name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: சிந்தனை செய் மனமே (18) ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து அகத்தியமா ?

சனி, செப்டம்பர் 07, 2019

சிந்தனை செய் மனமே (18) ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து அகத்தியமா ?

கொண்டாட்டத்திற்கு  ஒரு அடிப்படை வேண்டாவா ?


ஆங்கிலேயர்கள் கொண்டாட வேண்டிய நாளை நாம் ஏன் கொண்டாடுகிறோம் ?  இந்தக் கேள்விக்கு எந்தத் தமிழனும் விடை சொல்ல முடியாது ! ஏனென்றால் விடை தெரியாது !

தமிழனுக்குத் தெரிந்த பதில் (மறுமொழி) ஒன்றுதான் ! அஃது என்ன தெரியுமா ? எல்லோரும் கொண்டாடுகிறார்கள், நானும் கொண்டாடுகிறேன் ! அவ்வளவு தான் ! நள்ளிரவு 12-00 மணிக்கு தெருவுக்கு வந்துஹேப்பி நியூ இயர்என்று கூக்குரலிட்டுக் கூத்தாடும் தமிழன் தமிழ்ப் புத்தாண்டு நாள் தைத்திங்கள் முதல் நாளா, சித்திரைத் திங்கள் முதல் நாளா என்று தெரிந்து கொள்ளாமலேயே, அன்று நள்ளிரவு நன்றாகத் தூங்கிப் போகிறான் !

கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு, தமிழகத்தில் மெல்லப் பரவிய வடமொழி மேலாண்மை, கி.பி 10-ஆம் நூற்றாண்டு வாக்கில் உச்சத்தை எட்டியது. அதிலிருந்து வடமொழிக்கு அடிமையாகிப் போனோம். கி.பி 17-ஆம் நூற்றண்டுக்குப் பிறகு ஆங்கில மொழியின் மேலாண்மையால் ஆங்கிலத்துக்கு அடிமையாகிக் கிடக்கிறோம் !

இன்றைய தமிழன், தமிழனாக இல்லை. ஆன்மிகத் துறையில், ஆலய வழிபாட்டுத் துறையில், பெருநாள் கொண்டாட்டத் துறையில் (பண்டிகைகள்)   பெயரியல் துறையில், கோளியல் துறையில் (சோதிடம்) தமிழன் முற்றிலுமாக வடமொழியின் ஆளுமைக்கு அடிமைப்பட்டு, சிந்தனைத் திறனை இழந்து  கிடக்கிறான் !

இவை போதாவென்று, (அரசு) ஆட்சித் துறையில், கல்வித் துறையில், வேலை வாய்ப்புத் துறையில், வணிகத் துறையில், ஊடகத் துறையில், திரைப்படத் துறையில், மற்றும் இன்னபிற துறைகளிலும் ஆங்கிலத்தின் அடிவருடியாய் முதுகெலும்பு இழந்த மூடனாகத் தமிழன் வீழ்ந்து கிடக்கிறான் !

இந்த அழகில், ஆங்கிலப் புத்தாண்டுக்கு என்ன கொண்டாட்டம் வேண்டிக் கிடக்கிறது ? விரைவில் தமிழ்ப் புத்தாண்டு வரவிருக்கிறது. அப்போது உங்கள் கொண்டாட்டங்களை வைத்துக் கொள்ளுங்கள் !

நண்பர்களே ! வாழ்த்துவதற்கு, நாளும் கோளும் தேவையில்லை ! எப்போது வேண்டுமானாலும் வாழ்த்தலாம் ! எனவே, ஆங்கிலப் புத்தாண்டு நாளில், கொண்டாட்டங்களை விட்டொழித்து, வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள் ! அதில் தவறில்லை ! மறந்து விடாதீர்கள், “ஹேப்பி நியூ இயர்உங்கள் நாவில் இடம்பெற வேண்டாம் ! “புத்தாண்டு நல்வாழ்த்துகள்பூப் பூவாய்ப் பூக்கட்டும் !

நண்பர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ! இப்புத்தாண்டில் தமிழ் தழைக்கட்டும் ! உங்கள் வாழ்வில் வளம் பெருகட்டும் !!

------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{30-12-2018}
-----------------------------------------------------------------------------------------------------
        ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .