்காரர் ! அவரை யாராவது சீண்டிவிட்டால், சினம் கொண்டு அவர்களைப் பாட்டாலேயே கேலி செய்வார் ! அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பாருங்கள் !
------------------------------------------------------------------------------------------------------
பாடல்
-------------------------------------------------------------------------------------------------------

வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு
காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே -  சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்
கவிராயர் என்றிருந்தக்  கால்.
-------------------------------------------------------------------------------------------------------
[புலவர்கள் பலர் கூடியிருந்த அவைக்குக் காளமேகம் ஒரு முறை சென்றிருந்தார். அவையினருக்குத் தன்னை ஒரு புலவர் என்று அறிமுகப் படுத்திக் கொண்ட காளமேகம், அவையினரைப் பார்த்து, நீங்களெல்லாம் யாரென்று அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள் என்று வேண்டினார். அவர்களில் ஒருவர் நாங்கள்கவிராயர்கள்என்று ஆணவக் குரலில் சொன்னார். சினமுற்ற காளமேகம் அவர்களைப் பார்த்துப் பாடிய பாடல் இது !]
-------------------------------------------------------------------------------------------------------
பொருள்:-

{ கவிராயர் என்றால் கவிஞர்களுக்கு எல்லாம் அரசர் என்றும் குரங்கு இனத்தின் அரசன் என்றும் இரு பொருள்கள் உள்ளன.} 

புவியாளும் மன்னர்கள் போற்றும் புலவர்களே ! நீவிர் கவிராயர் என்றால், உங்களது நீண்ட வால் எங்கே ? முடி நிறைந்த, தூய்மையற்ற நீண்ட வயிறு எங்கே ? அமர்ந்திருக்கும் போது முன் புறத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் இரண்டு கால்களும் எங்கே ? குழி விழுந்த கண்கள் எங்கே ? சொல்லுங்கள் !
-------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-

புவிராயர் = புவியை ஆளும் மன்னவர்; சால = நிரம்பவும்; போற்றும் =  புகழ்ந்து பேசும் ; புலவீர்காள் = புலவர்களே ! ; நீவிர் = நீங்கள் எல்லாம்;  கவிராயர் = குரங்கு இனத்தின் அரசர்கள் என்றால்; வாலெங்கே = உங்களது வால் எங்கே; நீண்ட வயிறெங்கே = முடிநிறைந்த தூய்மையற்ற வயிறு எங்கே; முன்னிரண்டு காலெங்கே = முன்பக்கம் துருத்திக் கொண்டிருக்கும் கால்கள் எங்கே; உட்குழிந்த கண்ணெங்கே = குழி விழுந்த கண்கள் எங்கே
------------------------------------------------------------------------------------------------------
      
  ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை, 24..]
{08-01-2019}
--------------------------------------------------------------------------------------------------------

காளமேகம் பாடல் (08) கத்து கடல் நாகை காத்தான் !

சினத்தில் விளைந்த செங்கரும்புத் துண்டு !

காளமேகம் பல ஊர்களுக்குச் சென்றுள்ளார். சென்ற இடங்களில் அவருக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை வைத்துச் சில பாடல்களைப் பாடியுள்ளார். இவ்வாறு நாகப்பட்டினத்திற்குச் சென்றிருந்த போது ஒரு சத்திரத்தில் அவர் நேர்கொண்ட வாய்ப்பைப் பற்றி இப்பாடலில் பாடியுள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------------
பாடல்
----------------------------------------------------------------------------------------------------------
கத்துக்கடல் நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும்   போதில்   அரிசிவரும் - குத்தி
உலையிலிட   ஊர்அடங்கும்;   ஓரகப்பை   அன்னம்
இலையிலிட   வெள்ளி   எழும்.
------------------------------------------------------------------------------------------------------------
[காளமேகம் மதிய உணவுக்காக சத்திரத்துக்குச் சென்றபோது, உணவுக்காக நெடு நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. இதனால் கோபமுற்றவர் சத்திர ஆட்சியாளரை இகழ்ந்து பாடிய பாடல் இது ]
------------------------------------------------------------------------------------------------------------
பொருள்:-
நாகப்பட்டினத்தில் உள்ள காத்தான் சத்திரத்தில் (உணவு விடுதியில்)  சாப்பிடலாம் என்று மதிய வேளையில் போனால், சூரியன் மறைந்த பின்புதான் சத்திரத்துக்கு அரிசி வந்து சேரும்; பழுப்பேறிய அதை உரலில் இட்டுக் குத்திப் புடைத்து உலையில் இடுவதற்குள் ஊர் மக்கள் எல்லாம் உறங்கிபோவர்.  பின்பு சோறாக்கி அதை எடுத்து வந்து என் இலையில் பரிமாறுவதற்குள் விடிந்து விடும்.
------------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-

கத்துக் கடல் = அலைகளின் ஆரவாரத்தால் எப்பொழுதும் ஒலி எழுந்து கொண்டிருக்கும் கடல்; நாகை = நாகப்பட்டினம்; காத்தான் சத்திரத்தில் = காத்தான் என்பவரது உணவு விடுதியில்; அத்தமிக்கும் போதில் = சூரியன் மறையும் நேரத்தில்; அரிசி வரும் = சமைப்பதற்காக அரிசி கொண்டு வருவார்கள்; குத்தி = பழுப்பு ஏறிய அந்த அரிசியை உரலில்  இட்டுக் குத்திப் புடைத்து; உலையில் இட = உலைப் பானையில் இட்டு வேகவைத்துச் சோறாக்குவதற்குள்; ஊர் அடங்கும் = ஊர் மக்கள் எல்லாம் உறங்கி விடுவர்;  ஓரகப்பை அன்னம் = வெந்த சோறினை எடுத்து வந்து அகப்பையால் முகந்து; இலையில் இட = சாப்பிடுவதற்காக அமர்ந்துள்ள என் இலையில் போடுவதற்குள்; வெள்ளி எழும் = இரவு விடிந்து வெள்ளியும் முளைத்துவிடும்.
---------------------------------------------------------------------------------------------------------
[ பின் குறிப்பு:- பாடலைக் கேட்டவுடன் சத்திர உரிமையாளர் ஓடிவந்து, வந்திருப்பவர் காளமேகப் புலவர் என்பதை அறிந்து, அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். மனமிரங்கிய காளமேகம், தான் பாடிய பாடலுக்கு வேறு பொருள் சொன்னார். எப்படி ?

இவ்வாறு :-

காத்தானது சத்திரத்தில், அத்தமிக்கும் நேரத்தில் அதாவது நாட்டில் உணவின்றி பஞ்சம் தலைவிரித்தாடும் காலத்தில் அரிசி மூட்டை மூட்டையாய் வந்திறங்கும். அரிசியைக் குத்தித் தூய்மையாக்கி உலையில் இட்டுச் சோறாக்கும் போது ஊர் மக்கள் எல்லாம், தமக்கு உணவு கிடைக்கவிருக்கும் மகிழ்ச்சியில் அமைதி காப்பார்கள்.  அங்கு பரிமாறும் உணவை உண்டு அந்த ஊரே பசி அடங்கும். இலையில்  அகப்பையால் பரிமாறப்படும் சோறு , வெள்ளை வெளேரென்று வெள்ளிக் கோள் போலத் தூய்மை  மிக்கதாக இருக்கும். “
------------------------------------------------------------------------------------------------------------
        
 ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெயிடப்பெற்ற கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை :
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[ தி.: 2049, சிலை, 23 ] 
(07.01.2019)
------------------------------------------------------------------------------------------------------------