கொத்து (01) மலர் (08)
--------------------------------------------------------------------------------------------------------
புலவர்க்கோர் அறைகூவல் !
புதுகையில் பிறந்த அலைச்சீறல்
(ஆண்டு 1971)
புதுகையில் பிறந்த அலைச்சீறல்
(ஆண்டு 1971)
--------------------------------------------------------------------------------------------------------
ஆட்சிமொழி தமிழென்றார் ஐம்பத்து எட்டுமுதல் !
ஆயினும் நடைமுறையில் செயற்படலில் விரைவில்லை !
மாட்சிமிகு அமைச்சர்கள், மாணவர்கள், பணியாளர்,
மனம்வைத்தால் செயலாக்கம் விரையாதோ ? வளராதோ ?
ஊருக்கு ஊர்கூட்டம் கூடுகிறீர், பேசுகிறீர் !
உருப்படியாய் ஏதேனும் சொல்லாக்கம் நடந்ததுவா ?
பேருக்குச் சிலபேர்கள் கருத்தரங்கு ஏறியதால்
பெற்றபயன்
யாதோகாண் ! பெரியீரே சிந்திப்பீர் !
தமிழ்நாட்டில் தமிழுணர்வு நாள்தோறும் குறைகிறது !
தமிழ்க்கல்வி நிலையங்கள் ஒவ்வொன்றாய் மறைகிறது !
அமிழ்தான மொழிவடிவம் ஊடகத்தால் சிதைகிறது !
அய்யகோ இதைத்தடுக்க அரசினர்தான் வாராரோ ?
பொங்குதமிழ் அங்காடிப் பலகைகளால் வீழ்கிறது !
புற்றீசல் போல்பதின்மப் பள்ளியெங்கும் சூழ்கிறது !
தங்குதடை இன்றிதமிழ்ப் பேசுதற்கு ஆளில்லை !
தரமில்லா தாளிகைகள் மொழிக்கலப்பில் மூழ்குதையா !
ஆன்றோரே ! சான்றோரே !
அரங்கிலுள்ள இளையோரே !
அன்னைமொழி நலிவடைதல் அழகாமோ ? அறமாமோ ?
மன்பதையில் நம்மொழியும் மாண்புதனைப் பெறவேண்டும் !
மனம்வைத்தால் அத்துணையும் வயமாகும் ! இஃதுண்மை !
கலைச்சொற்கள் தமிழூற்றில் ஊருணியாய் வரவேண்டும் !
கற்றோர்தம் கடனாற்றி மொழிக்கேற்றம் தரவேண்டும் !
அலையலையாய் பிறசொற்கள் மொழிமாற்றம் பெறவேண்டும் !
ஆங்கிலம்போல் நம்மொழியை உலகறியச் செயல்வேண்டும் !
”பேண்ட்”போல் பலசொற்கள் தமிழ்க்குடிலில் இன்றுண்டு !
பீடுடைய இணைச்சொற்கள் தமிழின்கண் எவையுண்டு ?
புரியாமல் தடுமாறும் போதுகளாம் எமையழைத்துப்
புரியவைக்க யாருண்டு ? புலவர்காள் விளம்பிடுவீர் !!
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.
-----------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .