name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: சிந்தனை செய் மனமே (04) காவிரி கழிமுகப் பகுதி பாலைவனம் ஆகிடுமா ! ?

வியாழன், செப்டம்பர் 05, 2019

சிந்தனை செய் மனமே (04) காவிரி கழிமுகப் பகுதி பாலைவனம் ஆகிடுமா ! ?

காவிரி கழிமுகப்பகுதி பாலைவனம் ஆகிடுமோ ?


தமிழ் நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மண் அமைப்புக்கு ஏற்றவாறு விளைபொருள்கள் பயிர் செய்யப்படுகின்றன. காவிரி கழிமுகப் பகுதியில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும்பகுதியில் மண் அமைப்பு களிமண் அல்லது செம்மண் சார்ந்தது. கடலோரப் பகுதிகளில் மட்டும் புழுதி சார்ந்த மண் அமைப்பு உள்ளது.

இந்த மாவட்டங்களில் களிமண் சார்ந்த பகுதிகளில் நெல் மட்டுமே விளைவிக்க முடியும். ஆழ்குழாய்க் கிணறு அமைக்கப் பெற்றுள்ள மிகச் சில  இடங்களில் மட்டுமே கரும்பு பயிர் செய்யப்படுகிறது.

களிமண் அல்லது செம்மண் அமைப்பு உடைய நிலத்தில் நெகிழ்வுத் தன்மை இருக்காது. ஆகையால் கடலையோ, சோளமோ, மரவள்ளிக் கிழங்கோ, கம்பு போன்ற தானியங்களோ, பருத்தியோ, மல்லிகைச் செடியோ பயிர்செய்ய முடியாது. இதனால் தான் காவிரி கழிமுகப் பகுதி மக்கள் நெல் பயிரிடுவதை மட்டுமே தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

நெல் விளைச்சல் பொய்த்துப் போனால், அந்த ஆண்டில் இம்மாவட்ட மக்கள் பட்டினியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பண்டைக் காலத்தில் காவிரியானது  வற்றாத நீர் வளமுடைய ஆறாகத் திகழ்ந்ததால், ஒவ்வொரு ஆண்டும் முப்போகம் (THREE TIMES HARVEST) நெல் விளைந்தது.

ஒருகாலத்தில் தமிழ்நாட்டுக்கே சோறு அளித்த தஞ்சை மாவட்டம் உள்ளிட்ட கழிமுகப் பகுதி, இப்போது போதுமான நீர் வரத்து இன்மையால், நெல் விளைச்சலில் வீழ்ச்சி கண்டு வருகிறது. நீராதாரம் வலுப்பட்டால், காவிரி கழிமுகப் பகுதி மீண்டும் முந்தைய நிலைக்கு எழுந்து  விடும். (கழிமுகப் பகுதியைடெல்டாஎன்ற ஆங்கிலப் பெயரால் அழைக்காதீர் !)

நீருக்காக அல்லாடும் கழிமுகப் பகுதி வேளாண் மக்களுக்கு  நீராதாரத்தைப் பெருக்கித் தருவது மட்டுமே நல்ல அரசுக்கு அழகு. குடிமக்களின் தேவை அறிந்து அதை நிறைவு செய்து கொடுத்து ஆட்சி புரியும் மன்னனின் அடிகளை மக்கள் தழுவி ஆதரவு தருவார்கள் என்கிறார் வள்ளுவர்.

கழிமுகப் பகுதி மக்களைக் காக்க வேண்டிய நடுவணரசு, அவர்கள் தலையில் கல்லைப் போட்டுக் கதற வைத்துக் கொண்டிருக்கிறது. விளைநிலங்களை எல்லாம் பாழாக்கி 5,573 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நீரகக் கரிமம் என்னும்ஹைட்ரோ கார்பன்எடுக்கும் திட்டத்தைச் செயற்படுத்தத் துடிக்கிறது.

நீரகக் கரிமத் திட்டம் என்றால் என்ன தெரியுமா ? பூமிக்குள் புதைந்து கிடக்கும் எண்ணெய் மற்றும் எரிபொருள் வளத்தை வெளிக் கொணர்வது. 5,573 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், சராசரியாக 5000 மீட்டர் ஆழத்திற்கு, நூற்றுக் கணக்கில் ஆழ்குழாய்க் கிணறுகளை அமைத்து, அவற்றிலிருந்து எண்ணெய் எடுத்து இந்தியாவின் பொருளாதாரத்தைப் பெருக்கப் போகிறார்களாம் !

இத்திட்டத்தால் வேளாண் நிலங்கள் எப்படிப் பாழ்படும் என்று எண்ணத் தோன்றும். இத்திட்டம் பற்றி மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமன் தெரிவித்துள்ள கருத்து ஆராயத் தக்கது.

இத் திட்டத்திற்கு நீரியல் விரிசல் முறைதான் பயன்படுத்தப்படும் என்றுஹைட்ரோ கார்பன்திட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒரு (ஆழ்குழாய்) கிணறு அமைத்தால், அதில் நீரியல் விரிசல் முறை பயன்படுத்தும் போது 14 “டேங்கர்மணலும், 634 வகை வேதிப் பொருள்களும் (இரசாயானங்களும்) கலந்து தண்ணீருடன் அதை உள்ளே விசையாகச் செலுத்தி,  செயற்கைப் பூகம்பத்தை ஏற்படுத்தி, அவற்றை மீண்டும் உறிஞ்சி வெளியில் எடுப்பார்கள்.”

அந்த அளவிற்குத் தண்ணீர் பயன்படுத்தித் தான் நீரியல் விரிசலை ஏற்படுத்துவார்கள். இதற்கான தண்ணீர் எடுக்க பல ஆழ்குழாய்க் கிணறுகளை அப்பகுதியிலேயே அமைப்பார்கள். இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்திற்குப் போய்விடும்.  பூமிக்குள்ளிருந்து உறிஞ்சி வெளியில் எடுக்கப்படும்ஹைட்ரோ கார்பன்,” தண்ணீர், வேதியல் பொருள்கள் சேர்ந்த கலவையிலிருந்துஹைட்ரோகார்பனைமட்டும்  பிரித்து எடுத்துக் கொண்டு வேதிப் பொருள் கலந்த கழிவு நீர் வெளியில் விடப்படும். அந்தக் கழிவு  நீர் பரவும் இடங்கள் எல்லாம் வளம் திரிந்து  பாலைவனமாக மாறி  மக்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக மாறிவிடும்”.

ஒரு  கிணறு மட்டுமே சில ஆயிரம் ஏக்கர் நிலத்தைப் பாலைவனமாக்க முடியுமென்றல், நூற்றுக் கணக்கில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து எண்ணெய் எடுத்தால், இலட்சக் கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனம் ஆகிவிடாதா ?

விடாப்பிடியாக இத்திட்டத்தைச் செயற்படுத்த முனையும் நடுவணரசும், அதைத் தடுத்து நிறுத்த வலிமையற்ற மாநில அரசும் சேர்ந்து கொண்டு காவிரி கழிமுகப் பகுதி மக்களை வஞ்சித்து வருகிறார்கள். விளை நிலங்களை அழித்து, “பெட்ரோலியம்உள்ளிட்டஹைட்ரோ கார்பன்எடுத்து, “கன்னெய்” (பெட்ரோல்) தயாரித்து அரசு ஊர்திகளுக்கு இலவயமாககன்னெய்நிரப்பி ஊரெல்லாம் உலா வரத் துடிக்கும் இத்தகைய மா மனிதர்களுக்கு  நாமும் ஆதரவு தருவோம் !  நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வோம் !

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, மீனம், 11]
{25-03-2019}

--------------------------------------------------------------------------------------------------------
       ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .